font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

’இசை’ சந்தோஷ் நாராயணன்

தமிழ்த் திரைப்படங்களில் ’இசை’ என்ற வஸ்து இடம்பிடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே, ஒரு குறிப்பிட விஷயம் தவறாது நடந்துவந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். என்னவென்றால், எத்தகைய இசையமைப்பாளராக இருந்தாலும் சரி – அவரது ராஜ்ஜியம் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நடக்கும். சீரான இடைவெளியில் ஒவ்வொரு இசையமைப்பாளராக முன்னால் வரத் துவங்குவார்கள். 1931ல் காளிதாஸ் திரைப்படத்தின் ஐம்பது பாடல்கள் வெளியானதில் இருந்து பிரபலமான பாஸ்கரதாஸில் ஆரம்பித்து இன்றைய ரஹ்மான் வரை இதுதான் நிலை. முப்பதுகளின் துவக்கத்தில் பாபநாசம் சிவன், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் போன்றவர்கள் பிரபலமாக இருக்க, முப்பதுகளின் முடிவில் ஷர்மா சகோதரர்கள், ஜி. ராமநாதன் ஆகியவர்கள் பிரபலமாக ஆரம்பித்தனர். நாற்பதுகளில் கே.வி மகாதேவன் அறிமுகம் ஆகிறார். ஐம்பதுகளின் துவக்கத்தில் டி.ஆர். பாப்பா, சி.எஸ். ஜெயராமன் ஆகியோர் உருவெடுக்கின்றனர். ஐம்பதுகளின் நடுவே விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடி உள்ளே வந்தாகிவிட்டது. இதன்பிறகு பல வருடங்களுக்கு, இடையிடையே வேதா போன்றவர்கள் உருவாகியிருந்தாலும் கூட, கே.வி மகாதேவன் மற்றும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோர் கொடிகட்டிப் பறந்தனர். பின்னர் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிந்தனர். விஸ்வநாதன் அதிகப்படங்களில் இசையமைக்கத் துவங்கினார். அறுபதுகளின் இறுதியில் ஷங்கர் கணேஷின் அறிமுகம். பின்னர் எழுபதுகளில் இளையராஜா உள்ளே வருகிறார். எண்பதுகளில் அவர் புகழின் உச்சிக்குச் செல்கிறார். தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை அவரது தனிக்காட்டு ராஜாங்கம்தான். பின்னர் ரஹ்மான் வருகிறார். இன்றுவரை அப்படியே இருந்துகொண்டிருக்கிறார். இன்னும் சில வருடங்களில் ரஹ்மானை மீறி அந்தக் காலகட்டத்தின் இசையை முழுதாக உள்வாங்கிக்கொண்டு எழும் இசையமைப்பாளர் ஒருவர் கட்டாயம் வந்து சேர்வார் (அல்லது அவர் இப்போதே தனது நகங்களைக் கூர்தீட்டிக்கொண்டிருக்கலாம்).
இதில் இன்னொரு விஷயம் – ஒரு காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள், அவர்களுக்குப் பின் இன்னொருவர் வந்து உச்சத்தில் இருக்கும்போதும் இசையமைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். இருந்தாலும் அவர்களின் காலகட்டம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது என்பதில் இசை ரசிகர்களுக்குச் சந்தேகம் இருப்பதில்லை. டி.ஆர். பாப்பா, எம்.எஸ். விஸ்வநாதன், ஷங்கர் கணேஷ், இளையராஜா என்று அந்தந்தக் காலகட்டத்துக்கு உதாரணங்கள் உண்டு. எழுபதுகள் வரையிலுமே டி.ஆர். பாப்பா இசையமைத்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார். அப்போது விஸ்வநாதன்தான் புகழின் உச்சத்தில் இருந்தார். அதேபோல் இளையராஜாவின் ஆதிக்கம் நிலவிய எண்பதுகளிலும் விஸ்வநாதன் இசையமைத்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார். இதுவேதான் தற்போதைய காலகட்டத்திலும் (ரஹ்மான்) இளையராஜாவின் இசை தொடர்வதன் மூலம் தெரிகிறது.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இருந்ததைவிட இப்போது இசையமைப்பாளர்கள் மிக அதிகம். எண்பதுகளில் துவங்கி, தொண்ணூறுகளில் சற்றே ஸ்திரப்பட்டு, இப்போது இது நன்றாகவே புலப்படுகிறது. 2014ன் துவக்கத்தில் இருந்து இப்போதைய ஆகஸ்ட் வரை வெளியான படங்களை எடுத்துப் பார்த்தாலேகூட, பாஸ்கர், டி.இமான், தேவிஸ்ரீ ப்ரசாத், எஸ்.என். அருணகிரி, அரவிந்த்-ஷங்கர், தரண், ஜஸ்டின் ப்ரபாகரன், என்.ஆர். ரகுநந்தன், ஹாரிஸ் ஜெயராஜ், தரண் குமார், நிவாஸ் கே. ப்ரசன்னா, செல்வ ராணி, எஸ். தமன், ஜி.வி. ப்ரகாஷ் குமார், சந்தோஷ் நாராயணன், கே.ஆர். கவின், சி.சத்யா, அனிருத், நடராஜன் சங்கரன், ப்ரேம்ஜி, ஷான் ரோல்டன், சித்தார்த் விபின், ஏ.ஆர்.ரஹ்மான், அருள்தேவ், இளையராஜா, விவேக்-மெர்வின், ரேஹான், யுவன் ஷங்கர் ராஜா என்ற பெரிய பட்டியல் இதே வரிசையில் கிடைக்கிறது. இந்தப் பட்டியலில் சில படங்கள்தான் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக வெளியான அத்தனை படங்களையும் சேர்த்தால் இன்னும் பல பெயர்கள் இதில் இடம்பெறக்கூடும்.
இப்படி எக்கச்சக்க இசையமைப்பாளர்கள் இப்போதைய காலகட்டத்தில் இருந்துவந்தாலுமே, இவர்களில் சிலர் மட்டும் தனியாகத் தெரிகிறார்கள் அல்லவா? எல்லோருக்கும் தெரிந்த பெயர்களான இளையராஜா, ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜி.வி ப்ரகாஷ், ஹேரிஸ் ஜெயராஜ் ஆகியவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சந்தோஷ் நாராயணனின் பெயர்தான் தற்போது பல படங்களின்மூலம் இசை ரசிகர்களுக்குப் பரிச்சயம் ஆகிவருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது.
சந்தோஷ் நாராயணன் இதுவரை பத்துக்கும் குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார். எனவே அவரது இசையை அலசிப்பார்த்துத் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் அவரது இடத்தை நிறுவும் முயற்சிகளுக்கு இன்னும் சில வருடங்கள் போகவேண்டும். இருந்தாலும் இதுவரை அவரது பாடல்கள், இதே காலகட்டத்தின் பிற பாடல்களுக்கு மத்தியில் தனித்துத் தெரிவது ஏன் என்பதைப் பற்றிய ஒரு சிறிய அலசல்தான் இந்தக் கட்டுரை.
சந்தோஷ் நாராயணன் இதுவரை இசையமைத்திருக்கும் பிரபல படங்கள்: அட்டகத்தி, பீட்ஸா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் ஆகியவை. இனிமேல் வரப்போகும் படங்களில் இறுதிச்சுற்றும் லூஸியாவும் இருக்கின்றன. இவற்றுக்கு நடுவே உயிர்மொழி, பீட்ஸா 2: த வில்லா, பில்லா ரங்கா (தெலுங்கு) ஆகிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இவைகளைப் பற்றிப் பார்க்குமுன்னர் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.
என்னவென்றால், தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இந்தியத் திரைப்படங்களிலேயேகூட, எப்போதுமே பாடல்களைப் பாடுபவர்கள் சிறந்த, நளினமான குரல்களைக் கொண்ட பாடகர்களாகத்தான் இருந்துவந்திருக்கின்றனர். தமிழை எடுத்துக்கொண்டால் தியாகராஜ பாகவதர், டி.எம்.எஸ், பி.பி ஸ்ரீநிவாஸ், யேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்.பி.பி, மலேஷியா வாசுதேவன், மனோ போன்ற பாடகர்களும், பி.சுசீலா, எஸ்.ஜானகி, ஜிக்கி, வாணி ஜெயராம், சுநந்தா, சித்ரா, சுஜாதா போன்ற பாடகிகளும் மிகப்பிரபலம். இவர்கள்தான் தமிழ்த் திரையுலகில் அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர்கள். படம் எப்படி இருந்தாலும் சரி – நடிகர் யாராக இருந்தாலும் சரி – இவர்களில் யாராவதுதான் பாடல்களைப் பாடியிருப்பார்கள். கதாநாயகன்/கதாநாயகிக்கு இவர்களின் குரல் பொருந்தியிருந்தாலும் பொருந்தாவிட்டாலும் – அந்த சூழ்நிலைக்குப் பாடல் பொருந்தியிருந்தாலும் பொருந்தாவிட்டாலும் – இவர்களில் ஒருவர்தான்.
அதேபோல், பாடல்களின் சூழ்நிலைகளுக்குத் தேவையான இசையும் கச்சிதமாக அந்தச் சூழலுக்கு இசையமைக்கப்பட்டிருக்காது. மாறாக, இயல்பாக இல்லாமல், அந்தச் சூழலையே இன்னும் தூக்கிக்காட்டி அதன்மூலம் சற்றே செயற்கையான சூழலாக அதனை வெளிக்காட்டும் இசையே (romanticized music) பல வருடங்களாக இருந்துவந்தது. இது தவறே அல்ல. இந்தியா முழுதுமே இப்படித்தான் இருந்தது (சில வங்காளப் படங்களைத் தவிர). உங்களுக்குப் பிடித்த எந்தப் படத்தையும் யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட ரொமாண்டிஸைஸ் செய்யப்பட்ட சூழல்கள்தான் மிக அதிகம் என்பதை உணர்வீர்கள். காரணம் இந்தியாவில் இசை என்பது திரைப்படப் பாடல்களின் வாயிலாக மட்டும்தான் பெரும்பாலும் பல வருடங்களாக அறியப்படுகிறது. எனவே திரைப்படங்களின் காட்சிகள் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்டு இருப்பதால் பாடல்களும் அப்படித்தான் இருக்கமுடியும்.
ஹிந்தியில் அமித் த்ரிவேதியின் மூலம் இது உடைந்தது. அந்தப் படம் – தேவ் டி. ’திரை இசைக்குத் தேவையான குரல்’ (மேலே உள்ள பட்டியலைப் பார்த்துக்கொள்ளவும்) என்றே கற்பனை செய்யமுடியாத குரல்களெல்லாம் அந்தப் படத்தில் பாடின. அதுதான் இயல்பாகவும் இருந்தது. அடுத்ததாக ‘குலால்’ படத்தின் மூலம் பியுஷ் மிஷ்ராவும் இயல்பான, சூழலுக்குக் கச்சிதமாகப் பொருந்திய, ரொமாண்டிஸைஸ் செய்யப்படாத இசையைக் கொடுத்தார். தமிழில் ‘பருத்தி வீரன்’ படத்தை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம் (’டங்கா டுங்கா’ மற்றும் ’ஊரோரம் புளியமரம்’ – இந்த ஊரோரம் புளியமரம் பாடலின் மூலம் – ’புதிய வார்ப்புகள்’ படத்தில் வரும் தெருக்கூத்து.). ‘விருமாண்டி’ படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் இப்படி இருக்கும் (’கருமாத்தூர் காட்டுக்குள்ளே’). அதேபோல் ‘தேவதை’ படத்தின் ’வாரானே வாரானே வாட்டமுள்ள அரக்கன்’ பாடல். எம்.எஸ்.வியும் சரி – இளையராஜாவும் சரி – ரஹ்மானும் சரி – இப்படிப்பட்ட இயல்பான இசையை மிகவும் அரிதாகத்தான் கொடுத்திருக்கின்றனர். ரஹ்மானுக்கு ‘தில்லி 6’ படம் ஒரு உதாரணம். இந்தியத் திரை இசை கடந்த சில வருடங்களாகத்தான் இப்படிப்பட்ட இயல்பான இசையை வழங்கத் துவங்கியிருக்கிறது என்று அவசியம் சொல்லலாம். இந்த மாற்றத்துக்குக் காரணம் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ் போன்ற இளைய தலைமுறை இயக்குநர்களின் படையெடுப்புதான். கூடவே, இப்போதைய உலகில் உலகின் அத்தனை மூலைகளிலும் இருக்கக்கூடிய இசை பற்றி இசை ஆர்வலர்களுக்கு அவசியம் பல தகவல்கள் கிடைப்பதும்தான். இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமே.
பொதுவாக உலக இசையை எடுத்துக்கொண்டால், எந்தக் காலகட்டமாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்தின் மாற்றங்கள், மக்களின்மீதான அவற்றின் தாக்கம் ஆகியவை அவற்றில் கட்டாயம் இடம்பெறும். ஆனால் இந்தியாவில் பாடல்கள் என்றாலே திரைப்பட இசையைத்தான் மையப்படுத்தி வருவதால், திரைப்படங்களின் சூழலுக்கு ஏற்பத்தான் இசை இருக்கும். இதனால் வெளியுலகில் இசையில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கம் இந்தியாவில் ஏற்பட நாம் தற்காலம் வரை காத்திருக்கவேண்டிய சூழ்நிலை. அப்படியுமே எழுபதுகளில் பாப் மார்லி, லெட் ஸெப்லின் போன்றவர்கள் ஏற்படுத்திய தாக்கம் கூட இங்கே இன்னுமே முழுமையாக வரவில்லை. இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களிலும் இயல்பான, சூழலுக்குத் தகுந்த பாடல்கள் தற்சமயம் வெளிப்பட ஆரம்பித்திருக்கும் காலகட்டத்தில்தான் சந்தோஷ் நாராயணனின் இடம் முக்கியமானதாகிறது.
’அட்டகத்தி’ பாடல்களை எடுத்துக்கொண்டால், அந்தப் படம் சென்னையின் ஊர்ப்புறத்தில் வாழும் இளைஞன் ஒருவனைப்பற்றிய படம். அவனது வாழ்க்கையில் சிறுவயதுமுதலே ’கானா’
பாடல்கள் முக்கியமான இடத்தை வகித்து வந்திருக்கின்றன. அப்படியென்றால் அவன் உற்சாகமாகப் பாடும் தருணங்கள் எப்படி இருக்கும்? ’ஆடி போனா ஆவணி – அவ ஆள மயக்கும் தாவணி’ என்பதுபோன்ற கானாவாகத்தானே இருக்கும்? அந்தப் பாடலுமே ரொமாண்டிஸைஸ் செய்யப்பட்ட சூழலில் வருவதில்லை. மாறாக இயல்பான தருணம் ஒன்றில்தான் வருகிறது. பாடலைப் பாடியவர் கானா பாலா. கானா பாடல்களைப் பாடுவதே இவரது தனித்தன்மை. இப்படி சூழல், பாடகர், இசை ஆகிய அனைத்தும் இயல்பாக இருப்பதே நல்ல இசைக்கும் படத்துக்கும் அடையாளம். மாறாக, இந்தத் தருணத்தில் தபேலா, டோலக் சகிதம் யேசுதாஸ் அல்லது ஜெயச்சந்திரன் போன்ற ஒரு குரல் ஒரு இனிமையான பாடலைப் பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? பாடல் ஒருவேளை ஹிட் ஆகியிருக்கலாம். ஆனால் அந்த சூழலுக்குச் சற்றும் பொருந்திருக்காது.
இதுவேதான் ’நடுக்கடலுல கப்பலா’ பாடலுக்கும் பொருந்தும். பாடல் இடம்பெறும் சூழல் அத்தகையது. இதுபோன்ற இடங்களில் இயக்குநரின் கருத்தும் இன்றியமையாதது. ‘இன்னின்ன சூழலில் இன்னின்ன பாடல் வேண்டும்’ என்று கேட்டுப்பெறும் தன்மை அவசியம் ஒரு இயக்குநரிடம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அந்தப் பாடல்கள் இயல்பாக இருக்கும். அந்தவகையில் சந்தோஷ் நாராயணனிடம் வேலைவாங்கிய இயக்குநர் ரஞ்சித்தும் குறிப்பிடத்தக்கவர். அந்தப் படத்தில் ஒரு பேண்டு வாத்திய இசையும் உண்டு. ’அடி என் கானா மயில்’ என்ற பாடலும் இப்படிப்பட்டதே. சந்தோஷ் நாராயணனின் இசையைக் கேட்டால், அவர் முழுக்க முழுக்க வெஸ்டர்ன் இசையால் கவரப்பட்டவர் என்பது புரியும். அப்படிப்பட்டவரை கானாவை நோக்கி அழைத்துக்கொண்டுவந்தது இயக்குநரின் சாமர்த்தியம்தான் என்று தோன்றுகிறது. இதுதான் பரிசோதனை முயற்சி. இப்படிச் செய்யச்செய்யத்தான் ஒரு இசையமைப்பாளர் மெருகேற முடியும். மாறாக, தனக்கு எது வருகிறதோ அதிலேயே இருந்துகொண்டிருந்தால் தேக்கநிலை வந்துவிடும்.
இதுவே அடுத்த படமான பீட்ஸாவை எடுத்துக்கொண்டால், அந்தப் படத்தின் களம் வேறு. அது ஒரு த்ரில்லர். எனவே பாடல்களிலும் அதற்கேற்ற மாறுபாடு இருக்கும். இதிலும் கானா பாலாவின் பாடல் ஒன்று உண்டு. ஆனாலும் பீட்ஸாவில் சந்தோஷ் நாராயணனின் பரிசோதனை முயற்சிகள் கொஞ்சம் குறைவுதான். அதற்கு அடுத்து வந்த ‘சூது கவ்வும்’ திரைப்படம் மறுபடியும் சந்தோஷ் நாராயணனின் இயல்பான களமான வெஸ்டர்ன் இசையை நோக்கியே போகிறது. இருந்தாலும் அதிலும் சில வித்தியாசமான இசைக்கோர்ப்புகள் உண்டு. ‘மாமா டவுசர் கழண்டுச்சே’ பாடல் ஜாஸ் வகை. ’எல்லாம் கடந்து போகுமடா’, பழைய தமிழ்த் திரைப்படங்களில் வரும் தன்னம்பிக்கையூட்டும் பாடல்களின் வகையைச் சேர்ந்தது (’உன்னையறிந்தால்.. நீ உன்னையறிந்தால்’ வகையறா). ’நான் இமை ஆகிறேன்’ பாடல், பழைய ஆங்கிலப் படங்களில் எப்போதுமே உபயோகிக்கப்படும் சோகம் கலந்த காதல் இசை. ’காசு பணம் துட்டு மணி மணி’ பாடல் கானா. மிகவும் வித்தியாசமான ஆல்பம் அது.
அங்கிருந்து ‘குக்கூ’ பக்கம் நகர்ந்தால், இது சந்தோஷ் நாராயணனின் களமே அல்ல என்பது தெரியவரும். இது இளையராஜாவுக்கான களம். ஆனால், சந்தோஷ் நாராயணன் போன்ற ஒரு வெஸ்டர்ன் பாதிப்புள்ள இசையமைப்பாளர் இப்படித் தனக்கு இயல்பாக இல்லாத களத்தில் இறங்குவதே அவரை இன்னும் மேம்படுத்தும். அதேபோல் குக்கூ பாடல்கள் அந்தப் படத்துக்குத் தேவையான உணர்வுகளை வழங்கவே செய்தன.
இதன்பின்னர் வந்ததுதான் ஜிகர்தண்டா. என்னைப் பொறுத்தவரையில் சந்தோஷ் நாராயணனின் முழுத்திறமையும் வெளிப்பட்டிருக்கும் படம். ஆண்டனி தாசன் போன்ற ஒரு அடிப்படை கானா பாடகரை அழைத்துவந்து இப்படி ஒரு பாடலைப் பாடவைக்க அவசியம் துணிச்சல் வேண்டும். ’பாண்டி நாட்டுக் கொடியின் மேலே’ பாடலின் பேண்டு இசை சந்தோஷ் நாராயணன் அமித் த்ரிவேதியின் தேவ் டி இசையால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றியது. இதுவும் ஆண்டனி தாசன்தான். என்னியோ மாரிகோனியின் இசைக்கு சந்தோஷ் நாராயணன் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் அஞ்சலிதான் ‘ஹூ ஹா’ இசைக்கோர்ப்பு. அப்படியே அறுபதுகளின் வெஸ்டர்ன் இசையைக் கண்முன் (காதுமுன்) நிறுத்தும் கோர்ப்பு இது. ’ஓட்டம்’ மறுபடியும் ஜாஸ் இசை. ’பேபி’ பாடலைக் கேட்கும்போது ஜான்னி கேஷ் பாடிய ’A Satisfied Mind’ பாடல் மனதில் ஒலித்தது. அதே பாடல் அல்ல. ஆனால் அதைப்போன்ற உணர்வைக் கொடுக்கும் பாடல். ஜான்னி கேஷ் ஒரு அமெரிக்க country பாடகர் (Country music என்பதைத் தமிழில் அதன் பொருள் கலையாமல் எப்படிச் சொல்வது?). அமெரிக்க country இசையை உள்வாங்கி சந்தோஷ் நாராயணன் அமைத்திருப்பதுபோலவே தோன்றியது. இதுவரை சந்தோஷ் இசையமைத்ததிலேயே ஜிகர்தண்டா முற்றிலும் வித்தியாசமான ஆல்பம் என்று அவசியம் சொல்லமுடியும். அதில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் பெரும்பங்கும் அவசியம் இருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
நாம் மேலே பார்த்ததுபோல, எப்போது ஒரு இசையமைப்பாளர் இப்படித் தனக்கு இயல்பாக வருவதை விட்டுவிட்டு வேறு ஒரு வெளியை நோக்கிச் செல்கிறாரோ, அப்போது அவரது இசை அவசியம் பேசப்படும். அவருக்கும் அது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அமித் த்ரிவேதி இயல்பாகத் தனது முதல் படத்திலேயே செய்ததைச் செய்துபார்க்க ரஹ்மானுக்குப் பல வருடங்கள் ஆயின. ஆனால் இப்போது சந்தோஷ் நாராயணனுக்கு அமையும் படங்கள் எல்லாமே அப்படிப்பட்ட வித்தியாசமான வாய்ப்புகளாக அமைவதால், அவசியம் சில வருடங்களில் குறிப்பிட்டுப் பேசப்படக்கூடிய ஒரு சூழல் இயல்பிலேயே சந்தோஷ் நாராயணனுக்கு அமைந்திருக்கிறது (சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில், சந்தோஷ் நாராயணை நான் கவனித்து வருகிறேன் என்று ரஹ்மான் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது).
ஹிந்தித் திரைப்படங்களில் சில வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்ட இந்தச் சூழலைத் தமிழில் அவர் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப்போகிறார் என்பதில்தான் தமிழ் சினிமா இசையில் அடுத்த குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர் வந்தாயிற்றா இல்லையா என்பதை முடிவுசெய்யும். இன்னும் சில வருடங்களில் இந்தக் கேள்விக்கான பதிலை அவசியம் தெரிந்துகொண்டுவிடமுடியும்.

CONVERSATION

Back
to top