font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

 கமர்ஷியல் படங்களை எடுக்கும் ஆற்றல் ஷங்கரிடம் இருந்து இன்னும் போய்விடவில்லை. காட்சிகளை எப்படி அமைக்கவேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் படத்தில் குறைகளும் உண்டு. நிறைகளையும் குறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சராசரியான தமிழ்த் திரைப்பட ரசிகன் ஒருவன்/ஒருத்தி திரையரங்குக்குச் சென்று ஒருமுறை ஜாலியாகப் பார்க்கும் அளவு அவசியம் இந்தப் படம் விளங்குகிறது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், லிங்கா அளவு என் பொறுமையை இப்படம் சோதிக்கவில்லை. என்னால் முதலிலிருந்து இறுதிவரை படத்தைப் பார்க்க முடிந்தது. இது ஒரு entertainerதான் என்பதிலும் எனக்கு சந்தேகம் இல்லை. அதேபோல் என்னுடன் அமர்ந்திருந்த மக்களுமே படத்தை ரசித்தே பார்த்தனர். பல காட்சிகளில் கைதட்டல் வாங்கியது (Gopalan Mall, Old Madras Road). படம் முடிந்ததும்கூட ஆடியன்ஸின் கைதட்டல் அவர்களின் கருத்தைச் சொல்லியது. படம் முடிந்து வெளியேறும்போது அவர்களில் பலர் பேசியதைக் கேட்டேன். ஆடியன்ஸில் முதியவர்கள் பலரைப் பார்த்தேன். குடும்பம் குடும்பமாகப் பலர் வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோருக்குப் படம் பிடித்திருக்கிறது. இளைஞர்களும் பலர் இருந்தனர். இவர்களின் கருத்து – படம் மிகவும் நீளம் என்பது. கூடவே அவர்களில் பலரும் அந்நியனில் இருந்துதான் ஷங்கரை கவனிப்பவர்கள்.
விரிவாகப் பார்க்கலாம். இனிமேல் வரப்போகும் கட்டுரையில் spoilers இருக்கலாம். எனவே படம் பார்க்காத நண்பர்கள், படத்தைப் பார்த்துவிட்டுப் படிக்கலாம்.
தமிழில் revenge படம் என்பது எண்பதுகளின் பிரபலமான சப்ஜெக்ட். ’நான் வாழ வைப்பேன்’, ’அன்னை ஓர் ஆலயம்’ என்று துவங்கி ஏராளமான படங்களைச் சொல்லலாம். ’பழிவாங்கும் கார்’ என்று கூட ஒரு படம் உண்டு. ‘வா அருகில் வா’ படம் நினைவிருக்கிறதா? ‘மைடியர் லிஸா’வும் பழிவாங்கும் படம்தான். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் இத்தகைய பழிவாங்கும் படங்களில் நடித்துள்ளனர். அவற்றில் எனக்குப் பிடித்தவை அபூர்வ சகோதரர்கள், நான் சிவப்பு மனிதன் (சார்லஸ் ப்ரான்ஸனின் Death Wish படத்தின் காப்பி), ஜீவா மற்றும் ஜல்லிக்கட்டு. இவற்றில் அபூர்வ சகோதரர்கள் போன்ற ஒரு சுவாரஸ்யமான ரிவெஞ்ச் படம் இன்னும் தமிழில் வரவில்லை என்றே நினைக்கிறேன். அந்தப் படம் வந்ததும் கமல் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், ‘இந்த மாதிரி பழிவாங்கும் படம் தமிழ்ல ஏராளமா வந்திருச்சு.. அதுங்க கிட்ட இருந்து இந்தக் கதையை எப்படி வித்தியாசப்படுத்தலாம்னு யோசிச்சப்பதான் குள்ள அப்பு கதாபாத்திரம் உருவாச்சு.. வழக்கமான அதே பழிவாங்கும் கதைல ஒரு சின்ன மாற்றத்தை உருவாக்கியதால் படம் மத்த படங்களிலிருந்து வித்தியாசப்பட்டுச்சு’ என்று சொல்லியிருப்பார். இதுதான் ‘ஐ’ படத்துக்கும் பொருந்தும். ஆனால் அபூர்வ சகோதரர்கள் அளவு ஐ சிறந்த படம் இல்லை. ஏன் என்று பார்க்கலாம்.
முதலில், பிற பழிவாங்கும் படங்களுக்கும் ஐ படத்துக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் – இதில் நாயகன் யாரையும் கொல்வதில்லை. இது ஏனெனில், நாயகனின் அம்மாவோ தந்தையோ வில்லன்களால் கொல்லப்படுவது போன்ற கதை இதில் இல்லை (அபூர்வ சகோதரர்கள்/ஜீவா). நாயகனின் தங்கையை/குணச்சித்திரக் கதாபாத்திரத்தின் மகளை வில்லன்கள் கொடூரமாக ரேப் செய்து கொல்வதில்லை (நான் சிவப்பு மனிதன்/ஜல்லிக்கட்டு). நாயகனின் இழப்பு எதில் என்று பார்த்தால், அவனது அழகையும் உருவத்தையும் இழக்கிறான். அவனது வாழ்க்கையையும் காதலையும் இதனால் தொலைக்கிறான். எனவே வில்லன்கள் மீது இயல்பாகவே கோபப்பட்டு அவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். திட்டங்கள் போட்டு ஒவ்வொருவரையும் பழி வாங்குகிறான். ஒவ்வொருவரின் உருவமும் ஒவ்வொரு வகையில் விகாரப்படுகிறது. தன்னை அவர்கள் அசிங்கப் படுத்தியதுபோலவே அவர்களை இவன் அசிங்கப்படுத்துகிறான். அவ்வளவே.
’அவ்வளவே’ என்று சொன்னதன் காரணம், பொதுவாக ஒரு சிறந்த பழிவாங்கும் படத்தில் (மேலே சொன்ன தமிழ்ப் படங்கள். ஹிந்தியில் யாதோங்கி பாராத், ஷோலே போன்றவை.. உலகளாவிய அளவில் Kill Bill, Death Wish, Oldboy, Django Unchained, Gladiator, Law Abiding CitizenI saw the Devil, True Grit (both versions) மற்றும் எக்கச்சக்கமான படங்கள்) ஹீரோ சந்திக்கும் இழப்பு ஆடியன்ஸின் மனதில் நிற்கும். இதனாலேயே ஹீரோ என்ன செய்தாலும் ஆடியன்ஸுக்கு அது சரிதான் என்றே தோன்றும். கூடவே ஹீரோவின் இழப்பு ஆடியன்ஸின் மனதில் உணர்வுபூர்வமாகப் பதிந்துவிடும். அபூர்வ சகோதரர்களில் ஸ்ரீவித்யா வாயில் விஷம் ஊற்றப்படும் காட்சியை இப்போது பார்த்தாலும் அவசியம் உணர்ச்சிகரமான காட்சிதான் அது. இதனாலேயே, உலகம் முழுதும் இயல்பாகவே, இழப்பு எத்தனை ஆழமானதோ அத்தனைக்கத்தனை வில்லன்களை ஹீரோ பழிவாங்குவதும் கொடூரமாக/வன்முறையாக/ஆடியன்ஸின் மனதைக் குஷிப்படுத்தும் வகையில் இருக்கும். அப்பு பழிவாங்கும் வில்லன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சாவது நமக்கெல்லாம் எப்படி ஜாலியாக இருந்தது? கூடவே எளிதில் யார் வேண்டுமானாலும் அப்புவை அடித்து வீசிவிடலாம் என்ற நிலையிலும் அப்பு வெற்றிகரமாகத் தனது தந்தையின் மரணத்துக்கும் தாயின் வாயில் விஷம் ஊற்றப்படுவதற்கும் சேர்த்துப் பழிவாங்குவது ஆடியன்ஸுக்கு இன்னும் சந்தோஷம் அளித்தது. இதேதான் ஜல்லிக்கட்டு படத்திலும் மணிவண்ணனால் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அதில் எல்லாமே ஒரே டெம்ப்ளேட்தான். சத்யராஜின் வித்தியாசமான கெட்டப்கள் மட்டுமே வேறுபட்டிருக்கும். நான் சிவப்பு மனிதன் படத்தில் ரஜினியின் குடும்பம் சாவது அக்காலத்திய படங்களிலேயே அவசியம் கொடூரம்தான். உணர்வுபூர்வமாக ஒரு தங்கை பாட்டும் அதில் உண்டு. இதனாலேயே ராபின்ஹூட்டாக அவர் மாறி வில்லன்களை வேட்டையாடுவது நமக்குப் பிடிக்கும். அதாவது – ஒன்று – பழிவாங்குவதற்கான காரணம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக சொல்லப்படும். அல்லது வில்லன்களாவது மிகவும் பலம் வாய்ந்த சூப்பர் வில்லன்களாக இருப்பர். அல்லது இந்த இரண்டுமே இருக்கும்.
இந்த ரிவெஞ்ச் டெம்ப்ளேட்டை மனதில் வைத்துக்கொண்டால், கில் பில் போன்ற படங்கள் அத்தனை சுவாரஸ்யமாக ஏன் இருந்தன என்று எளிதாகப் புரிந்துவிடும்.
இதுதான் ‘ஐ’ படத்திலும் ஷங்கரால் சொல்ல முயலப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் கதாநாயகன் லிங்கேசனின் இழப்பின் வலி ஆடியன்ஸுக்கு ஷங்கரால் முழுதாகச் சொல்லப்படவில்லை (அல்லது) ஆடியன்ஸ் அக்கதாபாத்திரத்தின் இழப்பில் முழுமையாக, உணர்வுபூர்வமாக ஈடுபடவில்லை. இதுதான் படத்தின் முதல் பிரச்னையாக எனக்குத் தோன்றியது. லிங்கேசன் இழப்பவை என்னென்ன? முதலில் அவனது உருவம். அவலட்சணமாக மாறுகிறான். பின்னர் அவன் காதலியை இழக்கிறான். அவனது வாழ்க்கையை இழக்கிறான். இவற்றில் காதலியை அவன் இழப்பது எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. காரணம் அந்தக் காதலில் ஆழமே இல்லாததுபோல்தான் காட்டப்பட்டிருக்கிறது. தன் உருவத்தையும் வாழ்க்கையையும் லிங்கேசன் இழப்பதும் வலுவாக சொல்லப்படவில்லை. ஒவ்வொரு வில்லனின் வாழ்க்கையிலும் லிங்கேசன் தன்னையறியாமல் குறுக்கிட்டு அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துவதும் எதுவுமே ஆடியன்ஸின் மனதில் தைக்காதவாறுதான் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. தொழிலதிபர் ராம்குமாரின் வியாபாரம் லிங்கேசனின் ஒரே பேட்டியில் விழுந்துவிடுகிறது என்பதை நம்ப முடியவில்லை. திருநங்கையின் காதலை லிங்கேசன் ஒப்புக்கொள்ளாததால் அவன் மனம் உடைகிறாள் என்பதில் ஆழம் இல்லை. மாடல் ஜானின் வாழ்க்கை லிங்கேசனால் அழிகிறது என்பதும் சரியாக இல்லை. மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் இறுதி வருடத்தில் பங்கேற்கும் நபரை மீறி லிங்கேசன் ஜெயிப்பதால் அவருக்கு வேலை கிடைக்காமல் போய் அவரது வாழ்க்கையும் நாசமாகிறது என்பது மேலோட்டமாக ஒரே வரியில் சொல்லப்பட்டுவிடுகிறது. தியாவின் குடும்ப டாக்டர் தியாவின் மேல் வைத்திருக்கும் வெறி சும்மா ஓரிரண்டு ஷாட்களோடு கடந்துவிடுகிறது. இப்படி எல்லாமே மிகவும் மேலோட்டமாகவே சென்றுவிடுவதால் அவர்கள் அனைவரும் சேர்ந்து லிங்கேசனைப் பழிவாங்குவது முழுக்கவும் என் மனதில் உணர்வுபூர்வமாகப் பதியவில்லை. இதனால் லிங்கேசன் விகாரமாக மாறி, அதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்குகிறான் என்பது ஆழமாகப் பதிந்து, நம்மாலும் அவனுடனேயே பயணித்து அவனை cheer செய்து பாராட்ட முழுதாக முடியவில்லை (இதே ஷங்கரின் இந்தியன் தாத்தாவின் ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் அவர் மேல் நமக்கு எத்தனை பரிவு எழுந்தது? அத்தகைய மேஜிக் இங்கே நடக்கவில்லை. காரணம் ஹீரோவின் இழப்பில் வலு இல்லை (அல்லது) அப்படிச் சொல்லப்படவில்லை).
அடுத்ததாக, ஆரம்பத்தில் இருந்தே எல்லாக் கதாபாத்திரங்களுமே கதையை வசனங்களால் சொல்லிக்கொண்டே செல்கின்றன. குறிப்பாக சந்தானம் ஆங்காங்கே வந்து கோடிட்ட இடங்களை நிரப்புகிறார். இப்படிக் கதையை வசனங்களில் (மட்டும்) சொல்லிக்கொண்டே இருந்தால் ஆடியன்ஸின் மனதில் அது ஒட்டாது.
மூன்றாவதாக, மாடல் ஜானை எடுத்துக்கொண்டால், இப்போதைய மாடல் உலகில் இப்படியா ஒருவன் ஒரு பெண் மாடலின் அருகே அமர்ந்துகொண்டு ‘இண்ணிக்கி நைட்டு ஜாலியா இருக்கலாம் வா’ என்று கூப்பிட்டுக்கொண்டு இருப்பான்? அவனுக்கு கற்பனைத்திறனே இல்லையா? எப்படிப் பேசினால் காரியம் நடக்கும் என்பதுகூடவா அவனுக்குத் தெரியாது? இப்படிப்பட்ட சில அரதப் பழைய காட்சிகள் படத்தில் உண்டு. இதன்கூடவே, வில்லன்கள் ஒன்றாகச் சேர்ந்து சரக்கடித்துக்கொண்டே திட்டம் போடுவதெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸ் பழைய படங்களிலேயே பார்த்தாகிவிட்டது. ஷங்கர் படத்தில் இதெல்லாம் வரும் என்று கற்பனையே செய்ய முடியவில்லை.
நான்காவதாக, ஷங்கருக்கு அவரது முதல் படத்தில் இருந்து இன்றுவரை காதலை சரியாகக் கையாளத் தெரிவதில்லை. ‘காதல்’ என்றாலே மேலோட்டமான காட்சிகள்தான் அவரது படங்களில் இருக்கின்றன. யோசித்துப் பாருங்கள் – அவரது படங்களில் காதல் காட்சிகளைப் பார்த்து மனதில் நமக்கு எதாவது ரியாக்‌ஷன் தோன்றியிருக்கிறதா? காதலுக்காக திடீரென்று மவுண்ட் ரோட்டில் அம்மணமாக ஓடுவது, அமெரிக்காவில் ஒரு பெண்ணைப் பார்த்ததுமே காதல், கிராமத்தில் தான் பாட்டுக்கு வேலை செய்யும் ஒரு பெண்ணைப் பார்த்ததும் வெறித்தனமாக ஃபோட்டோ எடுக்கும் கேமராமேன் (சிவாஜி, எந்திரன் இன்னும் மோசம்) என்றெல்லாம்தான் அவரது படங்களில் காதல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்தில் டிவியில் வரும் மாடலின் விளம்பரங்களைப் பார்த்து வெறியாகி சுற்றும் மனிதன் என்றால் கதை நடப்பது டிவி கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்திலா என்று சந்தேகம் வருகிறது. நாப்கின் உட்பட எல்லாப் பொருட்களையும் வாங்கிக் குவிக்கிறான் ஹீரோ என்பது துளிக்கூட நம்ப முடியவில்லை.
ஷங்கரின் படங்களில் (ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் என்று அறிக) கதாநாயகனுக்கும் அவனைத் துரத்துபவனுக்கும் ஒரு போட்டி இருக்கும். அது கிச்சா-அழகர்நம்பியாக இருக்கலாம். அல்லது இந்தியன் தாத்தா-கிருஷ்ணசாமியாக இருக்கலாம். புகழேந்திக்கும் அரங்கநாதனுக்கும் நடக்கும் tussle எப்படி இருந்தது? இறுதியாக, அந்நியன்/ரெமோ/அம்பி- பிரபாகர் என்று அது தேய்ந்தது. இந்தப் போட்டி அவசியம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஆனால் ஐயில் அது இல்லவே இல்லை. இப்படியெல்லாம் பழிவாங்கப்படும் வில்லன்கள் நினைத்தால் லிங்கேசன் அண்டார்ட்டிகாவில் ஒளிந்திருந்தாலும் அவனைக் கட்டித் தூக்கிவந்து கொல்லமுடியுமே? இப்படிப்பட்ட கேள்விகள் எழாமல் பார்த்துக்கொண்டதுதான் முந்தைய படங்களில் ஷங்கரின் வெற்றி. ஆனால் ஐயில் அது இல்லை.
இது எல்லாவற்றுக்கும் காரணமாக எனக்குத் தோன்றுவது, கதையில் சொல்லப்பட்ட விஷயங்கள் ஆழமாக இல்லாமல் இருந்ததே.
படத்தின் கடைசியான குறை, நீளம். படம் மொத்தம் 189 நிமிடங்கள். சண்டைக்காட்சிகள் மிகவும் நீளமாக உள்ளன. சைனாவில் எடுக்கப்பட்ட காட்சிகளும் அப்படியே. ஏன் சைனா? காரணமே இல்லை. ஷங்கரின் மனதில் சைனாவில் எடுக்கவேண்டும் என்று தோன்றியிருக்கும் போல இருக்கிறது. பாடல்களும் முதன்முறையாக, ஓரிரண்டு பாடல்களை வெட்டியிருக்கலாம் என்று தோன்ற வைத்தன (மெர்சலாயிட்டேன், ஐலா ஐலா & லேடியோ பாடல்கள். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் மற்றும் என்னோடு நீ இருந்தால் ஆகிய பாடல்கள் மட்டும் எனக்குப் பிடித்தன). இந்தப் படத்தை மட்டும் இரண்டேகால்/இரண்டரை மணி நேரத்தில் காண்பித்திருந்தால் இன்னும் பலருக்கும் பிடித்திருக்கலாம்.
சரி. இத்தனை குறைகளைப் பட்டியலிட்டும் எனக்கு இந்தப் படம் பிடித்தது என்று ஏன் சொல்கிறேன்?
‘அழகு’ என்றே பொருள்படும் ’ஐ’ என்ற இந்தப் படத்தில் ஷங்கர் எடுத்துக்கொண்ட தீம் – முதன்முறையாக முற்றிலும் கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையையே மையமாகக் கொண்டே இருக்கிறது. இது ஒரு பாஸிடிவ். சமுதாயத்துக்காக கிச்சா போலவோ இந்தியன் தாத்தா போலவோ புகழேந்தி போலவோ அந்நியனைப் போலவோ லிங்கேசன் போராடுவதில்லை. அவனது போராட்டம் முழுதுமே தனக்காகவே இருக்கிறது. இதுவரை ஷங்கர் படத்தில் இப்படி முற்றிலும் பெர்ஸனலான தீம் வந்ததில்லை (ஓரளவு எந்திரனைச் சொல்லலாம். ஆனால் அதில்கூட, சிட்டியை எதிர்ப்பதன்மூலம் சமுதாயத்தையே அழிக்கக்கூடிய ரோபோ படையைத்தான் ஹீரோ எதிர்க்கிறான்). இதனால் இதுவரை சூப்பர்ஹீரோக்களாகவே காட்டப்பட்டுவந்த ஷங்கரின் ஹீரோக்கள் போல இல்லாமல் இதில் லிங்கேசன் ஒரு சாதா ஹீரோ.
இப்படி ஹீரோ, படத்தின் தீம் போன்றவை வழக்கமான ஷங்கர் படமாக இல்லாமல் இப்படத்தில் மாறியிருப்பதால், இது வழக்கமான ஷங்கர் படத்தின் ஃபீலைக் கொடுக்காது (ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன்). இது முற்றிலும் ஒரு தனிப்பட்ட ரிவெஞ்ச் கதை. இதனாலேயே என்னால் இந்தப் படத்தை முழுக்கவுமே அலுப்பில்லாமல் பார்க்க முடிந்தது. படத்தின் ஏராளமான லாஜிக் ஓட்டைகளையும் மீறி, கூனனாக வரும் லிங்கேசனை எனக்குப் பிடித்தது. முற்றிலுமாக அவனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடிந்தது. இதனாலேயே அவனது கதாபாத்திரத்தின் மீது இரக்கமும் தோன்றியது. முதலிலேயே பார்த்ததுபோல், இதில் கதாநாயகன் யாரையும் கொல்லுவதில்லை. கதாநாயகனின் இழப்பும் ஆழமாகச் சொல்லப்படவில்லை. இதனாலேயே படம் பார்க்கும் சிலருக்கு ஒரு அதிருப்தி தோன்றியிருக்கலாம். லிங்கேசன் கூனனாக ஆனபின் ஒவ்வொருவராகச் சென்று பழிவாங்கும் காட்சிகள் இதனால்தான் (கொல்லக்கூடாது என்பதால்) அந்நியன் போல் உயிரோடு எருமைகளை விட்டுக் கொல்வது, எண்ணைச் சட்டியில் போட்டு வறுப்பது என்றில்லாமல் இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. லிங்கேசனின் நோக்கம் கொல்வது அல்ல. உயிரோடு பழிவாங்குவது. அப்படி அவன் பழிவாங்கும் வில்லன்கள் கொடூரமானவர்களோ அல்லது பலம் வாய்ந்தவர்களோ அல்ல. அவர்கள் அனைவருமே சந்தர்ப்பவசத்தால் இவன் மேல் கோபம் அடைந்தவர்கள். இதுவும் அவர்கள் மேல் நம்மில் சிலருக்கு ஈர்ப்பு வராததற்குக் காரணமாக இருக்கலாம்.
படத்தின் அடுத்த பாஸிடிவ், கூனன் லிங்கேசனின் கெட்டப். இதற்காக ப்ராஸ்தடிக்ஸில் பீட்டர் ஜாக்ஸனின் WETA நிறுவனம் உதவியிருப்பதாக இணையத்தின் மூலமாகத் தெரிகிறது. அட்டகாசமான கெட்டப் அது. உடலை மிகவும் இ(வ)ளைத்து நடித்திருக்கும் விக்ரம் பாராட்டப்படவேண்டியவரே. உடலை ஏற்றி/இறக்கி அவர் நடித்திருப்பது அவசியம் அசாத்தியமான சாதனைதான். அவருக்குக் கொடுத்த பணத்தை எனக்குக் கொடுத்தால்கூட(நான் நடிகனாக இருக்கும்பட்சத்தில்) என்னால் முடியாது. ஒருசிலரைத் தவிர வேறு யாராலும் அது முடியாது என்றே தோன்றுகிறது. சில காட்சிகளில் கூனனால் கஷ்டப்பட்டே சில வேலைகளைச் செய்யமுடியும். அப்போதெல்லாம் விக்ரம் அதை எப்படிச் செய்கிறார் என்று கவனியுங்கள். அவரது உடல்மொழி அபாரம்.
படத்தின் மூன்றாவது பாஸிடிவ்,  இந்தக் கதைக்கேற்ற திரைக்கதை. ஒரு பெர்ஸனல் ரிவெஞ்ச் படத்தை எப்படி எழுதவேண்டும் என்று ஷங்கருக்குத் தெரிந்திருக்கிறது. படத்தில் வரும் காட்சிகளில் புதிதாக எதுவும் இல்லை என்றாலும், அவை அந்தந்த இடங்களில் எடுபடுகின்றனவா என்பதே முக்கியம். லிங்காவில் வரும் பல காட்சிகள் எத்தனை அலுப்பாக இருந்தன? ஃப்ளாஷ்பேக், ரொமான்ஸ், chase, ரிவெஞ்ச் என்று மாற்றிமாற்றி, கதையில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் ஒரு வேகமான காட்சியைப் போட்டு எழுதியிருக்கிறார் ஷங்கர்.
சமீபகாலமாக மிகச்சில தமிழ்ப்படங்களைத் தவிர வேறு எந்தப் படமும் முழுதாக என்னால் ரசித்துப் பார்க்க முடியவில்லை. ‘ரசிப்பது’ என்று இல்லாமல் அட்லீஸ்ட் முழுதாக உட்கார்ந்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கியும் பல படங்களில் கடுப்பே மிஞ்சியது. ஆனால் என்னால் ஐ படத்தில் முதலிலிருந்து இறுதிவரை எரிச்சல் இல்லாமல் முழுப் படத்தையும் பார்க்க முடிந்தது. இதற்குக் காரணம் ஷங்கரின் திரைக்கதைதான் என்று சொல்வேன். ரிவெஞ்ச் படத்தை இப்படம் போல முன்னும் பின்னும் காட்சிகள் அமைத்துதான் எடுக்கமுடியும். வில்லன்களும் சாதாரண ஆட்கள். ஹீரோவும் வழக்கமான ஷங்கர் ப்ராண்ட் சூப்பர்ஹீரோ அல்ல. அவனுமே சாதா ஆள்தான். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஷங்கர் எழுதியிருக்கும் திரைக்கதை எனக்கு அலுப்பின்றியே சென்றது. யோசித்துப் பாருங்கள்- ஷங்கர் படத்தில் வராத டெம்ப்ளேட் காட்சிகளா? ஷங்கர் படம் என்றதுமே என்னென்ன காட்சிகள் எப்படியெல்லாம் வரும் என்றெல்லாம் நாம் பேசாமலா இருந்தோம்? புத்தம் புதிதாக, ஒரு டெம்ப்ளேட் காட்சிகள் கூட இல்லாமல் ஷங்கர் படம் வரும் என்றா எதிர்பார்த்தோம்? எத்தனை டெம்ப்ளேட் காட்சிகள் இருந்தாலும் அவை அந்த இடத்தில் எடுபடுகின்றனவா என்பதே முக்கியம் என்ற முறையில், இப்படத்தில் இந்தக் கதைக்கு அவை எடுபட்டிருக்கின்றன என்பதே என் கருத்து. அந்நியன் படத்துக்குப் பின்னர் ஷங்கரிடம் இருந்து காணாமல் போயிருந்த கதை சொல்லும் முறை, இப்படத்தில் ஒரு 50% திரும்பி வந்திருக்கிறது என்பது என் கருத்து.
இறுதியாக, (இணையத்தின் பக்கம் அவ்வப்போது மட்டும் ஒதுங்கும்)பொதுவான ஆடியன்ஸுக்கு இந்தப் படம் பிடிக்கும். இது ஒரு வழக்கமான ஷங்கர் படம் அல்ல. தனது ஏரியாவில் இருந்து சற்றே வெளியே வந்து ஷங்கர் எடுத்திருக்கும் படம் இது.
பி.கு
1. படத்தில் வரும் திருநங்கையைச் சுற்றிச்சுற்றி விக்ரமும் சந்தானமும் ஆடும் அசிங்கமான காட்சி எனக்குப் புதிதாகத் தெரியவில்லை. ஷங்கருக்கு சமுதாய உணர்ச்சி மிகவும் கம்மி. ப்ராக்டிகலாக அவரைச் சுற்றியிருக்கும் மக்களைப் பற்றி அறியாதவர். எனவே, அக்காட்சி இல்லாமல் இருந்தால்தான் அதிசயம்.ஷங்கர் மட்டுமல்ல – பெரும்பாலான இயக்குநர்களுக்கு சமுதாய உணர்ச்சி அறவே இல்லை. இன்னும் எண்பதுகளிலேயே இவர்களின் மூளை சஞ்சாரம் செய்துகொண்டிருக்கிறது.
2. இத்தனைக்கும் மேல் ஒருவேளை படம் உங்களுக்குப் பிடிக்காமல் இருந்தால், That’s absolutely okay. அதில் தவறும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து அவசியம் இருக்கும்.
3. படத்தில் செலவழிக்கப்பட்டிருக்கும் பணம் எக்கச்சக்கம் என்பது பல காட்சிகளில் தெரிகிறது. அத்தனை பணத்துக்கான தேவை இல்லை என்பது என் கருத்து. காட்சிகளில் பணம் நிரம்பி வழிகிறது. இத்தனை பிரம்மாண்டம் கதைக்கு உதவாமல் அது வேறு ட்ராக்கில் செல்கிறது.
4. இத்தனை வெற்றிகரமான மாடல்கள் (கிட்டத்தட்ட ரஜினிக்கு இணையாக) தமிழ்நாட்டில் இருக்கின்றனரா?
5. ஜிம் ஃபைட்டில் வரும் Boob Dance (விக்ரம் மற்றும் மாமிச மலைகள்) செம்ம காமெடி.  ஆனால் வெறும் ஆண்களின் Boob டான்ஸாகப் போய்விட்டது.
6. ஷங்கரின் அடுத்த படம் எப்படி என்று பார்க்கலாம். அதுதான் அவருக்கு உண்மையான டெஸ்ட்டாக இருக்கப்போகிறது.  என்னால் ஐ படத்தை இன்னொரு முறை பார்க்க இயலாது. ஆனால் ஜெண்டில்மேன், இந்தியன் & முதல்வன் படங்களை இன்னும் பல முறை பார்ப்பேன். ஷங்கரின் திறன் குறைந்திருப்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அப்படியும் ஒரு entertainerஐ அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது என்பது என் இறுதியான கருத்து.
7. பி.சி. ஸ்ரீராம் பற்றி ஏன் கருத்து சொல்லவில்லை? எனக்கு ஒளிப்பதிவைப் பற்றி எதுவும் தெரியாது என்பதே காரணம். படம் முழுக்க கண்ணில் உறுத்தல் இல்லாமல் பார்க்க முடிந்தது. ஒளிப்பதிவு துருத்திக்கொண்டு தெரியவில்லை. ரஹ்மான் பற்றிய கருத்து, இரண்டு பாடல்களே போதுமானவை என்று மேலேயே சொல்லப்பட்டுவிட்டது.
8. சுஜாதா ஷங்கரிடம் இல்லாததால் ஷங்கருக்கு இழப்பு என்று சொல்பவர்கள், ஜெண்டில்மேன் & காதலன் படங்களைப் பார்க்கவும். கூடவே சுஜாதா இருந்த சிவாஜி, எந்திரன் (ஆரம்ப கட்டம்) மற்றும் பாய்ஸ் ஆகிய படங்களையும் இன்னொரு முறை பார்க்கவும்.

CONVERSATION

Back
to top