‘I just don’t want to be an old-man filmmaker. I want to stop at a certain point. Directors don’t get better as they get older. Usually the worst films in their filmography are those last four at the end. I am all about my filmography, and one bad film fucks up three good ones … When directors get out-of-date, it’s not pretty’ – Quentin Tarantino.
எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் துவக்கத்திலும் தமிழ் சினிமா எந்த நிலையில் இருந்தது என்று கவனித்தால், பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா, பாலு மஹேந்திரா, எஸ்.பி.முத்துராமன், கே.விஜயன், ஜெகனாதன் போன்றவர்கள் ஒரு புறம், பழம்பெரும் இயக்குநர்களான யோகானந்த், கிருஷ்ணன்–பஞ்சு, ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் இன்னொரு புறம் என்று விளங்கிக்கொண்டிருந்தது. பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள் தலையெடுத்த காலம் இதுவே. இதற்கு முன்னர் எத்தனையோ இயக்குநர்கள் பிரபலமாக விளங்கியபோதும் ஸ்ரீதர் எடுத்த படங்கள் எப்படி அறுபதுகளில் அத்தனை படங்களிலிருந்தும் வித்தியாசமாக விளங்கி அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தனவோ, எப்படி பாரதிராஜாவின் ஆரம்பகாலப் படங்கள் தமிழ்த் திரைப்படங்களில் தனித்துக் காணப்பட்டனவோ, அப்படி எண்பதுகளின் துவக்கத்திலும் தனக்கே உரிய பாணியில் அறிமுகமாகியவர் மணி ரத்னம். அவரது பாணியைப் பல இயக்குநர்கள் பின்பற்றியாகிவிட்டது. அவருக்குப் பின்னரும் ஏராளமான இயக்குநர்கள் வந்தாகிவிட்டது. இருப்பினும் இப்போதும் ‘ஓ காதல் கண்மணி’ வரையிலும் படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஸ்ரீதர் ஆரம்பித்து வைத்த அழகான, இனிமையான காதல் காட்சிகள் போல, மணி ரத்னம் படங்களில் வரும் காதல் காட்சிகள் மிகவும் புகழ்பெற்றவை. எனவே, அவரது காதல் படங்களில்/அல்லது அவரது படங்களில் காதல் கையாளப்படும் விதம் பற்றிக் கொஞ்சம் விபரமாகப் பார்க்கலாம்.
எம்.பி.ஏ படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்துகொண்டிருந்த மணி ரத்னம், திரைப்படத்துறைக்கு வந்தது ஒரு விபத்து என்பதை அவரே சொல்லியிருக்கிறார். ஒரு கன்னடப் படத்தை இயக்குவதற்கு வாய்ப்புக் கிடைத்த அவரது நண்பர் ரவிஷங்கர் என்பவருக்கு உதவப்போய், அவருடன் விவாதித்து, வேலைக்கு நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டுவந்த மணி ரத்னம், அந்தப் படம் எடுக்கப்படாமலேயே போய்விட்டதால் இவராக ஒரு திரைக்கதை எழுதி, பல தடங்களுக்குப் பின் கன்னடத்தில் இவரது முதல் படமாக அக்கதை வெளிவந்தது (பல்லவி அனுபல்லவி – 1983). இந்தப் படத்துக்குப் பின்னர் மலையாளத்தில் உணரு, பின்னர் தமிழில் இவரது முதல் படமாகப் பகல் நிலவு, அதன்பின்னர் இதயகோயில் என்று நான்கு படங்கள் எடுத்தார். அவரைப் பொறுத்தவரையில் இவற்றில் பல்லவி அனுபல்லவியே அதுவரை இவருக்குப் பிடித்த கதை. பிற படங்களில் பல குறுக்கீடுகள் இருந்ததே காரணம். இதன்பின்னர்தான் மௌன ராகம் வெளிவந்து, மணி ரத்னத்துக்குத் தனியான இடத்தை அளித்தது. அதன்பின்னர் வந்த நாயகன், மணி ரத்னத்தை இந்தியா முழுதும் பிரபலமாக்கியது. பின்னர் அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே), அஞ்சலி, தளபதி என்று வரிசையாகத் தரமான வணிகப்படங்களை அளித்தார். அதன்பின்னர் ரோஜா வெளியாகி, மணி ரத்னத்தின் சற்றே மாறுபட்ட ‘இந்திய’ முகத்தை உலகுக்குக் காட்டியது. அந்தப் பாணியிலேயே பின்னர் மம்பாய் மற்றும் தில்ஸேவையும் எடுத்தார். இடையில் திருடா திருடா, இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, குரு, ராவணன், கடல் என்று எடுத்துவிட்டு இப்போது ஓ காதல் கண்மணியை எடுத்து வெளியிட்டிருக்கிறார் மணி ரத்னம்.
ஆரம்பத்தில் இருந்தே மணி ரத்னத்தின் கவனம் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பழக்க வழக்கங்களிலேயே உலவிக்கொண்டிருக்கிறது என்பதை அவரது பெரும்பாலான படங்கள் உணர்த்தும். மௌன ராகத்தில் துவங்கி இப்போது வரை இதுதான் அவரது பாணி. தளபதி ரஜினி, திருடா திருடா, இருவர், ஆய்த எழுத்தில் மாதவன் போன்ற ஓரிரு விதிவிலக்குகள் இருந்தாலும், அவரது பல படங்களிலும், மௌன ராகம் கார்த்திக் போன்ற அதே வகையான கதாநாயகர்கள்தான். அக்காலகட்டத்தில் பல படங்களில் உயர் நடுத்தர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கை மிகவும் செயற்கையாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த தருணங்களில் (அபத்தமான கல்லூரி, அதன் தமிழ் ஆசிரியர், எந்தவிதமான அறிவும் இல்லாத ப்ரின்ஸிபால், எப்போதும் காட்டுக்கூச்சல் போட்டு ஈவ்டீஸிங் செய்யும் மாணவர்கள் இத்யாதி), மணி ரத்னத்தின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட ஆளுமை கொண்டிருந்தனர். மௌன ராகத்தின் மனோஹர், அக்னி நட்சத்திரத்தின் கௌதம் & அஷோக், கீதாஞ்சலியின் ப்ரகாஷ், அஞ்சலியின் ஷேகர், தளபதியின் அர்ஜுன், ரோஜாவின் ரிஷிகுமார், பாம்பேயின் ஷேகர் நாராயணன், தில்ஸேயின் அமர் வர்மா, அலைபாயுதேவின் கார்த்திக், கன்னத்தில் முத்தமிட்டாலின் திருச்செல்வன், ஆய்த எழுத்தின் மைக்கேல் வஸந்த் & அர்ஜுன், இப்போது ஓ காதல் கண்மணியின் ஆதித்யா என்று அவரது படங்களின் உயர் நடுத்தர வர்க்கக் கதாபாத்திரங்களைக் கவனித்தால், சென்னையில் மேல் நடுத்தர வர்க்கத்தின் அக்காலத்திய உடை நாகரிகம், அவர்களின் பேச்சுமுறை, பெண்களுடன் அவர்கள் பழகும் விதம் முதலிய அந்தந்தக் கால கட்டங்களில் நிலவிய பல பழக்கங்களைத் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் அவரது பாத்திரப் படைப்பு சமகால உயர் நடுத்தர வர்க்க சமுதாயத்தைக் கவனித்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான கதாநாயகிகளுக்கும் தனிப்பட்ட ஆளுமைகளைத் திரையில் தெளிவாகக் கொண்டுவந்தவர் மணி ரத்னம். மௌன ராகத்தின் நாயகி திவ்யா, அவள் எடுக்கும் முடிவுகளில் மிகத் தெளிவாக இருப்பாள். அக்னி நட்சத்திரத்தின் அஞ்சலி, சிகரெட் பிடிக்க முயல்வாள். அக்னி நட்சத்திரத்தின் இன்னொரு நாயகி அனிதா, செல்வந்தர் ஒருவரின் மகள். அவளால் சுதந்திரமாக உலவ முடிகிறது. கீதாஞ்சலியின் நாயகி கீதாஞ்சலி, ஓடிப்போகலாமா என்று படம் முழுதும் நாயகன் ப்ரகாஷிடம் சொல்லிக் கிண்டல் செய்துகொண்டே இருப்பாள். கன்னத்தில் முத்தமிட்டாலின் நாயகி இந்திரா, நாயகன் திருச்செல்வனை சைக்கிளில் துரத்திக் காதலிக்கும் காட்சிகளும் இப்படிப்பட்டவையே. மணி ரத்னத்தின் நாயகிகள் பெரும்பாலானவர்கள் எந்தவிதத் துணையுமில்லாமல் தங்களாலேயே தங்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கமுடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள். அவர்களுக்கென்று ஒரு கனவோ லட்சியமோ இருக்கும்.
எண்பதுகளில், பெண்களிடம் பழக வாய்ப்புகள் இல்லாத ஆண்களே அதிகம். இருந்தபோதிலும், நகர வாழ்க்கையில் பெண்களிடம் தயக்கமே இல்லாமல் பழகக்கூடிய ஒரு பகுதியினரும் இருந்தனர். இவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை உருவாக்கியதாக மணி ரத்னம் சொல்லியிருக்கிறார். இவர்கள் The Doors, The Beatles போன்ற ரசனை உடையவர்கள். இப்படி சமகால உயர் நடுத்தர வர்க்கத்தினரிடம் உலவிய பழக்கவழக்கங்கள் மணி ரத்னத்தின் ஆரம்பகாலப் படங்களில் இயல்பாகவே வெளிப்பட்டிருந்தன. மௌன ராகம் படத்தை எடுத்துக்கொண்டால், அதன் கார்த்திக்-ரேவதி காட்சிகள் இன்றுவரை பிரபலம். அப்போது வெளியான எந்தப் படத்திலும் இதில் இருந்ததுபோல அழகான, குறும்பான காட்சிகள் இல்லை. 1986ல் வெளியான பல படங்கள் கிராமத்துக் கதைகளையும், சில படங்கள் குடும்பப் படங்களாகவும் இருப்பதை அறிகிறோம். இன்னும் சில, ரஜினிகாந்த், கமல்ஹாஸன், விஜயகாந்த் மற்றும் அர்ஜுன் நடித்த ஆக்ஷன் படங்கள். இவை எதிலுமே மௌன ராகத்தைப் போன்ற இயல்பான கதையம்சமும் கதாபாத்திரங்களும் காட்சிகளும் இல்லை.
போலவே, அடுத்த வருடமான 1987ல் வெளியான நாயகன், மணி ரத்னத்தின் சிறந்த படங்களில் ஒன்றாகவே இன்றுவரை கருதப்படுகிறது. உலகெங்கும் பாராட்டும் பெற்றிருக்கிறது. அது வேலு நாயக்கர் என்ற மனிதரின் வாழ்க்கையைக் குறிக்கும் படமாக இருந்தாலும், அதிலும் இயல்பான காதல் உண்டு. நாயகன் வேலு ஒரு விபசார விடுதிக்குப் போகும்போது அங்கு பார்க்கும் நீலா என்ற பெண்ணிடம் காதல்வயப்படுகிறான். அவளையே திருமணம் செய்துகொள்கிறான். அச்சமயத்தில் வரும் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ பாடலில் அவர்கள் இருவருக்குள்ளும் அழகான காதல் ததும்பும் காட்சிகள் உண்டு. படத்தின் லைட்டிங்கோடும், கமல்ஹாஸன் மற்றும் சரண்யாவின் இயல்பான நடிப்போடும் விளங்கும் அந்தப் பாடல் இன்றும் ஒரு க்ளாஸிக் என்பதை மறுக்கமுடியாது.
நாயகனுக்குப் பிறகு வெளியான அக்னி நட்சத்திரம், அப்போதைய இளைஞர்களுக்கிடையே பலத்த பாராட்டுப்பெற்றது. ஆங்கிலத்தில் cult movies என்று ஒரு பதம் உண்டு. ஒரு சமுதாயத்தினரிடையே திரைப்படத்தில் சொல்லப்படும் கருத்துகள் சார்ந்த மாற்றங்களை ஒரு படம் கொண்டுவரும்போது அது ஒரு கல்ட் படமாகிறது. தமிழில் அப்படி ஒரு கல்ட் படமாக அக்னி நட்சத்திரம் விளங்குவதை நம்மால் மறுக்க இயலாது என்றே தோன்றுகிறது. இசை சார்ந்து யோசித்தாலும், அக்னி நட்சத்திரத்தின் இசை, எலெக்ற்றானிக் கருவிகள் சம்மந்தப்பட்டது. அதுவுமே அக்காலகட்டத்தில் பெரிதாகப் பேசப்பட்டதுதான். நாயகனுக்காக காலைவேளைகளில் பாடல் பதிவு நடந்தது. மதியம் அக்னி நட்சத்திரம். காலையில் பழங்கால இசைக்கருவிகள். மதியத்தில் எலெக்ட்ரானிக் கருவிகள். இப்படித்தான் இளையராஜாவுடன் வேலை செய்ததாக மணி ரத்னம் சொல்லியிருக்கிறார். அக்னி நட்சத்திரத்தின் இசை எப்படி இருக்கவேண்டும் என்பதில் மணி ரத்னத்துக்குத் தெளிவான முடிவுகள் இருந்திருக்கின்றன என்று தெரிகிறது.
கீதாஞ்சலி என்பது, கான்ஸரில் இறந்துபோன Geethanjali Ghei என்ற பதினாறு வயதுப் பெண் கவிஞரின் பெயர் என்று அறிகிறோம். அக்னி நட்சத்திரம் திரைக்கதையை முடித்தபின்னர் மணி ரத்னம் எழுதி வைத்த ஒரு கதைச்சுருக்கமே கீதாஞ்சலி. கதாநாயகன் இறப்பதைப் போன்ற எண்ணம் கொண்டிருப்பது ஒரு க்ளிஷே என்றால், கதாநாயகியும் அப்படியே என்பது டபிள் க்ளிஷே. அதைத்தான் இதில் பாஸிடிவாக எழுதியதாக மணி ரத்னம் பேசியிருக்கிறார். இப்படத்தைப் பற்றிப் பேசும்போது மறுபடியும் இளையராஜா வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர், பகல் நிலவின் பாடல் பதிவின்போது இளையராஜா இசையமைத்த மற்றொரு பாடலைக் கேட்டதாகவும், அது தமிழில் எடுக்கப்படும் தேவதாஸ் படம் ஒன்றுக்கான ட்யூன். அதனைத் தனக்குக் கொடுக்கச்சொல்லி மணி ரத்னம் கேட்க, ‘நீ ஒரு தேவதாஸ் படம் எடு. அப்போது கொடுக்கிறேன்’ என்று இளையராஜா சொல்கிறார். அதன்பின் கீதாஞ்சலி சமயத்தில் அந்த நிகழ்ச்சியை மணி ரத்னம் சொல்ல, டக்கென்று பல ஆண்டுகள் முன்னர் தான் போட்ட அந்த ட்யூனை நினைவிலிருந்து எடுத்த இளையராஜா அதை வாசித்துக் காட்டுகிறார். அதுதான் கீதாஞ்சலியின் முதல் பாடலாக அமைந்தது. அந்தப் பாடல் – ஓ பாப்பா லாலி.
இப்படி அவரது எல்லாப் படங்களையும் கவனிக்க ஆரம்பித்தால் கட்டுரை குறைந்தபட்சம் இன்னும் பத்து பக்கங்களுக்கு நீளக்கூடும் என்பதால், சுருக்கமாக – ஆரம்பத்தில் இருந்து மணி ரத்னத்தின் படங்களைப் பார்ப்பவர்கள், அவரது படங்களில் காதல் என்பது அழகாக, குறும்பாக, இயல்பாக சொல்லப்பட்டிருப்பதை உணரமுடியும். இதற்கு ஆரம்ப விதை – மௌனராகம் (அவரது முந்தைய படங்களான பல்லவி அனுபல்லவி, பகல் நிலவு ஆகியவற்றில் ஒருசில காட்சிகள் அப்படி இருந்தாலும்). மௌனராகத்தில் தொடங்கிய இந்த பாணி, இதன்பின் அக்னி நட்சத்திரம், இதயத்தைத் திருடாதே, அஞ்சலி, ரோஜா, பம்பாய், தில்ஸே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, குரு போன்ற படங்களிலும் இடம்பெற்றதை நம்மால் உணர முடியும். அவர் தயாரித்த படங்களான ஆசை, இந்திரா, நேருக்கு நேர், டும் டும் டும், ஃபைவ் ஸ்டார் ஆகிய படங்களிலும் குறும்பான காதல் அவசியம் இருக்கும். அவர் திரைக்கதை எழுதிய சத்ரியன் படமுமே அப்படித்தான். கூடவே, அந்த அழகான தருணங்களுக்கான இசையும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் மணி ரத்னத்துக்கு ஒரு தெளிவு உண்டு. இளையராஜா, ரஹ்மான் என்று இரண்டுவிதமான இசையமைப்பாளர்களிடமிருந்தும் அவருக்குத் தேவையான அருமையான இசையை அவரால் வாங்க முடிந்திருக்கிறது.
சமூகப் பிரச்னைகளைப் பேசும் படங்களாக அவர் உருவாக்கிய படங்களிலும் முதல் பாதியில் இந்த இனிமையான காதல் இருந்தே தீரும். அதைப் பல படங்களில் அவர் உபயோகித்திருந்தாலும், ஒவ்வொரு படத்திலும் அந்தக் கதாபாத்திரங்களுக்குத் தேவையான இயல்பான காதலே இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் அவர் சொதப்பியதில்லை. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் காதல் என்பது மணி ரத்னம் படங்களின் வாயிலாகவே சினிமாவில் அழகாகப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், எண்பதுகளிலும் சரி, தொண்ணூறுகளிலும் சரி, பாடல்களின் வாயிலாக அத்தனை சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் மணி ரத்னம் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், இந்தக் கருத்துகளுக்கு எதிர்வெட்டாக, மணி ரத்னத்தின் படங்களின் காதலில் சில பிரச்னைகளும் தென்படவே செய்கின்றன. அவரது சமீபத்திய படமான ‘ஓ காதல் கண்மணி’ படத்தையே எடுத்துக்கொண்டால், புதிதாக இந்தப் படத்தில் எதுவுமே இல்லை. எல்லாமே ஏற்கெனவே ஆய்த எழுத்திலும், அலைபாயுதேவிலும், பம்பாய் போன்ற மணி ரத்னத்தின் பிற படங்களிலும் பார்த்தவைதான். ஒரே போன்ற காட்சிகளை இன்னும் எத்தனைதான் கவனிப்பது? அலைபாயுதேவில் மனைவி தொலைவது, அவர்களின் சுவாரஸ்யமான ஃப்ளேஷ்பேக், இருவருக்கும் இடையே வரும் ஈகோ மோதல்கள் என்பவை படத்தை சுவாரஸ்யம் ஆக்கின. அதில் வரும் அர்விந்த்ஸ்வாமி-குஷ்பு கதை சற்றேனும் ஆடியன்ஸை திடுக்கிட வைத்தது. அதன் க்ளைமேக்ஸ் உணர்வுபூர்வமாக இருந்தது. மௌன ராகத்தில் வரும் காதல், படம் முழுதும் கதாநாயகியின் மனதில் தங்கி, அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையே பெரிய மனத்தடையை ஏற்படுத்தியது. கீதாஞ்சலியின் காதல் இழப்பை நோக்கியே இருவரையும் கொண்டுசென்றது. தில்ஸேவும் அப்படியே. ஆனால் இதில் என்னதான் நடக்கிறது என்று யோசித்தால் ஒன்றுமே இல்லை என்பது புரிகிறதுதானே? கொஞ்சம்கூடப் புதிதாக எதுவுமே இல்லாத காதல் காட்சிகளை இன்னும் எத்தனைமுறைதான் பார்ப்பது? கிட்டத்தட்ட அலைபாயுதே கதையையே லேசாக மாற்றியிருக்கிறார் மணி ரத்னம் என்றுதான் தோன்றியது. அதில் வரும் அர்விந்த்ஸ்வாமி-குஷ்பு போல இதிலும் நடுத்தர வயதைச் சேர்ந்த இரண்டு தம்பதிகள். அவர்களால் இவர்கள் காதலில் சில மாற்றங்கள் என்பது இரண்டிலும் பொதுவானவை. படத்தின் சுவாரஸ்யமான தருணங்கள், பிரகாஷ்ராஜுக்கும் அவரது மனைவியாக நடிக்கும் லீலா சாம்ஸனுக்கும் இடையேதான் உள்ளன. அவர்கள்தான் இப்படத்தின் உண்மையான ஹீரோ-ஹீரோயின்கள். பிரகாஷ்ராஜின் கதை அருமையாக எடுக்கப்பட்டிருப்பதால், படத்தில் ஏற்கெனவே சொல்லியபடி இடைவேளைக்குப் பிறகுதான் கொஞ்சமாவது சுவாரஸ்யம் ஏற்பட்டது. ஆனால் அதுவும் விரைவில் முடிந்துவிட்டது.
மணி ரத்னத்தின் படங்களில் வரும் காதலானது, இப்படியாக ஒரு நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இளைஞன் (அல்லது)யுவதிக்கோ, ஏழைக்குடும்பத்தில் இருக்கும் இளைஞன் (அல்லது) யுவதிக்கோ தங்களது வாழ்க்கையுடன் பொருத்திப்பார்க்க இயலாத ஒரு விஷயம் என்றே படுகிறது. ஆடுகளம், பொல்லாதவன் ஆகிய படங்களில் வரும் காதலுக்கும், மணி ரத்னத்தின் படங்களில் வரும் காதலுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன அல்லவா? பொல்லாதவனின் நாயகன் பிரபு, தன் காதலி ஹேமாவுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ முடியுமா? அல்லது அவளுடன் ஊர் ஊராகச் சுற்ற முடியுமா? இவர்கள் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரதிபலிப்பவர்கள். இவர்களின் உலகம் வேறு. பெரும்பாலான மணி ரத்னம் படங்களில் இப்படிப்பட்ட காதல் வருவதில்லை (ஆய்த எழுத்தில் மாதவன் – மீரா ஜாஸ்மின் கதை ஒரு விதிவிலக்கு). மணி ரத்னத்தின் கதைகளில் வரும் இளம் நாயக நாயகியர், அமெரிக்கா, பாரிஸ் போன்ற நாடுகளில் சென்று படிக்கவோ வசிக்கவோ விரும்புபவர்கள். தனது படங்களில் கிராமத்தையோ கிராமத்துக் காதலையோ மணி ரத்னம் காட்டும்போதெல்லாம் பெரும்பாலும் அது செயற்கையாகவே முடிவதை நாம் கவனித்திருக்கிறோம். திருடா திருடா ஒரு உதாரணம். அதன் வசனங்கள் கதை நடக்கும் களனுக்குப் பொருந்தாமலேயே இருந்தன. இந்தக் குறிப்பிட்ட தன்மை அவரது படங்களில் ஆடியன்ஸின் கண்ணை உறுத்தக்கூடிய அம்சமாகவே இருக்கிறது. அவர் வாழ்ந்த உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவும் பழக்கங்களை எளிதில் அழகாக வெளிப்படுத்தத் தெரிந்த மணி ரத்னத்தால், அந்த சமூகத்துக்கு வெளியே நடக்கும் விஷயங்களை அத்தனை சிறப்பாக வெளிப்படுத்த இயலவில்லை. அவரால் கூடுவிட்டுக் கூடு பாய முடியவில்லை என்று தோன்றுகிறது.
இயல்பான, குறும்பான, அழகிய காதல்களைக் காண்பித்துக்கொண்டிருந்த மணி ரத்னம் மெல்ல மெல்ல அதிலிருந்து விலகி, நீர்த்து, ராவணன், கடல் போன்ற படங்களை எடுத்தார். அவற்றில் வரும் பல காட்சிகள் எளிதாக மறக்கப்படக்கூடியவையே. ‘மணி ரத்னம்’ என்ற இயக்குநர் காணாமல் போன படங்கள் அவை. இதனால்தான் இப்போது ‘ஓ காதல் கண்மணி’ மூலம் அவரது பழக்கப்பட்ட களத்துக்கு வந்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலுமே இப்படத்தில் வரும் காட்சிகளில் ஆழம் இல்லை. ‘கதை’ என்ற வஸ்துவே இல்லாமல், காட்சிகளாலேயே படத்தை நிரப்ப முயன்றிருக்கிறாரோ என்றும் தோன்றுகிறது. பிரகாஷ்ராஜ் – லீலா சாம்ஸன் காட்சிகள் மட்டுமே மனதில் நின்றன. காரணம் அவர்களுக்கிடையே அழுத்தமான உணர்வுகள் கதையோடு சேர்ந்து இருக்கின்றன. ஆனால் துல்கர் சல்மான்-நித்யா ஜோடிகளுக்கு இடையே இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான கதை இருக்கிறதா? மணி ரத்னத்தின் முந்தைய பல படங்களில் இது உண்டு. அவரது காதல் ஜோடிகளுக்குப் பின்னர் ஆழமான கதை இருக்கும். ஆனால் ராவணன், கடல், ஓ காதல் கண்மணி ஆகிய மூன்று படங்களிலும் அது முற்றிலுமாக இல்லை. அதேசமயம் இந்தக் காலகட்டங்களில் மணி ரத்னத்தைப் பின்பற்றித் திரைத்துறையில் வந்துள்ள பல இயக்குநர்களின் படங்கள் ஆழமான காதலை ஆராயத் துவங்கிவிட்டன. செல்வராகவன் (காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன), வெற்றிமாறன் (பொல்லாதவன், ஆடுகளம்), பிரபு சாலமன் (மைனா), அமீர் (பருத்திவீரன்) போன்ற இயக்குநர்கள் வெற்றிகரமாகக் காதலைத் தங்களின் படங்களின் இன்றியமையாத அம்சமாக ஆக்கிக்கொண்டுவிட்டனர். இவர்களோடு, மணி ரத்னத்தின் வழியை அப்படியே அடியொற்றி உயர் நடுத்தரவர்க்கத்தினரின் காஃபிஷாப் காதலைத் தனது படங்களில் எப்போதும் வைக்கும் கௌதமும் அவரது படங்களின் காதல் காட்சிகளுக்காகவே அதிகம் பேசப்படும் நிலை வந்தாயிற்று.
ஒரு உதாரணத்துக்கு மார்ட்டின் ஸ்கார்ஸேஸியை எடுத்துக்கொள்வோம். ஒரு காலத்தில் Mean Streets, Raging Bull, Goodfellas என்றெல்லாம் படங்கள் எடுத்துத் தனது முத்திரையை அழுந்தப் பதித்தவர் அவர். இப்போதும் Wolf of Wall Street மூலம் தனது படமெடுக்கும் பாணியை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியே இருக்கிறார் ஸ்கார்ஸேஸி. அவர் எடுத்த அனைத்துப் படங்களுமே தரமானவையே (அவை ஓடியதா ஓடவில்லையா என்பது பிரச்னை அல்ல). ஸ்கார்ஸேஸியுடன் மணி ரத்னத்தை ஒப்பிடும் வேலையை இங்கே செய்யவில்லை. ஆனால், ஸ்கார்ஸேஸி தரமில்லாத, மேலோட்டமான படத்தைக் கொடுத்திருப்பார் என்றால் அவசியம் அது கடுமையாகவே விமர்சிக்கப்படும். மைக்கேல் பே, ரோலாண்ட் எம்மரிச் போன்ற இயக்குநர்கள் எந்தப் படம் எடுத்தாலும் அங்கே யாரும் அவற்றை விமர்சிக்கப்போவதில்லை. ஆனால் ஸ்கார்ஸேஸிக்கு அந்தச் சலுகை கொடுக்கப்படமாட்டாது. மணி ரத்னத்துக்கு அப்படி ஒரு ‘இமேஜ்’ இங்கே இருப்பதால் மட்டுமே இதை எழுதுகிறேன்.
மணி ரத்னத்துக்கு என்று ஒரு பெயர் இங்கே இருக்கிறது. தளபதி வரை, தரமான வணிகப்படங்களைத் தவறாமல் கொடுத்தவர் அவர். அதன்பின் அவர் தேர்வு செய்த பாதை இந்திய அளவில் அவரை அறியவைத்தது. ஆனால் அதன்பின் அவரது படங்கள் சிறுகச்சிறுக வணிகப்படத்துக்கும் கலைப்படத்துக்கும் இடையே சிக்கிக்கொண்டுவிட்டன. முழுமையாக வணிக சங்கதிகள் இல்லாமல் – அதே சமயம் கலைப்படமாகவும் இல்லாமல் போய்விட்டன. சில சிதறல்களில் மட்டுமே அவற்றில் மணி ரத்னத்தின் முத்திரை தென்பட ஆரம்பித்தது.
தனது படத்துக்காக ‘டைம்’ பத்திரிக்கையின் உலகில் சிறந்த நூறு படங்கள் பட்டியலில் இடம்பெற்ற மணி ரத்னம், அவரது பாணியை அழுத்தமாகப் பதிக்கும் சிறந்த படம் ஒன்றை எடுக்கப்போவதற்காகத் தமிழ்த்திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மணி ரத்னம் தமிழ்த்திரை ரசிகர்களிடம் ஏற்படுத்திய தலைமுறை மாற்றங்கள் அப்படிப்பட்டன. ஏற்கெனவே ‘நாயகன்’, ‘இருவர்’ போன்ற அற்புதமான படங்களைக் கொடுத்திருக்கும் மணி ரத்னத்தால் அது இன்னமும் முடியும் என்றே மனதில் தோன்றுகிறது.
CONVERSATION