எனக்குப் பிடித்த ரஹ்மானின் காதல் பாடல்களை இங்கே எழுதுவதே எண்ணம். உங்களுக்கும் இப்பாடல்கள் பிடித்திருந்தால் மிகவும் மகிழ்வேன். இங்கே இருக்கும் ஒவ்வொரு பாடலும் எனது வாழ்க்கையோடு நேரடியாக சம்மந்தப்பட்ட பாடல்.
தமிழ்த் திரைப்படங்களில், பாடல்களின் வீச்சுக்கு ஏற்ப காட்சிகளை அமைத்த இயக்குநர்கள் மிகக் குறைவு. பாடல் அட்டகாசமாக இருக்கும். ஆனால் காட்சிகள் சொதப்பி விடும். இருந்தாலும், மிக அரிதாக, பாடலும் காட்சிகளும் அட்டகாசமாக அமைந்த திரைப்படங்கள் மிகக் குறைவு. அப்படிப்பட்ட ஒரு பாடலே இது. படம் ஃப்ளாப். அதனால் பாடல்களும் பெரும்பான்மையான மக்களுக்குப் போய்ச்சேராத படம் இது. இருந்தாலும் இந்தப் பாடல் ஒரு அரிய பாடல். கேட்பவர்களுக்குப் பிடிக்காமல் இருக்காது. இதில் நடித்துள்ள நடிகர்களும் அவ்வளவாகப் பிரபலமாகாத நடிகர்கள். எனவே எனக்குத் தெரிந்து பல நண்பர்களுக்குத் தெரியாத பாடல் இது. பாடலின் அழகுக்கு ஏற்ப பாடல் வரிகளும் அட்டகாசமாக அமைந்து, காட்சியமைப்பும் பின்னியெடுத்த பாடல். இதோ. பாடலைப் பாடியவர்கள் – ஹரிணியும் உன்னி க்ருஷ்ணனும். தான் காதலிக்கும் பெண்ணுடன் வானில் மேகங்களுக்கு இடையே பயணிக்கும் பாடல். இரவில் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உகந்த பாடல் இது. என்னளவில், ரஹ்மானின் பாடல்களிலேயே மிகச்சிறந்தது.
காதல் வைரஸ் – சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
உங்களுக்குப் பிடித்த பெண்ணைப் பற்றி யோசிப்பது பிடிக்குமா? ஆம் எனில், இந்த இரண்டாவது பாடல் உங்களுக்குப் பிடிக்கும். உங்களது மூச்சிலேயே கலந்திருக்கும் அந்தப் பெண்ணைப் பற்றி யோசித்துப் பார்ப்பதைப் பற்றிய பாடல் இது. பின்னணியில் மெல்லிய வீணை இசைக்க, உங்கள் பெயரை உங்களுக்குத் தெரியாமல் கண்ணாடியில் எழுதும் அந்தப் பெண், உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது? அந்த அழகான உணர்வோடு கேட்கவேண்டிய பாடல் இது.
என் சுவாசக் காற்றே – என் சுவாசக்காற்று நீயடி
உங்களுக்குப் பிடித்த பெண், வேறோரிடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அவள் எப்படி இருக்கிறாள்? சந்தோஷமாக இருக்கிறாளா? அல்லது வாழ்வை எண்ணி நொந்துகொண்டு, எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்று இருக்கிறாளா? எத்தனை வேலைகளில் இருந்தாலும் எப்போதாவது அந்தப் பெண்ணைப் பற்றிய எண்ணம் எழாமல் இருக்காது. திடீரென தோன்றும் அந்த எண்ணம் மிகவும் ஆழமானதாக இருக்கும். ஏற்கெனவே பிடிக்காத திருமணம் செய்துகொண்டு வேறுவழியே இல்லாமல் வெளிநாடு சென்று வாழ்ந்தாக வேண்டும் என்று சென்ற பெண்ணாக இருந்தால்- அது இன்னும் கொடிது. அத்தகைய தேவதையைப் பற்றிய பாடல் இது. தன் காதலி எப்படி இருக்கிறாள் என்று கேட்கும் காதலனுக்கும், காதலன் சுகமாக இருக்கிறானா என்று கேட்கும் காதலிக்கும் இடையே நடைபெறும் அழகிய உரையாடல் இது.
பார்த்தாலே பரவசம் – அழகே சுகமா
இதோ தனது காதலன் மிக அருகே இருக்கிறான். இந்தத் தருணத்தில் தோன்றும் அன்பும் காதலும் மிக மிக அருமையானது. அத்தகைய அழகிய தருணத்தில் காதலி என்ன செய்வாள்? காதலனை அரவணைத்து முத்தம் இடுவாள். அவனுடனேயே இருக்க விரும்புவாள். ஒவ்வொரு கணத்தையும் அந்தக் காதலனுடன் கழித்து, மிகவும் சந்தோஷமாக இருக்க விரும்புவாள். தனது மடியில் படுத்திருக்கும் காதலனின் முடியைக் கோதி விட்டு, இருவரும் இணைந்திருக்கும் அந்த நிமிடங்களின் பரவசத்தில் ஆழ்ந்திருப்பாள். அத்தகையதொரு மிக மிக அன்பான தருணத்தில் எழும் பாடல் இது. ரஹ்மானின் ஆரம்பகால பாடல். இருந்தாலும், அற்புதமான இசை.
புதிய முகம் – கண்ணுக்கு மை அழகு
காதலி நம்மை விட்டுப் போய்விட்டாள். ஆனாலும் அவளுடன் இருந்த அந்த நிமிடங்களின் சந்தோஷம் நமது எலும்பு வரை ஊடுரூவியிருக்கிறது. கண்களை மூடினால் அவளது புன்னகை. அவளது உருவம். அவள் நடந்து சென்றது தெரிகிறது. இத்தகைய ஒரு வலியில், பிரிந்த காதலி நம்மெதிரில் வந்தால்? அவளுக்கு நம்மேல் இருக்கும் கோபம் தீரவில்லை. ஆனால் நமக்கோ அவள் மேல் இருக்கும் காதல் ஆறவில்லையே? எப்படியாவது அவளுடன் பேச வேண்டும். நமது மனதின் வலியை அவளிடம் சொல்ல வேண்டும். இந்தத் தருணத்தில், இந்தப் பாடலை நினைக்காமல் இருக்க முடியாது.
டுயட் – என் காதலே என் காதலே
ஊரில் நமக்குப் பிடித்த பெண்ணுடன் நாம் பேசியாகிவிட்டது. அந்தப் பெண்ணுக்குமே நாம் அவள்மேல் வைத்திருக்கும் காதல் புரிய ஆரம்பித்துவிட்டது. நம்முடன் இருந்தால், அவளை ஒரு புதையலைப் போல் பார்த்துக்கொள்வோம் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால், வீட்டில் நம்மைப் பற்றிச் சொன்னால், கொலையே செய்துவிடுவார்களே? எப்படி பெற்றோரிடம் நம்மைப் பற்றிச் சொல்லிப் புரியவைப்பது? இந்த உலகிலேயே அந்தப் பெண்ணின் அருமை தெரிந்த ஒரே நபர் நாம்தான் என்பது அந்தப் பெண்ணின் மனதுக்குப் புரிகிறது. தேவதைகளை எப்படியெல்லாம் பார்த்துக்கொள்ளமுடியும்? இத்தகையதொரு சூழ்நிலையில், தோழியின் திருமணத்தில் பாடிக்கொண்டிருக்கும் அந்தப்பெண், அங்கு வருகை தரும் நம்மைப் பார்த்துத் திகைத்து, சந்தோஷமும் பட்டு, தனது மனதின் வலிகளை நம்மிடம் பகிரும் பாடல் இது.
பாம்பே – கண்ணாளனே
நண்பன் காதலிக்கும் பெண். ஆனால் அந்தப் பெண்ணுக்கோ கன்னிகாஸ்த்ரீ ஆகவேண்டும் என்பதே லட்சியம். தனது வாழ்வில் காதல், சந்தோஷம் ஆகிய உணர்வுகளுக்கே இடமில்லை என்று நினைக்கும் பெண். ஆனால் நம்முடன் பழக ஆரம்பித்ததிலிருந்து மெதுவாக அவளுக்கு வாழ்வின் இனிய தருணங்களில் ஒரு பிடிப்பு உண்டாகிறது. வாழ்க்கையை வாழவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. நமக்குமே அந்தப் பெண்ணை மிகவும் பிடிக்கிறது. ஆனால் நண்பனின் காதல் என்ற வட்டம், நம்மை அந்தப் பெண்ணிடமிருந்து பிரிக்கிறது. அப்படியொரு சூழலில், நண்பனுக்காக காதல் பேச வந்த ஒரு தருணத்தில், இருவருக்கும் இடையே ஒளிந்துகிடக்கும் காதல், வெடித்துச் சிதறுகிறது. அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்வது?
மின்சார கனவு – வெண்ணிலவே வெண்ணிலவே
எங்கோ ஒரு தருணத்தில் பார்த்த அந்தப் பெண்ணின் முகம் – இன்னமும் நமக்கு நினைவிருக்கிறது. அந்தப் பெண்ணை மறக்காமல் தேடி, எப்படியோ கண்டுபிடித்தும் விட்டாயிற்று. ஆனால் அந்தப் பெண்ணுக்கோ நம்மைப் பிடித்திருந்தாலும், பல கட்டாயங்களால் நம்மை உதாசீனப்படுத்தவேண்டிய நேரம். இருப்பினும் இதுவரை வாழ்வில் ஒரு ஆடவன் கூட தன்மீது பரிவு கொண்டதில்லை என்ற உண்மையும் அவளுக்குப் புரியாமல் இல்லை. இத்தகைய ஒரு சூழ்நிலையில் எழும் பாடல் இது. இப்பாடலைக் கேட்க மொழி ஒரு அவசியம் இல்லை.
Dil Se – Dil Se re
நமக்குப் பிடித்த பெண்ணை விடாமல் துரத்தி, நம்மைக் கவனிக்க வைத்தாயிற்று. நம்மிடம் முதன்முதலில் அந்தப் பெண் பேசும் வார்த்தையை மறக்க முடியுமா? வாழ்வின் கடைசி நிமிடத்தில் கூட நமக்கு நினைவிருக்கக்கூடிய வார்த்தையாயிற்றே அது? காதலியிடம் பேசும் காதலன், அவள் திரும்பிச் செல்லும்போது அவளை அழைத்து, விரல்களை அசைத்து Bye சொல்கிறான். அதனைப் பார்க்கும் காதலியின் முகத்தில் புன்னகை. எப்படி இருக்கும்?
அலைபாயுதே- பச்சை நிறமே
காதலனை நினைத்துப் பாடும் காதலியின் பாடல். இந்த ஒரே சிச்சுவேஷனில் வந்த தமிழ்ப்படப் பாடல்கள் எத்தனை? ஆனால் அவை அத்தனையிலும் தனித்துத் தெரியும் பாடல் இது. எனது ஊரான கோவையில் எடுக்கப்பட்டது. இந்தப் பாடலில் வரும் ஒவ்வொரு இடத்திலும் நான் இருந்திருக்கிறேன். காதலோடு. குறிப்பாக ரேஸ்கோர்ஸ். இந்தப் பாடலில் வாலியின் பேனா புகுந்து விளையாடியிருக்கும் – ‘நான் சாயும் தோள்மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா?’ (இந்தப் பாடலில் வரும் 7ம் நம்பர் பேருந்தின் கண்டக்டரைக் கூட எனக்கு அந்தக் காலகட்டத்தில் பர்ஸனலாகத் தெரியும்).
ஜில்லுனு ஒரு காதல் – முன்பே வா
இன்னமும் ஏராளமான ரஹ்மானின் பாடல்கள் உள்ளன. இவை ஒரு சாம்பிள் மட்டுமே. ஹிந்தியில் ரஹ்மானின் பாடல்கள் எக்கச்சக்கமாக உள்ளன.
CONVERSATION