font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

தமிழ் சினிமா-பொங்கல்

தமிழ்நாட்டில் கொண்டடப்படும் பண்டிகைகளுக்கும் திரைப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாகிப் பல்லாண்டுகள் ஆகின்றன. பண்டிகை நாட்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்குப் பொதுவான பிற நாட்களில் வெளியிடப்படும் படங்களை விடவும் எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே, இப்படிப்பட்ட பண்டிகைப் படங்கள் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியவர்களைக் கொண்டும் இருக்கின்றன. இப்படிப்பட்ட படங்களில் இரண்டு விஷயங்கள் எப்போதுமே நடக்கும். ஒன்று – படங்கள் பிரம்மாண்ட வெற்றிப்படங்களாக மாறுவது; இதன்மூலம் நடிகர்களுக்கும் இயக்குநருக்கும் புகழ் கிடைத்து, அவர்கள் திரையுலகில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும் வாய்ப்புகள் உருவாகின்றன. இரண்டு – இப்படங்கள் நன்றாக ஓடாமல் அதே நடிகர்ளையும் இயக்குநரையும் இனிவரும் புதிய திறமையாளர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கவும் வைத்திருக்கின்றன.
அந்த வகையில் பொங்கல் நாளன்றோ அல்லது பொங்கலை முன்னிட்டோ தமிழில் வெளியிடப்பட்ட படங்களை சற்று ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றைக் கவனிக்கலாம்.
தமிழில் பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது முதன்முதலில் எம்.ஜி.ஆருக்கே. அவருக்கு முன்னர் மிகச்சிறந்த, புகழ்வாய்ந்த நடிகர்கர்களாக விளங்கியவர்கள் ஏராளமானோர் உண்டு என்றாலும், அவர்களில் சிலரான எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், டி.பி.ராஜலக்ஷ்மி, பேபி.சரோஜா (இந்தியாவின் ஷிர்லி டெம்பிள் என்றே அழைக்கப்பட்டவர். பேபி ஷாலினி, ஷாம்லிகளுக்கெல்லாம் முன்னோடி), என்.எஸ்.கிருஷ்ணன், ரஞ்சன், கொத்தமங்கலம் சுப்பு, எம்.கே.ராதா, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, பானுமதி போன்றவர்களின் படங்கள் வெற்றிகரமாக ஓடினாலுமே அவர்களால் பொதுமக்களைத் தங்களின் பின்னால் அலையலையான ரசிகர் கூட்டமாகத் திரட்ட இயலவில்லை. எம்.கே தியாகராஜ பாகவதர், சின்னப்பா ஆகியவர்களுக்கு இருந்த அபிமானிகள் கொஞ்சநஞ்சமில்லை. இருப்பினும் பிந்நாட்களில் எம்.ஜி.ஆரின் பின்னர் திரண்ட ரசிகர்களைப் போன்றவர்கள் அல்ல இவர்கள். ஒரு திரைப்படம் வெளியானால் அதனைப் பார்த்துவிட்டு ரசித்துக் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளும் அபிமானிகளாகவே இவர்கள் இருந்தனர். அவ்வப்போது இத்தகைய அபிமானிகளுக்குள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால் அதனைத் தீவிர ரசிகர்களுடன் ஒப்பிட இயலாது என்றே தோன்றுகிறது. இதனால் பண்டிகை நாட்களில் வெளியிடப்பட்ட படங்களும் ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல், எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்றவாறு படமாக்கப்பட்டுப் பாடல்களுடன் வெளியாகின. ரசிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால், 1936ல் சதி லீலாவதி மூலம் அறிமுகமாகி, அதன்பின் அக்காலத்திய பிரபல நடிகர்களுடன் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் (அசோக்குமார் – 1941ல் தியாகராஜ பாகவதருடன் முதன்முறையாக நடித்தார். அதன்பின் 1944ல் ஹரிச்சந்திரா படத்தில் பி.யு. சின்னப்பாவுடன் நடித்தார்) வில்லனாகவும் கூட (1945ன் சாலிவாஹனன் படத்தில் சாலிவாஹனனாக ரஞ்சன் நடிக்க, வில்லன் விக்கிரமாதித்தனாக எம்.ஜி.ஆர் நடித்தார்) நடித்துக்கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அவரது முதல் வெற்றி, 1947ம் வருடத்தில் ‘ராஜகுமாரி’ என்ற படத்தில்தான் கிடைத்தது. அதுதான் கதாநாயகனாக அவர் நடித்த முதல் படமும் கூட. அதற்கு முந்தைய வருடத்தில் ‘ஸ்ரீ முருகன்’ என்ற படத்தில் சிவனாக நடிக்கையில் எம்.ஜி.ஆர் செய்த சிவதாண்டவம் அப்போது மிகவும் பிரபலம். அந்த அடிப்படையில்தான் பி.யு. சின்னப்பாவுக்குச் சென்றிருக்கவேண்டிய இப்பாத்திரம் அவருக்குக் கிடைத்தது. இதன்பின் மறுபடியும் துணைக்கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். மூன்று வருடங்கள் கழித்து 1950ல் வெளிவந்த ‘மருத நாட்டு இளவரசி’ மற்றும் ‘மந்திரி குமாரி’ படமும்தான் எம்.ஜி.ஆரை அசைக்க முடியாத நாயகனாக மாற்றின. அப்போதும் கூட சில வருடங்கள் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருந்தாலும் இன்னும் ஏழைப்பங்காளனாக அவரது திரைப்பிம்பம் மாறியிருக்கவில்லை. இவற்றின்பின் இரண்டு வருடங்கள் கழித்து வெளிவந்த ‘என் தங்கை’ (1952) படத்தில், பார்வையில்லாத தங்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும் அண்ணனாகத் தனது சிறந்த நடிப்பையும் அவர் நல்கியிருக்கிறார். இதன்பின்னர் 1954ல் ‘மலைக்கள்ளன்’ வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் சிங்களம் ஆகிய ஐந்து மொழிகளிலும் பின்னர் எடுத்து வெளியிடப்பட்ட படம் இது.
‘மலைக்கள்ளன்’தான் எம்.ஜி.ஆரை ஒரு வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபீஸ் கதாநாயகனாக மாற்றியது. இதற்கு அடுத்த வருடம் 1955ல் குலேபகாவலி வெளிவர, பாகவதர், சின்னப்பா ஆகியோருக்கு அடுத்த தலைமுறை சூப்பர்ஸ்டாராக உயரத் துவங்குகிறார் எம்.ஜி.ஆர்.
இதே நேரத்தில் சில வருடங்கள் முன்னர் 1952ல் வெளியான ‘பராசக்தி’ படத்தின்மூலம் பிரபலம் அடைந்த ‘சிவாஜி கணேசன்’ என்ற இளைஞர் சரமாரியாகப் பல படங்களில் வெவ்வேறு வகையான பல கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இந்தச் சூழலில்தான் 1956 பொங்கல் தினத்தன்று ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற படம் வெளியாகிறது. மாடர்ன் தியேட்டர்ஸின் டி.ஆர். சுந்தரம் எழுதி இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகன் அலிபாபாவாகவும், கதாநாயகி மார்ஜியானாவாக பானுமதியும் நடித்தனர். தமிழில் வெளியான முதல் வண்ணப்படம் இது (ஈஸ்ட்மென் கலர்). எஸ்.தக்ஷிணாமூர்த்தியின் இனிமையான பாடல்களும் (‘மாசிலா உண்மைக்காதலே’, ‘அழகான பொண்ணுதான்’, ‘சலாம் பாபு சலாம் பாபு’, ‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம்’), அட்டகாசமான செட்களும் சண்டைக்காட்சிகளும் இப்படத்துக்குப் பெருவெற்றியைத் தேடிக்கொடுத்தன. இந்தப் படத்துக்குப் பின்னர்தான் நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரனாக இருந்தவர் எம்.ஜி.ஆராக, மக்கள் ஆதரவுடன் ஒரு சூப்பர் ஸ்டாராக மாறினார். அந்த வகையில் 1956 பொங்கல் எம்.ஜி.ஆரின் திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்.
இதே 1956 பொங்கல் நாளன்று சிவாஜி கணேசனின் படங்கள் இரண்டு வெளியாகின்றன. ‘நான் பெற்ற செல்வம்’ படமும் ‘நல்ல வீடு’ என்ற படமுமே அவை. எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நேருக்கு நேர் மோதிய முதல் பொங்கல் அது. ஆனால் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பெற்ற வெற்றியை இவையிரண்டும் அடையவில்லை. நான் பெற்ற செல்வம் சிவாஜியின் ரசிகர்களுக்கிடையே பேசப்பட்டது.
இதற்குப் பின்னர் 1962ல்தான் எம்.ஜி.ஆரின் அடுத்த பொங்கல் வெளியீடு அமைந்தது. அதுதான் ‘ராணி சம்யுக்தா’. 1942ல் வெளியாகியிருந்த ‘பிருத்விராஜன்’ என்ற படமே ராணி சம்யுக்தாவாக ரீமேக் செய்யப்பட்டது. பி.யு. சின்னப்பாவும் சகுந்தலாவும் நடித்து வெற்றி பெற்றிருந்த படம் அது. ஐம்பதுகளின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவரான யோகானந்த்தால் இயக்கப்பட்டிருந்தாலும், எம்.ஜி.ஆரும் பத்மினியும் நடித்திருந்த ராணி சம்யுக்தா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் இதற்குள் எம்.ஜி.ஆர் வெற்றிகரமான நடிகராக மாறியாயிற்று. அவரைப்போலவே சிவாஜியும் இன்னொரு பக்கம் பிரகாசித்துக்கொண்டிருந்தார். சந்தர்ப்பவசமாக, எம்.ஜி.ஆரும் சிவாஜியும் மோதிய இரண்டாவது பொங்கலாகவும் இது அமைந்தது. ஆனால் இம்முறை போட்டியில் வெற்றிபெற்றது சிவாஜி. அவரது ‘பார்த்தால் பசி தீரும்’ படம் ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்பட்டு நன்றாகவும் ஓடியது. ஏ.வி.எம் தயாரிப்பில் பீம்சிங் இயக்கியிருந்த படம். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிமையான இசையில் இன்றும் மறக்கமுடியாத பாடல்கள் கொண்ட படம் (‘கொடியசைந்ததும் காற்று வந்ததா’, ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ’, ‘உள்ளம் என்பது ஆமை’, ‘பிள்ளைக்குத் தந்தை ஒருவன்’). சிவாஜிக்கும் ஜெமினி கணேசனுக்கும் சாவித்ரிக்கும் நடக்கும் உணர்ச்சிபூர்வமான போராட்டம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
இதற்கு அடுத்த ஆண்டான 1963ல் பொங்கலுக்கு எம்.ஜி.ஆரின் ‘பணத்தோட்டம்’ வெளிவந்து சுமாராக ஓடியது. அடுத்து வந்த 1964 பொங்கல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருக்கிடையே மூன்றாவது சுற்று நேரடிப் போட்டி நிகழ்ந்த வருடம். எம்.ஜி.ஆருக்கு ‘வேட்டைக்காரன்’ மற்றும் சிவாஜி கணேசனுக்கு ‘கர்ணன்’. எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் தேவர் தயாரித்த வேட்டைக்காரன் நன்றாக ஓடியது. அதன் ‘உன்னை அறிந்தால்’ பாடல் இன்றும் பிரபலம். கே.வி. மகாதேவன் இசையில் பிற பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ஆனால், வெற்றிகரமாக ஓடிய வேட்டைக்காரனை, சிவாஜியின் ‘கர்ணன்’ தாண்டியது. பந்துலுவின் இயக்கத்தில் மிக இனிமையான பாடல்கள் (விஸ்வநாதன்-ராமமூர்த்தி), பிரம்மாண்டமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு என்று எல்லா அம்சங்களிலும் இன்றுவரை தமிழின் தரமான புராணப் படங்களில் ஒன்றான கர்ணன் மூலம் இந்த மூன்றாவது சுற்றிலும் சிவாஜியே முன்னிலை வகித்தார்.
ஆனால் இந்த நிலையை அடுத்த வருடமான 1965 மாற்றியது. அந்த வருடத்திலும் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் நேரடிப் போட்டி நிகழ்ந்தது. இந்த நான்காவது சுற்றில் எம்.ஜி.ஆர் பிரம்மாண்ட வெற்றியடைந்தார். பிந்நாட்களில் அவரது முதலமைச்சர் பதவிக்கு அச்சாரம் போட்ட படமான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ 1965ன் பொங்கலுக்குத்தான் வெளியாகியது. என்.டி.ராமாராவ் நடித்த தெலுங்குப் படமான ‘ராமுடு பீமுடு'(1964)ன் ரீமேக்காக இருந்தாலும், தமிழகத்தில் பிய்த்துக்கொண்டு ஓடிய படம் இது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஓடிச் சாதனை படைத்தது. சாணக்யாவின் இயக்கத்தில் சரோஜா தேவியுடன் இரு வேடங்களில் நடித்தார் எம்.ஜி.ஆர். இந்தப் படத்தின் கதை இன்றுவரை பல தமிழ்ப்படங்களுக்கு உதவியிருக்கிறது. இதன் ‘நான் ஆணையிட்டால்’ பாடலை இன்றும் பட்டிதொட்டியெங்கும் கேட்கலாம். எம்.ஜி.ஆர் என்றாலே இப்பாடல்தான் பலருக்கும் நினைவு வரும். அப்படிப்பட்ட பாடல் வரிகளை வாலி எழுதினார். அவருடன் சேர்ந்து மூன்று பாடல்களை ஆலங்குடி சோமுவும் எழுதினார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை. இந்தப் படத்தோடு போட்டியிட்ட சிவாஜி படம் – ‘பழனி’. கதைக்காகவும் நடிப்புக்காகவும் பாடல்களுக்காகவும் பேசப்பட்டது. இருப்பினும் போன பொங்கலில் கர்ணன் அடைந்த வெற்றிக்கும் மேல் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்.ஜி.ஆர் அடைந்தார்.
இதற்கு அடுத்த வருடமான 1966 பொங்கலில் எம்.ஜி.ஆரின் ‘அன்பே வா’ வெளியானது. ஏ.வி.எம் நிறுவனத்தில் திருலோகசந்தர் இயக்கிய ஒரே எம்.ஜி.ஆர் படம். பெரிய பட்ஜெட்டில் வண்ணத்தில் சிம்லாவில் நடக்கும் கதை. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி நடித்தார். இப்படத்தைப் பற்றிக் கொடுத்த பேட்டியில், ‘எப்போதுமே action படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு சற்றும் பொருத்தமில்லாத மென்மையான கதையாகிய அன்பே வாவில் அவர் நடிப்பாரா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அவரிடம் கதை சொல்லியபோது, முழுக்கதையையும் சிரித்துக்கொண்டே கேட்ட எம்.ஜி.ஆர் உடனடியாக சம்மதித்தார். மட்டுமில்லாமல், இந்தக் கதைக்காக உங்களுக்குப் பெரும் பாராட்டு கிடைக்கப்போகிறது’ என்று எம்.ஜி.ஆர் சொன்னதாக திருலோகசந்தர் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் அப்போதைய கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக அவர் நடித்த காதல் படம் இது. நன்றாக ஓடியது.
அடுத்த வருடமான 1967 பொங்கல், எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்குமான ஐந்தாவது சுற்றுப் போட்டியாக இருந்தது. எம்.ஜி.ஆரின் ‘தாய்க்குத் தலைமகன்’ படமும் சிவாஜியின் ‘கந்தன் கருணை’ படமும் வெளியாகின (கந்தன் கருணை புத்தாண்டுக்கு வெளீயாகியிருந்ததால், தாய்க்குத் தலைமகன் வந்தபோது இது நன்றாகவே ஒடிக்கொண்டிருந்தது). கந்தன் கருணையில் சிவாஜி கதாநாயகனாக இல்லாமல் கதா நாயகனுக்கு நம்பிக்கையான தளபதியான ‘வீரபாகு’வாக நடித்திருந்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. அந்தப் பாத்திரத்தில் சிவாஜியின் நகைச்சுவை கலந்த நடிப்பும் அவரது நளினமான நடையும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. போலவே தேவரின் தயாரிப்பில் வெளியான தாய்க்குத் தலைமகனும் வெற்றியே. ஆனால் இப்படம் வெளியாகிய நாளுக்கு முந்தைய நாளான 12ம் ஜனவரி 1967, எம்.ஜி.ஆரின் வாழ்வில் ஒரு பரபரப்பான நாளாக அமைந்தது. அன்றுதான் எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரை சுட்ட தினம். எனவே இன்றும் ‘தாய்க்குத் தலைமகன்’ திரைப்படத்தை நினைத்தால் இந்த சம்பவமும் நினைவு வருவதைத் தவிர்க்க இயலாது. இப்படிப்பட்ட பரபரப்பான பொங்கலாக 1967 அமைந்தது.
1968 பொங்கலுக்கு எம்.ஜி.ஆரின் ரகசிய போலீஸ் 115 வெளியாகி நன்றாக ஓடியது. சிவாஜியின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த வருடமான 1969ல் பொங்கலுக்கு சிவாஜிக்கு ‘அன்பளிப்பு’ வெளியானது. எம்.ஜி.ஆரின் படங்கள் எதுவும் வரவில்லை. சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆறாவது சுற்று நேரிடைப் போட்டியாக 1970ல் பொங்கலுக்கு ‘மாட்டுக்கார வேலன்’ மற்றும் ‘எங்க மாமா’ படங்கள் வெளியாகின. மாட்டுக்கார வேலன் பிரம்மாண்டமான வெற்றிப்படமாகியது. ப. நீலகண்டன் இயக்கி, கே.வி. மகாதேவன் இசையமைத்தார். அசோகன் தான் வில்லன். சிவாஜியின் ‘எங்க மாமா’ படம், ஹிந்தியில் ஷம்மி கபூர் நடித்திருந்த ‘ப்ரம்மச்சாரி’ படத்தின் ரீமேக். திருலோகசந்தர் இயக்கம். எங்க மாமா மாட்டுக்கார வேலனைப்போல் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் இந்த இருவரையும் விட இந்தப் பொங்கல் இன்னொருவருக்கே வெறிகரமாக அமைந்தது. இரண்டு படங்களிலும் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவே அவர்.
1970க்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு அடுத்த பொங்கல் வெளியீடு அவரது கடைசிப்படமாக அமைந்த ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’தான். 1978ல் அது வெளியானது. பெருவெற்றி அடைந்தது. அதன்பின் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சிவாஜியைப் பொறுத்தவரை, 1971 பொங்கலுக்கு ‘இரு துருவம்’, 1975 புத்தாண்டில் வெளியான ‘அவன்தான் மனிதன்’, 1977 பொங்கலுக்கு ‘அவன் ஒரு சரித்திரம்’, 1981 பொங்கலுக்கு ஸ்ரீதரின் ‘மோகனப்புன்னகை’ என்று வரிசையாகப் பொங்கல் படங்கள் வெளியாகின. ஆனால் அவற்றில் ‘அவன்தான் மனிதன்’ தவிர வேறு படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. அதுவுமே புத்தாண்டுப் படம்தான். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் இருவர் ஏற்கெனவே பிரபலமாகிக் கொண்டிருந்தனர். எழுபதுகளின் இடையில் உருவாகி, எண்பதுகளிலிருந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தமிழகத்தின் திரைப்படங்களில் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கமல்ஹாஸனும் ரஜினிகாந்த்துமே அவர்கள். சிவாஜியின் வெற்றிகரமான திரைவாழ்க்கை இப்படியாக மெதுவே இந்த இருவருக்கும் வழிவிட்டு, குணச்சித்திரப் பாத்திரங்களின் வழியே பயணிக்க ஆரம்பித்தது.
ரஜினிகாந்த்துக்கு முதல் பொங்கல் வெளியீடாக 1979ல் வெளியான ‘குப்பத்து ராஜா’ படம் அமைந்தது. கமல்ஹாஸனுக்கோ 1977ல் மலையாளத்தில் ஜெயனுடன் சேர்ந்து அவர் நடித்திருந்த ‘அக்னி புஷ்பம்’ (ஜனவரி 9) முதல் பொங்கல் வெளியீடாக இருந்தது. அதற்கு ஒரு வாரம் கழித்துத் தமிழில் ‘உயர்ந்தவர்கள்’ படமும் அவருக்கு வெளியாகியிருந்தது. ரஜினிகாந்த்தின் குப்பத்து ராஜா வெளியான அதே ஆண்டுதான் கமல்ஹாஸனின் படமான ‘சிவப்புக்கல் மூக்குத்தி’யும் பொங்கலுக்கு வெளியானது. அதில் விஜயகுமாரோடு சேர்ந்து நடித்திருந்தார் கமல். இந்த வகையில் இதுதான் இந்த இருவரின் பொங்கல் போட்டிகளில் முதல் சுற்று எனலாம். எழுபதுகளில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் 1978ல் ‘பைரவி’யில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியாயிற்று. சரமாரியாகப் பல படங்களில் அவர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் இது. முந்தைய வருடமான 1978ல் மட்டும் ரஜினிகாந்த் நடித்து இருபது படங்கள் வெளிவந்திருந்தன. கமல்ஹாஸனும் அப்படித்தான் நடித்துக்கொண்டிருந்தார். 1973யிலேயே அவர் நடித்த ‘அரங்கேற்றம்’ வந்துவிட்டது. அவருமே இந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான இளம் கதாநாயகன் என்ற அந்தஸ்தை அடைந்தாயிற்று. ரஜினிகாந்த்தும் கமல்ஹாஸனும் சேர்ந்து நடித்திருந்த ஸ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ முந்தைய வருடமான 1978ல்தான் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தது.
இந்தக் காலகட்டத்தில்தான் 1979 பொங்கலுக்குக் குப்பத்து ராஜாவும் சிவப்புக்கல் மூக்குத்தியும் வந்தன. குப்பத்து ராஜாவிலும் விஜயகுமார் நடித்திருந்தார். இதில் குப்பத்து ராஜாவே ஓடியது.
இதன்பிறகு அடுத்த பொங்கல் படமாகக் கமல்ஹாஸனுக்கு ‘மீண்டும் கோகிலா’ அமைந்தது. 1981 பொங்கலுக்கு வந்த இப்படத்தில் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் கமல்ஹாஸனுடன் ஸ்ரீதேவி நடித்தார். தீபாவும் நடித்திருந்தார். இளையராஜாவின் பாடல்கள். வெற்றிகரமான படமாக இது அமைந்தது. இந்த ஆண்டில் ரஜினிகாந்த்துக்குப் பொங்கல் படம் இல்லை. இந்தக் காலகட்டத்தில் ரஜினிகாந்த்தும் கமல்ஹாஸனும் வெற்றிகரமான கதாநாயகர்கள் ஆகியாயிற்று. முந்தைய வருடமான 1980ல் ரஜினிகாந்த் நடித்திருந்த ‘முரட்டுக்காளை’ படம் டிசம்பர் 20ம் தேதிதான் வந்து, மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் இது.
1982 பொங்கலுக்கு ரஜினிகாந்த்தின் ‘போக்கிரி ராஜா’ வெளியானது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏ.வி.எம் தயாரித்த படம். வெற்றிகரமாக ஓடியது. இந்த ஆண்டில் கமல்ஹாஸனுக்குப் பொங்கல் படங்கள் இல்லை.
1983ல் கமல்ஹாஸன் ‘ஸரா சி ஸிந்தகி’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்தார். அப்படம் ஜனவரி ஏழாம் தேதி வெளியானது. தமிழில் பொங்கலுக்கு அந்த ஆண்டு கமல்ஹாஸனுக்குப் படங்கள் இல்லை. ஆனால் ரஜினிகாந்த்துக்குப் ‘பாயும் புலி’ வெளியானது. இதுவும் எஸ்.பி.முத்துராமன் மற்றும் ஏ.வி.எம் படம்தான். இளையராஜா இசை. ரஜினிகாந்த்துடன் முரட்டுக்காளையில் வில்லனாக நடித்த ஜெய்சங்கரே இதிலும் வில்லன். ராதா கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழகமெங்கும் நன்றாக ஓடிய படம் இது.
அடுத்த வருடமான 1984 பொங்கலுக்கு ரஜினிகாந்த்தின் ‘நான் மகான் அல்ல’, சிவாஜியும் பிரபுவும் நடித்த ‘திருப்பம்’ ஆகிய படங்கள் வெளியாகின. அந்த ஜனவரியில் ஏற்கெனவே டி.ராஜேந்தரின் ‘உறவைக் காத்த கிளி’ படமும் ஓடிக்கொண்டிருந்தது. நான் மகான் அல்ல வெற்றியடைந்தது. இதை இயக்கியவரும் எஸ்.பி. முத்துராமனே. அந்த ஆண்டில் பொங்கலுக்கு முந்தைய நாளில் ரஜினிகாந்த் நடித்த ‘மேரி அதாலத்’ ஹிந்திப் படமும் வெளியானது.
1985 பொங்கலுக்கு பாரதிராஜா இயக்கத்தில் பாக்யராஜ் எழுதிய ‘ஒரு கைதியின் டைரி’ படம் கமல்ஹாஸன் நடிப்பில் வெளியாகிப் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. அவ்வருடம் ரஜினிகாந்த்துக்குப் பொங்கல் படங்கள் இல்லை. 1986 பொங்கலுக்கு ரஜினிகாந்த்தின் ‘மிஸ்டர் பாரத்’ படமும், பிரபுவுக்கு சிவாஜியுடன் இணைந்து நடித்த ‘சாதனை’ படமும் வெளியாகின. அந்தப் பொங்கலுக்கு மோகனின் ‘டிசம்பர் பூக்கள்’ படமும் வெளிவந்தது. மிஸ்டர் பாரத்தின் இயக்கம், எஸ்.பி. முத்துராமன். தயாரித்தது ஏ.வி.எம். ஹிந்தியில் சலீம்-ஜாவேத் திரைக்கதையில் 1978ல் வெளியாகிய ‘த்ரிஷூல்’ படத்தின் ரீமேக். தமிழில் பெருவெற்றியடைந்த படம். இதன் ‘என்னம்மா கண்ணு’ பாடலும் வசனமும் இன்றும் பிரபலம். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸனுக்கு சத்யராஜ் வெற்றிகரமான வில்லனாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் இது.
1987 பொங்கலுக்குக் கமல்ஹாஸனின் ‘காதல் பரிசு’ வெளியாகியது. இதனுடன் சத்யராஜின் ‘பூவிழி வாசலிலே’ படமும் விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ படமும் வந்தன. விஜயகாந்த்தின் ‘சிறைப்பறவை’ ஜனவரியின் துவக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருந்தது. காதல் பரிசு சத்யா மூவிஸின் படம். ஜெகனாதன் இயக்கத்தில் ராதா கதாநாயகியாக நடித்த படம். எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பூவிழி வாசலிலே, சத்யராஜுக்கு ஒரு வெற்றிகரமான கதாநாயகன் அந்தஸ்தைக் கொடுத்தது. பிரபல மலையால இயக்குநர் ஃபாஸில் தமிழில் எடுத்த படம். ‘திருமதி ஒரு வெகுமதி’, தாய்மார்களுக்குத் திருப்தியைக் கொடுத்த விசு படம்.
1988 பொங்கலில் கமல்ஹாஸன், விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் படங்கள் வெளியாகின. கமல்ஹாசனின் ‘சத்யா’ இன்றும் பேசப்படும் படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய முதல் படம். ஹிந்தியில் வந்த அர்ஜுன் என்ற படத்தின் ரீமேக். ஹிந்திப் படத்தின் கதை சலீம்-ஜாவேதின் ஜாவேத் அக்தருடையது. கமல்ஹாஸன் தனது உருவத்தை சற்றே மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட மொட்டைத்தலை மற்றும் தாடியுடன் வேலையில்லாப் பட்டதாரியாக நடித்த படம். அமலா கதாநாயகி. இதில் வில்லன்களில் ஒருவராகக் கவிஞர் வாலி நடித்தார். சத்யராஜுக்கு ‘அண்ணா நகர் முதல் தெரு’ இதே நாளில் வந்தது. இதுவும் ஒரு மலையாளப் பட ரீமேக்தான். சத்யராஜின் கிண்டல் கலந்த நகைச்சுவை நடிப்பில் வெற்றியடைந்த படம். விஜயகாந்த்தின் ‘காலையும் நீயே மாலையும் நீயே’ எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.
இதற்கடுத்த 1989 பொங்கலுக்குப் பிரபுவின் ‘நாளைய மனிதன்’ வெளிவந்தது. தக்காளி சீனிவாசன் தயாரிப்பில் வேலு பிரபாகரன் இயக்கிய அறிவியல் புனைவுப் படம். வில்லனாக அஜய் ரத்னம் நடித்தார். மருத்துவர் ஒருவர் (ஜெய்சங்கர்) பிணங்களை உயிர்ப்பிக்கும் மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்க, பிணமான அஜய் ரத்னம் உயிரோடு வந்து கொலைகள் செய்வார். அதைப் பிரபுவின் பாத்திரம் தடுப்பதாகக் கதை செல்லும். கதாநாயகியாக அமலா நடித்தார். அக்காலத்தில் தமிழுக்குப் புதிய கதை இது.
1990 பொங்கலுக்கு ஐந்து முன்னணிக் கதாநாயகர்களின் ஆறு படங்கள் வெளியாயின. ரஜினிகாந்த்துக்குப் பணக்காரன். விஜயகாந்த்துக்குப் புலன் விசாரணை. கார்த்திக்குக்கு இதயத்தாமரை. பிரபுவுக்குக் காவலுக்குக் கெட்டிக்காரன் மற்றும் நல்ல காலம் பொறந்தாச்சு. சத்யராஜுக்கு உலகம் பிறந்தது எனக்காக. இவற்றில் பணக்காரன் வெற்றியடைந்தது. இதயத்தாமரை, மௌன ராகத்தின் அதே ஜோடி நடித்ததால் (கார்த்திக்கும் ரேவதியும்) பரவலாகப் பேசப்பட்டது. காவலுக்குக் கெட்டிக்காரன், கருணாநிதியின் வசனத்தையும் மீறி சரியாகப் போகவில்லை. மற்றும் நல்ல காலம் பொறந்தாச்சு படமும் அப்படியே. உலகம் பிறந்தது எனக்காக, ஏ.வி.எம் தயாரிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ஹிந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் இசையில் வெளியாகியிருந்தாலும் வெற்றியடையவில்லை. இவை எல்லாவறையும் மீறி அந்தப் பொங்கலுக்குப் பெருவெற்றியடைந்து பரவலாகப் பேசப்பட்ட படம் புலன் விசாரணைதான். ஆட்டோ சங்கரின் பாத்திரத்தை வைத்து உருவாக்கப்பட்டிருந்த ஆனந்த ராஜ் பாத்திரம் ஒரு காரணம். விறுவிறுப்பாக எழுதப்பட்டிருந்த திரைக்கதை இன்னொரு காரணம். இதில் கௌரவ வேடத்தில் வில்லனாக சரத்குமார் நடித்திருந்தார். விஜயகாந்த்தின் மிக வெற்றிகரமான படங்களில் ஒன்றாக இது மாறியது.
தொண்ணூறுகள் துவங்கியபின்னர் பொங்கல் படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1991 பொங்கலுக்கு மொத்தம் பதினோரு படங்கள் வெளியாகின. 1992வின் பொங்கலுக்குப் பத்து படங்கள். 1993 மற்றும் 1994ல் ஒன்பது படங்கள். 1995ல் எட்டு. 1996 மற்றும் 1997ல் ஒன்பது. 1998ல் எட்டு. 1999ல் ஏழு. புதிய நூற்றாண்டு துவங்கிய 2000ல் இருந்து மறுபடியும் இந்த எண்ணிக்கை குறைந்தது. 2000 மற்றும் 2001ல் நான்கு. 2002ல் ஆறு. 2003ல் ஏழு. 2004 மற்றும் 2005ல் ஐந்து. 2006 மற்றும் 2007ல் நான்கு. 2008ல் ஆறு. 2009ல் நான்கு. 2010 மற்றும் 2011ல் ஐந்து. 2012ல் நான்கு. 2013ல் ஐந்து. 2014ல் நான்கு. இறுதியாக இந்த ஆண்டில் மூன்று.
இந்தக் கட்டுரையில் தொண்ணூறுகளுக்குப் பிறகு வந்த பொங்கல் படங்களைப் பற்றி விரிவாகப் பார்த்தால் கட்டுரை அவசியம் மிகவும் பெரியதாகிவிடும் என்பதால் அவை சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. இதுவரை முதலிலிருந்து வந்திருக்கும் பொங்கல் படங்களைக் கவனித்தால், இப்படங்களாலேயே தூக்கிவிடப்பட்டுப் பிரம்மாண்டக் கதாநாயகர்களாகப் பிந்நாட்களில் மாறியவர்களைப் பற்றித் தெரிகிறது. அதேபோல் தங்களுக்குப் பின்னால் வரும் இளைய தலைமுறைக்கு வழிவிட்டு அதே பிரபலங்கள் ஒதுங்கியதும் புரிகிறது. இந்தக் காலகட்டத்தில் கார்த்திக், பிரபு, சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களின் படங்கள் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து மெதுவாகக் குறைய ஆரம்பித்தன. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸனுக்கு அடுத்த தலைமுறையாக மாறப்போகும் அஜீத் மற்றும் விஜய்யின் படங்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. இளைஞர்களின் ரசனை புரிந்து படம் எடுத்த ஷங்கர், ராஜீவ் மேனன் போன்றவர்கள் பிரபலமாயினர். மணி ரத்னத்தின் இருவர் ஒரு பொங்கல் நாளன்று வெளியானாலும் (1999) வசூல் ரீதியில் பெரிய தோல்வியை அடைந்தது (விமர்சன ரீதியில் அதுதான் மணி ரத்னத்தின் சிறந்த படம் என்று சொல்பவர்களும் உள்ளனர்). புதிய இயக்குநரான சேரனின் பாரதி கண்ணம்மா ஒரு பொங்கல் நாளில்தான் வெளியானது (1997). வித்தியாசமான முடிவால் பலரையும் அவர்பக்கம் திரும்பவைத்த படம் அது. பொங்கலுக்கு வெளியாகிப் பெருவெற்றியை அடைந்த வானத்தைப்போல (2000), இளைஞர்களின் காலகட்டத்திலும் குடும்பப் படங்களின் தேவை குறையாது என்று நிரூபித்தது. ரஜினிகாந்த்தின் பாட்ஷா வெளியாகி அவரது திரைவாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக உருவானது ஒரு பொங்கலில்தான் (1995). அதுதான் அவரது கடைசி பொங்கல் படம். கமல்ஹாஸனின் மறக்கமுடியாத படமான மகாநதி, ஒரு பொங்கல் வெளியீடே (1994). கமல்ஹாஸனின் அன்பே சிவமும் பொங்கலில்தான் வெளியாகியது (2003). அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட அனைவருக்குமே இன்றுமே அந்தப் படம் பிடித்தமானதே. விருமாண்டியும் பொங்கல் படம்தான் (2004). சத்யராஜின் வால்டர் வெற்றிவேல் (1993) மற்றும் அமைதிப்படை (1994) ஆகியவையும் பொங்கலுக்கு வந்தவைதான். அமைதிப்படைதான் அவரது கடைசிப் பொங்கல் வெற்றி. அதன்பின் நான்கு பொங்கல் படங்களில் நடித்துள்ளார். பாக்யராஜின் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி பொங்கலுக்குத்தான் வந்தது. சரியாகப் போகவில்லை. பார்த்திபனின் ஹவுஸ்ஃபுல் (1999), பொங்கலுக்கு வந்த வித்தியாசமான முயற்சி. தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடித்த அழகியை இன்றும் மறக்க இயலாது. அதுவும் பொங்கல் வெளியீடுதான் (2002). விஜய்க்குக் கோயமுத்தூர் மாப்பிள்ளை (1996), கண்ணுக்குள் நிலவு (2000), ஃப்ரெண்ட்ஸ் (2001), வசீகரா (2003), திருப்பாச்சி (2005), போக்கிரி (2007), வில்லு (2009), காவலன் (2011), நண்பன் (2012) மற்றும் ஜில்லா (2014) ஆகியவை பொங்கல் வெற்றிப்படங்கள். அதே சமயம் அவரது காலமெல்லாம் காத்திருப்பேன் (1997) பொங்கல்தான். ஆதியும் (2006) பொங்கலில்தான் வந்தது. தோல்வியும் அடைந்தது. வில்லு சரியாகப் போகவில்லை. அஜீத்தை எடுத்துக்கொண்டால் வான்மதி (1996), தொடரும் (1999), தீனா (2001), ரெட் (2002), பரமசிவன் (2006), ஆழ்வார் (2007), வீரம் (2014) ஆகியவை பொங்கல் படங்கள். இவற்றில் வான்மதி, தொடரும், தீனா மற்றும் வீரம் வெற்றிப்படங்கள். இப்போதிலிருந்து இருபதாண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால், விஜய்தான் பொங்கல் படங்களில் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக நடித்திருக்கும் நடிகர். அதேபோல் அவருக்குத்தான் பொங்கல் படங்களில் பலவும் வெற்றிகரமாகவும் அமைந்துள்ளன என்பது தெரிகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் எம்.ஜி.ஆர், ரஜினி மற்றும் கமல்ஹாஸனுக்குப் பொங்கல் படங்கள் லாபகரமாக அமைந்துள்ளன.
இப்போதைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட படங்கள் தொலைக்காட்சியிலேயே வந்துவிடுகின்றன. மேலும், முந்தைய காலகட்டத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் விறுவிறுப்பான படங்கள் பொங்கலுக்கு வந்துள்ளன. ஆனால் இப்போது ரசிகர்கள் உலக சினிமாக்களை வெகுவாகப் பார்க்கத் துவங்கிவிட்டதாலும், ஆங்கிலப்படங்கள் ஏராளமாகத் தமிழகத்தில் வருவதாலும், திரைப்படங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மனதில் கட்டாயம் இன்னும் அதிகரித்தே இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையான படங்கள் வருவது இப்போதைய காலகட்டத்தில் சற்றே அரிதாகவே மாறிவருகின்றன என்பதும் பொங்கல் படங்களைத் தொடர்ந்து கவனித்தால் புரிகிறது. புது வருடம் துவங்கும்போது வெளியாகும் தங்களது அபிமானத் திரைநட்சத்திரங்களின் படங்களைக் கண்மூடித்தனமாகப் பாராட்டுவது குறைந்து, தெளிவாக ஆராய்தல் இப்போது பரவிவருகிறது. இதைத் திரைத்துறையினர் சற்றே கவனித்தால்கூட, அவசியம் இன்னும் நல்ல படங்களைக் கொடுக்க இயலும்.

CONVERSATION

Back
to top