1978ல் த்ரிஷூல் என்ற ஒரு ஹிந்திப்படம் வெளிவந்தது. கதை – திரைக்கதை எழுதியவர்கள், இந்தியாவின் திரைக்கதை சரித்திரத்தின் முடிசூடா மன்னர்கள் சலீம்-ஜாவேத். அமிதாப் பச்சனும் சஞ்சீவ் குமாரும் நடித்த படம். அதை அப்படியே தமிழில் 1986ல் ரஜினி நடிப்பில் மிஸ்டர் பாரத் என்ற பெயரில் எடுத்தனர். இயக்கம் எஸ்.பி.முத்துராமன். இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் 80களில் வெளிவந்த எந்த ரஜினி-கமல்-விஜய்காந்த் படமாக இருந்தாலும் அதில் முதல் 20-30 நிமிடங்களில் கதை துவங்கிவிடும். காரணம் பெரும்பாலான படங்களின் ஒரிஜினல் கதை சலீம்-ஜாவேதினுடையது (வேலைக்காரன் – நமக் ஹலால், கூலிக்காரன் – காலியா, சிவா-ஹூன் பஸீனா – இது சலீம்-ஜாவேத் அல்ல. காதர் கான் மற்றும் ராகேஷ் குமார் எழுதியது, பில்லா – டான், சட்டம் – தோஸ்தானா, ராம் ராபர்ட் ரஹீம் – அமர் அக்பர் ஆண்ட்டனி (காதர் கான்), தீ – தீவார், தில்லுமுல்லு – கோல்மால் (சைலேஷ் டே), நான் மஹான் அல்ல – விஸ்வநாத் (சுபாஷ் கை), நான் சிகப்பு மனிதன் – ஆஜ் கி ஆவாஸ் (இரண்டின் மூலமுமே Death Wish), பணக்காரன் – லாவாரிஸ் என்று இந்த லிஸ்ட் போகும்). சலீம்-ஜாவேத் இடம்பெற்ற அனைத்துப் படங்களும் பரபரப்பான திரைக்கதையைக் கொண்டிருக்கும்.
அந்தக் காலகட்டத்தில் தமிழில் ஒரிஜினலாக உருவாக்கப்பட்ட பல படங்களிலுமே கூட திரைக்கதை ஆச்சரியகரமாக வேகமாக இருந்தது. சத்யா மூவீஸ் கதை இலாகா ஒரு உதாரணம். இந்த நிலை தொண்ணூறுகளின் துவக்கத்தில் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போனது. திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. ஹிந்தியில் சலீம்-ஜாவேத் ஜோடி பிரிந்தது ஒரு முக்கியமான காரணம். ஹிந்திப் பட உலகு மொத்தமாக ரொமான்ஸில் புகுந்தது. அப்படங்களை தமிழில் ரீமேக் செய்ய இயலாத சூழல். தமிழில் அந்தக் காலகட்டத்தில் ரஜினிக்கும் இதனால் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. பாண்டியன் போன்ற படங்கள் வந்தன. ஆனால் கமல் முதலிலிருந்தே இப்படிப்பட்ட ஹிந்தி ரீமேக்களில் அதிகம் நடிக்காமல் (சத்யா போன்றவை விதிவிலக்குகள்) உலகப்படங்களில் இருந்து உருவிக்கொண்டிருந்ததால் அவருக்கு இந்தப் பிரச்னை இல்லை. காட்ஃபாதரின் பாதிப்பு கொண்ட தேவர் மகன், மைக்கேல் மதன காம ராஜன் போன்ற சில நல்ல படங்கள் வந்தும், தொண்ணூறுகளில் கமலின் படங்களை கவனித்தால் அவர் இப்போதும் செய்துகொண்டிருக்கும் ஆக்ஷன் படம் – காமெடிப்படம் என்ற வரிசையை அப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிகிறது. சிங்காரவேலன், கலைஞன், மவராசன், காதலா காதலா, அவ்வை ஷண்முகி, சதி லீலாவதி (She Devil காப்பி) போன்ற காமெடிகள், நம்மவர், குருதிப்புனல், இந்தியன் போன்ற ஆக்ஷன் படங்கள் ஆகியவை கமல் நடித்து தொண்ணூறுகளில் வெளிவந்தவைகளில் முக்கியமானவை. மகாநதி, சுப சங்கல்பம் போன்ற Dramaக்களிலும் நடித்தார் கமல். 1990ல் இருந்து 1998 வரை கமல்ஹாஸன் 15 படங்களில்தான் நடித்திருக்கிறார். அவற்றில் இவை முக்கியமானவை.
இதை அப்படியே ரஜினியை வைத்து யோசித்தால், பணக்காரன், அதிசய பிறவி, தர்மதுரை, நாட்டுக்கு ஒரு நல்லவன், தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வள்ளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா ஆகிய படங்கள் 1990ல் இருந்து 1999 வரை வந்திருக்கின்றன. இடையில் பல ஹிந்திப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலே இருக்கும் லிஸ்ட்டில் பாட்ஷா – ஹம் படத்தின் மெருகேற்றப்பட்ட ரீமேக். பணக்காரன், லாவாரிஸின் சீன் பை சீன் தழுவல். மன்னன் – கன்னடத்தில் வந்த அனுராக அரளிது படத்தின் ரீமேக். அது பின்னர் ஹிந்தியில் லாட்லா என்றும் எடுக்கப்பட்டது. முத்து – தேன்மாவின் கொம்பத். அண்ணாமலை – ஹுத்கர்ஸ் என்று ஹிந்தியில் ஆல்ரெடி வந்த படம். அதிசய பிறவி – யமடுகி மொகுடு என்ற 1988 சிரஞ்சீவி படம். அருணாச்சலம் – Brewster’s Millions என்ற இங்லீஷ் படத்தின் இன்ஸ்பிரேஷன் (இயக்குநர் சுந்தர் சி என்பதை கவனிக்க). எனவே ரீமேக் லிஸ்ட்டில் இருந்து தப்பியவை தர்மதுரை, நா.ஒ.நல்லவன், தளபதி, பாண்டியன், எஜமான், உழைப்பாளி, வள்ளி, வீரா, படையப்பா ஆகியவையே.
இதுதான் தொண்ணூறுகளில் ரஜினி கமல் ஆகியவர்களின் நிலை. தொண்ணூறுகளில் ரஜினிக்கு ஒரிஜினலாக எழுதப்பட்ட கதைகளில் தளபதி, வீரா, படையப்பா ஆகியவை மட்டுமே ஹிட்கள். கமலுக்கு ஒரிஜினல் ஹிட்கள் என்று பார்த்தால் மகாநதி, இந்தியன், மைக்கேல் மதன காம ராஜன் (விலை கொடுத்து வாங்கி எடுக்கப்பட்ட ரீமேக் என்பதால் இது லிஸ்ட்டில் சேர்க்கப்படுகிறது), சுப சங்கல்பம், குருதிப்புனல் (இதுவும் விலை கொடுத்து வாங்கி ரீமேக் செய்யப்பட்ட படம்) ஆகியவை மட்டுமே. இந்த அஃபிஷியல் ரீமேக்களையும் அகற்றிவிட்டால் கமலுக்கு சுப சங்கல்பம், இந்தியன், மகாநதி ஆகியவை மட்டும்தான்.
இது 1990ல் இருந்து 1999 வரை மட்டுமே. மொத்தப் படங்களையும் பட்டியல் இட்டால் ஒரிஜினல்கள் என்பது கம்மியாகத்தான் இருக்கும்.
இதை ஏன் சொன்னேன் என்றால், ஹிந்தித் திரைக்கதையின் தாக்கம் அகன்ற தொண்ணூறுகளில் டாப் ஸ்டார்களாக இருந்த ரஜினி கமலை எடுத்துக்கொண்டால் ஒரிஜினல் கதைகள் மிகவும் சொற்பமாகத்தான் இருந்தன. அன்றிலிருந்து இன்றுவரை அது அப்படியே தொடர்கிறது. கூடவே, தொண்ணூறுகளுக்குப் பிறகு ‘திரைக்கதை’ என்ற வஸ்து பிரபல ஸ்டார்களின் படங்களில் ஒட்டும்மொத்தமாக நிராகரிக்கப்பட்டு, ரஜினி 80களில் வைத்திருந்த டெம்ப்ளேட் அப்படியே திணிக்கப்பட்டது. அதுவும் ரஜினி கண்டுபிடித்த ஒரிஜினல் டெம்ப்ளே ட் அல்ல. அது அமிதாப் பச்சனிடம் இருந்து எடுக்கப்பட்டது. அந்த டெம்ப்ளேட் இப்படி இருக்கும்.
அறிமுகம்: முதல் பத்து நிமிடங்கள் – ஏழை ஹீரோ – சிறுவனாக இருப்பான். அநியாயம் அவனது குடும்பத்துக்கு நடக்கும். வில்லனைப் பழிவாங்குவதாக சூளுரைப்பான். அடுத்த பத்து நிமிடத்தில் பையன் பெரிதாவான். அறிமுகப் பாடல். பின்னர் கதாநாயகி அறிமுகம். கதை துவங்கும். வில்லன் அறிமுகம். இதன்பின் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் மோதல்கள். பின்னர் க்ளைமேக்ஸ்.
இந்த டெம்ப்ளேட் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டு இன்றும் டாப்ஸ்டார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அறிமுகத்தில் வரும் சிறுவன் கதை மட்டும் அகற்றப்பட்டுவிட்டது.
இதில் என்ன பிரச்னை என்றால், இந்த டெம்ப்ளேட்டை வடிவமைத்தவர்கள் சலீம்-ஜாவேத். ஆனால் இந்த டெம்ப்ளேட்டில் அட்டகாசமான கதையை உள்ளே வைத்துத் திரைக்கதையை அருமையாகக் கொடுப்பது அவர்களின் வழக்கம். எண்பதுகளின் பெரும்பாலான ரஜினி படங்கள் இன்றும் வேகமாகச் செல்வது அதனால்தான். ஆனால் தற்போது திரைக்கதையின் மையமாகக் கதை என்பது இருக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்தமாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது.
அதற்கு ஒரு உதாரணம்தான் ‘வேலை இல்லா பட்டதாரி’.
தனுஷுக்கு நன்றாக நடிக்க வரும் என்பது திருப்பதியில் மொட்டைத்தலை மனிதர்கள் அதிகம் என்று சொல்வது போன்றது. அப்படியிருக்கும்போது தனுஷ் ஏன் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் கவனம் செலுத்த மறுத்து, கதையே இல்லாத படங்களில் நடிக்கிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கதையே இல்லாத இந்தப் படத்தில் , எல்லாக் காட்சிகளிலும் சிவாஜி அவரது உடல் உறுப்புகள் தெறித்து விழுவது போல நடிப்பாரே-அதேபோல் தீவிர நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். அதனால் என்ன லாபம் என்று கவனித்தால், பெரிய பூஜ்யம் மட்டுமே. அது சமயத்தில் நகைச்சுவையாகவும் இருக்கிறது. ஒருவேளை தனுஷின் இயல்பே அப்படி ஆகிவிட்டதோ என்றும் தோன்றியது.
படத்தைப் பற்றி மேலும் பார்ப்பதற்கு முன்னர் இன்னொரு விஷயம். தற்போது வரும் படங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சங்கதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இளைஞர் சமுதாயத்தைத் தியேட்டர் பக்கம் கொண்டுவரத்தான் இவைகள் பயன்படுகின்றன என்பது தெளிவாகவே புரிகிறது. ஆனால் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் சோஷியல் நெட்வொர்க்கிங்கிலுமே குடித்தனம் நடத்தும் தற்கால இளைஞர்கள் தியேட்டர் வர இவை மட்டும் போதாது. இப்போது கல்லூரியின் முதல் வருடத்தில் படிக்கும் ஒரு இளைஞனை எடுத்துக்கொண்டால்கூட, அவனிடம் ஒரு கம்ப்யூட்டரும் (லாப்டாப்) ஒரு இண்டர்நெட் கனெக்ஷனும் உள்ளன. இவைமூலம் உலகின் எந்தப் பக்கம் வரும் படத்தையும் அவன் உடனடியாக டவுன்லோட் செய்து பார்த்துவிடுகிறான். அவன் பார்க்கும் படங்களில் ஹாலிவுட்டின் சிறந்த படங்கள் மட்டும் அல்லாமல் கொரியப்படங்கள், ஜெர்மன் படங்கள் போன்ற உலகப்படங்களும் அடக்கம். மாணவர்கள் ஒரு நெட்வொர்க் என்பதால் இது சாத்தியமாகிறது. அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து விரல்நுனியில் அவற்றின் விபரங்களை வைத்திருக்கும் ஒரு இளைஞன், ஒரு தமிழ்ப்படத்தில் ஃபேஸ்புக் போன்ற சங்கதிகள் மட்டும் இடம்பெறுவதால் தியேட்டர் வந்து அவற்றைப் பார்க்கமாட்டான். அவனுக்குத் தேவை – உடனடியாக ஆரம்பிக்கும் கதை. இதனால்தான் பீட்ஸா, சூது கவ்வும் போன்ற படங்கள் வெற்றிபெறுகின்றன. அவைகளின் மேக்கிங் அட்டகாசமாக உள்ளது. அவனுக்குத் தேவை அதுதான். இதனால்தான் ஜிகிர்தண்டா படத்துக்கும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது ஒரு புறம் இருக்க, தமிழின் நாயகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பவாதிகள் அடங்கிய கூட்டத்துக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. காரணம் இந்த நாயகர்கள்+இயக்குநர்கள்+தொழில்நுட்பவாதிகள் அப் டு டேட்டாக இல்லை. இளைஞர்களின் ரசனை இவர்களுக்குப் புரிவதில்லை. தற்காலத்தில் எல்லாம் ‘எந்தன் தாயெனும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே’ என்ற பாடலை இளையராஜாயோ தனுஷோ அனிருத்தோ ஐந்து நிமிடங்கள் விடாமல் பின்னணியில் பாடி அழுதால் ஒரு பயல் அதைக் கேட்கமாட்டான். அதேபோல் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா தயக்கத்துடன் எல்லா பூ பெயரையும் பத்து நிமிடங்கள் தம் கட்டி சொல்வாரே – இதன் Root எங்கே இருக்கிறது என்று கவனித்தால் அது பராசக்தி காலகட்டத்துக்கு செல்கிறது. தம் கட்டி ஐந்து நிமிடங்கள் இடைவிடாமல் டயலாக் பேசிய காலகட்டம் அது. அதுதான் ஹீரோவுக்கு அழகு என்று அப்போதைய இயக்குநர்கள் (பிற நாட்டுப்படங்கள் பார்க்காததால் அறியாமையில்) நம்பினார்கள். அதுவே தனுஷ் வரை தொடர்கிறது. படத்தில் தனுஷ் அப்படி தம் கட்டிப் பேசும் டயலாக் தியேட்டரெங்கும் சிரிப்பையே வழவழைத்தது. பலரும் கத்தி காமெடி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அது மிகவும் செயற்கையாகவும் உள்ளது. இப்போதெல்லாம் பராசக்தியை இளைஞர்கள் ரசிப்பார்களா?
இது மட்டுமா? எப்போதோ கண்ணாம்பா காலத்திலேயேகூட நகைச்சுவையின் சிகரமாக இருந்த அம்மா செண்ட்டிமெண்ட் வேறு இந்தப் படம் முழுக்க வருகிறது. அடக்கொடுமையே. அம்மா, தனுஷின் கதாபாத்திரத்துடன் எப்போதுமே கூடவே வருகிறார். அவர் கடற்கரையில் நடக்க நடக்க, அம்மாவின் காலடித்தடம் பக்கத்திலேயே பதிகிறது. கூடவே சிரிப்பும் வருகிறது.
ரஜினியின் சிவா படத்தில் தாய் சௌகார் ஜானகி, இனிமேல் யாருடனும் நீ சண்டையிடக்கூடாது என்று சொல்வார். உடனே ரஜினியும் அதற்குக் கட்டுப்பட்டு கண்டபடி அடி வாங்குவார். உடனே அதைப்பார்த்து வெகுண்டெழும் சௌகார் ஜானகி, இனிமே போய் அடிச்சி தூள் பறத்துடா என்பார். உடனடியாக அவர்களைத் தேடிப்போய் ரஜினி அடிப்பார். இதை ஏற்கனவே பல படங்களில் பார்த்துவிட்டதால், தனுஷின் கையில் சரண்யா கட்டும் கயிற்றைப் பார்த்த மாத்திரத்தில் சிரிப்பு வருகிறது. இதுதான் தற்போதைய இளைஞர்களைக் கவரும் என்று இயக்குநர் வேல்ராஜ் நினைத்திருக்கிறார். அதை தனுஷும் நம்பியிருக்கிறார். இதைத்தான் இவர்களுக்கும் ஆடியன்ஸுக்கும் இருக்கும் மிகப்பெரிய இடைவெளி என்று குறிப்பிட்டேன். இந்தக் ’கதையை’ வேல்ராஜ் சொன்னதும் தனுஷே முன்வந்து தயாரித்திருக்கிறார் என்றால் இது எத்தனை பெரிய அறியாமை?
படத்தின் ஆரம்பத்தில் இருந்து இடைவேளை முடிந்து பத்து நிமிடங்கள் வரை கதை என்பது இல்லவே இல்லை. வெறும் காட்சிகளாலேயே படம் நகர்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை எப்படி சுவாரஸ்யமாக அமர்ந்து பார்க்க முடியும்? அப்படி படம் ஆரம்பித்து 70% கழித்து ’ஆரம்பிக்கும்’ கதையும் மிகவும் பழைய ஃபார்முலா. மிஸ்டர் பாரத் டெம்ப்ளேட்தான். அந்தக் கதை எப்படி முடிகிறது என்று பார்த்தால் இன்னும் நகைச்சுவை. அங்கேதான் ஃபேஸ்புக் வருகிறது. பின்னாலேயே சட்டையை அவிழ்த்துவிட்டு எல்லாரையும் அடிக்கும் டிபிகல் தமிழ் ஹீரோவும் வருகிறார். படத்தில் தனுஷுக்கு எப்படி வேலை கிடைக்கிறது என்று பார்த்தால், தாய் ஆர்கன் டொனேட் செய்ததால் ஒரு பணக்காரர் வந்து வேலையை தானமாக அளிக்கிறார்.
படத்தைப் பார்த்தபின் எனக்கு எழுந்த எண்ணங்கள்:
வேலை இல்லாப் பட்டதாரியாக இருக்கும் ஒருவன்:
1. தன் திறமையால் வேலை வாங்க மாட்டான்
2. தாய் இறந்து, அவளின் உறுப்புகளை தானம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும்
3. வேலை கிடைத்தபின் ஆறே மாதத்தில் அவன் பத்து வருட அனுபவஸ்தரை மிஞ்சிவிடுவான்
4. சைட்டில் நின்றுகொண்டு தம் அடித்துக்கொண்டே பஞ்ச் டயலாக் பேசுவான்
5. அவன் ஃபேஸ்புக்கில் எதையாவது போட்டால் மிகப்பெரிய இளைஞர் படை அங்கே குவிந்துவிடும்
6. கடைசிவரை ஓட்டை வண்டியை வைத்துக்கொண்டுதான் சுற்றுவான்
7. தனது காதலிக்கு ஒரே மாதத்தில் ஐஃபோன் வாங்கவேண்டும் என்று நினைப்பான். ஆனால் வேலை கிடைத்ததும் கூட அவளை வைத்துக்கொண்டு வெளியே போக தரமான வண்டி கிண்டி எதுவும் வாங்கமாட்டான்
2. தாய் இறந்து, அவளின் உறுப்புகளை தானம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும்
3. வேலை கிடைத்தபின் ஆறே மாதத்தில் அவன் பத்து வருட அனுபவஸ்தரை மிஞ்சிவிடுவான்
4. சைட்டில் நின்றுகொண்டு தம் அடித்துக்கொண்டே பஞ்ச் டயலாக் பேசுவான்
5. அவன் ஃபேஸ்புக்கில் எதையாவது போட்டால் மிகப்பெரிய இளைஞர் படை அங்கே குவிந்துவிடும்
6. கடைசிவரை ஓட்டை வண்டியை வைத்துக்கொண்டுதான் சுற்றுவான்
7. தனது காதலிக்கு ஒரே மாதத்தில் ஐஃபோன் வாங்கவேண்டும் என்று நினைப்பான். ஆனால் வேலை கிடைத்ததும் கூட அவளை வைத்துக்கொண்டு வெளியே போக தரமான வண்டி கிண்டி எதுவும் வாங்கமாட்டான்
படத்தின் ஒரே ஒரு ப்ளஸ் – டூயட்டே இல்லாததுதான். போலவே அனிருத்தின் பாடல்கள். வழக்கமாகப் பாடல் வந்தால் வெளியே செல்லும் எனக்கு, உள்ளே அமர்ந்து பாடல்களைக் கேட்கலாம் என்று தோன்றியது அனிருத்தின் இசையால்தான்.
பொல்லாதவனிலும் ஆடுகளத்திலும் நாம் பார்த்து ரசித்த தனுஷ் இனி தமிழ் ஆடியன்ஸுக்குக் கிடைக்கமாட்டார் என்பதுதான் இந்தப் படம் பார்த்ததும் என் மனதில் தோன்றிய எண்ணம். அந்த எண்ணத்தைப் பொய்யாக்கி அட்டகாசமான படம் ஒன்றைத் தருவது தனுஷ் கையில்தான் இருக்கிறது. இதனால்தான் நாளைய இயக்குநர்களின் படங்கள் மட்டுமே தற்போது தமிழில் எனக்குப் பிடிக்கிறது. தமிழில் தற்போது நிலைத்து நிற்கும் நல்ல இயக்குநர்கள் என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தியாகராஜன் குமாரராஜாவும் வெற்றிமாறனும் மட்டுமே தெரிகிறார்கள் (வசந்தபாலனின் புதிய படம் எப்படி உள்ளது என்றும் கவனிக்க வேண்டும்). அவருக்குப் பின் மிஷ்கினை சொல்லலாம். இதில் வெற்றிமாறன் நான் LKG படிக்கும்போது படம் எடுத்துக்கொண்டிருந்தார். அதற்குப்பிறகு அவரை ஆளையே காணோம். மீண்டும் படம் எடுப்பாரா என்பதும் தெரியவில்லை. இதுவேதான் குமாரராஜாவுக்கும் பொருந்தும். இந்த சூழலில், தமிழில் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்பப் படம் எடுப்பவர்களாக இப்போது கார்த்திக் சுப்பராஜும் நலன் குமரசாமியுமே தெரிகிறார்கள். எனவே இது ஒரு ஆர்ட் ஃபில்ம் என்ற பார்வையில் நான் பேசவில்லை. ஒரு தரமான கமர்ஷியல் படம் என்றால் அதில் என்ன இருக்கக்கூடாது என்பதைப்பற்றித்தான் பேசுகிறேன். இது ஒரு தரமான கமர்ஷியல் இல்லை. தரமான கமர்ஷியல் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள கில்லி, தில், தூள், பொல்லாதவன் ஆகிய படங்களைப் பார்க்கவும்
VIP-ல ஒரு 60 to 70% பார்வையாளனை அப்டி வைச்சிருந்துச்சு. இதனால படமும் வெற்றிகரமா ஓடுது. இந்த திரைவடிவம் வெற்றி அடைஞ்சதுக்கு காரணமா சில விசயங்கள சொல்லலாம்.
1.பாக்குற பார்வையளனோட வாழ்க்கைய ஓரளவுக்கு பிரதிபலிக்குது!
2.வேலை இல்லாம வீட்ல இருக்குறப்ப, தம்பி சம்பாதிக்குறப்ப என்ன நடக்கும்னு ஓரளவுக்கு காட்டி இருக்காங்க
3.Cliche-வா இருந்தாலும் (love கூட cliche தான்) அம்மா செண்டிமெண்ட் ஓரளவுக்கு workout ஆகிருக்கு.
4.இது எல்லாத்துக்கு மேல தனுஷ் நடிப்பு. ரொம்ப natural screen presence.
2.வேலை இல்லாம வீட்ல இருக்குறப்ப, தம்பி சம்பாதிக்குறப்ப என்ன நடக்கும்னு ஓரளவுக்கு காட்டி இருக்காங்க
3.Cliche-வா இருந்தாலும் (love கூட cliche தான்) அம்மா செண்டிமெண்ட் ஓரளவுக்கு workout ஆகிருக்கு.
4.இது எல்லாத்துக்கு மேல தனுஷ் நடிப்பு. ரொம்ப natural screen presence.
உங்களோட விமர்சனத்துல, முதல் பாதி நிறைய information குடுத்து இருக்கீங்க! அப்புறம்.அம்மா சென்டிமென்ட் cliche-வ போட்டு தாக்கிருக்கீங்க! அப்புறம் Facebook மேட்டர் . அப்புறம் இளைஞர்களுக்கு இது பிடிக்காதுன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வரீங்க. இந்த இடத்துல உங்க விமர்சனம் தடுமாற ஆரம்பிக்குது. இது படத்த பத்தின விமர்சனமா இல்லாம இளைஞர்கள பத்தின விமர்சனமா மாறிடுது.
For Example:
நீங்க ஒரு ஹோட்டலுக்கு போறீங்க. சாப்பாடு உங்களுக்கு பிடிக்கல.நீங்க ஹோட்டல் சம்பந்தப்பட்ட யாரயாச்சும் கூப்பிட்டு புகார் சொல்லலாம். இல்லனா இனிமே அந்த ஹோட்டலுக்கு போவதை தவிர்க்கலாம். அத விட்டுட்டு, அந்த ஹோட்டல்-ல பல வருஷம் சாப்டுட்டு இருக்குற உங்க நண்பரிடம் “இந்த ஹோட்டல்-ல நாய் தான் சாப்டும் அல்லது இங்க மனுஷன் சாப்டுவனா” இப்டி சொன்னா அவருக்கு எப்டி இருக்கும்.
அது மாதிரி தான் இருக்கு, உங்க விமர்சனத்த சரி என்று நிருபீக்க எதுக்கு இளைஞர்களை சாட்சியா இழுக்குறீங்க! இன்னைக்கு இந்த திரைப்படம் commercial வெற்றி. ஆடு மாடுகளா இந்த படத்த பார்த்து வெற்றி அடைய வைச்சிருக்கு!
//அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து விரல்நுனியில் அவற்றின் விபரங்களை வைத்திருக்கும் ஒரு இளைஞன், ஒரு தமிழ்ப்படத்தில் ஃபேஸ்புக் போன்ற சங்கதிகள் மட்டும் இடம்பெறுவதால் தியேட்டர் வந்து அவற்றைப் பார்க்கமாட்டான்//
//இளைஞர்களின் ரசனை இவர்களுக்குப் புரிவதில்லை//
இந்த விஷயம் எனக்கு அபத்தமா இருக்கு. ஒன்னும் பிரச்சினை இல்லை.நான் உங்க விமர்சனத்தையும், உங்களையும் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். அதனால கோபம் எதுவும் வரல. ஏன் இத எழுதியிருப்பீங்கனு யோசிக்குறேன்.எனக்கு என்னமோ நீங்க தமிழ் சினிமாவ விட மிகப்பெரிய cliche-ல மாட்டிப்பீங்க போல.ஏன் சொல்றேனா.நீங்க நிறைய உலக சினிமாக்கள் பாத்து , புத்தகங்கள் படித்து அது மட்டுமே உண்மை என்று நம்பி கொண்டிருப்பது போல தெரியுது. புத்தகமும் சினிமாவும் புதிய சிந்தனைய தான் தூண்டி விடனும். புத்தகத்த வைச்சு எவ்ளோ படம் எடுக்க முடியும். But we can create more successful film by creating correct combination even though screenplay has no stories.This is idea.
எல்லாத்தையும் ஒரு திரைவடிவமா பார்த்தா பிரச்சினை இல்ல – //டெம்ப்ளேட்டை வடிவமைத்தவர்கள் சலீம்-ஜாவேத்//
நீங்க ஒரு டெம்ப்ளேட்ல சிக்கி தவிக்கிறீங்க. இந்த டெம்ப்ளட் இல்லாம ஒரு திரைப்படம் வெற்றி பெறக் கூடாதா? Correct combination and Correct scenes are also important.
//இந்தக் ’கதையை’ வேல்ராஜ் சொன்னதும் தனுஷே முன்வந்து தயாரித்திருக்கிறார் என்றால் இது எத்தனை பெரிய அறியாமை?//
நீங்க எது நல்லா இல்லைன்னு சொன்னீங்களோ அதுதான் இங்க வெற்றிக்கு காரணமா இருக்கு. தனுஷ் கதை தேர்வு செஞ்ச விதத்தை தப்பு சொல்றது எல்லாம் , ஒரு விமர்சனத்தை தாண்டுன விஷயமா நான் பாக்குறேன். இதுல commercial வெற்றிக்கான element இருக்குறதுனாலதான் தான் இத produce பண்ணிருப்பாரு.
//படத்தின் ஆரம்பத்தில் இருந்து இடைவேளை முடிந்து பத்து நிமிடங்கள் வரை கதை என்பது இல்லவே இல்லை. வெறும் காட்சிகளாலேயே படம் நகர்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை எப்படி சுவாரஸ்யமாக அமர்ந்து பார்க்க முடியும்?//
ஒரு படத்துக்கு அதுவும் கதை உள்ள படத்துக்கு சுவாரஸ்யமான காட்சிகள் தேவைபடுது. இத ஒத்துக்கிறீங்களா? அப்டினா கதை இல்லாம சுவாரஸ்யமான காட்சியமைப்பு இருந்தா தப்பான படமா?
நீங்க நிறைய படங்களை பார்த்து உங்களோட எதிர்பார்ப்புகளை வேற மாதிரி ஆக்கிட்டீங்க. எல்லா படத்தையும் உங்களோட டெம்ப்ளட்-ல பொருத்தி பாக்குறீங்க.இது தப்புன்னு நினைக்குறேன்.இப்டி இருந்தா எதையும் ரசிக்க முடியாதுனு நினைக்குறேன். எனக்கு ஆரண்யகாண்டம் ரொம்ப பிடிச்ச படம். குருவி மொக்கை படம். VIP somewhat refreshing me. இதான் என்னோட ரசனை.
எனக்கு பிடிச்ச நிறைய படத்த எழுதிருக்கீங்க. சில படத்த மோசமாவும் எழுதிருக்கீங்க. இந்த படத்த பத்தின உங்களோட விமர்சனம் 50% சரி… உங்க விமர்சனத்த வைச்சு பாக்கும் போது இந்த திரைவடிவம் தோல்வி அடையணும். மீறி வெற்றி அடையும் போது அதுக்கான காரணத்த நீங்க ஆராயணும். அப்பதான் நாளைக்கு நீங்க படம் இயக்கும் போது உங்களுக்கு உதவியா இருக்கும். நீங்க நல்ல கதை யோசிச்சாலும் சவ சவனு காட்சியமைப்பு இருந்தா தோல்வி தான். அதனால இந்த மாதிரி commercial வெற்றிய ஆராயுறது அவசியம் தான்.
எதாச்சும் தப்பா சொல்லிருந்தா மன்னிப்பு கேட்குறேன்.
பாஸ், விபரமா படிச்சேன். இதுல இருக்கும் திரைக்கதை சம்மந்தமான உங்க கேள்விகளை கீழ்க்கண்ட பாயிண்ட்ஸா கொடுத்திருக்கேன். முதல்ல இந்தக் கேள்விகளுக்கு என் பதில். அதுக்கப்புறம் நீங்க கேட்டிருக்கும் மத்த விஷயங்கள். முழுசா பார்த்துடலாம்.
1. நீங்க பார்த்த படங்களையும் படிச்ச புத்தகங்களையும் வெச்சி நீங்களே ஒரு பெரிய டெம்ப்ளேட்ல மாட்டிக்கிட்டீங்க. அவைதான் உண்மை – அதுதான் படம்ன்னு நீங்க நம்பிகிட்டு இருக்கீங்க.. சலீம் – ஜாவேத் பத்தி சொல்லிருக்கீங்க.. அந்த டெம்ப்ளேட்ல வந்தாதான் படமா? அதுல இல்லாட்டி ஒரு படம் வெற்றி பெறக் கூடாதா?
2. ஒரு படத்துக்கு அதுவும் கதை உள்ள படத்துக்கு சுவாரஸ்யமான காட்சிகள் தேவைபடுது. இத ஒத்துக்கிறீங்களா? அப்டினா கதை இல்லாம சுவாரஸ்யமான காட்சியமைப்பு இருந்தா தப்பான படமா?
3. உங்க விமர்சனத்த வைச்சு பாக்கும் போது இந்த திரைவடிவம் தோல்வி அடையணும். மீறி வெற்றி அடையும் போது அதுக்கான காரணத்த நீங்க ஆராயணும்.
இவை திரைக்கதை சம்மந்தமான கேள்விகள். அடுத்து மற்ற கேள்விகள்:
4. இளைஞர்களுக்கு இது பிடிக்காதுன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வரீங்க. இந்த இடத்துல உங்க விமர்சனம் தடுமாற ஆரம்பிக்குது. இது படத்த பத்தின விமர்சனமா இல்லாம இளைஞர்கள பத்தின விமர்சனமா மாறிடுது
5. நீங்க எது நல்லா இல்லைன்னு சொன்னீங்களோ அதுதான் இங்க வெற்றிக்கு காரணமா இருக்கு. தனுஷ் கதை தேர்வு செஞ்ச விதத்தை தப்பு சொல்றது எல்லாம் , ஒரு விமர்சனத்தை தாண்டுன விஷயமா நான் பாக்குறேன். இதுல commercial வெற்றிக்கான element இருக்குறதுனாலதான் தான் இத produce பண்ணிருப்பாரு.
ஓகே. இப்போ என் பதில்கள்:
1. நீங்க பார்த்த படங்களையும் படிச்ச புத்தகங்களையும் வெச்சி நீங்களே ஒரு பெரிய டெம்ப்ளேட்ல மாட்டிக்கிட்டீங்க. அவைதான் உண்மை – அதுதான் படம்ன்னு நீங்க நம்பிகிட்டு இருக்கீங்க.. சலீம் – ஜாவேத் பத்தி சொல்லிருக்கீங்க.. அந்த டெம்ப்ளேட்ல வந்தாதான் படமா? அதுல இல்லாட்டி ஒரு படம் வெற்றி பெறக் கூடாதா?
மிகவும் வெளிப்படையாக உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் என் மனதில் எந்த டெம்ப்ளேட்டும் இல்லை. காரணம் என்னவென்றால், ஸிட் ஃபீல்ட் போன்ற ஜாம்பவான்களின் திரைக்கதை அமைப்பைப் படித்து எழுதும்போதே இதுபோன்ற டெம்ப்ளேட்களில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன். இப்போதும் அது தொடர்கிறது. அதேபோல், எதை செய்யலாம் – செய்யக்கூடாது என்பதில் நல்ல தெளிவு எனக்கு உண்டு என்று நம்புகிறேன். நான் ஸிட் ஃபீல்டை மட்டும் படிக்கவில்லை. அவருக்கு நேர் எதிரான ராபர்ட் மெக்கீயையும் நன்றாகப் படித்திருக்கிறேன். இதுபோன்ற திரைக்கதை அமைப்புகள் எல்லாமே ஒரு guide மட்டுமே என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. இவற்றை வைத்து நல்ல திரைக்கதை எழுதுவதில் நம்மை நாமே கூர்தீட்டிக்கொள்ளலாமே தவிர, இம்மி பிசகாமல் இந்த அமைப்புகளை அப்படியே பின்பற்றக்கூடாது என்பதை அவர்களே தெளிவாக எழுதி வைத்தும் இருக்கிறார்கள்.
எனவே, rest assured, நான் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் மாட்டிக்கொள்ளவில்லை. மாட்டவும் மாட்டேன். சலீம் – ஜாவேத் பற்றி சொன்னதற்கு என்ன காரணம் என்றால், இந்தியாவின் வெற்றிகரமான திரைக்கதை ஜோடி அது. எண்பதுகளில் இவர்களின் படங்கள்தான் தமிழ் உட்பட பல மொழிகளில் சுடப்பட்டன. வெற்றிகரமாகவும் ஓடின. அவர்கள் ஆரம்பித்து வைத்த டெம்ப்ளேட்டைக் குறிப்பிட்டேன். அவ்வளவே. அந்த டெம்ப்ளேட்டில் வராவிட்டாலும் படங்கள் வெற்றி பெறலாம்தான். குக்கூ வெற்றிபெற்றதே? ஜில்லா, வீரம் போன்ற அஜீத் விஜய் படங்களும் வெற்றிபெறுகின்றன. அதேசமயம் அட்டகாசமாகத் திரைக்கதை எழுதப்பட்ட ஆரண்ய காண்டம் தோல்வியடைந்தது. ஆடுகளம், பொல்லாதவன் போன்ற – திரைக்கதை அருமையாக எழுதப்பட்ட படங்கள் வெற்றி அடைகின்றன. எனவே இங்கே எல்லாமே கலந்துகட்டி நடக்கிறது. இது ஏன் என்பதை மூன்றாவது கேள்விக்கான பதிலில் பார்க்கலாம்.
நான் ஏன் இந்தப் படம் பிடிக்கவில்லை என்று சொன்னேன் என்றால், படத்தில் கதை இல்லை என்பது ஒன்று. கதை இல்லாவிட்டாலும் தில், தூள், கில்லி போன்றவை வெறிபெற்றன தானே? எனவே அப்படியாவது இந்தப் படத்தை ஆராயலாம் என்றால் அவற்றில் இருந்த வெற்றிகரமான – ஆடியன்ஸை சுண்டி இழுத்த வேகமான திரைக்கதையும் இதில் இல்லை. கதையும் இல்லை – திரைக்கதையும் இல்லை என்றால் என்னால் ஒரு படத்தைப் பார்ப்பது இயலாது. என்னதான் சுவாரஸ்யமான காட்சிகள் ஓரிரண்டு இருந்தாலும், கதையைத் தாங்கிப்பிடிப்பது திரைக்கதை தானே? அதில் சந்தேகம் இல்லையல்லவா?
2. ஒரு படத்துக்கு அதுவும் கதை உள்ள படத்துக்கு சுவாரஸ்யமான காட்சிகள் தேவைபடுது. இத ஒத்துக்கிறீங்களா? அப்டினா கதை இல்லாம சுவாரஸ்யமான காட்சியமைப்பு இருந்தா தப்பான படமா?
கதை உள்ள படத்துக்கு சுவாரஸ்யமான காட்சிகள் தேவை. ஆமாம். ஒத்துக்கொள்கிறேன். அதேபோல், கதை இல்லாத படத்துக்குமே சுவாரஸ்யமான காட்சிகள் தேவைதான். அதையும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ‘சுவாரஸ்யமான காட்சிகள்’ என்பது ஒரு subjective விஷயம். நாம் மேலே பார்த்ததுபோல், திரைக்கதை வேகமாக இருந்து அதில் ஆங்காங்கே சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தால் அந்தக் கதை அவசியம் எல்லாருக்கும் பிடிக்கும். பொல்லாதவன், ஆடுகளம், தேவர் மகன், காக்க காக்க, அஞ்சாதே ஆகியவை உதாரணங்கள். ஆனால், திரைக்கதையே இல்லாமல் காட்சிகள் மட்டும் ஆங்காங்கே சுவாரஸ்யமாக இருந்தால் அது சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காதுதான். எனக்குப் பிடிக்கவில்லை. இதில் ஒரு quality இல்லை.
இங்கே இன்னொரு விஷயம். உலகம் முழுதும் திரைக்கதைக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும் காலம் இது. இது ஐம்பதுகள் அல்லது அறுபதுகள் அல்லது எண்பதுகள் இல்லை. இப்போது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதில் திரைக்கதை என்பது எத்தனை முக்கியமாகக் கருதப்படுகிறது என்பது மிகவும் ஆச்சரியகரமான உண்மை. மொக்கையான ட்ரான்ஸ்ஃபார்மர்ஸில் கூட திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும்படிதான் எழுதப்பட்டிருக்கும். திரைக்கதை திரைக்கதை என்று இவன் அடிக்கடி சொல்கிறானே என்று எண்ண வேண்டாம். திரைக்கதை என்பது, ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்துவது மட்டும் அல்ல; ஆடியன்ஸின் மனதில் மாற்றத்தை உண்டுசெய்வதுதான் நல்ல திரைக்கதை. கதாபாத்திரங்களோடு ஒன்றவைப்பதுதான் நல்ல திரைக்கதை. நான் மேலே சொல்லியிருக்கும் எல்லாப் படங்களுமே அப்படிப்பட்டதுதான். ஆனால் வேலை இல்லா பட்டதாரி என்னைப் பொறுத்தவரை அப்படி இல்லை. அது, வெறும் கமர்ஷியல் வெற்றிக்காக வேலையில்லாத் திண்டாட்டம், இளைஞர்கள் என்று எல்லாவற்றையும் செயற்கையாக use செய்து எடுக்கப்பட்ட படம். ஹீரோ worship செய்யும் படம். தனுஷ் என்ற ஒரு தனி நபரை போற்றிப்பாடும் படம். இந்தப்படம் தமிழில் வெளிவந்திருக்கவேண்டிய ஆண்டு – 1980. தமிழ் சினிமாவை இதுபோன்ற content இல்லாத படங்கள் பின்னால் இழுக்கின்றன என்பது என் கருத்து. இப்படிப்பட்ட படங்கள் எனக்கு என்றுமே பிடிப்பதில்லை. இது என் கருத்து. அதைத்தான் நான் எழுதினேன். படம் பிடிப்பவர்களை நான் குறை சொல்லவே இல்லை.
3. உங்க விமர்சனத்த வைச்சு பாக்கும் போது இந்த திரைவடிவம் தோல்வி அடையணும். மீறி வெற்றி அடையும் போது அதுக்கான காரணத்த நீங்க ஆராயணும்.
இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றது/பெறப்போகிறது என்பதற்குக் காரணம் மிகவும் எளிது. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பல hero worship படங்கள் வெற்றிதான் பெற்றிருக்கின்றன. ரஜினியில் ஆரம்பித்து விஜய் அஜீத் என்று அவர்களுக்கென்றே எடுக்கப்பட்ட பல படங்கள் வெற்றிதான் பெற்றன. சமீபத்தில் கூட வீரம் & ஜில்லா ஆகியவை உதாரணங்கள். ஆனால் அவற்றில் இல்லாத ஓரிரண்டு விஷயங்களை இதில் சரியாக வைத்திருக்கின்றனர் என்பதையும் கவனித்தேன். தனுஷ் கதாபாத்திரம் அவர்களைப்போல் ஆரம்பம் முதலே ஹீரோ அல்ல என்று மக்களுக்குத் தோன்றும்படி தந்திரமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போதும்கூட வீட்டுக்கு வரும் ரவுடிகளை அடிப்பான் அந்த ஹீரோ. அந்தப் பாத்திரம் ஹீரோதான். ஆனால் அது ஆடியன்ஸுக்கு வெளிப்படையாக இரண்டாம் பாதியில்தான் தெரியும். இடையில் அம்மா செண்ட்டிமெண்ட். அது தேவைதானா என்று யோசித்தால், அது இடைச்சொருகல் என்பது நன்றாகவே தெரிகிறது. அம்மா இறப்பதும் இடைச்சொருகல்தான். அதனால் கதைக்கு ஒரு இஞ்ச் கூட லாபம் இல்லை என்பதைக் கவனித்தீர்களா? அம்மா இறந்ததும் ஆர்கன் டொனேட் செய்தார் என்று இன்னொரு இடைச்சொருகல். இது ஏனென்றால், அப்போதுதான் தனுஷுக்கு வேலை கிடைக்கும் என்பதைக் காட்டத்தான். செயற்கையான காட்சிகள்.
இருந்தாலும், தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட படங்கள்தான் வெற்றி அடைந்திருக்கின்றன. உடனே இதே தனுஷ் நடித்த நய்யாண்டி ஏன் தோற்றது என்று ஒரு கேள்வி வரும். அது தோற்றதற்குக் காரணம் இதில் உள்ளதுபோல் ஒரு ஹீரோவாக தனுஷ் காட்டப்படவில்லை என்பதே. இது ரஜினி ஃபார்முலா. படத்தை நன்றாகக் கவனித்தால் அது தெரியும். ஆங்காங்கே பஞ்ச் டயலாக்குகள் இருக்கும். வில்லனுக்கு ஹீரோ எக்கச்சக்க சவால்கள் விடுவான். வில்லனுக்கும் ஹீரோவுக்கும் வித்தியாசமே இருக்காது. இருவருக்கும் அடியாட்கள் இருப்பார்கள். வில்லனிடம் இல்லாதது- ஹீரோவிடம் இருப்பது அம்மா செண்ட்டிமெண்ட் மட்டுமே. ரஜினி ஃபார்முலாவை சரியான விகிதத்தில் இதில் நுழைத்திருக்கிறார்கள். தமிழில் இதுபோன்ற ஹீரோ worship படங்கள் – பாட்ஷா போல – வெற்றிதான் பெற்றிருக்கின்றன. அண்ணாமலை நினைவிருக்கிறதா? மிஸ்டர் பாரத்? இது அதே போன்ற படம்தான். கில்லி கூட ஓரளவு இதே ஃபார்முலா படம்தான். கில்லியில் வரும் விஜய்யையும் இதில் வரும் தனுஷையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆனால் கில்லியில் இருந்த சுவாரஸ்யமான திரைக்கதை அதன் பாஸிடிவ் பாயிண்ட்களில் ஒன்று. அதனுடன் கில்லியில் இப்படிப்பட்ட ஹீரோ வொர்ஷிப் சேர்ந்தது. ஆனால் இதில் வெறும் ஹீரோ வழிபாடு மட்டுமேதான் உள்ளது.
அதனால்தான் இது எனக்குப் பிடிக்கவில்லை. அவைகளையெல்லாம் பலமுறை பார்த்து சலித்தாயிற்று. தமிழுக்கு இப்போதைய தேவை, நல்ல படங்கள். போலியான படங்கள் அல்ல. ஆடியன்ஸின் உணர்வுகளை போலியாகத் தட்டி எழுப்பும் படங்கள் இல்லை. ஆடுகளம் போன்ற ஒரு படம்தான் இப்போது தேவை.
ஓகே. இனி அடுத்த கேள்விகள்.
4. இளைஞர்களுக்கு இது பிடிக்காதுன்னு நீங்களே ஒரு முடிவுக்கு வரீங்க. இந்த இடத்துல உங்க விமர்சனம் தடுமாற ஆரம்பிக்குது. இது படத்த பத்தின விமர்சனமா இல்லாம இளைஞர்கள பத்தின விமர்சனமா மாறிடுது.
இல்லை. நான் அப்படி எழுதியது, ஒரு பழைய படத்தின் ஃபார்முலாவை அப்படியே வைத்து எடுக்கப்பட்ட போலி படம் என்பதால்தான். ஒருவேளை இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடித்தது என்றால், இளைஞர்கள் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையை நானே மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். இளைஞர்கள் உலகப் படம் பார்ப்பவர்கள்; பல புத்தகங்கள் படிப்பவர்கள் என்று நான் எழுதியபோது, இது தமிழ்நாடு என்பதை மறந்து, பொதுவான உலக இளைஞர்கள் பற்றி எழுதிவிட்டேன் போலும்.
5. நீங்க எது நல்லா இல்லைன்னு சொன்னீங்களோ அதுதான் இங்க வெற்றிக்கு காரணமா இருக்கு. தனுஷ் கதை தேர்வு செஞ்ச விதத்தை தப்பு சொல்றது எல்லாம் , ஒரு விமர்சனத்தை தாண்டுன விஷயமா நான் பாக்குறேன். இதுல commercial வெற்றிக்கான element இருக்குறதுனாலதான் தான் இத produce பண்ணிருப்பாரு.
கமர்ஷியல் வெற்றிக்கான எலிமெண்ட்கள் இருப்பதால்தான் அவர் இதைத் தேர்வு செய்திருக்கிறார் என்பது தெரியாதா என்ன? ஆனால் நான் ஆதங்கப்படுவது எல்லாம், ஆடுகளம் கதையையும் பொல்லாதவன் கதையையும் புதுப்பேட்டை கதையையும் தேர்வு செய்த தனுஷ் மீதுதான். இப்போது இருப்பவர்களில் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது தெரியும். அதனால்தான் அப்படிப்பட்ட தனுஷ் இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்து நடிப்பதை விமர்சிக்கிறேன்.
தமிழ்நாட்டின் திரைப்பட ரசனையைக் கவனித்தால், அறுபதுகளில் ரித்விக் கடக்கும் சத்யஜித் ரேவும் உலக அளவில் அற்புதமான படங்களை எடுத்துக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் நல்ல படங்களின் சாயல் கொஞ்சமும் இல்லாமல் ஜனரஞ்சகப் படங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் எடுத்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட யாருமே உலகத்தரத்தில் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அவர்களுக்குத் தேவையெல்லாம் ஆடியன்ஸின் பாராட்டுகள். கைதட்டல்கள். அப்படித்தான் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுமே இங்கு இருக்கிறார்கள். பொதுவாக இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகத்தின் ரசனை எல்லாவிதத்திலும் குறைவுதான். இங்கே எடுக்கப்படும் படங்கள் நமக்குமட்டும்தான் காவியங்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவும். எனக்குத் தெரிந்து தமிழில் உலக அளவில் இருக்கும் படங்கள் என்றால் வீடு, சந்தியா ராகம், நாயகன், ஆரண்ய காண்டம் ஆகிய நான்கே நான்கு மட்டுமே. கிட்டத்தட்ட 70 வருடங்களாக திரைப்படங்களை எடுத்துக் குவிக்கும் ஒரு தொழிற்சாலையில் நான்கே நான்கு படங்கள் மட்டும்தான் தேறும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? எப்போதுதான் உலக அளவில் தமிழ்நாடு திரைப்படங்களில் பெருமை அடைவது? கேரளா, கர்நாடகா ஆகிய ஊர்களில்கூட உலக அளவில் படங்கள் சர்வசாதாரணமாகத் திரையிடப்படுகின்றன.
‘எனக்கு ஜாலியா இருந்திச்சி… ரசிச்சேன். அதுல என்ன தப்பு?’ என்று கேள்விகள் கேட்கும் நபராக நீங்கள் இருந்தால், உங்கள் தாத்தா பாட்டிக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்களுக்கு எம்.ஜி.ஆர் & சிவாஜி என்றால் உங்களுக்கு தனுஷ் & சிம்பு. இதைத்தாண்டி அருமையான ரசனையை எப்போது வளர்த்துக்கொள்ளப்போகிறீர்கள்? இப்படிப்பட்ட படங்களை எடுப்பவர்கள் வெகு கவனமாக தமிழ் மக்களை நல்ல ரசனையின் பக்கம் சென்றுவிடாமல் வேண்டுமென்றே brainwash செய்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். காரணம் அப்படி நல்ல ரசனை வந்துவிட்டால் இப்போதைய ஹீரோக்கள் அனைவரும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். அதைத்தான் நான் விமர்சிக்கிறேன்.
அட்லீஸ்ட் உலக அளவில் படங்கள் வராவிட்டாலும் பரவாயில்லை; திரைக்கதையாவது கொஞ்சம் நன்றாக இருக்கவேண்டாமா? வெறும் ஹீரோ வழிபாட்டுப் படங்களை எவ்வளவுகாலம்தான் பார்த்துக்கொண்டே இருப்பது?
CONVERSATION