font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

க்வெண்டின் டாரண்டினோ- ஹேட்ஃபுல் எய்ட்

My movie is not a carton of milk that has an expiration date. It’s going to be available 20 years, 30 years, hopefully 100 years from now. Those critics will come and go, but the movie will be the movie. My revenge is I’m going to win their kids and grandkids over. They’re going to be stuck, an old man at Thanksgiving, having their granddaughter talk about how she’s taking a Tarantino class in college, and it’s the most stimulating class that she’s taking. They’re going to fry an egg on their bald pate while their grandkids exalt my virtues – Quentin Tarantino.
இந்த ஆண்டு நான் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் இது. ரிலீஸுக்கு முன்னரே டாரண்ட்டில் வந்தது. அதன்பின் க்ரிஸ்மஸ் தினத்தில் ஹாலிவுட்டில் Roadshowஆக இதன் ப்ரீமியர் நடைபெற்றது. முற்றிலும் ஃபில்மில், 70MM திரைகளில் இந்தப் ப்ரீமியரில் படம் வெளியானது. அதன்பின் உலகம் முழுக்க டிஜிட்டலில் ஜனவரியில் வெளிவந்தது.
இந்தப் படத்தின் சிறப்புகள் என்னென்ன என்பதெல்லாம் பார்ப்பதற்குமுன்னர், இந்தப் படத்தைப் பற்றிய டாரண்டினோவின் கருத்தைக் கவனிப்போம். இது ஒரு சாதாரண வெஸ்டர்ன் படம் அல்ல. மாறாக, அமெரிக்காவில் கறுப்பின மக்களின் பதைபதைப்பு பற்றிய அவரது கருத்துகளே இந்தப் படமாக வந்துள்ளன. இதுவேதான் Django Unchained படத்திலும் அவரது கருத்தாக இருந்தது. ஒரு குட்டிக் கறுப்பினச் சிறுவன் வெஸ்டர்ன்கள் பார்க்கவேண்டும் என்று விரும்பினால், வெள்ளையர்களால் நிரம்பிய வெஸ்டர்ன்களில் அவனுக்குப் கிடைக்கும் ம்கிழ்ச்சியை விட, ஜாங்கோவிடம் அவனுக்கு மகிழ்ச்சி கூடுதலாகக் கிடைக்கும் என்பது அவரது கருத்து. இதுதான் ஹேட்ஃபுல் எய்ட் பற்றிய டாரண்டினோவின் கருத்தும் கூட. இதிலும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு மனிதனே பிரதான கதாபாத்திரம் வகிக்கிறான். இதுவும் ஒரு வெஸ்டர்ன் தான். ஆனால் பெருமளவில் வெளியாகும் பிற வெஸ்டர்ன்களைப் போல் அல்லாமல், இது கொஞ்சம் வசனங்கள் நிரம்பியது. அதுவும் தெரிந்தேதான் டாரண்டினோ செய்திருக்கிறார்.ஒரு வெஸ்டர்ன் எடுப்பதைவிட, தொடர்ச்சியாக இரண்டு வெஸ்டர்ன்கள் எடுப்பதில் சவால்கள் அதிகம் என்று சொல்லியிருக்கிறார். அத்தகைய சவால்மிக்க ஒரு படமாகவே இது வெளிவந்துள்ளது என்பது அவரது கருத்து.
டாரண்டினோவின் பிற படங்கள் அவருக்குப் பிடித்த ஏராளமான படங்களை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன என்ப்து அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் ஹேட்ஃபுல் எய்ட் படத்துக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த படங்கள் எவை?
The inspirations to The Hateful Eight
முதலாவதாக, டாரண்டினோவுக்கு மிகப்பிடித்தமான இயக்குநர்களில் ஒருவராகிய செர்ஜியோ கார்புச்சி இயக்கிய The Great Silence. இது ஒரு Snow western.  மிகவும் அட்டகாசமான ஒரு வெஸ்டர்ன். இதற்கு இசையமைத்தவர் என்னியோ மாரிகோனி (வேறு யாராக இருக்கமுடியும்?).  ஜாங்கோவுக்கும் இந்தப் படம்தான் இன்ஸ்பிரேஷன். அடுத்ததாக, Day of the Outlaw. இது ஆண்ட்ரெ டெ டோத் இயக்கிய படம். இதுவும் ஒரு snow westernதான்.  இதன்பின்னர் யூஜீன் ஓ நீல் எழுதிய நாடகமான The Iceman Cometh. அடுத்ததாக, ஜான் கார்பெண்டர் இயக்கிய The Thing (1982). அகதா க்ரிஸ்டி எழுதிய மிகப்பிரபலமான And then there were none நாவலும் ஒரு இன்ஸ்பிரேஷனே. இதுவரை உலகில் மிக அதிகமாக (100 மில்லியன் பிரதிகள்) விற்பனையான மிஸ்டரி இதுதான். இதுவரை ஒரு மிஸ்டரியை எழுதியதில்லை என்பது டாரண்டினோவின் கூற்று. எனவே, இந்தப் படத்தில் சாமுவேல் ஜாக்ஸனின் கதாபாத்திரத்தை எழுதியபின்னர், இதைப்பற்றி ஜாக்ஸனிடம் கேட்டபோது, இதை ஹெர்க்யூல் நீக்ரோ  என்றே ஜாக்ஸன் சொன்னதுபற்றியும், அப்பெயரை வைத்தே படப்பிடிப்பு முழுதும் ஜாக்ஸனை அனைவரும் அழைத்தது பற்றியும் டாரண்டினோ சொல்லியிருக்கிறார் (ஹெர்க்யூல் பாய்ரோ என்பவர் அகதா க்ரிஸ்டியின் மிகப்பிரபலமான துப்பறிவாளர்). இவைதவிர, Rio Bravo திரைப்படமும் இன்னொரு காரணம். இப்படம் எனக்கும் பிடித்த படங்களில் ஒன்று. அமெரிக்காவில் Bonanza என்ற பெயரில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலம்.  இதில் பல எபிஸோட்களில் பிரபல நட்சத்திரங்கள் guest starகளாக வருவது உண்டு. இதில் வரும் சில கதாபாத்திரங்கள்தான் ஹேட்ஃபுல் எய்ட் கதாபாத்திரங்களை இன்ஸ்பையர் செய்தவர்கள் என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார். பதினான்கு வருடங்கள் ஒளிபரப்பான சீரீஸ் இது. இதன் தீம் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.
இத்தனை இன்ஸ்பிரேஷன்களுக்குப் பின்னரே ஹேட்ஃபுல் எய்ட் வெளிவந்துள்ளது. சினிமா வெறியரான டாரண்டினோவுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. எதாவது ஒரு மூலையில் இருந்து இன்னமும் பலரும் அறியாத ரெஃபரன்ஸ்களைக் கொடுப்பது டாரண்டினோவின் வழக்கம். அவர் ஒரு சினிமா historian கூட என்பதால் இது அவருக்குச் சாத்தியம்.
The Hateful Eight & The Revenant
இந்தப் படத்துக்கும் ‘The Revenant’ படத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டுமே பனிபடர்ந்த பிரதேசங்களில் நடக்கும் கதைகள். இரண்டுமே பழிவாங்கும் கதைகள். ஒன்றில் தந்தை; இன்னொன்றில் அண்ணன். இரண்டிலும் கெட்டவர்கள் ஃப்ரெஞ்ச் பேசுகிறார்கள். இரண்டிலுமே கிரிஸ்தவ சின்னங்கள் உண்டு. இரண்டு படங்களிலுமே ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் மட்டுமே. இரண்டு படங்களிலுமே தூக்கில் போடுவது முக்கியமான இடங்களில் வருகிறது.  மிகமிகக் குறிப்பாக, இரண்டு படங்களிலுமே முக்கியமான கதாபாத்திரங்கள் காற்றில் பொழியும் பனியை உண்ண முயல்வது வரும் (ஹேட்ஃபுல் எய்ட்டில் பார்த்திருப்பீர்கள். ரெவனண்ட்டில் இதைக் கவனித்திருக்கிறீர்களா?) இரண்டுமே மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களைக் கொண்டவை. இரண்டிலுமே நல்ல நடிகர்கள் உண்டு. அதேசமயம், இந்த இரண்டு படங்களுக்கும் இருக்கும் பிரதான வேற்றுமை, ரெவனண்ட் உலகம் முழுக்க மார்க்கெட்டிங் செய்யப்பட்டதைப்போல ஹேட்ஃபுல் எய்ட் செய்யப்படவில்லை என்பதுதான். கூடவே, ரெவனண்ட் ஒரு one dimensional படம். வில்லனைப் பழிவாங்கும் ஹீரோ என்ற ஒரு பரிமாணக் கதையில், முழுக்க முழுக்க ஒளிப்பதிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். ஆனால் ஹேட்ஃபுல் எய்ட்டின் கதை அப்படி அல்ல. அது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். முழுக்க முழுக்க (ஒரு சில காட்சிகள் தவிர்த்து) செட்டுக்குள்ளேயே, கதாபாத்திரங்களுக்கான வசனங்களை வைத்தே இயக்கப்பட்ட படம் அது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குப் பின்னாலும் மிக நீண்ட கதை இதில் உண்டு. படத்தில் காண்பிக்கப்பட்டது ஒரு துளி மட்டுமே. காண்பிக்கப்படாத கதைதான் இப்படத்தில் மிக முக்கியம். அதுதான் ஹேட்ஃபுல் எய்ட்டின் சிறப்பு. முற்றிலும் கதாபாத்திரங்களின் பின்னணியை வைத்தே எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் பின்னணி, வசனங்களில் விரிவாக வெளிப்பட்டிருக்கும். அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அடுத்த கதாபாத்திரத்தின் மீது இருக்கும் வெறுப்பு என்பதுதான் ஹேட்ஃபுல் எய்ட்டின் பிரதான அம்சம். இந்த வெறுப்பால் அவர்கள் அனைவருக்குமே மோசமான முடிவு நிகழப்போகிறது என்பதுதான் படத்தின் செய்தி.
அடுத்ததாக, இரண்டு படங்களையும் கவனித்தால், ரெவனண்ட் என்பது தனது மகனைக் கொன்று, தன்னை விட்டுவிட்டுப்போன நபரைப் பழிவாங்கப் பல நாட்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மரணத்தை வென்ற ஒரு மனிதனின் கதை. இதில் எங்காவது சந்தோஷமோ, மகிழ்ச்சியோ, grandeur எனப்படும் பிரம்மாண்டமோ இருக்கிறதா? ஆனால் இவை எல்லாமே இப்படத்தின் ஒளிப்பதிவில் உள்ளது. இமானுவேல் லுபெஸ்கி சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்பது உண்மைதான். ஆனால், இப்படத்தின் ஆன்மாவுக்குச் சம்மந்தமே இல்லாத ஒளிப்பதிவை இப்படத்தில் கையாண்டுள்ளார். இது ஒரு grim கதை. இக்கதையில், பனிப்பிரதேசத்தின் பிரம்மாண்டம், இயற்கையின் மலைக்க வைக்கும் அழகு ஆகியவற்றை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் காட்டிக்கொண்டே இருக்கிறார் லுபெஸ்கி. இது எப்படி இருந்தது என்றால், ‘இதோ பார்த்துக்கொள்ளுங்கள். இதுதான் ஒளிப்பதிவு. இப்படித்தான் ஃப்ரேம்கள் வைக்கவேண்டும்’ என்று டமாரம் அடிப்பதைப்போலவே இருந்தது.
மாறாக, ஹேட்ஃபுல் எய்ட் படத்தைக் கவனித்தால், படத்தை Ultra 70 MMல் எடுத்திருந்தாலும், படத்தின் லென்ஸ்கள் மிகப்பழையவையாக – பென்ஹர் போன்ற படங்களை எடுக்க உபயோகித்திருந்த லென்ஸ்களாக இருந்தாலும், ஆரம்பக் காட்சியில்  காண்பிக்கப்படும் பனிப்பிரதேசத்தின் ஷாட்களைத் தவிர, இந்தப் படத்தில் ரெவனண்ட்டில் வைக்கப்பட்டதைப் போன்ற செயற்கையான ஃப்ரேம்கள் எதுவும் இல்லை என்பது தெரியும். ஹேட்ஃபுல் எய்ட் படத்தின் பெரும்பாலான காட்சிகள், ஒரு விடுதிக்குள் நடக்கின்றன. இங்கே கதாபாத்திரங்களின் நடிப்பும், அவர்கள் பேசும் வசனங்களுமே முக்கியம். இந்த விடுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் ஷாட்களைக் கவனித்துப் பாருங்கள். காட்சிகளின் பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். கேமரா, உணவு விடுதியின் ஒவ்வொரு அங்குலத்தையும் எப்படிப் படம் பிடித்திருக்கிறது என்பதை observe செய்து பாருங்கள். இதுதான் Subtlety. இத்தகைய ஒளிப்பதிவுதான் பாராட்டத்தக்கது என்பது புரியும். ஹேட்ஃபுல் எய்ட்டில் வரும் க்ளோஸப் ஷாட்களைக் கவனித்தால் தெரியும் – Ultra 70 லென்ஸ்களை வைத்துக்கொண்டு இப்படிப் படம் எடுப்பதன் சவால்கள் என்னென்ன என்பது. இந்தப் படத்தின் கதை, ரெவனண்டைப் போலவே ஒரு gloomy கதை. இதன் ஒளிப்பதிவில் எங்காவது பளீரென்று சூரிய வெளிச்சம், ரெவனண்ட்டைப்போன்ற பனிப்பிரதேசத்தின் அழகு, இயற்கையைக் கேமராவில் படம்பிடிக்க நினைக்கும் தன்மை ஆகியவை இருக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள். எங்கேயுமே இருக்காது. படம் முழுதுமே ஒருவித dark லைட்டிங் இருக்கும். படத்தின் தன்மைக்கும் ஒளிப்பதிவுக்கும் இருக்கும் ஒற்றுமை என்பது இதுதான். இதை டாரண்டினோவும் ஒளிப்பதிவாளர் ராபர்ட் ரிச்சர்ட்ஸனுமே பேசிவைத்துக்கொண்டு செய்திருக்கின்றனர்.
இதை இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பார்க்கலாம். இந்த Ultra 70 Panavision லென்ஸ்களை வைத்துக்கொண்டு ஒரு ஒளிப்பதிவாளர் அமைக்கும் ஃப்ரேம்கள் அகலமானவையாகவே இருக்கும். இவைகளின் ஆஸ்பெக்ட் ரேஷியோ என்பது 2.76:1. வழக்கமான 35MM படங்களை விட இரண்டு மடங்கு பெரிய ஆஸ்பெக்ட் ரேஷியோ இது. ஃப்ரேம்கள் வழக்கமான படங்களைவிடவும் இரண்டுமடங்கு பெரியவை என்று மனதில் வைத்துக்கொண்டால் போதும்.
இப்படிப்பட்ட ஃப்ரேம்களை உபயோகப்படுத்தும் Ultra Panavision 70 லென்ஸ்கள் இருந்து, பிரம்மாண்டமான பனிப்பிரதேசத்தையும் கையில் கொடுத்துவிட்டால் என்னாகும்? ஒளிப்பதிவாளர் குஷியாகி கண்டபடி சுட்டுத்தள்ளவேண்டும் என்றுதானே நினைப்பார்? ஆனால் டாரண்டினோ அதில் மிகத்தெளிவாக இருந்தார். அவரது கதையில் Ultra 70MM என்பது ஒரு கருவி மட்டுமே. அதைவைத்துக்கொண்டுமட்டுமே படத்துக்கு விளம்பரம் தேடுவது அவரது நோக்கமாக இல்லை. கதைப்படி ஒரு விடுதியில்தான் பாதிக்கும் மேற்பட்ட படம் நடைபெறவேண்டும். இதனால், அந்த விடுதிக்குள்ளேயே, இந்தப் பிரம்மாண்ட லென்ஸ்களை வைத்துக்கொண்டு துல்லியமாக, நடிகர்களின் ஒவ்வொரு அசைவையும் படம்பிடித்தார். செர்ஜியோ லியோனியின் பழைய படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் அதிகம் இருக்கும்.
ஒரு பிரபல உதாரணமாக, இந்தக் காட்சியைப் பார்க்கலாம்.
ஹேட்ஃபுல் எய்ட்டின் ஓப்பனிங் காட்சிக்கு இதுபோன்ற செர்ஜியோ லியோனியின் ஓப்பனிங் காட்சிகள்தான் இன்ஸ்பிரேஷன். அந்தக் காட்சியைத் திரைக்கதையில் எழுதும்போதே Sergio Leone  Close Up என்றுதான் டாரண்டினோ எழுதியிருப்பார். மேலே இருக்கும் காட்சியில் க்ளோஸப்களை கவனியுங்கள். எத்தனை அட்டகாசமாக இருக்கின்றன? அதுதான் ஹேட்ஃபுல் எய்ட்டில் டாரண்டினோ கையாண்ட வழிமுறை. இவ்வளவு பிரம்மாண்ட ஃப்ரேம்களை அமைக்கும் அளவு லென்ஸ்கள் இருந்தால், அவற்றைவைத்துக்கொண்டு ஒரு மூடிய வீட்டினுள்ளேகூட கதைக்கேற்றபடி ஷாட்கள் அமைத்து எடுக்கலாம் என்பதுதான் டாரண்டினோவின் முடிவு. மாறாக, ரெவனண்ட்டில் செய்ததுபோல் எப்போதுபார்த்தாலும் இயற்கையையே காண்பித்துக்கொண்டிருக்க டாரண்டினோவால் முடியாது. அவர் ஒரு கதைசொல்லி என்பதுதான் காரணம். அப்படிக் காண்பித்திருந்தால், ஒரு துயரமான படத்தில் எதற்கு இத்தனை viStaக்கள் என்ற இந்த முரண் அவசியம் ஆடியன்ஸுக்கு உறைத்திருக்கும்.
ஹேட்ஃபுல் எய்ட் படம் இந்தியாவில் மிகச்சில மாநிலங்களில்தான் வெளியாகியது. அப்படி வெளியானபோதும், டாரண்டினோவின் ரசிகர்கள் மட்டும்தான் அந்தப் படத்தைப் பார்த்தனர். டாரண்டினோவின் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் தேவையான விஷயங்கள் இருந்தன. டாரண்டினோவின் ரசிகர்கள் அல்லாமல், Kill Bill, Django Unchained பட இயக்குநரின் அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பில் வந்து படம் பார்த்த பிறர் ஏமாந்து போயினர். ஏனெனில், இது ஒரு வெஸ்டர்ன் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. வெஸ்டர்ன் என்றால் துப்பாக்கிகள், குதிரைகள், விசில் + மணிகள் ஒலிக்கும் பின்னணி இசை, சண்டைகள், ரத்தம் ஆகியவை இருக்கும் என்றே எதிர்பார்த்து வந்தவர்கள் இவர்கள். எனவே படம் முழுதும் பேசிக்கொண்டே இருந்ததில் இவர்கள் எரிச்சல் அடைந்துவிட்டனர். ஆனால் இவர்களால் ரெவனண்ட் படத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்க்க முடிந்தது.
இது ஏன்?
உண்மையில் என்னைப்பொறுத்தவரை ரெவனண்ட் மிக மிக மிக மிக மிக மெதுவான படம். ஆனாலும் அந்தப் படத்தைப் பார்க்கத் தமிழகத் திரை ரசிகர்கள் பெரும்பாலானவர்களால் முடிந்ததற்குக் காரணம் அதன் ஒளிப்பதிவு மட்டுமே. நம்மிடம் ஒரு தவறான எண்ணம் உண்டு. எதுவாக இருந்தாலும், அது மிகவும் மிகையாக இருந்தால் உடனடியாக நாம் பாராட்டிவிடுவோம். நடிப்பு, இசை, நடனம், ஒளிப்பதிவு ஆகிய பல உதாரணங்கள் உண்டு. ரெவனண்ட் படம் முழுதும் மிகவும் oddஆகத் தெரியும் அதன் ஒளிப்பதிவுதான் அப்படத்தை நம்மைப் பார்க்கத் தூண்டியிருக்கிறது என்பது என் எண்ணம். உண்மையில் ரெவனண்ட் ஹேட்ஃபுல் எய்ட் போல எடுக்கப்பட்டிருக்கவேண்டிய படம். ஆனால் அப்படி எடுத்தால் என்னாகும் என்பது இனாரித்துவுக்குத் தெரியும். அவர் நினைத்தபடியே படம் இப்போது உலகெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்மால் subtleஆக எடுக்கப்படும் படங்களைப் பார்த்துப் பாராட்ட இயலாது. நமக்கு எல்லாமே மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். வீடு ஏன் ஓடவில்லை என்று யோசித்துப் பாருங்கள். சம்சாரம் அது மின்சாரம் ஏன் ஓடியது? இதனால் ரெவனண்ட்டின் ஒளிப்பதிவு மோசம் என்று நான் சொல்லவரவில்லை. படமோ ஒரு இருண்ட தன்மையுடையது. ஆனால் ஒளிப்பதிவு ஏதோ ஒரு fairy tale போல இருக்கிறது. படத்தின் கருவுக்கும் ஒளிப்பதிவுக்கும் துளிக்கூட சம்மந்தமில்லை. ஹ்யூ க்ளாஸ் என்ற மனிதனின் உயிர்வாழும் வேட்கையைக் காண்பிக்கவேண்டிய படத்தில் இயற்கைக் காட்சிகளே ஷாட்டுக்கு ஷாட் தெரிகின்றன. இந்த மனிதன் அவற்றில் இல்லை. மாறாக வானம், காற்று, பூமி, மலைகள் ஆகியவையே ஏதோ பனிப்பிரதேசத்தின் மாண்பைக் கூறும் டாக்குமெண்ட்ரி போல நிரப்பப்பட்டிருக்கின்றன. லுபெஸ்கியை விடவும் பலமடங்கு திறமை வாய்ந்த ராபர்ட் ரிச்சர்ட்ஸன் இப்படியெல்லாம் ஹேட்ஃபுல் எய்ட்டில் காட்சிகள் அமைக்கவில்லை. ஏனெனில் டாரண்டினோ இந்தக் கதையை எப்படிக் கொண்டுசெல்லவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இந்த இரண்டு படங்களையும் உள்ளது உள்ளபடி பார்த்தால் ஹேட்ஃபுல் எய்ட்டின் சிறப்புகள் புரியும்.
ரெவனண்ட் பற்றிய என் கருத்துகளை விரிவாக ஹேட்ஃபுல் எய்ட் முடிந்ததும் எழுதுகிறேன்.
The Hateful Eight – The Characters
இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு – இதன் கதாபாத்திரங்கள். இந்தப் படத்தை Ultra 70MMல் படம்பிடிக்க முடிவுசெய்ததே இது ஒரு indoor படம் என்பதால்தான். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு விடுதிக்குள் நடப்பதால், எங்கே ஃப்ரேம் வைத்தாலும் பின்னணியில் நடக்கும் பல விஷயங்களும் அந்த ஃப்ரேமில் படமாக்கப்படவேண்டும் என்பது டாரண்டினோவின் எண்ணம். அதற்கு 70MM மிகவும் உதவியது. ஒரு ஃப்ரேமிலேயே நான்கு மீடியம் ஷாட்கள் (மிட் ஷாட்கள்) வைக்க டாரண்டினோவால் முடிந்தது. அதுதான் இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சம். விடுதிக்குள் நடக்கும் காட்சிகளை மறுபடி ஒருமுறை பார்த்தால் இது புரியும். முன்னணியில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களைப் பார்த்துவிட்டு அப்படியே பின்னணிக்குச் சென்றீர்கள் என்றால் அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பது நன்றாகப் புரியும். அப்படியே நடிகர்களின் முகங்களில் தெரியும் ரியாக்‌ஷன்களை Ultra 70MM எப்படியெல்லாம் அற்புதமாகப் படம்பிடிக்கிறது என்பதையும் கவனித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட ஷாட்கள் வைக்க It’s a Mad, Mad, Mad, Mad World படம் டாரண்டினோவுக்கு மிகவும் உதவியது. அப்படத்தைப் பல்வேறு தடவைகள் பார்த்தபின்னர்தான் படப்பிடிப்புக்கான திட்டங்கள் டாரண்டினோ வகுத்தார்.
இந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் பலராலும் தவறவிடப்பட்ட கதாபாத்திரம் ஜெனிஃபர் ஜேஸன் லேய் நடித்தது. டெய்ஸி டோமெர்கூ என்ற கதாபாத்திரம். படம் முடியும் தருணம் வரை ஒரு சங்கிலியால் ஜான் ரூத் என்ற மனிதனோடு பிணைக்கப்பட்டிருக்கும் பெண் இவள். இவளது சகோதரன் பெயர் ஜோடி. இந்த டெய்ஸியின் பெயரில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அவளது பெயரை அறிமுகப்படுத்தும்போது திரைக்கதையிலும் சரி, படத்திலும் சரி – டோமெர்கூ என்றே டாரண்டினோ சொல்லியிருப்பார். ஆனால் படத்தில் ஜோடியின் கதாபாத்திரம் பற்றி டெய்ஸி சொல்கையில், இவர்கள் எல்லாமே ஜோடி – டோமிங்ரே gang என்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வாள். அப்படியென்றால், டெய்ஸி டோமர்கூ, ஜோடி டோமிங்ரே என்பவனுக்கு எப்படி சகோதரியாக முடியும்? இரண்டு surnameகளும் வேறு வேறல்லவா? ஆனால் இதற்கு டாரண்டினோவிடம் பதில் உண்டு. அவரது முதல் வெர்ஷன் leaked scriptல், டெய்ஸி தன்னைப்பற்றிச் சொல்லும்போது, நாங்களெல்லாம் ஜோடி டோமிங்ரே gangகைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லும் காட்சியில், Domergue என்று போட்டுவிட்டு, அதை டோமிங்ரே என்றுதான் சொல்லவேண்டும் என்று சொல்லியிருப்பார்.
இதன் பொருள் என்னவென்றால், டெய்ஸி டோமிங்ரே என்ற பெயரை, டெய்ஸி டோமெர்கூ என்றே படம் முழுக்க ஜான் ரூத் சொல்லிவந்திருக்கிறான் என்பதுதான். அதாவது, தவறாகவே சொல்லிவந்திருக்கிறான். டோமிங்ரே என்று அவன் புரிந்துகொண்டிருந்தால் அவனுக்கு இவளது சகோதரன் ஜோடியைப் பற்றியும் தெரிந்திருக்கும். இவனுக்குத் தெரியவில்லை என்றாலும், மேஜர் மார்க்விஸ் வாரன் இந்த சரியான பெயரைக் கேட்டதும் ஜோடியைப் பற்றி ஜான் ரூத்துக்குச் சொல்லியிருப்பார். ஏனெனில், ஆரம்பத்தில் டெய்ஸி டோமெர்கூ என்ற பெயரை ஜான் ரூத் சொன்னதும் மேஜர் வாரன் அப்பெயர் தனக்குப் பரிச்சயமில்லாத பெயர் என்று சொல்வார். அவர் மண்டையில் ரெஜிஸ்டர் ஆகியிருக்கும் பெயர்- டோமிங்ரே என்பதுதான். அதைத்தான் கடைசியில் டோமிங்ரே என்று டெய்ஸி சொன்னதும் புரிந்துகொண்டு ஆமோதிப்பார்.
எனவே டெய்ஸிதான் அவளது பெயரை வேண்டுமென்றே தவறாகப் பரப்பிக்கொண்டு திரிந்திருக்கிறாள் என்பது புலனாகிறது. அப்போதுதான் அவளது தவறான பெயரில் handbillகள் அடித்திருப்பார்கள். அவை ஜான் ரூத் கையில் கிடைத்திருக்கும். அதில் இருக்கும் பத்தாயிரம் டாலர்கள் பரிசால் கவரப்பட்டு இவளைப் பிடித்திருப்பான். அதுதான் சாத்தியம்.
ஒரே ஒரு surnameஐ வைத்துக்கொண்டு டாரண்டினோ விளையாடிய ஆட்டம் இது. திரைக்கதையில் இந்தத் தப்பான உச்சரிப்பு பெரும்பங்கு வகிக்கிறது. இந்தப் பெயர் மாற்றி உச்சரிப்பதைப் பலரும் கவனித்திருக்கமாட்டார்கள். ஆனால் நான் எப்படி இதை கவனித்தேன் என்றால், திரைக்கதையை நான் படித்திருந்ததே. அதில் பெயர் உச்சரிக்கும் விதம் டாரண்டினோவால் எழுதப்பட்டிருக்கும். அது அவர் வேண்டுமென்றே அங்கே விட்டிருக்கும் க்ளூ. இதனால்தான் டாரண்டினோ படங்களை ஏனோதானோ என்று பார்க்கக்கூடாது என்பது என் கருத்து. ஏனோதானோ என்று பார்க்க இது என்ன ரெவனண்ட்டா? பிற படங்களைப்போன்ற spoon-feeding டாரண்டினோ படங்களில் இருக்காது. அதற்கு இது ஒரு சிறு உதாரணம்.
அடுத்ததாக இப்படத்தின் சிறந்த கதாபாத்திரம், மேஜர் மார்க்விஸ் வாரன். இவருக்கு ஒரு மிகப்பெரிய முன்கதை உண்டு. இவருக்கும், கணப்பின் அருகே அமர்ந்திருக்கும் வயதான ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்துக்கும் ஒரு பழைய கணக்கும் உண்டு. மார்க்விஸ் வாரன் ஒரு அமெரிக்க யூனியன் படைவீரர். ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்தோ ஒரு கான்ஃபெடரேட். அமெரிக்க யூனியனுக்கும், அதை மறுத்துத் தனிநாடு டிக்ளேர் செய்த கான்ஃபெடரேட்களுக்கும் என்றைக்குமே ஆகாது. இவர்களைப் பற்றிய பின்னணியை இங்கே எழுதினால் அது அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தைப் பற்றிய பதிவாக மாறிவிடும். எனவே இணையத்தைப் பார்த்து இவர்களின் பின்னணியை அறிந்துகொள்க.
இந்த அமெரிக்க யூனியன் படைவீரர்களும் கான்ஃபெடரேட்களும் மோதிய ஒரு முக்கியமான போர்க்களம் – Battle of Baton Rouge. 1862வில் நடந்தது. இதில் வெற்றியடைந்தது அமெரிக்க யூனியன். கான்ஃபெடரேட்களால் அவர்களின் வசம் இருந்த லூயிஸியானாவை மறுபடி கைப்பற்ற இயலாமல் போனது. இதுதான் மேஜர் மார்க்விஸ் வாரனுக்கும் ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்துக்கும் இடையில் இருக்கும் விரோதம். கூடவே, கான்ஃபெடரேட்கள் என்றைக்கும் கறுப்பின மக்களை ஒப்புக்கொண்டதே இல்லை. இதுவும் இன்னொரு காரணம். கூடவே, Wellenback prison camp என்ற போர்ச்சிறையில் மார்க்விஸ் வாரன் தப்பிவந்த கதையும் ஹேட்ஃபுல் எய்ட்டில் சொல்லப்படுகிறது. இக்கதையும் இப்படத்துக்கு மிகவும் முக்கியம். ஏனெனில், மேஜர் மார்க்விஸ் வாரன் ஒரு ஹீரோ அல்ல. அவர் பல தவறுகளும் புரிந்தவர்; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள யாரையும் கொல்லத் தயங்காதவர் என்பது இந்தச் சம்பவத்தால் புரியவைக்கப்படுகிறது. அவர் அதைப்பற்றிப் பேசப்பேசப் பின்னணியில் ஒலிக்கும் அலறல் சத்தத்தைக் கவனித்தீர்களா?
இந்த மேஜர் மார்க்விஸ் வாரன் தான் ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்தின் மகனையும் கொன்றவர். இவர் போர்முகாமில் இருந்து தப்பி வந்ததால் இவர் பெயரில் ஒரு bounty இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக எப்படி அதிகரித்துக்கொண்டே போய் எப்படிக் கம்மியானது என்பதையும் மேஜர் மார்க்விஸே சொல்வார். அந்த பௌண்ட்டிக்கு ஆசைப்பட்டு இவரை வேடையாட வந்து, இவரிடமே மாட்டிக்கொண்ட ஜெனரல் சான்ஃபோர்ட் ஸ்மித்தின் மகனை, அந்தப் பனிப்பிரதேசத்தில் ஆடைகள் இல்லாமல் இரண்டு மணி நேரம் நடக்கவிட்டு, அதன்பின் அவன் நடக்க இயலாமல் விழுந்தபின்னர் ஒரு போர்வை கேட்டுக் கெஞ்சிய நேரத்தில், ‘போர்வை வேண்டுமானால் என்னை blowjob செய்’ என்று சொல்லி, அந்தக் குளிரில் இவருக்கு ஒரு ஆண் ப்ளோஜாப் செய்வதை ரசிக்கும் குணம் உடையவர் மேஜர் மார்க்விஸ் வாரன்.
கூடவே, இதில் மேஜர் மார்க்விஸ் வாரன் கையோடு கொண்டு செல்லும் ஒரு கடிதமும் படம் முழுக்க வருகிறது. ஆப்ரஹாம் லிங்கன், தனது பேனா நண்பரான மார்க்விஸ் வாரனுக்கு எழுதிய பல கடிதங்களில் ஒன்று என்று ஒரு பின்னணியோடு வரும் இந்தக் கடிதத்தின் ஒரு சில வரிகளே படம் முழுக்கப் பேசப்படுகின்றன. பல்ப் ஃபிக்‌ஷனில் வரும் மர்மமான பெட்டியைப் போன்றது இந்தக் கடிதம். ஆனால் இறுதியில் முழுக்கடிதமும் படிக்கப்பட்டுவிடுகின்றது. இந்தக் கடிதம் இவரே தயாரித்த ஃபோர்ஜரி. ஏன் தயாரித்தார் என்பதையும் இவரே சொல்கிறார். வெள்ளையர்கள் முழுமுட்டாள்கள் ஆனால்தான் கறுப்பின மக்களூக்குப் பாதுகாப்பு என்னும் அவரது வரிகள் இன்றும் உண்மைதானே? இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் கறுப்பின மக்களைக் கண்டாலே கொலைசெய்யும் வெறியில் திரிந்த வெள்ளையர்கள் மத்தியில் மேஜர் மார்க்விஸ் வாரன் வாழ்வதற்காகத் தயாரித்துக்கொண்ட ஒரு கேடயம்தான் இந்தக் கடிதம்.
இப்படி மேஜர் மார்க்விஸ் வாரன் பலவித குணங்கள் படைத்த ஒரு மனிதராக வருகிறார். கூடவே, கூர்ந்த மதிநுட்பம் உடையவராகவும் இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு னபரையும் ஆழ்ந்து எடைபோட்டுக்கொண்டிருக்கும் நபர் இவர். அதனால்தான் காஃபியில் விஷத்தைக் கலந்த ஆளைக் கண்டுபிடிக்க இவரால் முடிகிறது. கூடவே அவனுக்கு உதவியவனையும் சுட்டுக்கொல்ல முடிகிறது.
படத்தில் இன்னும் பல கதாபாத்திரங்கள் வந்தாலும், இவர்களே மிகவும் சுவாரஸ்யமானவர்கள். கூடவே க்ரிஸ் மேன்னிக்ஸையும் சேர்த்துக்கொள்ளலாம். Mannix Marauders என்ற பெயரில், கான்ஃபெடரேட்களுக்கு உதவிய சிறு குழு இவனது தந்தையினுடையது. இந்தக் கும்பல் செய்த அட்டூழியங்களை மேஜர் மார்க்விஸ் வாரன் சொல்லுவார். கான்ஃபெடரேட்களைப் போலவே, இவனுக்கும் இவன் தந்தைக்கும் கறுப்பின மக்களைப் பிடிக்காது. ஆனால் அப்படிப்பட்ட இவன்தான் இறுதியில் உயிரோடிருக்கும் இருவரில் ஒருவன் என்பதுதானே irony? அதுவும் இவனுக்குப் பிடிக்காத மேஜர் மார்க்விஸ் வாரனுடன்? வாரனின் லிங்கன் கடிதம் போலி என்று நிரூபிப்பவனும் இவன்தான்.
படத்தில் வரும் ஜோடி டோமிங்ரே கும்பலின் அங்கத்தினர்கள் ஏன் ஃப்ரெஞ்ச் பேசுகிறார்கள்? இவர்கள் அனைவரும் எப்படி ஒன்று சேர்ந்தனர்? இவைகளெல்லாம் சுவாரஸ்யமான கேள்விகள். இவைகளுக்கும் படத்திலேயே க்ளூக்கள் உண்டு. இதை, இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு ஒரு ஹோம்வொர்க்காகத் தருகிறேன்.
இதுதவிர, படத்தில் வரும் ஸ்வீட் டேவ், மின்னி, சிக்ஸ் ஹார்ஸ் ஜூடி, இரண்டாம் பாதியில் கதையை ஆடியன்ஸுக்குச் சொல்லும் குரல் (இது யார் என்று தெரிகிறதா?), இங்லீஷ் பீட் ஹிக்காக்ஸ் என்ற உண்மையான பெயரில் வரும் ஆஸ்வால்டோ மாப்ரே (இவன் தான் அந்த ஊரின் hangman என்று அஃபிஷியலான கடிதம் ஒன்றை வைத்திருக்கிறான். அது பொய் என்பது பின்னால் நமக்குத் தெரிகிறது. அப்படியென்றால் உண்மையான ஹேங்மேனிடம் இருந்த கடிதம் இவனுக்கு எப்படிக் கிடைத்தது? யோசித்துப் பாருங்கள். இதுவும் ஒரு சுவாரஸ்யமான முன்கதையே என்பது தெரியும்), க்ரௌச் டக்ளஸ் என்ற உண்மையான பெயரில் வரும் ஜோ கேஜ், மார்கோ த மெக்ஸிகன் என்ற பெயரில் வரும் பாப் ஆகிய சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இப்படத்தில் உண்டு.
ஜோடி டோமிங்ரே, மார்கோ த மெக்ஸிகன், இங்லீஷ் பீட் ஹிக்காக்ஸ், க்ரௌச் டக்ளஸ் ஆகிய நால்வரும் மின்னீஸ் ஹேபர்டஷரிக்குள் வரும்போது ஒரு கோச்சு வண்டியில் வருகிறார்கள். அவ்வண்டி அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? அதில் இவர்களுக்கு முன்னால் பயணித்தவர்கள் யார்? இதெல்லாம் என்னென்ன என்று கண்டுபிடிக்கவும் படத்திலேயே க்ளூக்கள் உண்டு. இவர்களின் போலிப் பெயர்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.


’As far I am concerned, [he] is my favorite composer – and when I say ‘favorite composer,’ I don’t mean movie composer, that ghetto, I’m talking about Mozart … Beethoven … Schubert.. I have to say that I directed the movie … [so] I say thank you, and grazie, grazie’ – Quentin Tarantino, while collecting the golden globe for the best soundtrack – 2016
ஹேட்ஃபுல் எய்ட்டின் கதாபாத்திரங்களைக் கவனித்தோம். அடுத்து நாம் கவனிக்கப்போவது இதன் இசை. என்னியோ மாரிகோனி பற்றி அனைவருக்குமே தெரியும். எனவே பெரிதாக அவரைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் தமிழ் ஹிந்துவில் எழுதிக்கொண்டிருக்கும் சினிமா ரசனை தொடரின் 30வது அத்தியாயத்தில் மாரிகோனி பற்றிக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். அதை இங்கே படித்துக்கொள்ளலாம்.
டாரண்டினோ படங்களில் என்னியோ மாரிகோனியின் இசை இடம்பெறுவது இது முதன்முறை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். டாரண்டினோ படங்களில் என்னியோ மாரிகோனியின் இசை இடம்பெற்ற முதல் படம் – Kill BIll Vol 1. இதில் என்னியோ மாரிகோனி இசையமைத்த ‘Death Rides a Horse’ படத்தில் இடம்பெற்ற ‘From Man to Man’ இசை இடம்பெற்றது. பின்னர் Kill BIll Vol 2வில் மாரிகோனியின் ஆறு இசைக்கோர்ப்புகள் இடம்பெற்றிருந்தன. A Silhouette of DoomIl Tramonto (The Good, Bad and the Ugly), A Fistful of Dollars ThemeIl mercenario (Reprise), L’arena, The Demise of Barbara and the Return of Joe ஆகிய ஆறுமே அவை. இவை ஆறுமே பிரமாதமான இசைக்கோர்ப்புகள்.

கில் பில் படங்களுக்குப் பின்னர் வெளியான Death Proof படத்தில் ஒரே ஒரு என்னியோ மாரிகோனியின் இசைக்கோர்ப்பு இருந்தது. Paranoia Prima என்ற இசைக்கோர்ப்பு அது.
இதன்பின் வெளியான Inglourious Basterds படத்தில் நான்கு என்னியோ மாரிகோனி இசைக்கோர்ப்புகள் இடம்பெற்றன. The Verdict (Dopa La Condanna)The Surrender (La Resa)Un Amico & Rabbia E Tarantella ஆகியவை.
பின்னர் வெளியான Django Unchained படத்தில் மூன்று என்னியோ மாரிகோனி இசைக்கோர்ப்புகள் வந்தன. The Braying MuleSister Sara’s Theme & Un Monumento ஆகியவை. இவற்றைத்தவிர, Anqora Qui என்ற பாடலைக் கம்போஸ் செய்து டாரண்டினோவுக்கு மாரிகோனி அனுப்பினார். ஒவ்வொரு டாரண்டினோ படத்தின்போதும் அவருக்குப் பலரும் இப்படிப் பாடல்களையும் இசைக்குறிப்புகளையும் அனுப்புவது வழக்கம். அதில் இந்தப் பாடல் டாரண்டினோவுக்குப் பிடித்துவிடவே, இப்பாடலை ஜாங்கோ அன்செய்ண்ட் படத்தில் பயன்படுத்தினார்.
என்னுடைய ஜாங்கோ அன்செய்ண்ட் விமர்சனத்தில் இப்படத்தின் பாடல்களைப் பற்றிய விபரமான தகவல்கள் உள்ளன. மேலே படத்தின் பெயரைக் க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.
இத்தனை முறை என்னியோ மாரிகோனியின் இசைக்கோர்ப்புகளைப் பயன்படுத்திவிட்டே ஹேட்ஃபுல் எய்ட்டில் என்னியோ மாரிகோனியையே இசையமைப்பாளராக அமர்த்தினார் டாரண்டினோ. இதற்கு முன்னும் ராபர்ட் ரோட்ரிகஸ், RZA ஆகியோர் கில் பில் போன்ற இவரது படங்களில் பகுதி நேர இசையமைப்பாளர்களாக இருந்திருக்கின்றனர்.  ஆனாலும் என்னியோதான் முதல் முழுநேர டாரண்டினோ இசையமைப்பாளர்.
ஏன் இந்தப் படத்துக்கு மட்டும் என்னியோ மாரிகோனி முழுநேர இசையமைப்பாளராகத் தேவைப்பட்டார்? ஏன் இன்னும் பழைய மாரிகோனியின் இசைக்கோர்ப்புகளையே டாரண்டினோ பயன்படுத்தவில்லை?
’இந்தப் படம் சற்றே ஸ்பெஷல். முந்தைய படங்கள் போல் இல்லாமல், இதில் பின்னணி இசை இருக்கவேண்டும் என்று விரும்பினேன்’ என்று டாரண்டினோ சொல்லியிருக்கிறார். அதேசமயத்தில், ’தற்காலத்தின் எந்த இசையமைப்பாளரையும் நம்பி என் படங்களை ஒப்படைக்க என்னால் முடியாது’ என்பதும் அவரது கூற்றுதான். டாரண்டினோவைப் பொறுத்தவரையில் அவரது ஒவ்வொரு படமும் அவருக்கு மிகவும் முக்கியம். எனவே, படத்தை எடுத்துமுடித்தபின், ஒரு இசையமைப்பாளரை நம்பி முழுப்படத்தையும் கொடுத்து, அதன்பின் இசையை வாங்குவது டாரண்டினோவால் முடியாத காரியம் என்றே சொல்லியிருக்கிறார். இதனால், அவருக்குப் பிடித்த இசைக்கோர்ப்புகளை வைத்துக்கொண்டு அவற்றை மட்டுமே படங்களின் பின்னணி இசைக்காக உபயோகப்படுத்துவது வழக்கம். அவ்வப்போது RZA போன்றவர்கள் ஒருசில பாடல்களைக் கம்போஸ் செய்து கொடுப்பார்கள்.
இதனால்,  ஹேட்ஃபுல் எய்ட்டுக்கு முழுநீளப் பின்னணி இசை வேண்டும் என்று முடிவு செய்ததும், அவருக்கு மிகப்பிடித்த இசையமைப்பாளரான என்னியோ மாரிகோனியின் நினைவுதான் டாரண்டினோவுக்கு எழுந்தது. லூயிஸ் பகலோவ் ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் அவரை அணுகியிருப்பார் என்பது என் எண்ணம் (17th March 2016 – Edit- பகலோவ் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். கீழே கமெண்ட்களில் வ. விஷ்ணுவின் கருத்து படிக்கவும். மிக்க நன்றி விஷ்ணு). என்னியோ மாரிகோனி டாரண்டினோவை இதற்கு முன்னர் திட்டியிருக்கிறார். ’கண்டபடி என் இசையை வாங்கி, தொடர்பே இல்லாமல் பின்னணியாக வைக்கிறான்’ என்று. இருந்தாலும் அந்தப் பிரச்னை தற்போது சரியாகிவிட்டது. பல்ப் ஃபிக்‌ஷன் காலத்தில் இப்படி யாராவது திட்டியிருந்தால் அவர் முகத்திலேயே முழித்திருக்கமாட்டேன் என்று டாரண்டினோ இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆனால் தற்போது வயது அவருக்கு ஒரு புரிதலைக் கொடுத்திருக்கிறது என்பதால், இதையும், ஹேட்ஃபுல் எய்ட் ஸ்க்ரிப்டை லீக் செய்த ப்ரூஸ் டெர்னையும் மன்னித்து, அவர்களுடன் வேலை செய்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
இதனால், ரோமில் இருந்த என்னியோ மாரிகோனியைத் தொடர்பு கொண்டு டாரண்டினோ பேச, மாரிகோனியும் சம்மதம் தெரிவித்து, டாரண்டினோவுடன் நீண்ட விவாதங்கள் செய்தார் (மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு. இன்றுவரை என்னியோ மாரிகோனிக்கு இங்லீஷ் தெரியாது. அவருக்கு அவரது தாய்மொழியான இடாலியனே போதும் என்று சொல்லியிருக்கிறார்). கதையை நன்கு புரிந்துகொண்டபின்னர், திரைக்கதையைப் படித்துமுடித்துவிட்டு, இசையைக் கம்போஸ் செய்துகொடுத்துவிட்டார் மாரிகோனி. படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் மாரிகோனிக்குக் கிடைத்த அவகாசம் குறைவு என்பதால், 50 நிமிடங்களுக்கே அவரால் கம்போஸ் செய்ய முடிந்தது. பாக்கிப் படத்துக்கு, The Thing படத்துக்காகக் கம்போஸ் செய்து, ஜான் கார்ப்பெண்டர் உபயோகிக்காமல் வைத்திருந்த இசைக்கோர்ப்புகளை டாரண்டினோ பயன்படுத்திக்கொண்டார்.
இருப்பினும், டாரண்டினோ எதிர்பார்த்த இசை வேறு. செர்ஜியோ லியோனி படங்களுக்கு என்னியோ மாரிகோனி இசையமைத்ததுபோல், அவ்வப்போது டாரண்டினோ எடுத்துப் பயன்படுத்தும் மாரிகோனியின் இசைக்கோர்ப்புகளைப்போல், விசில்கள், கிடார்கள் போன்றவற்றை வைத்துக்கொண்டு இசையமைப்பார் என்று டாரண்டினோ நினைத்தார். ஆனால் மாரிகோனி இசையமைத்த விதமே வேறு. இதில் விசில்கள் இல்லை. மணிகள் இல்லை. மாறாக, /மிகவும் gloomyயான ஒரு இசைக்கோர்ப்பாக இது இருந்தது. முதலில் இதைக்கேட்டுவிட்டு டாரண்டினோ அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் சமாளித்துக்கொண்டுவிட்டார். இதை என்னியோ மாரிகோனியே சொல்லியிருக்கிறார். கீழிருக்கும் வீடியோவில் அதைப் பார்க்கலாம். இதில் இங்லீஷ் சப்டைடில்களும் உள்ளன.
டாரண்டினோ என்னியோ மாரிகோனியை அணுகியபோது, பனியைப்பற்றிப் பொதுவாகப் பத்து நிமிடங்களுக்கு ஒரு இசைக்குறிப்பு எழுதச்சொல்லியே ஆரம்பத்தில் கேட்டிருக்கிறார். ஆனால் பத்து நிமிடங்கள் போதாது என்று கருதியதால், முப்பது நிமிட ஸ்கோராக எழுதியிருக்கிறார் மாரிகோனி. இப்படித்தான் ஹேட்ஃபுல் எய்ட் பின்னணி இசை உருவானது.
படத்தின் துவக்கத்தில், பனிபடர்ந்த ஜீஸஸின் சிலை தெரிகிறது. கேமரா மெதுவாகப் பின்னால் போகிறது. L’Ultima Diligenza di Red Rock (Versione Integrale) என்ற இசை மெதுவாகத் துவங்குகிறது. கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஓடும் இசை இது. வயலின்கள், bassoonகள் ஆகியவற்றின் உதவியால் சஸ்பென்ஸ் நிறைந்த இசை ஒலிக்கத் துவங்குகிறது. இதே இசைதான் The Four Passengers என்ற எபிஸொடிலும் ஒலிக்கிறது. பனியில் வந்துகொண்டிருக்கும் கோச்சுவண்டியின் முக்கியத்துவம், அந்த வண்டியில் வருபவர்களைப்பற்றி ஆடியன்ஸுக்கு உணர்த்துதல், பின்னால் வரப்போகும் இன்னொரு கோச்சுவண்டியில் வருபவர்களுக்கான முன்னணி இசை ஆகிய எல்லாப் பக்கங்களிலும் ஆடியன்ஸின் மனதில் எதுவோ ஒரு uneasinessஸை உணர்த்தும் இசை இது.
இந்த இசையை மாரிகோனி ஆர்க்கெஸ்ட்ரேட் செய்யும் வீடியோவைப் பாருங்கள். இதில் டாரண்டினோ இந்த இசையை ரசிப்பதையும் காணலாம்.
படத்தின் முக்கியமான கட்டம் ஒன்றில் ஒரு பாடல் வருகிறது. டெய்ஸி டோமிங்ரே (டோமர்கூ) பாடும் பாடல் இது. இந்தப் பாடலின் முடிவில், தன்னைப் பிணைத்து வைத்திருக்கும் ஜான் ரூத் இறக்கப்போகிறான் என்பதைக் கடைசி சரணமாகப் பாடுவாள். காரணம், விஷம் கலந்த காஃபியை அவன் குடிப்பதை டெய்ஸி பார்ப்பதே. இந்தப் பாடலை ஜெனிஃபர் ஜேஸன் லெய்யே பாடியிருக்கிறார் என்பது தெரிந்திருக்கும். Jim Jones at Botany Bay என்ற இந்தப் பாடல், பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. குற்றம் செய்த ஒருவன், தன்னைப்பற்றிப் பாடும் பாடல் இது. இந்தப் பாடலைப் பலரும் பாடியுள்ளனர். Bob Dylan பாடியுள்ள வெர்ஷன் மிகவும் பிரபலம்.
இந்தப் பாடல் படத்தில் எப்படிப் படமாக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். ஒரே சமயத்தில் பின்னணியில் எத்தனை வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது தெரியும். நீளமான ஷாட்களில் இந்தப் பாடலின் மெதுவான ட்யூனுக்கேற்ப இதை டாரண்டினோ படமாக்கியிருப்பார்.
இந்த Soundtrackல் மொத்தம் 28 இசைக்கோர்ப்புகள் உள்ளன. அவற்றில் வழக்கப்படி சில வசனங்களும் உண்டு. எல்லாவற்றையும் கேட்டுப்பாருங்கள். அவசியம் உங்களை மெய்மறக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2015ன் மிகச்சிறந்த இசைக்கோர்ப்புகளில் ஒன்றான The Hateful Eightடின் Soundtrack அவசியம் திரைரசிகர்கள் அனைவரிடமும் இருக்கவேண்டும். இப்போதைய வழக்கப்படி அதிரடியான இசையாக இல்லாமல், மெதுவாகத் துவங்கி, நம்மைப் பதைபதைப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு இசை இது. இதற்குக் கொடுக்கப்பட்ட ஆஸ்கர் சரியானதே என்றாலும், எப்போதோ என்னியோ மாரிகோனி போட்ட அற்புதமான இசைக்காகவே இப்போது ஆஸ்கர் கொடுக்கப்பட்டுள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது.
இத்தோடு போதும் என்று நினைக்கிறேன். இனியும் வேறு எதாவது விட்டுப்போய்விட்டதாகத் தோன்றினால், இன்னொரு எபிஸோட் போட்டுவிடுகிறேன். இதுவரை பொறூமையாக இந்தத் தொடரைப் படித்ததற்கு நன்றி..

CONVERSATION

Back
to top