திரைப்படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் யாராவது எனது இன்றுவரையிலான படங்களைக் காட்டி, இவற்றின்மூலம்தான் என்னை அடையாளம் காட்டப்போவதாகச் சொல்லியிருந்தால், சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்; ஆனால், இன்று, இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருப்பதால், படங்களில் இருக்கும் சில விஷயங்களைத் தவிர, பிற விஷயங்களை இன்னும் நன்றாக மாற்றியிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
பொதுவாக மணிரத்னம் பல சினிமா இயக்குநர்கள் போல பேட்டிகளை அதிகமாக அளிப்பதில்லை. அட்லீஸ்ட் தமிழில். ‘இருவர்’ திரைப்படத்தைப் பற்றி விகடனில் மதனுக்கு மிக நீண்ட பேட்டி ஒன்றை, அந்தப்படம் வெளிவந்தபோது அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் படித்த பல விஷயங்கள் நினைவிருக்கின்றன. உதாரணமாக, படத்தின் பல காட்சிகளில் மணி ரத்னம் திரட்டிய கூட்டத்தைப் பற்றி. அந்தப் படத்தைப் பார்க்கையில் இந்தக் கூட்டத்தை கவனித்தீர்கள் என்றால், அவர்கள் அனைவருமே தத்ரூபமாக ரியாக்ட் செய்துகொண்டிருப்பதைக் காணலாம். அதுவும் பல படங்களில் அரிதுதான். இதேதான் பின்னாட்களில் மணிரத்னம் எடுத்த ‘குரு’ படத்துக்கும் பொருந்தும்.
மணிரத்னம் படங்களில் டயலாக் சிறுகச்சிறுகக் குறைந்துகொண்டே வந்ததில், இவர் பொதுவாகப் பேசும்போதே அப்படித்தான் பேசுவார் போலும் என்ற கருத்து எல்லாருக்கும் பரவி, அதைப்பற்றிப் படங்களிலும் மீடியாவிலும் நகைச்சுவை துணுக்குகள் எழுதப்படுவதில் வந்து முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட வேளையில், மணி ரத்னமும் பிறரைப் போன்று நன்றாகப் பேசக்கூடியவர்தான் என்பதை நிரூபிக்கிறது இந்தப் புத்தகம். பல இடங்களில் மிக விரிவாகவே பேட்டியளித்திருக்கிறார்.
புத்தகத்துக்கு மணி ரத்னம் எழுதியிருக்கும் முன்னுரையில், அவரைப் பற்றி அவரே சொல்லும்போது, அவரது படங்களை எப்போது உட்கார்ந்து பார்த்தாலும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் படத்தில் ஒன்ற முடியாமல், அவர் செய்திருக்கும் தவறுகள் தொந்தரவு செய்வதாக எழுதியிருக்கிறார். புத்தகம் முழுதுமே மணி ரத்னம் மிகவும் வெளிப்படையாகப் பேசியிருப்பதற்கு அவரது முன்னுரையே ஒரு எடுத்துக்காட்டு.
பரத்வாஜ் ரங்கன் எழுதியிருக்கும் நீளமான முன்னுரையைப் படித்தபின் எனக்குத் தோன்றியது – மணி ரத்னம் மீதான நாஸ்டால்ஜியாவால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் ரங்கன் என்பதே. காரணம், தான் பிறந்து வளர்ந்த சென்னையைப் பற்றியும், ‘மணி ரத்னத்தின் காலம்’ என்பதில் தனது இளமையைக் கழித்தது பற்றியுமான ரங்கனின் வரிகள். ’Zeitgeist’ என்ற வார்த்தையால் (Zeitgeist defining showman) மணி ரத்னத்தைப் பற்றிச் சொல்கிறார். அந்த வார்த்தைக்கு, ’ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கலாச்சாரத்தை influence செய்வது’ என்று பொருள். மணி ரத்னத்தின் படங்கள், எண்பதுகளின் இளைஞர்களை அப்படி பாதித்தன என்பது ரங்கனின் கருத்து. அவரே அப்படி பாதிக்கப்பட்டதை சொல்கிறார். ’அக்னி நட்சத்திரம்’ படத்தில், பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் டாப் ஒன்றை அணிந்துகொண்டு, வாக்மேனில் பாட்டு கேட்டபடியே அமலா வரும் காட்சியைப் போன்றதுதான் அக்கால இளைஞர்களின் fantasy என்றும், அப்படிப்பட்ட fantasyகளை கச்சிதமாக திரையில் காண்பித்ததுமூலம், அந்த இளைஞர்களின் சமுதாயத்தையே மணி ரத்னம் பாதித்தார் என்றும் ரங்கன் எழுதியிருக்கிறார். அதேபோல், முன்னுரையின் துவக்கத்தில், மணி ரத்னத்தின் சந்திப்புகளில் ஆரம்ப சில சந்திப்புகளில் மணி ரத்னத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், அவர் முன்னர் இருந்த மேஜையையே பார்த்துக்கொண்டே கேள்விகள் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ரங்கன். எந்த இளைஞனுக்குமே, அவன் சார்ந்த ஒரு உலகை திரைப்படங்களில் பார்க்கையில் அவசியம் தன்னை அந்தப் படத்துடன் ஒன்றுபடுத்திக்கொள்ளத்தான் தோன்றும். அப்படி மெட்ராஸைப் பற்றிப் பல விஷயங்களை ரங்கன் பகிர்கிறார். அவை எப்படியெல்லாம் மணி ரத்னத்தின் படங்களில் காண்பிக்கப்பட்டன என்பதைப்பற்றியும் எழுதியிருக்கிறார்.
ரங்கனின் idolலாக இருந்தவர் மணி ரத்னம். எனவே, அப்படிப்பட்ட ஒரு மனிதரை நேரில் சந்திக்கும்போது அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால், இந்த இடத்தில் வேறொன்றும் தோன்றியது. கரன் தாப்பருக்கு அமிதாப் பச்சன் ஒரு idol என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், அமிதாப்பை கரன் தாப்பர் பேட்டி எடுக்கும்போது அவசியம் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பார். காரணம், பேட்டிகளில் ஒரு ஆளுமையின் எல்லாப் பக்கங்களையும் முடிந்தவரை வெளிக்கொணர்வதுதான் அதைப் பார்ப்பவர்களுக்கும் அந்தப் பேட்டியின் பயனை முழுமையாக வழங்கும். ஆனால் மணி ரத்னத்தின் மீதான அதீத மரியாதையால் பல முக்கியமான கேள்விகளை புத்தகம் முழுதுமே ரங்கன் கேட்கவே இல்லை. கேட்டிருந்தால் புத்தகம் இன்னும் அட்டகாசமாக வந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
Donald Spoto என்ற அமெரிக்க எழுத்தாளரின் பாணியில்தான் புத்தகத்தை எழுதத் தலைப்பட்டதாகவும் (ஸ்போடோ, அமெரிக்கத் திரையுலகப் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியவர்), ஆனால் அப்படி எழுதியபோது அது மணி ரத்னம் பேசுவதைப் போல் இல்லாமல் தானே பேசிக்கொள்வதைப் போல் தோன்றியதால், புத்தகத்தைக் கேள்வி பதில் பாணியில் (ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (François Truffaut) பாணி) அமைத்ததாகச் சொல்கிறார் ரங்கன். த்ரூஃபோ, ஹிட்ச்காக்குடன் விரிவாகக் கேள்விகள் கேட்டு ஒரு புத்தகம் எழுதினார். அதன் பெயர் – Hitchcock/Truffaut. அந்தப் புத்தகம் மிகவும் பிரபலம். அந்தப் புத்தகத்தைத்தான் மேலே த்ரூஃபோ பாணி என்று ரங்கன் சொல்கிறார். இந்தப் புத்தகமும், மைக்கேல் ஓண்டாட்ஜே (Michael Ondaatje) எழுதிய The Conversations: Walter Murch and the Art of Editing Film என்ற புத்தகமும்தான் ரங்கனின் இந்தப் புத்தகத்துக்குத் தாக்கங்களாக இருந்தன என்று சொல்லி, தனது விரிவான முன்னுரையை முடிக்கிறார்.
புத்தகம், மணி ரத்னத்தின் சிறு வயதில் இருந்து தொடங்குகிறது. தான் பார்த்த சில ஆரம்பகாலப் படங்களாக உத்தமபுத்திரன், பட்டினத்தில் பூதம் போன்ற படங்களைச் சொல்கிறார். கூடவே, அவரது மாமாவான தயாரிப்பாளர் ‘வீனஸ்’ கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும் சொல்கிறார். மணி ரத்னத்தின் தந்தையான S.G ரத்னம், ஒரு சினிமா விநியோகஸ்தர். ஆகவே, இயல்பிலேயே சினிமாப் பின்னணி மணி ரத்னத்துக்கு இருந்தது. திரைப்படங்களில் சுவாரஸ்யமும் இதனாலேயே அதிகரித்ததாகவும் சொல்கிறார். மணி ரத்னத்துக்கு மிகவும் பிடித்த முதல் படமாக ஜான் வேய்னின் ’ஹடாரி’ (Hatari) இருக்கிறது. ஆச்சரியகரமாக, எனக்குத் தெரிந்து என் குடும்பத்திலேயே பல பெரியவர்களுக்கும் இந்தப் படம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. காரணம், அக்காலத்தில் தமிழகத்தில் மிகப் பிரபலமாக ஓடிய படம் அது. பெரும்பாலும் டூரிங் டாக்கீஸ்களில்தான் படங்களைப் பள்ளி நாட்களில் பார்த்ததாகவும், அவ்வப்போது ஹாஸ்டலில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் திரையரங்குகளிலும் படங்கள் பார்த்ததாகவும் சொல்கிறார் (தீபாவளி ரிலீஸ்கள் – இத்யாதி).
இதன்பின் பம்பாயில் MBA. ஃபைனான்ஸ். ஒரு மேனேஜ்மெண்ட் கன்ஸல்டன்ஸியில் வேலை. அப்போது, அந்த வேலையில் திருப்தி இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில், தனது நண்பர் ரவி ஷங்கர் (பி.ஆர். பந்துலுவின் மகன்) ஒரு கன்னடத் திரைப்படம் எடுக்க இருந்ததாகவும், அதற்குத் திரைக்கதை எழுதுவதில் உதவும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதனால்தான் ஒரு விபத்து போல திரைப்படங்களுக்குள் வந்ததாக மணி ரத்னம் சொல்கிறார். ஒவ்வொரு மாலையும், அலுவலகத்திலிருந்து வந்ததும் இந்த விவாதத்தில் நேரம் ஓடும். அப்போதெல்லாம், தந்தைக்கு எழுதிய ஒருசில கடிதங்களைத் தவிர வேறு எதனையும் எழுதியதே இல்லை என்றும், ஒரு வித அறியாமையில் எழுந்த குருட்டு தைரியத்தால்தான் இதையெல்லாம் அவர்கள் செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார். இதன்பின்னர் படப்பிடிப்பு துவங்கியது. மணி ரத்னத்னம், இதற்கு முன்னர் எந்தவித சினிமா அனுபவமும் இல்லாமல் நேரடியாகப் படம் எடுக்க வந்தவர் என்று ஒரு கருத்து பொதுவில் நிலவுகிறது. ஆனால், அப்போதிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல இருந்த போது கிடைத்த மூன்று மாத அவகாசத்தில் இந்தக் கன்னடப் படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றதாகவும், படப்பிடிப்பு கோலாரில் தொடர்ந்தபோது வேலையை ராஜினாமா செய்துவிட்டு அங்கேயே சென்றுவிட்டதாகவும் சொல்கிறார் மணி ரத்னம்.
அந்தத் திரைப்படம் வெளிவரவில்லை (Bangarutha Ghani). ஆனால், அந்தப் படப்பிடிப்பின்போதே, இனிமேல் திரைப்படங்கள் இயக்குவதில்தான் தனது எதிர்காலம் என்று உணர்கிறார் மணி ரத்னம். அந்தச் சமயத்தில் அவரது எண்ணம், ஒரு திரைக்கதையை எழுதி, அதை ஒரு இயக்குநருக்கு விற்று, அவர் கூடவே படப்பிடிப்புக்குச் சென்று, அங்கே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அதன்பின் திரைப்படங்கள் இயக்கவேண்டும் என்பதாக இருந்தது. ஒருவேளை திரைப்படத்துறையில் எதுவும் சரியாக வரவில்லை என்றால், மறுபடியும் ஒரு வருடத்தில் வேலை ஒன்றைப் பிடித்து செட்டில் ஆகிவிடலாம் என்றெல்லாம் யோசித்திருக்கிறார். ஆனால், தனது முதல் திரைக்கதையான ‘பல்லவி அனுபல்லவி’யை எழுதியபின்னர், தானே அதனை இயக்கலாம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அப்படியே செய்தார்.
இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான கருத்து மணி ரத்னத்தால் சொல்லப்படுகிறது. தனது சிறுவயதில், அதிகமான நல்ல படங்கள் தமிழில் வெளிவந்திருந்தால், ஒருவேளை பிந்நாட்களில் இயக்குநர் ஆகலாம் என்ற எண்ணம் தனக்கு வந்திருக்காது என்று சொல்கிறார். முதலில் பாலசந்தர். அதன்பின் எழுபதுகளின் பாதியில் பாரதிராஜாவும் மஹேந்திரனும் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். பதினாறு வயதினிலேவையும் உதிரிப்பூக்களையும் பார்த்து அதிர்ந்து போனதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் தனது படிப்பை முடித்துவிட்டு, மணி ரத்னத்தின் முதல் படத்தின் வேலைகளை அவர் துவக்கிய காலத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள், இன்றுவரை அவர் பார்த்த சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்றாக இருந்தாலும், தமிழ் சினிமா அந்தக் காலகட்டத்தில் தேங்கிய நிலையில் இருந்தது என்றும், அவரது கல்லூரிக் காலகட்டத்தில் இருந்து பல வருடங்கள் அதே நிலைதான் தொடர்ந்தது என்றும், இப்படிப்பட்ட மிகச் சாதாரணமான படங்கள் வெளிவந்ததால்தானோ என்னவோ தனக்கும் திரைப்படங்களை இயக்கும் எண்ணம் தோன்றியது என்றும் மணி ரத்னம் சொல்கிறார். ஒருவேளை பாலசந்தர்களும் பாரதிராஜாக்களும் மஹேந்திரன்களும் இன்னும் அதிக அளவில் இருந்திருந்தால், திரைப்படங்களை இயக்கும் ஆசையே தனக்கு வந்திருக்காது என்றும், திரைப்படங்களைப் பார்க்கும் ஒரு ரசிகனாகவே தனது வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன் என்றும் குறிப்பிடுகிறார்.
மணி ரத்னத்தின் படிப்பு 1977ல் முடிவடைந்தது. அதன்பின் ஒன்றரை வருடங்கள் கன்ஸல்டண்ட்டாக வேலை. 1979ன் பாதியிலிருந்து, திரைப்படத்துறையில்தான் தனது எதிர்காலம் என்ற முடிவு. பல்லவி அனுபல்லவியை இங்லீஷில் திரைக்கதையாக எழுத ஆரம்பித்தது 1980ல். அதை ஒரு மாதத்தில் முடித்தார். அதிலிருந்து, படம் வெளியான 1983 ஜனவரி வரை இருந்த காலம்தான் மிகவும் கடினமானது என்றும், அந்தச் சமயத்தில் திரைப்படங்களில் நுழைய ஆரம்பித்திருந்த ஒரு சிறு நண்பர்கள் கும்பலோடுதான் பெரும்பாலான நேரத்தைக் கழித்ததாகவும் சொல்கிறார். அந்த கும்பல் – ஒளிப்பதிவாளர்கள் P.C ஸ்ரீராம் மற்றும் சுரேஷ், இயக்குநர்கள் பாரதி – வாசு மற்றும் குட்டி பிரகாஷ் (தற்போது ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றின் உரிமையாளர்). மணி ரத்னத்தின் பல்லவி அனுபல்லவியின் முதல் ஷெட்யூல் முடிவடைந்த நேரத்தில், பாரதி – வாசுவின் பன்னீர் புஷ்பங்கள் வெளியாகிவிட்டது. இவர்கள் அத்தனை பேருமே அந்தக் கால உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்னில்தான் காஃபி அருந்தியபடியே பெரும்பாலான தருணங்களை செலவிட்டிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே, தங்களைப் பற்றிய பல கனவுகளையும் கொண்டிருந்திருக்கின்றனர்.
1980ல் தனது முதல் திரைக்கதையை மணி ரத்னம் என்ற இளைஞர் எழுத ஆரம்பிக்கிறார். அதன்பின் அந்தப் படமான ‘பல்லவி அனுபல்லவி’யின் படப்பிடிப்பு துவங்குகிறது. அந்தக் காலத்தில், முதல் படம் எழுக்கும் எந்தப் புதிய இயக்குநரும் செய்யத் தயங்கும் ஒரு விஷயத்தை மணி ரத்னம் செய்தார். அவரது முதல் படத்திலேயே, அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலமாக விளங்கிய நான்கு டெக்னீஷியன்கள் வேலை செய்தனர். பாலு மஹேந்திரா – ஒளிப்பதிவு; லெனின் – படத்தொகுப்பு; கலை – தோட்டா தரணி; இசை – இளையராஜா. இது எப்படி சாத்தியமானது?
அவர்களிடம் சென்று பேசித்தான் இது சாத்தியமானது என்கிறார் மணி ரத்னம். ஏன் அவரது பட்ஜெட்டுக்குள் இருந்த பிற டெக்னீஷியன்களை அவர் உபயோகப்படுத்திக்கொள்ளவில்லை? காரணம், திரைப்படத்தை எப்படி எடுக்கவேண்டும் என்பது மணி ரத்னத்துக்குத் தெரிந்திருந்தது என்பது அவரது பதில்களிலிருந்து தெரிகிறது. அவரது காலகட்டத்தில், இன்னமும் பெரிய பெல்பாட்டம் பேண்ட்கள், கர்லிங் க்ராப், பெரிய பக்கிள்களுடன் கூடிய பெல்ட்கள் போன்றவையெல்லாம் மிக சகஜமாக திரைப்படங்களில் உலவிக்கொண்டிருந்தன. ஆனால் மணி ரத்னத்துக்கு அதில் இஷ்டம் இல்லை. காரணம் அவரைச்சுற்றி வாழ்ந்த மனிதர்கள் அப்படி உடை உடுத்தவில்லை. எனவே கதாபாத்திரங்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான முடிவு அவரிடம் இருந்தது. இதைப்போலவே, சிறந்த டெக்னீஷியன்களுடன் வேலை செய்தால், தான் சொல்லவரும் கருத்து இன்னும் எளிதாக வெளிவரும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
எனவே, மேலே சொல்லப்பட்ட நால்வரையும் மணி ரத்னம் நேரில் சென்று பார்க்கிறார். அவர்களிடம் கதையை விவரிக்கிறார். குறிப்பாக பாலு மஹேந்திராவைப் பற்றிச் சொல்லும்போது, முள்ளும் மலரும் படத்தில் அவர் உபயோகித்த ஒரு குறிப்பிட்ட கேமரா உத்தியான Baby zoom என்பதைப்பற்றி விளக்குகிறார் மணி ரத்னம். டக்கென்று முழுமையாக ஸூம் ஆகாமல், மிகச்சிறிய ஸூம் மூலம் ஃப்ரேமில் உள்ள கதாபாத்திரத்தை நோக்கிக் கேமரா மிகச்சிறிய மூவ்மெண்ட்டில் உள்ளே சென்று, பின்னர் வெளியேறிவிடுவதே பேபி ஸூம். அப்போதெல்லாம் இதை யாருமே செய்ததில்லை என்று சொல்லும் மணி ரத்னம், இதைப்போன்ற விஷயங்களை பாலு மஹேந்திரா சகஜமாக செய்துகொண்டிருந்ததை அறிந்திருந்ததாலேயே அவரை அணுகியதாகவும் சொல்கிறார்.
அதேபோல் பல்லவி அனுபல்லவி உருவான இரண்டு வருடங்களிலும், திரைப்படங்கள் பற்றிய பல புத்தகங்களையும் மணி ரத்னம் படித்திருக்கிறார். ப்ரிட்டிஷ் கௌன்ஸில் மற்றும் அமெரிக்கன் லைப்ரரிகளில், வேறு எங்கும் கிடைக்காத பல அரிய புத்தகங்கள் இருந்தன. ஆகவே அங்கு சென்று அவற்றைப் படித்திருக்கிறார்.
தனது நெருங்கிய நண்பரான P.C ஸ்ரீராமை ஏன் மணி ரத்னம் முதல் படத்தில் பயன்படுத்திக்கொள்ளவில்லை? தயாரிப்பாளருக்கு, இயக்குநரைப் புதிதாகப் போட்டபின்னர் ஒளிப்பதிவாளரையும் புதிதாகக் களமிறக்கும் துணிவு இல்லை என்பதே காரணம்.
பாலு மஹேந்திராவுக்கும் முன்னர் மணி ரத்னம் பார்த்த நபர் – லெனின். அவர், மணி ரத்னத்தின் பக்கத்து வீட்டுக்காரர். உதிரிப்பூக்கள் படத்தில் சம்மந்தப்பட்ட எவரையும் விட்டுவைக்காமல் பார்த்துப் பேசிவிடவேண்டும் என்ற தீவிரமான எண்ணம் மணி ரத்னத்துக்கு இருந்திருந்தது. கூடவே மணி ரத்னத்தின் குடும்பமும் சினிமா சம்மந்தப்பட்ட குடும்பம் என்பதால் லெனினைச் சந்திப்பதில் அவருக்குப் பிரச்னை இல்லை. ஆனால், படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நடக்கையில்கூட, எடிட்டிங்கைப் பற்றிய தெளிவான புரிதல் தனக்கு இல்லை என்று சொல்லும் மணி ரத்னம், லெனின் எப்படியெல்லாம் ஒவ்வொரு முறையும் எடிட்டிங் பற்றியும் காட்சிகளை எடிட் செய்வதைப் பற்றியும் விளக்கினார் என்று குறிப்பிடுகிறார்.
இதற்கும் முன்னால், தோட்டா தரணியைப் பார்த்துவிட்டார் மணி ரத்னம். ராஜபார்வை படப்பிடிப்பு நடக்கையில் அங்கு சென்ற மணி ரத்னமும் P.C ஸ்ரீராமும், படத்தின் ஒலிப்பதிவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நண்பரின் மூலம் தோட்டா தரணி உருவாக்கியிருந்த கமல்ஹாஸனின் வீட்டு செட்டைப் பார்த்திருக்கின்றனர். அது அவருக்குப் பிடித்துவிட்டதால் தோட்டா தரணியைப் பார்த்துப் பேசி அவரையும் உள்ளே கொண்டுவந்துவிட்டார் மணி ரத்னம்.
இதன்பின்னர் அவர் சந்தித்தவர்தான் இளையராஜா. அப்போது எண்பதுகளின் துவக்கத்தில் இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைச் சொல்கிறார் மணி ரத்னம். அவருக்கும் முன்னர் ஒரு கன்னட இசையமைப்பாளரைப் பார்த்து ஒப்பந்தம் செய்துவிட்ட மணி ரத்னம், அவரது ஒரு திரைப்படத்தைக் காணச்செல்கிறார். அந்தப் படத்தில் பின்னணி இசையைக் கேட்டு திகிலைடைந்து ஓடிவந்துவிட்ட மணி ரத்னத்துக்கு அப்போது இருந்த ஒரே வாய்ப்பு இளையராஜா மட்டுமே. காரணம், அந்தக் கன்னட இசையமைப்பாளரின் இசை – old school என்று சொல்கிறார் மணி ரத்னம். எண்பதுகளில் இருந்துவந்த அந்த இசையமைப்பாளர் old school என்றால், அவருக்குத் தனது காலகட்டத்துக்கு இளையராஜாவின் இசை பொருந்தும் என்றும் தோன்றியிருக்கிறது. இதேதான் ரஹ்மான் விஷயத்திலும் நடந்தது என்பது என் அவதானிப்பு. இளையராஜா – மணி ரத்னம் கூட்டணி வெற்றிகரமாக இருந்துவந்த நிலையிலும், தொண்ணூறுகளின் ஆரம்பகட்டத்திலேயே, ரஹ்மானின் இசைதான் நவீனகாலத்துக்குப் பொருந்தக்கூடிய இசை என்பதை அவரால் கவனிக்க முடிந்திருக்கிறது. இதனால் இளையராஜாவை Old school என்று மணி ரத்னம் சொல்லியிருக்க மாட்டார் என்றாலும், அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப தன்னை update செய்துகொள்ள அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதைச் சொல்லவந்தேன்.[divider]
இனி வருவது நான் ஃபேஸ்புக்கில் 2013 செப்டம்பரில் போட்ட ஒரு பதிவு.
அட்வான்ஸை பழைய இசையமைப்பாளரிடமிருந்து திரும்ப வாங்க அவருக்கு கூச்சம். எனவே, ஏற்கெனவே ஒளிப்பதிவாளராக புக் செய்யப்பட்டிருந்த பாலு மஹேந்திராவிடம், இளையராஜாவை அறிமுகம் செய்துவைக்க முடியுமா என்று கேட்கிறார் மணி ரத்னம். அறிமுகம் செய்துவைக்கப்படுகிறது.
இளையராஜாவிடம் இப்படி பேசுகிறார் முதல் பட இயக்குநர் மணி. ‘ஒரு சின்ன பட்ஜெட் கன்னடப்படம் பண்றேன். அதுக்கு நீங்க இசையமைச்சா நல்லா இருக்கும். ஆனா உங்க மார்க்கெட் ரேட்டை என்னால் கொடுக்க முடியாது…..’
அடுத்த நொடி, இளையராஜா சம்மதிக்கிறார். கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. மார்க்கெட் ரேட்டுக்கு ஐந்தில் ஒரு பங்கு ரேட்டுக்கு ஒகே சொல்கிறார். உடனடியாக படத்தின் கதையை மணி சொல்ல, உடனடியான எதிர்வினை -‘சீக்கிரமே கம்போஸிங்குக்கு போயிரலாம்’ – ஒரு புன்சிரிப்புடன்.
இப்படித்தான் மணி ரத்னத்தின் முதல் படத்துக்கு இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இங்கே ஒரு flash forward. ’மௌனராகம்’ மணி ரத்னத்தின் ஐந்தாவது படம். இதற்குள் இளையராஜா மணியுடன் நன்கு பொருந்திவிட்டார். இளையராஜாவிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்று மணி ரத்னத்தின் அவதானிப்பு இதோ:
‘இளையராஜா பொதுவாக இசையமைப்பதற்கு முன்னால் ஒவ்வொரு ஸீனாகப் படத்தைப் பார்ப்பார். ஒரு ஸீன் ஓடும்போது அதற்கேற்ற moodகளை பேப்பரில் குறித்துக்கொள்வார். அந்த ரீல் முடிந்ததும் கடகடவென்று இசையை எழுதிவிடுவார். அவ்வளவுதான். எங்கே இசை தொடங்கவேண்டும், எங்க மெதுவாக வரவேண்டும், எங்க முடியவேண்டும் என்பதெல்லாம் உடனடியாக அதிலேயே வந்துவிடும். அடுத்த கணமே அவரது ஆர்க்கெஸ்ட்ராவும் இசையை காப்பி செய்துவைத்துக்கொண்டு தயாராகிவிடுவார்கள். இதுதான் அவரது பாணி.
எனவே, ஒரு இயக்குநராக, இசையில் நமது இன்புட்கள் இருக்கவேண்டும் என்றால் இளையராஜா அந்தந்த ரீல்களைப் பார்க்கும்போதே சொன்னால்தான் உண்டு. அங்கே நமது எதிர்பார்ப்பைச் சொல்லத் த வறிவிட்டால் இசை அடுத்த சில நிமிடங்களில் படுவேகமாகத் தயாராகிவிடும். அதன்பின் மாற்றச்சொல்வது தயாரிப்பு ரீதியில் செலவை வைக்கும். இதனால், அவர் ரீல்களைப் பார்க்கும்போதே மெதுவாக அவரது காதுகளில் எனக்குத் தேவையான இன்புட்களைப் போட்டுவிடுவேன். அதன்படியே இசையும் தயாராகிவிடும். இதுதான் இளையராஜாவிடம் வேலை வாங்குவதன் ரகசியம்’.
இது உண்மையில் ஒரு எளிய வழிமுறை. ஆனால் அதனை, ’இளையராஜா’ என்ற பிரம்மாண்டமான பிம்பம் இருப்பதால் பிற இயக்குநர்களில் பலர் செய்யமாட்டார்கள். எனவே அவர்களுக்குத் திருப்தி இல்லாமல் இசை வரக்கூடிய வாய்ப்புகளே அதிகம்.
சரி. மௌன ராகத்தின் flash forward கட் செய்துவிட்டு பல்லவி அனுபல்லவியின் காலத்துக்கு வருவோம்.[divider]
இதன்பின்னர் நடிக நடிகையர் தேர்வு. அந்தக் காலகட்டத்தின் பெரிய நடிகையான லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படத்தில் (Vamsa Vriksham) நடித்திருந்த அனில் கபூர், எண்பதுகளின் துவக்கத்திற்கான ஒரு சமகால இளைஞனின் தோற்றத்தில் இருந்ததால் புக் செய்யப்பட்டார். இன்னொரு கதாபாத்திரத்துக்கு மணி ரத்னம் தேர்வு செய்தவர் சுஹாஸினி. ஆனால் அவர் அதை மறுத்துவிடவே, கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் பல்லவி அனுபல்லவி எடுத்து முடிக்கப்பட்டு வெளியானது. இந்த இடத்தில், திரைக்கதை எழுதுவதற்கும், அதனைப் படமாக மாற்றுவதற்குமான நுண்ணிய வேறுபாடுகளை மணி ரத்னம் தெளிவாகவே சொல்கிறார். படப்பிடிப்பு ஆரம்பித்த மூன்றாம் நாள், பாலு மஹேந்திராவிடம், ‘எனக்கு இங்கிருந்து ஓடிவிடலாம் என்று தோன்றுகிறது. எதுவுமே சரியாக வரவில்லை’ என்று சொல்லியிருக்கிறார் மணி ரத்னம். அவருக்கு தைரியம் ஊட்டியிருக்கிறார் பாலு மஹேந்திரா. சிறுகச்சிறுக ஒரு படத்தை இயக்கும் அனுபவத்தை இப்படியாக மணி ரத்னம் கற்றுக்கொண்டார். ஒரு இயக்குநரின் வேலைகளைப் பற்றியும் இங்கே விரிவாக விளக்குகிறார் மணி ரத்னம்.
இதன்பின், படத்தைப் பார்த்த மலையாளத் தயாரிப்பாளர் N.G. ஜான், மணிரத்னத்தை அவரது அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறார். படத்தின் பெயர் – ‘உணரு’. அவரிடம், பல்லவி அனுபல்லவியின் உருவாக்கத்தின்போதே மணி ரத்னம் எழுதியிருந்த ‘திவ்யா’ என்ற கதையைச் சொல்கிறார். (இந்தக் கதைதான் மணி ரத்னத்தின் ஐந்தாவது படமாக, ‘மௌன ராகம்’ என்ற பெயரில் பிந்நாட்களில் வெளிவரப்போகிறது. அதுதான் மணி ரத்னத்தின் முதல் ஹிட்டும் கூட). ஆனால் தயாரிப்பாளர், இதெல்லாம் மலையாளத்துக்கு ஒத்துவராது என்று சொல்லிவிட, உணரு தயாராகிறது.
இந்தப் படம் எடுக்கும்போது மணி ரத்னம் சந்தித்த பிரச்னைகள் வேறுவிதமானவை. பல்லவி அனுபல்லவியில், ஒரு ஃப்ரேமில் அதிகபட்சம் நான்குபேர் இருப்பார்கள். இதனால் ஷாஅட் வைப்பது சுலபமாக இருந்தது. ஆனால் உணருவில், ஒரு ஃப்ரேமில் குறைந்தபட்சம் பத்து பேர். காரணம், அது தொழிலாளர் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதனால் மணி ரத்னத்துக்கு ஷாட் வைப்பது மிகக்கடினமாக இருந்திருக்கிறது. இத்தனை பேர் இருந்தால் எப்படி எங்கிருந்து துவங்குவது? வரிசையான ஷாட்களை எப்படியெல்லாம் அமைப்பது? இதனையும் படுவேகமாகக் கற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம். அதையும் செய்திருக்கிறார் மணி ரத்னம்.
ஃபிப்ரவரி 1ம் தேதி ஷூட்டிங் துவங்குகிறது. படம் வெளியானது – 1984 ஏப்ரல் 14. மணி ரத்னத்தின் மிகக்குறுகியகாலப் படம் இது.
இதன்பின்னர் மணி ரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான பகல் நிலவு’ துவங்கியது. தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், மணி ரத்னத்தின் நெருங்கிய நண்பர். எனவே, படம் துவக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால் அவரும் ‘திவ்யா’ என்ற திரைக்கதையை நிராகரித்து, ஆக்ஷன் சேர்ந்த படம் ஒன்றுதான் தேவை என்று சொல்லிவிட, அப்போது எழுதப்பட்ட திரைக்கதைதான் பகல் நிலவு. படத்தில் யாருக்குமே ஒப்பனை இல்லை.
பகல் நிலவைப் பற்றிச் சொல்கையில், ஒரு விஷயத்தை கவனித்தேன். அதுதான் தமிழர்களின் குறியீட்டு வெறி. அதாவது, நமக்கு ஒரு இயக்குநரைப் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அவர் சும்மா வைக்கும் ஷாட்களில் கூட ‘அதோ குறியீடு… இதோ குறியீடு’ என்று ஆர்கஸம் அடைவதே தமிழர்களாகிய நமக்கு ஒரு கைவந்த கலை என்பது என் அனுமானம். அது பலமுறை நிரூபணமும் ஆகியிருக்கிறது. அப்படி, படத்தில் ரேவதி, எப்போது பார்த்தாலும் கழுத்தில் கேமராவைத் தொங்கவிட்டுக்கொண்டு வருவது, அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு நுணுக்கமான விபரத்தை ஆடியன்ஸுக்குத் தெரிவிவிக்கிறது; எனவே கமர்ஷியல் படமான பகல் நிலவில் கூட மணி ரத்னம் இப்படி ஒரு நல்ல விஷயத்தைச் செய்திருக்கிறார் என்பது பரத்வாஜ் ரங்கனின் அவதானிப்பு.
இந்த இடத்தில் இடைமறிக்கும் மணி ரத்னம், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அதை மறுக்கிறார். கிராமத்துக்கு முதன்முறையாக வரும் ஒரு பெண் என்ன செய்வாள்? அவளுக்கு எப்போது பார்த்தாலும் அலுப்பாகவே இருப்பதால் அங்குமிங்கும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு திரிகிறாள். அவ்வளவுதான் விஷயம் என்று சொல்லிவிட்டு அடுத்த பதிலுக்குப் போய்விடுகிறார் மணி ரத்னம். அந்தக் கதாபாத்திரம் என்ன செய்ய விரும்புகிறது என்பதெல்லாம் பற்றித் திரைக்கதை எழுதும்போதும் சரி, படமாக எடுக்கும்போதும் சரி – எந்த எண்ணமுமே அவருக்கு இருந்ததில்லை என்கிறார் மணி ரத்னம்.
போலவே, பகல் நிலவில் மணி ரத்னத்தின் பாணி காட்சிகள் இல்லை. இதைப்பற்றி அவர் சொல்கையில், அப்போதெல்லாம் தனக்கு எது வருகிறது – வரவில்லை என்பதெல்லாம் இன்னும் பரிசோதனையிலேயே இருந்த காலகட்டம் அது என்றும், அதனால்தான் அந்தப்படம் அவரது பாணியில் இல்லை என்றும் சொல்கிறார்.
பகல் நிலவில் மணி ரத்னம் சந்தித்த பிரச்னை – நடன இயக்கம். அதுவரை முற்றிலும் கமர்ஷியலான ஒரு பாடல் ஃபார்மேட் அவரது படங்களில் இல்லை. பகல் நிலவில்தான் பாடல்கள் choreograph செய்யப்பட்டன. அதை எப்படியெல்லாம் செய்யல்லாம் என்பதில் மணி ரத்னத்துக்கு அனுபவம் இல்லை என்பதால் ஆரம்பத்தில் பிரச்னைகள் இருந்தன என்று சொல்கிறார். குரு தத், விஜய் ஆனந்த், ஸ்ரீதர் போன்றவர்களின் பாடல்கள் அட்டகாசமானவை என்று சொல்லி, அவற்றை இலக்காக வைத்து செயல்பட்டால்தான் நல்ல முறையில் பாடல்கள் வெளிவரும் என்று முயன்றதாகக் குறிப்பிடுகிறார். இங்கே நடன இயக்குநர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆகியவர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்கவேண்டும் என்று விரிவாக மணி ரத்னத்தின் கருத்து வருகிறது.
பகல் நிலவில் காமெடி ட்ராக் என்று ஒன்றும் தனியாக இருந்தது. இதைப்பற்றிச் சொல்கையில், லிவிங்ஸ்டன் மற்றும் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியது அது என்றும், அது இடம்பெறுவதைப் பற்றி ஒரு இயக்குநராக அவரால் முடிவுகள் எடுக்கப்படமுடியாத காலகட்டம் அது என்றும் சொல்கிறார். புதிய இயக்குநர் என்பதால் தயாரிப்பாளர்கள் தரப்பில் சில டெம்ப்ளேட்கள் வலிந்து படத்தில் திணிக்கப்பட்டன. இதேதான் அவரது அடுத்த படமான இதயகோயிலிலும் நடந்தது. அதில் காமெடி ட்ராக்கை எழுதியவர் வீரப்பன். அந்த ட்ராக், பகல் நிலவின் காமெடி ட்ராக்கை விட பரவாயில்லை என்பது மணி ரத்னத்தின் கருத்து.
ஆனால் இங்கே இன்னொரு விஷயமும் இருக்கிறது. பகல் நிலவு மற்றும் இதயகோயில் படங்களின் காமெடி ட்ராக்குகள், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து திணிக்கப்பட்டன. ஆனால் பின்னர் வந்த ‘அக்னி நட்சத்திரம்’ மற்றும் ‘கீதாஞ்சலி’ (இதயத்தைத் திருடாதே) படங்களில் மணி ரத்னத்தாலேயே காமெடி ட்ராக்குகள் வைக்கப்பட்டன. இதற்குக் காரணம் என்னவெனில், ‘மௌன ராகம்’ படம் வெற்றிபெறமுடியாத இடங்களில் கூட இந்தப் படங்கள் வெல்லவேண்டும் என்ற எண்ணம்தான் என்கிறார் மணி ரத்னம். மௌன ராகம் ஹிட் தான் என்றாலும், அது ஒரு மென்மையான படம். ஹைக்ளாஸ் படம். அதைப்போல் இல்லாமல் அக்னி நட்சத்திரம் & கீதாஞ்சலி ஆகியவைகள் பக்கா மசாலாக்கள் என்பதையும் யோசிக்கவேண்டும்.
பகல் நிலவுக்குப் பின்னர் இதயகோயில். இந்தப் படம்தான் அவரது திரைவாழ்வின் மிக முக்கியமான படம் என்று மணி ரத்னம் குறிப்பிடுகிறார். காரணம், இந்தப் படம்தான் இனிமேல் எப்படிப் படம் எடுக்கவேண்டும் என்ற தெளிவை அவருக்கு வழங்கியது. இந்தப் படப்பிடிப்பு முழுதுமே, மிக மிக சோகமாகவும் வெறுப்பாகவும் உணர்ந்ததாக அவர் சொல்கிறார். அம்பிகா & ராதா ஆகியவர்களின் கால்ஷீட்டை வைத்திருந்த கோவைத்தம்பி, அவர்களுக்காக ஒரு கதையையும் வைத்துக்கொண்டு இயக்குநர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்த சமயம் அது. கதையை ஒரு காஸெட்டில் பதிவு செய்து மணி ரத்னத்துக்கு அனுப்புகிறார் கோவைத்தம்பி. ஆனால் மணி ரத்னத்துக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. அதை தயாரிப்பாளரின் முகத்துக்கு நேராக சொல்லத் தயங்கி, தற்போது பகல் நிலவின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருப்பதாகவும், அதை முடிக்க இன்னும் நேரம் அதிகம் எடுக்கும் எனவும், அதனால் இதைச் செய்யமுடியாது என்றும் சொல்கிறார் மணி ரத்னம். உடனடியாக அங்கேயே அம்பிகா & ராதாவின் மேனேஜர்களை ஃபோனில் அழைக்கும் கோவைத்தம்பி, அவர்களின் தேதிகளை ரத்து செய்து, பகல் நிலவை முடித்துவிட்டு வருமாறு மணி ரத்னத்திடம் சொல்கிறார்.
’எனக்குக் கதை பிடிக்கவில்லை. என்னால் முடியாது’ என்ற வார்த்தைகளை நேரடியாகச் சொல்லமுடியாமல் மணி ரத்னம் தயங்கியதால் வந்த வினைதான் இதயகோயில்.
இதய கோயிலின் திரைக்கதையை எழுதிய M.G வல்லபனிடம் மணி ரத்னம் மறுபடியும் ‘திவ்யா’ கதையைச் சொல்கிறார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவரிடம், ‘இண்டர்வெல்ல ஒரு ஹீரோயின் சாகுறாங்க.. க்ளைமேக்ஸ்ல இன்னொரு ஹீரோயின் சாகுறாங்க.. படம் அவசியம் ஹிட்’ என்று கோவைத்தம்பியின் தரப்பில் சொல்லப்படுகிறது. இதன்பின் அதே கதையை வைத்துக்கொண்டு, சார்லி சாப்ளினின் ‘Limelight’ படத்தைப் போன்ற ஒரு திரைக்கதையை எழுதித்தருகிறார் மணி ரத்னம். அதுவும் நிராகரிக்கப்படுகிறது. காரணம், அந்தக் கதை youngகாகவும் modernனாகவும் இல்லை என்று கோவைத்தம்பி சொல்லியதே. ‘நீங்க ஷாட்களை மட்டும் எடுங்க…. மத்ததெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்’ என்று மணி ரத்னத்திடம் சொல்லப்பட்டது.
இந்த இடத்தில் மறுபடியும் பரத்வாஜ் ரங்கனின் ‘குறியீட்டு’ ஆர்வம். இதயகோயிலில் காதல் – மரணம் என்ற கரு, பிந்நாட்களில் கீதாஞ்சலியில் இன்னும் அழகாக, மணி ரத்னத்தின் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, கீதாஞ்சலியை எழுதியபோது இதயகோயிலை மனதில் வைத்துதான் எழுதினீர்களா என்று கேட்கிறார் ரங்கன். இதற்கு பதிலாக, இதயகோயிலை சுத்தமாக மறக்கவே விரும்பியதாகவும், அதனால் அப்படியெல்லாம் நினைவு வைத்துக்கொள்ளவில்லை என்றும் பட்டென்று சொல்கிறார் மணி ரத்னம். இதயகோயிலின் ஒரே Saving grace – அதன் பாடல்கள் என்று நினைவு கூர்கிறார். குறிப்பாக ‘நான் பாடும் மௌன ராகம்’ பாடல், குரு தத்தின் Pyaasa (தன்னைத் தொலைத்த கவிஞன், யாருமற்ற அரங்கத்தில் தனது இறந்த காலத்துடனும், தனது கவிதையுடனும் மட்டுமே வாழும் நிலையைச் சொன்ன) படத்திற்கான மரியாதை என்று சொல்கிறார்.
மணி ரத்னத்தின் முக்கியமான படங்களை இனி காணலாம்.
’பல்லவி அனுபல்லவி’, ‘உணரு’, பகல் நிலவு’ & ‘இதயகோயில்’ ஆகிய படங்களை முடித்த மணி ரத்னம், ஐந்தாவது படமாக, அவரது பழைய திரைக்கதையான ‘திவ்யா’வைப் படமாக்கும் சுதந்திரம் அவருக்குக் கிடைக்கிறது. முதல்முறையாக, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எந்தப் பிரச்னையும் இல்லாமல், மணி ரத்னம் நினைத்தபடியே படமாக்கும் சந்தோஷம் ஒரு கூடுதல் போனஸ். ’நான் பாடும் மௌன ராகம்’ பாடலிலிருந்து, படத்துக்குத் தேவையான டைட்டில் உருவாகிறது. தொடங்குகிறது மௌன ராகத்தின் படப்பிடிப்பு.
சில வருடங்களுக்கு முன்னரே முடித்திருந்த ’திவ்யா’ திரைக்கதைக்கும் ’மௌன ராகம்’ திரைப்படத்துக்கும் இருந்த ஒரே வித்தியாசம் – திரைக்கதையில் கார்த்திக்கின் பகுதி இல்லை. திரைக்கதை எழுதியபின்னர் சில படங்களை இயக்கி முடித்திருந்த மணி ரத்னத்துக்கு, திரைப்படம் எல்லாப் பக்கங்களும் செல்லவேண்டும் என்றால், திருமணம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு பெண்ணின் கதை மட்டுமே போதாது என்று தோன்றுகிறது. இதனால், அவளது கதாபாத்திரத்தைப் பற்றிய கேள்விகள் ஆடியன்ஸுக்கு எழக்கூடாது என்று முடிவெடுத்து, அவளது இறந்த காலத்தைக் காட்டவேண்டும் என்று முடிவு செய்கிறார் மணி ரத்னம். எனவே கார்த்திக்கின் பகுதி எழுதப்படுகிறது.
அந்த ஃப்ளாஷ்பேக் மிகவும் உயிர்ப்புடன் இருந்த பகுதி என்றும், பாடல் ஒன்று அங்கு இருந்திருக்கவேண்டும் என்பதுதான் மிகவும் இயற்கையான ஒரு எண்ணம் என்றும் ரங்கன் கேட்கிறார். அதற்கு, காட்சிகள் நன்றாக இருந்தால், அவற்றை இன்னும் அழகாக்கும் பாடல்கள் தேவையில்லை என்று மணி ரத்னம் சொல்கிறார். அதேபோல், படம் வெளிவந்த 1986ல், பெண்களிடம் பழக வாய்ப்புகள் இல்லாத ஆண்களே அதிகம். இருந்தபோதிலும், நகர வாழ்க்கையில் பெண்களிடம் தயக்கமே இல்லாமல் பழகக்கூடிய ஒரு பகுதியினரும் இருந்தனர். இவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை உருவாக்கியதாக மணி ரத்னம் சொல்கிறார். இவர்கள் The Doors, The Beatles போன்ற ரசனை உடையவர்கள். இந்த இடத்தில், பேச்சு சற்றே திசைமாறி, மணி ரத்னத்தின் படங்களின் பொதுவான அம்சம் ஒன்றைப்பற்றிய – தமிழ்க் கதாபாத்திரங்கள், வேற்று மொழிகள் பேசப்படும் இடங்களில் வாழ்வது – கேள்விகளுக்குப் பதில் சொல்வதாக அமைகிறது. இதுபோன்ற கதைகளை அமைக்க அவசியம் லாஜிக் தேவை என்றும், இப்படிப்பட்ட களன்களை அமைப்பதில் மெல்ல மெல்ல சில வழிகளை உருவாக்கியே ஆகவேண்டும் என்றும், அப்படி முடியாத பட்சத்தில்தான் ஹிந்தியிலேயே நேரடியாகப் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டதாகவும் மணி ரத்னம் குறும்பாகப் பேசுகிறார்.
இதன்பின்னர் மௌனராகத்தின் ட்ரேட் மார்க் அம்சங்களான அதன் பிரத்யேக ஒளியமைப்பு, அழகான உட்புற செட்கள் போன்றவை வருகின்றன. வீட்டுக்குள் ஸ்ரீராம் அமைத்த பிரத்யேகமான லைட்டிங்கைப் பற்றிச் சொல்கிறார் மணி ரத்னம். போலவே மோகனின் தில்லி வீடு, சென்னையிலேயே தேர்வு செய்யப்பட்ட ஒரு வீடு என்று தெரிந்துகொள்கிறோம். பின்னர் மணி ரத்னத்தின் பிரத்யேக ஓரிருவரி வசனங்களைப் பற்றிச் சொல்கிறார். வசனம் என்று – அதாவது, யோசித்து எழுதப்பட்டது என்று – தெரியாமல், அந்தந்த சூழ்நிலைகளில் நகரத்துக் கதாபாத்திரங்கள் எப்படிப் பேசுவார்களோ அப்படி அமைந்தவைதான் அந்த வசனங்கள் என்றும், பல்லவி அனுபல்லவியுமே அப்படி எழுதப்பட்டதுதான் எனவும், அது கன்னடம் என்பதால் அது கவனிக்கப்படாமல் போய்விட்டதாகவும் மணி ரத்னம் சொல்கிறார். விஷுவல்கள், moodகள், நடிப்பு ஆகியவற்றில் சொல்லப்பட்ட எக்கச்சக்கமான விஷயங்களைத் தாண்டி, வசனம் என்று வரும்போது குறைவாக அவைகள் இருந்தாலே போதும் என்பது அவரது கருத்து.
மௌனராகத்தில் பரத்வாஜ் ரங்கனுக்குப் பிடித்தமான காட்சி ஒன்றைப் பற்றி ரங்கன் இதன்பின் கேட்கிறார். துளசிச்செடியின் அருகே ரேவதி, தனது முதலிரவின்போது அமர்ந்திருக்கும் காட்சி. யாரென்றே தெரியாத மனிதன் ஒருவனுடன் எப்படி இரவைச் செலவிடுவது என்று அந்தக் கதாபாத்திரம் கேட்கிறது. இதைப்பற்றிச் சொல்லும் மணி ரத்னம், அந்தக் காட்சியிலிருந்துதான் அந்தப் படமே உருவானதாகச் சொல்கிறார். முதலில் கொச்சையான பிராமணத் தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை அது என்று அறிகிறோம். நமது சமுதாயத்தில், பெண்களை கட்டுப்பாடுகளோடு வளர்த்துவிட்டு, திடீரென்று ஒரு நாள் இரவில் யாரென்றே தெரியாத ஆடவனுடன் படுக்கச் சொல்லும் விசித்திரம் நிலவுகிறது. பெரும்பாலான சமயங்களில் அந்தப் பெண்ணுக்கு அது ஒரு துன்பம்தான். படத்தில் திவ்யா சொல்வதுபோலான (’கம்பளிப்பூச்சி ஊர்ரமாதிரி இருக்கு’) உணர்வு அது. அந்த இரவைப் பற்றிய கதைதான் மௌனராகம் என்று சொல்கிறார் மணி ரத்னம். கீழே இருக்கும் லிங்க்கில், 24:20ல் ஆரம்பிக்கும் காட்சி அது.
இதன்பிறகு மௌன ராகத்தைப் பற்றிய பல விஷயங்கள் வருகின்றன. இங்குதான் நாம் இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் பார்த்த இளையராஜா இசையமைப்பதைப் பற்றிய மணி ரத்னத்தின் அவதானிப்பு வருகிறது. இங்கே க்ளிக் செய்தால் அதனை ஃபேஸ்புக்கில் படிக்கலாம். கூடவே, ரஹ்மானிடம் மணி ரத்னத்தின் collaboration எப்படி இருந்தது, திவ்யாவின் கடவுள் பக்தி, கார்த்திக்கின் ஓபனிங் எண்ட்ரி எப்படிப் படமாக்கப்பட்டது போன்ற பல விஷயங்களும் பேட்டியில் இருக்கின்றன.
மௌன ராகம் முடிந்ததும் மணி ரத்னம் உருவாக்க விரும்பிய படம்தான் ‘அக்னி நட்சத்திரம்’. ஆனால், அதன் திரைக்கதையை மணி ரத்னம் எழுதிக்கொண்டிருந்தபோது, கமல் ஹாஸன் அனுப்பிய முக்தா ஸ்ரீனிவாசனிடம் மணி ரத்னம் பேச நேர்ந்தது. ‘கிழக்கு எந்தப் பக்கம்?’ என்றூ விசாரித்த முக்தா ஸ்ரீனிவாஸன், அந்தப் பக்கமாக மணி ரத்னத்தை நிற்கவைத்துவிட்டு, கமல் அனுப்பிய வீடியோ காஸெட்டைத் தருகிறார். அது ஒரு ஷம்மி கபூர் படம். படத்தின் பெயர் – Pagla Kahin Ka. படம் மணி ரத்னத்துக்குத் துளிக்கூட பிடிக்காமல் போனதால், முக்தா ஸ்ரீனிவாஸனிடம் அப்படியே சொல்லிவிடுகிறார். ஆனால் இதற்கெல்லாம் மசியாத முக்தா, ‘நீங்களே கமலிடம் அதைச் சொல்லிவிடுங்கள்’ என்று சொல்லி, கூடவே அழைத்துச் செல்கிறார். அப்போதுதான், தனக்கு அந்த ஹிந்திப்படம் பிடிக்காமல் போனதுபோல், முக்தாவுக்கும் தன்னை அவரது படத்துக்கு ஒப்பந்தம் செய்யப் பிடிக்கவில்லை என்பதை மணி ரத்னம் உணர்கிறார். இதன்பின்னர் கமலைச் சந்தித்து, அந்த ஹிந்திப்படம் பிடிக்கவில்லை என்று சொல்கிறார் மணி ரத்னம். அப்போது, அந்தக் காஸெட்டை அனுப்பியது ஒரு conversatioனை ஆரம்பிப்பதற்கே என்று சொல்லும் கமல், எப்படிப்பட்ட படத்தை இயக்க விருப்பம் என்று மணி ரத்னத்தைக் கேட்கிறார். அப்போது மணி ரத்னம் சொல்லியது – ஜேம்ஸ் பாண்ட் அல்லது Dirty Harry வகையான stylish தமிழ்ப்படம் ஒன்று – அல்லது வரதராஜ முதலியாரின் கதையை வைத்து ஒரு படம்.
மணி ரத்னம் 1975லிருந்து 1977 வரை பம்பாயில் படித்துக்கொண்டிருந்தபோது, மாதுங்காவில் கடவுளைப் போன்ற புகழுடன் இருந்தவர் வரதராஜ முதலியார். அவரது கதை மணி ரத்னத்தை ஆச்ச்சரியப்படவைத்திருக்கிறது. அந்தக் கதையின் அவுட்லைனை அன்று மணி ரத்னம் கமல் ஹாஸனிடம் சொல்கிறார். கமல் ஒப்புக்கொள்கிறார். மௌன ராகம் படமாக்கப்பட ஐந்து வருடங்கள் பிடித்தன என்றும், நாயகனுக்கு வெறும் பத்தே நிமிடங்கள்தான் தேவைப்பட்டன என்றும் மணி ரத்னம் இந்த இடத்தில் சொல்கிறார். அது செப்டம்பர். டிஸம்பரில் முக்தாவிடம் தேதிகள் கொடுத்திருப்பதாகவும், அப்போது படப்பிடிப்பை ஆரம்பித்துவிடலாம் என்றும் கமல் ஹாஸன் சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில், அக்னி நட்சத்திரத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட இருந்தது. எனவே இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்.
டிஸம்பரில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நாயகனுக்கு நடந்தது. அப்போது திரைக்கதை முழுமையாகத் தயாராகியிருக்கவில்லை. இதை மணி ரத்னம் கமலிடம் சொல்கிறார். அப்போது கமல், அந்த மூன்று நாட்களையும் வேலு நாயக்கரின் மூன்றுவித கெட்டப்களுக்கான டெஸ்ட் ஷூட்டாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அப்படியே நடக்கிறது. அந்த மூன்று நாட்கள் சோதனைப் படப்பிடிப்பு, கமலின் கெட்டப்களை மெருகேற்ற உதவுகிறது. இதன்பின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்குகிறது. பதினைந்து நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு, ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடலின் படப்பிடிப்பை மணி ரத்னம் துவக்குகிறார். அந்தப் பாடலும் ஒரு சில காட்சிகளும் முடிந்தபின்னர்தான், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வேலை செய்ய இயலாது என்பது அவருக்குப் புரிகிறது. தயாரிப்பாளர் அவரது அண்ணன் என்பதால், ஒரு வருட காலத்துக்குப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, நாயகன் வெளிவந்ததும்தான் மறுபடி துவங்குகிறது.
நாயகன் படப்பிடிப்பில் கமலின் பங்கு எத்தகையது? ஒரு நல்ல நடிகன் படத்தில் இருந்தால், இயக்குநரின் பாரம் குறைகிறது என்கிறார் மணி ரத்னம். நடிப்பைத் தவிர, சில காட்சிகளில் பிற கதாபாத்திரங்களுக்கான ஒப்பனையிலும் கமலின் பங்கு இருந்திருக்கிறது. கூடவே, தனது சொந்தத் துப்பாக்கியையும் கமல் கொண்டுவந்து, டம்மித் துப்பாக்கி உபயோகிக்கவேண்டிய சோதனையிலிருந்து மணி ரத்னத்தைத் தப்புவித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் கேல்கரின் தலையில் வேலு அடித்து உடைக்கும் பாட்டில் நினைவிருக்கிறதா? அது, கமல் அமெரிக்கா சென்றிருந்தபோது வாங்கிவந்த பாட்டில். சர்க்கரையினால் ஆனது. இதைப்போல் நாயகன் படப்பிடிப்பில் கமலின் பலவிதமான inputகள் இருந்திருக்கின்றன.
கமலின் வயதான மேக்கப் பற்றியும் மணி ரத்னம் சொல்கிறார். அந்தச் சமயத்தில் ‘பேசும் படம்’ முடித்துவிட்டு, ஒரு சமயத்தில் ஒரே படம்தான் என்று கமல் செய்ய ஆரம்பித்திருந்த காலம் என்றும், அதனால், தனது பின்மண்டையில் முடிகளை வெட்டி, வேலு நாயக்கரின் தலையில் லேசான சொட்டையைக் கொண்டுவந்தார் என்று சொல்கிறார் மணி ரத்னம். இந்தப் படத்தை முடித்ததும் முழுதாக முடியை எடுத்துவிட்டு அடுத்த படத்தில் (சத்யா) முடி வளர வளர நடித்தார் கமல் என்றும் தெரிந்து கொள்கிறோம். இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்கள் கமலைப் பற்றி இந்தப் பேட்டியில் இருக்கின்றன. கூடவே, ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், ஜனகராஜ் செய்யும் கோமாளித்தனத்துக்கான கமலின் ரியாக்ஷனை எப்படி மணி ரத்னம் திருத்தினார் என்பதும், அதிலிருந்து மணி ரத்னத்தின்மேல் கமலுக்கு முழுமையான நம்பிக்கை துளிர்த்ததையும் அறியலாம்.
கமலிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார் மணி ரத்னம். காரணம், இயக்குநர் விரும்பியதை மீறி, கமலின் பலப்பல நடிப்பு வெளிப்பாடுகளிலும், அவரது மனதில் அந்த ஷாட்டைப் பற்றிய ஐடியாக்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார் என்பதிலும் ஒரு இயக்குநர் எளிதில் கவரப்பட்டு, மனதில் நினைத்த ஒரிஜினல் விஷயத்தை மறந்துவிடநேரலாம் என்பதுதான். இதற்கெல்லாம் பல உதாரணங்களை நாயகனிலிருந்து மணி ரத்னம் தருகிறார். உதாரணத்துக்கு, தனது மகனின் உடல் கிடத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி வேலு நாயக்கர் நடந்துவரும் காட்சி. இதில், வேலு நாயக்கர் தனது வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டே கீழிறங்கி வரும் காட்சியை டாப் ஆங்கிளில் முதலில் படமாக்கியிருக்கிறார் மணி ரத்னம். அந்தக் காட்சி, முழுக்க முழுக்கக் கமலின் கடுப்பாட்டில் இருந்ததை மணி ரத்னம் உணர்கிறார். ஆனால், கதைப்படி வேலு நாயக்கர் மாடியிலிருந்து, கீழே ஒரு பிணம் கிடத்தப்பட்டதைப் பார்த்துவிடுகிறார். அவரது மனதில் சந்தேகம். இந்த இடத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் முழுக் கட்டுப்பாட்டில் அந்தக் காட்சி இருக்கக்கூடாது என்று மணி ரத்னம் உணர்கிறார். காரணம், வேலு நாயக்கரின் மனதில் ஒரு தளர்வு வந்துவிட்டது. அது அவரது மகனாகவும் இருக்கலாம். எனவே இதனைக் கமலிடம் சொல்கிறார் மணி ரத்னம். உடனடியாக அதனை உள்வாங்கிக்கொண்டு அப்படியே நடித்துக்கொடுக்கிறார் கமல். எனவே, எத்தனைவகையான நடிப்பைக் கமல் வெளிப்படுத்தினாலும், நினைத்ததை அவரிடம் சொல்லிவிட்டால் வேலை இன்னும் சுலபம் என்பது மணி ரத்னத்தின் கருத்து.
இதைப்போல் கமலாக இம்ப்ரவைஸ் செய்து நடித்த பல காட்சிகளைப் பற்றி ரங்கனும் மணி ரத்னமும் விவாதிக்கின்றனர்.
நாயகனைப் பற்றிய பரத்வாஜ் ரங்கனின் கேள்விகளும் அவற்றுக்கு மணி ரத்னத்தின் பதில்களும், அவசியம் அனைவரும் படித்துப் பார்க்கவேண்டியவை. குறிப்பாக இயக்குநர் ஆகும் கனவில் இருப்பவர்கள். காரணம், மணி ரத்னம் மிகத் தெளிவாக, தான் விரும்பியவற்றைத்தான் எடுத்திருக்கிறார். கூடவே, படப்பிடிப்பில் என்ன செய்ய வேண்டும், ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை (கமல்) வேலைவாங்குவது எப்படி, இசையமைப்பில் இயக்குநரின் பங்கு, minor கதாபாத்திரங்கள் போன்ற பல விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்படுகின்றன.
நாயகனுக்குப் பிறகு அக்னி நட்சத்திரம் துவங்குகிறது.
நாயகனுக்காக காலைவேளைகளில் ரெகார்டிங். மதியம் அக்னி நட்சத்திரம். காலையில் பழங்கால இசைக்கருவிகள். மதியத்தில் எலெக்ட்ரானிக் கருவிகள். இப்படித்தான் இளையராஜாவுடன் வேலை செய்ததாக மணி ரத்னம் சொல்கிறார். இந்த இடத்தில், ஒரு ஆக்ஷன் படத்தை எப்படி எழுதுவது என்று மணி ரத்னத்தின் கருத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில், என்னதான் வேகமாகத் திரைக்கதை நகர்ந்தாலும், படத்தின் ஒரே ஒரு major ஆக்ஷன் காட்சி, க்ளைமாக்ஸில் மட்டும்தான் வருகிறது. இதைப்பற்றிச் சொல்லும் மணி ரத்னம், Jaws படத்தில் நம்மை பயமுறுத்தியது சுறா அல்ல என்றும், சுறாவின் வால் மட்டுமே என்றும் சொல்கிறார். தண்ணீரைக் கிழித்துக்கொண்டுவரும் அந்த வால்தான் படத்தின் பெரும்பாலான நிமிடங்களில் திகிலைக் கிளப்பியது என்று சொல்லி, படத்தின் எல்லாக் காட்சிகளிலும் இரண்டு கதாபாத்திரங்களும் அடித்துக்கொள்வது அலுப்பைத்தான் கொடுக்கும் என்றும், மாறாக இந்த இருவரும் வரும் காட்சிகளில் எல்லாம் ஒரு ஆக்ஷனுக்கான promise இருக்கும்படி வைத்துக்கொள்வதுதான் இன்னும் விறுவிறுப்பைக் கிளப்பும் என்றும் சொல்கிறார். நாயகனிலும் இப்படித்தான். இன்ஸ்பெக்டரைக் கொல்லும் காட்சி மட்டும்தான் அந்தப் படத்தின் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சி.
இதன்பின் அக்னி நட்சத்திரத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் மணி ரத்னம். அதன் ஒளிப்பதிவு (P.C ஸ்ரீராம்), நிரோஷாவின் கதாபாத்திரத்தின் பெயரே படத்தில் வராதது, ஆக்ஷன் படங்களில் மணி ரத்னத்தின் விருப்பம், இளைஞர்களின் ரசனை, அபூர்வ ராகங்கள் என்று நிறையப் பேசுகிறார்.
பின்னர் துவங்குகிறது கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே). கீதாஞ்சலி என்பது, கான்ஸரில் இறந்துபோன Geethanjali Ghei என்ற பதினாறு வயதுப் பெண் கவிஞரின் பெயர் என்று அறிகிறோம். அக்னி நட்சத்திரம் திரைக்கதையை முடித்தபின்னர் மணி ரத்னம் எழுதி வைத்த ஒரு கதைச்சுருக்கமே கீதாஞ்சலி. கதாநாயகன் இறப்பதைப் போன்ற எண்ணம் கொண்டிருப்பது ஒரு க்ளிஷே என்றால், கதாநாயகியும் அப்படியே என்பது டபிள் க்ளிஷே. அதைத்தான் இதில் பாஸிடிவாக எழுதியதாக மணி ரத்னம் சொல்கிறார். இப்படத்தைப் பற்றிப் பேசும்போது மறுபடியும் இளையராஜா வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர், பகல் நிலவின் பாடல் கம்போஸிங்கின்போது இளையராஜா இசையமைத்த மற்றொரு பாடலைக் கேட்டதாகவும், அது தமிழில் எடுக்கப்படும் தேவதாஸ் படம் ஒன்றுக்கான ட்யூன் என்று இளையராஜா சொன்னதாகவும், அதனைத் தனக்குக் கொடுக்கச்சொல்லி மணி ரத்னம் கேட்டதாகவும், ‘நீ ஒரு தேவதாஸ் படம் எடு. அப்போது கொடுக்கிறேன்’ என்று இளையராஜா சொன்னதாகவும் மணி ரத்னம் நினைவுகூர்கிறார். அதன்பின் கீதாஞ்சலி சமயத்தில் அந்த நிகழ்ச்சியை மணி ரத்னம் சொல்ல, டக்கென்று பல ஆண்டுகள் முன்னர் தான் போட்ட அந்த ட்யூனை நினைவிலிருந்து எடுத்த இளையராஜா அதை வாசித்துக் காட்டியதாகவும், அதுதான் கீதாஞ்சலியின் முதல் பாடலாக அமைந்தது என்றும் மணி ரத்னம் சொல்கிறார்.
அந்தப் பாடல் – ஓ பாப்பா லாலி.
இதோ அதன் ஒரிஜினல் தெலுங்கு வடிவம். SPBயின் குரலில். அடுத்ததாக மனோவின் குரலில் தமிழ் வடிவம்.
முதல் பாடலே இந்தத் தரத்தில் அமைந்ததால், இதிலிருந்து எல்லாமே இன்னும் சிறந்ததாகவே அமைந்தன என்பது மணி ரத்னத்தின் கருத்து. இதன்பின் திரைக்கதை பற்றி (ஃப்ளாஷ்பேக் ஒன்றில் ஆரம்பித்து கதைக்கு வரும் உத்தி), ஓ ப்ரியா ப்ரியா பாடல் பற்றி, பாடலை எடுக்கும் விதம் பற்றி, தனக்கே உரிய stylish மசாலாக்கள் எடுப்பது பற்றி, மணி ரத்னத்தின் படங்களில் ரயில்களைப் பற்றி, கண்னாடிகள் இடம்பெறுவதைப் பற்றி, மழையைப் பற்றி, அவரது படங்களின் நீளம் பற்றி… நிறையப் பேசுகிறார் மணி ரத்னம்.
தனது படங்களில் குழந்தைகளைப் பற்றி மணி ரத்னம் சொல்கிறார். கூட்டுக்குடும்பங்களில் குழந்தைகள் என்பவை அத்தியாவசியம் என்பதையும், தங்களுக்கே உரிய வழிகளில் அவர்கள் செயல்படும் விதங்களையும் பற்றிப் பேசுகிறார். தனது படங்களில் குழந்தைகள் அதிகப்பிரசங்கித்தனமாகச் செயல்படுவதைப் பற்றிய குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையில், அப்படிச் சொல்பவர்கள் குழந்தைகளுக்குச் செவிமடுப்பதில்லை என்றும், தங்களது உலகத்திலேயே தங்கிவிட்டவர்கள் அவர்கள் என்றும், குழந்தைகள் என்ன சொல்லவேண்டும் என்பதுபற்றிய முன்முடிவுகள் இருப்பவர்கள்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்றும் சொல்கிறார். இன்னும், குழந்தைகளுடன் எப்படி வேலை செய்யமுடிகிறது என்பதைப் போன்ற, குழந்தைகளைப் பற்றிய மணி ரத்னத்தின் கருத்துகள் நிறைய உள்ளன.
’அஞ்சலி’ படத்துக்காக எப்படியெல்லாம் பல மருத்துவமனைகளுக்கு மணி ரத்னமும் பாணி சாரும் (இவர் யார் என்பதை புத்தகத்தைப் படித்து அறிக) சென்றனர் என்பதையும், அப்படி ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில்தான் (ஆஷீர்வாத்) அஞ்சலியின் கதை பிறந்தது என்பதையும் மணி ரத்னம் மிகவும் விபரமாகச் சொல்கிறார். பின்னர் அஞ்சலியில் உபயோகப்படுத்தப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் மட்டுமே பாடிய அஞ்சலியின் பாடல்கள், மது அம்பாட்டுடனான collaboration, பிரபு, அஞ்சலிக்கான லைட்டிங், ஷாம்லியின் நடிப்பு போன்ற பல கோணங்களில் மணி ரத்னத்தின் பேட்டி செல்கிறது.
ஷ்யாம் பெனகல் 1981ல் எடுத்த Kalyug படத்தைப் பற்றியும், அதன் மகாபாரதத் தொடர்புகளையும் பற்றி மணி ரத்னம் நிறையப் பேசுகிறார். பின்னர், மகாபாரதத்தின் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரமான கர்ணன் பற்றி. கர்ணனின் கதையே மிகவும் உணர்ச்சிபூர்வமானது என்றும், ‘தளபதி’யின் திரைக்கதையை எழுதியபோது, கர்ணனோடு சம்மந்தப்பட்ட எந்தக் காட்சியை எழுதினாலும் அது உணர்வுபூர்வமான காட்சியாக இருந்தது என்றும் சொல்கிறார். மகாபாரதத்தில், கர்ணனின் தந்தை, சூரியன். தளபதியில், சூர்யாவின் தந்தை யாரென்பது இறுதிவரையிலும் தெரியாது. இதற்கான காரணத்தை மணி ரத்னம் விரிவாகப் பேசுகிறார்.
ரஜினிகாந்த், தனது அண்னன் ஜி.வியின் நண்பர் என்றும், அவர்கள் இருவரும் சிலமுறை, ஒரு படம் செய்வது குறித்துப் பேசியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார் மணி ரத்னம். ரஜினியுடன் வழக்கமான பாணியில் படம் செய்வதில் தனக்கு இஷ்டம் இருந்ததில்லை என்றும், ரஜினியின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்குக் குறைவில்லாமல்- அதேசமயம் அது ஒரு மணி ரத்னம் படமாகவும் இருக்கவேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்ததாகவும், ரஜினியும் இல்லை என்று சொல்லாமல், தனக்கும் அதைச்செய்யவேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் படமாகவும் இறுதியாக முடிவு செய்ததே தளபதி என்றும் சொல்கிறார்.
பொதுவாக ரஜினிகாந்த், பிரம்மாண்டமான ஒரு நட்சத்திரமாக ஆனபின் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து (தமிழில்) தளபதி அளவுக்கு நடித்ததில்லை. இருந்தாலும், தளபதியில் மம்மூட்டியுடன் இணைந்ததில் ரஜினிக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவும் இல்லை என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது என்கிறார் ரங்கன். இதற்குப் பதிலாக, கர்ணனைப் பற்றிய படத்தில் அவசியம் துரியோதனனுக்கும் பெரும் பங்கு இருக்க்கவேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே ரஜினி தெளிவாக இருந்ததாக மணி ரத்னம் சொல்கிறார். கூடவே, தன்னைப் பற்றிய நம்பிக்கை ரஜினிக்கு எப்போதுமே உண்டு என்பதாலும், ரஜினிக்கு இப்படத்தில் பிரச்னைகள் இருந்ததில்லை என்பது மணி ரத்னம் கருத்து.
படத்தை எழுதும்போது, ‘முள்ளும் மலரும்’ படம்தான் தனது மனதில் இருந்ததாக மணி ரத்னம் சொல்கிறார். காரணம், மணி ரத்னத்தைப் பொறுத்தவரையில் ரஜினியின் நடிப்புக்கான உதாரணம் அது. மற்றபடி, ரஜினிக்கான படம் என்ற எந்த எண்ணமும் தளபதியை எழுதும்போது அவருக்கு இல்லை. முள்ளும் மலரும் படத்துக்குக் கொஞ்சமாவது அருகில் வரும்படி ரஜினியின் நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்படுமாறு எழுதவேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவருக்கு இருந்திருக்கிறது. இந்த இடத்தில் ரஜினி, ஸ்டைல் என்ற பொறியில் சிக்கிக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார் மணி ரத்னம். இருந்தாலும், ஒரு கதாபாத்திரத்தை முழுதுமாகத் தனது தோளில் சுமக்கக்கூடிய திறமை அவருக்கு உண்டு என்பது மணி ரத்னத்தின் கருத்து.
இதன்பின் ரஜினியின் இண்ட்ரோ சீக்வென்ஸ். அதுவரை அதுதான் மணி ரத்னத்தின் மிகவும் மசாலாத்தனமான காட்சி என்பது ரங்கனின் கருத்து. இதற்குப் பதில் சொல்லும் மணி ரத்னம், மகாபாரதத்தில் கர்ணனின் இண்ட்ரோ என்பது திடீரென்று பாண்டவர்களும் கௌரவர்களும் தங்களது ஆயுதப் பிரயோகங்களைப் பரிசோதனை செய்துபார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் வருகிறது என்பதை நினைவுறுத்துகிறார். அதேபோல், ரஜினியின் இண்ட்ரோ என்பதும் திடீரெனெ, அந்த ஆக்ஷனின் மத்தியில்தான் படத்தில் துவங்குகிறது. யார், என்ன, எங்கே என்பதுபோன்ற எதுவுமே அதில் இல்லை.
இதன்பின்னர் கொதார் (Godard) பற்றிக் கொஞ்சம் சொல்கிறார். சினிமாவில் படிப்படியான விவரிப்பை நொறுக்கியவர் கொதார் (இவரது பெயரும் போர்ஹேஸின் பெயரும்தான் தமிழில் இதுவரை தப்பாக உச்சரிக்கப்பட்டதில் முதலிரண்டு இடங்கள் வகிக்கின்றன. Jorge Luis Borges என்பது ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ். பலரால் சொல்லப்படுவதுபோல் ‘போர்ஹே’ அல்ல. அதேபோல் Jean-Luc Godard என்பது ஸான் லுக் கொதார். ‘கொடார்ட்’ அல்ல). பின்னர் தளபதியின் பல்வேறு காட்சிகள், நடிகர்கள், பின்னணி போன்றவற்றைப் பற்றிப் பேட்டி தொடர்கிறது. ஸ்டீரியோஃபோனிக் ஒலி, சந்தோஷ் சிவன், ‘சுந்தரி’ பாடலின் குரஸவா பாதிப்பு, சின்னத்தாயவள் என்று செல்லும் தளபதியைப் பற்றிய பேட்டி, மணி ரத்னத்தின் அக்னி நட்சத்திரம் & நாயகன் ஹிந்தி ரீமேக்குகளில் முடிகிறது.
CONVERSATION