80'S தமிழ்ப்படங்கள் -2
80'S தமிழ்ப்படங்கள் -1
எண்பதுகளின் முன்பாதியைப் பொறுத்தவரை, கமலும் ரஜினியும் மசாலாப் படங்களிலேயே நடித்து வந்தனர். மிக அரிதாக, இருவருக்கும் ஏதாவது சீரியஸ் படம் அமைந்தாலும் கூட. அப்படி அவர்கள் நடித்த மசாலாக்களே பெருவெற்றியும் அடைந்துவந்திருக்கின்றன. கமலைப் பொறுத்தவரை, அதிகமான ரீமேக்குகள் இல்லாமல், தமிழிலேயே கதைகள் எழுதப்பட்டு (உதா: காக்கி சட்டை – சத்யா மூவீஸ் கதை இலாகா) அதில் நடித்தார். ரஜினியோ, அலட்டிக்கொள்ளாமல், அமிதாப்பின் படங்களை ரீமேக் செய்து, தனக்கேற்றவாறு டிங்கரிங் செய்யப்பட்ட கதைகளில் நடித்து, சுலப வெற்றியை சம்பாதித்தார். இதில் ஓரிரண்டு விதிவிலக்குகளும் உண்டு.
80'S தமிழ்ப்படங்கள் -1
எண்பதுகளின் முன்பாதியைப் பொறுத்தவரை, கமலும் ரஜினியும் மசாலாப் படங்களிலேயே நடித்து வந்தனர். மிக அரிதாக, இருவருக்கும் ஏதாவது சீரியஸ் படம் அமைந்தாலும் கூட. அப்படி அவர்கள் நடித்த மசாலாக்களே பெருவெற்றியும் அடைந்துவந்திருக்கின்றன. கமலைப் பொறுத்தவரை, அதிகமான ரீமேக்குகள் இல்லாமல், தமிழிலேயே கதைகள் எழுதப்பட்டு (உதா: காக்கி சட்டை – சத்யா மூவீஸ் கதை இலாகா) அதில் நடித்தார். ரஜினியோ, அலட்டிக்கொள்ளாமல், அமிதாப்பின் படங்களை ரீமேக் செய்து, தனக்கேற்றவாறு டிங்கரிங் செய்யப்பட்ட கதைகளில் நடித்து, சுலப வெற்றியை சம்பாதித்தார். இதில் ஓரிரண்டு விதிவிலக்குகளும் உண்டு.
நமது லிஸ்ட்டின் முதல் போட்டி – 1980 – வறுமையின் நிறம் சிவப்பு Vs பொல்லாதவன். தீபாவளி.
1980யை எடுத்துக்கொண்டால், ஆல்ரெடி இருவரும் பாக்ஸ் ஆஃபீஸ் கதாநாயகர்கள் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டிருந்தது. கமலைப் பொறுத்தவரை, அதற்கு முந்தைய வருடம் தான் ‘நீயா’ பெருவெற்றியடைந்திருந்தது. அதற்கும் முந்தைய வருடத்தில்(1978) ‘சிவப்பு ரோஜாக்கள்’ , ‘மரோசரித்ரா’ ஆகிய இரண்டு சூப்பர்ஹிட்கள் வேறு. ரஜினியை எடுத்துக்கொண்டால், 1979ல் ‘தர்மயுத்தம்’, ‘அன்னை ஓர் ஆலயம்’ ஆகிய ஹிட்கள். கூடவே, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ என்ற சீரியஸ் படம். 1978ல், 21 படங்களை நான் ஸ்டாப்பாக நடித்துவேறு இருந்தார் ரஜினி. அந்தக் காலகட்டத்தில், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கமலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரஜினியும் படு பிஸியாக இருந்த நேரம். கூடவே, இருவருமே இணைந்து நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தைப் போன்று இன்னும் சில படங்களும் வெளிவந்திருந்தன (அலாவுதீனும் அ.வி, இளமை ஊஞ்சலாடுகிறது etc)
இந்த பிஸியான ஸ்கெட்யூலில், பாலசந்தரின் படமாக கமல் நடித்து ‘வறுமையின் நிறம் சிவப்பு’ வெளிவர, ரஜினியின் படமாக ‘பொல்லாதவன்’ வெளிவந்தது. இப்படத்தை இயக்கியிருந்தவர் முக்தா சீனிவாசன். பொல்லாதவனுக்கு முன்னர் அதே வருடத்தில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் ‘பில்லா’. அதேபோல் கமலுக்கு, இரண்டு வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பில் இழுத்துக்கொண்டிருந்த ‘குரு’ (இப்படத்தில், பாடல்காட்சிகளில் சிவப்பு ரோஜாக்கள் கால கமலும், மற்ற காட்சிகளில் கொஞ்சம் மாடர்ன் கமலும் தோன்றுவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம்).
இரண்டுமே நன்றாக ஓடிய படங்கள். ஆனால், இன்றும், பொல்லாதவன் ஒரு மசாலாவாகவும், வறுமையின் நிறம் சிவப்பு ஒரு நல்ல படமாகவும் இருதரப்பு ரசிகர்களாலும் எடுத்துக்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், பொல்லாதவனில், ‘நான் பொல்லாதவன்’ பாடலைத் தவிர வேறு எந்தக் காட்சியையும் நினைவுகூர முடியவில்லை. ஆனால், வறுமையின் நிறம் சிவப்பு, ஸீன் பை ஸீன் நினைவிருக்கிறது. இரண்டு படங்களையும் நான் கடைசியாகப் பார்த்தது, பல வருடங்களுக்கு முன்.
அடுத்த போட்டி – 1982 தமிழ்ப் புத்தாண்டு. சிம்லா ஸ்பெஷல் Vs ரங்கா.
இந்தக் காலகட்டத்தில், தமிழின் தவிர்க்கமுடியாத இரண்டு சக்திகளாக இருவரும் வளர்ந்துவிட்டனர் என்று துணிந்து சொல்லலாம். 1981லேயே கமலின் நூறாவது படம் வெளிவந்துவிட்டது. 1981ல் வெளிவந்திருக்கும் கமலின் படங்களைப் பாருங்கள்: ஏக் துஜே கேலியே (கமலின் 101வது படம்), சவால், சங்கர்லால் (பாதி படத்துக்கு மேல் இப்படத்தை இயக்கியவர் கமலே தான். அந்த வகையில், கமலின் முதல் direction முயற்சி இதுதான். ஆனால் டைட்டிலில் பெயர் வந்திருக்காது. இந்த விஷயத்தை தொண்ணூறுகளில் வெளிவந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடிகரைப் பற்றிய பல அட்டகாசமான தகவல்கள் அதில் இருக்கும். பெயர் மறந்துவிட்டது. நல்ல வழவழா பேப்பரில், கலர்ப்படங்கள் போட்டு இருக்கும் (பேசும் படம், பொம்மை அல்ல). அந்தக் கட்டுரைகளை சேகரித்து வைத்திருந்தேன். அப்போது என் வயது – 13).
ரஜினிக்கு, 1981ல், தில்லுமுல்லு, நெற்றிக்கண் ஆகிய டக்கரான படங்கள்.
இந்த இரண்டு படங்களில், எனக்குத் தெரிந்து, சிம்லா ஸ்பெஷல் படுதோல்வியடைந்தது. இயக்கியவர், அதே முக்தா சீனிவாசன். ரங்கா, ஆர். தியாகராஜனால் இயக்கப்பட்டது. தியாகராஜன், எடிட்டராக இருந்து இயக்குனராக ஆனவர். ராஜேஷ் கன்னா நடித்த ‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்தின் எடிட்டர். Bewafai(1985) என்ற ஹிந்திப் படத்தை ரஜினியையும் ராஜேஷ் கன்னாவையும் வைத்து இயக்கியிருக்கிறார். தேவர் பிலிம்ஸையும் இவரையும் பிரிக்கவே முடியாது என்பதுபோல், எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும், தேவர் பிலிம்ஸ் படங்களில் 99% இயக்கியது இவரே (ஆட்டுக்கார அலமேலு, ராம் லக்ஷ்மன் etc). ஆக, ரங்கா வெளிவந்தபோது நட்சத்திர அந்தஸ்தில் இருந்த இயக்குநர். இதற்கு முன்னும் ரஜினியை வைத்து சில வெற்றிப்படங்கள் இயக்கியவர் (அன்புக்கு நான் அடிமை, அன்னை ஓர் ஆலயம், தாய் மீது சத்தியம்). இருந்தாலும், ரங்காவை அவரால் காப்பாற்ற முடியவில்லை என்றே தெரிகிறது.
எனக்கு சிம்லா ஸ்பெஷலே பிடிக்கும். குறிப்பாக, எஸ்.வி சேகர் + கமல் கூட்டணி அடிக்கும் மொக்கை ஜோக்குகள் (எஸ்.வி சேகர் நாடகங்களையும் மாமாவின் இசைத்தட்டு நூலகத்தில் இருந்தபோது பலமுறை கேட்டிருக்கிறேன்). அதேபோல், ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா’ பாடலையும் மறக்கவே முடியாது.
அடுத்த போட்டி – அதே வருடமான 1982 – சுதந்திர தினம் – சகலகலா வல்லவன் Vs எங்கேயோ கேட்ட குரல்.
எந்தப் படம் வெற்றிபெற்றது என்பதை சொல்லவே தேவையில்லை. சகலகலா வல்லவன் வசூல் சாதனை புரிய, எங்கேயோ கேட்ட குரல் தோல்வி. எஸ்.பி. முத்துராமன்தான் இரண்டுக்கும் இயக்குநர். இந்தப் படங்களில், என்னால் சகலகலா வல்லவனையே நினைத்துப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, இதோ இந்தப் பாடல். இளமை இதோ இதோவெல்லாம் இப்பாடலுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. இப்பாடலின் இசையை ஹெட்ஃபோனில் கேட்கவும். அடி பட்டையைக் கிளப்பியிருப்பார் இளையராஜா. இதில் கமல் வைத்திருக்கும் அட்டகாசமான தாடிக்கு இப்போதும் நான் ரசிகன்.
இந்தக் காலகட்டத்தில், ரஜினியும் கமலும், முறையே 32 மற்றும் 28 வயதுக்காரர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள் (தனது 27வது வயதில், சதமடித்தார் கமல்).
அடுத்த போட்டி – 1983 – தீபாவளி. தூங்காதே தம்பி தூங்காதே Vs தங்கமகன்.
எனக்குத் தெரிந்து தங்கமகனும் வெற்றிகரமாக ஓடினாலும், தூங்காதே தம்பி தூங்காதே, மெகாஹிட் படம். தூ.த.தூ படத்தை இயக்கியவர் எஸ்.பி. முத்துராமன். தங்கமகன், ஏ. ஜெகன்னாதனால் (மூன்று முகம், காதல் பரிசு) இயக்கப்பட்டது.
கமலுக்கு 1983 ஒரு சிறந்த வருடம். சாகர சங்கமம் (சலங்கை ஒலி), சட்டம், சத்மா (மூன்றாம் பிறை) ஆகிய படங்களோடு சேர்ந்து தூ.த.தூவும் ஹிட் (முதல் மூன்று படங்களில் ‘ச’ செண்டிமெண்ட் இருக்கிறதோ?). அதே வருடத்தில் வெளிவந்திருந்த ‘பொய்க்கால் குதிரை’ படத்தில், சலூன் ஃபோட்டோவில் இருந்துகொண்டு, ஹீரோ ரவீந்தருக்கு காதல் டிப்ஸ்கள் கொடுக்கும் கமல்ஹாசனாகவே கௌரவ வேடத்தில் நடித்திருப்பார் (கவிஞர் வாலி பிய்த்து உதறியிருக்கும் படம். பாலசந்தர் இயக்கம். எனக்குப் பிடிக்கும்). ரஜினிக்கு, அது கொஞ்சம் ஆவரேஜ் வருடம்தான். பாயும் புலியில் தொடங்கிய வெற்றி, தாய்வீட்டில் நிலை பெற்று, அடுத்த வாரிசில் முடிந்திருந்தபோதுதான் தங்க மகன் வெளிவந்திருந்தது (தாய்வீட்டின் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, சுஹாஸினி பாடும் தங்கை செண்டிமெண்ட் பாடல் ‘ஆசை நெஞ்சே‘, இப்போதும் என் ஃபேவரைட். கூடவே, ‘அழகிய கொடியே ஆடடி’ , ‘உன்னை அழைத்தது பெண்’ ஆகிய சூப்பர் பாடல்கள் இதில் எனக்குப் பிடிக்கும். சங்கர் கணேஷ், ஹிந்தி சாயலில் இசையமைத்திருந்த படம்).
சரியாக ஒரு வருடம் கழித்து – 1884 – தீபாவளி. எனக்குள் ஒருவன் Vs நல்லவனுக்கு நல்லவன்.
இம்முறை ஹிட்டானது ரஜினி படம். 1983 தூ.த.தூவுக்குப் பிறகு, 1984 துவக்கத்தில் இருந்து நான்கு ஹிந்திப்படங்கள் (Yeh Desh – கௌரவ வேடம். Ek Nai Paheli, Yaadgar & Raajtilak.. மூன்றும் ஹிந்தியில் ஃப்ளாப் என்பது இத்தொடருக்கு சம்மந்தமில்லாத விஷயம்) தொடர்ச்சியாக நடித்துமுடித்திருந்த கமலுக்கு, அந்த வருடத்தின் முதல் தமிழ்ப்படமாக அமைந்தது ‘எனக்குள் ஒருவன்’. கிட்டத்தட்ட பத்து மாதங்கள் எந்தப் படமும் தமிழில் வராததால், எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த படம். ரஜினிக்கோ, கை கொடுக்கும் கை, நான் மகான் அல்ல, தம்பிக்கு எந்த ஊரு ஆகிய ஹிட்கள், அந்த வருடத்தைத் தமிழில் நன்றாகவே அவருக்கு ஸ்திரப்படுத்தியிருந்தன. அவ்வருடத்தில், ரஜினியும் ஹிந்தியில் இரண்டு படங்கள் நடித்திருந்தார் (Meri Adhaalat மற்றும் Gangvaa. அவையும் ஃப்ளாப்கள் தான்). ஆனால், நல்லவனுக்கு நல்லவன், ஒரு மசாலாப் படத்துக்கான அத்தனை அம்சங்களும் கொண்டிருந்த AVM படம் என்பதால், பெருவெற்றி அடைந்தது. எனக்குள் ஒருவனோ, Reincarnation of Peter Proud மற்றும் Karz படங்களின் Rip off. தோல்வி. பாலசந்தர் தயாரிப்பு. இம்முறையும் இரண்டு படங்களையும் இயக்கியிருந்தவர் எஸ்.பி. முத்துராமன். (ஆனால், இப்படத்துக்குப் பின் வெளிவந்த ‘கைதியின் டைரி’, கமலுக்கு மெகா ஹிட் ஆனது).
அடுத்த போட்டி – 1985 – தமிழ்ப் புத்தாண்டு. காக்கி சட்டை Vs நான் சிகப்பு மனிதன்.
காக்கி சட்டை, சத்யா மூவீஸின் ஃபார்முலா படம். ராஜசேகர் இயக்கம். இன்றளவும் பல படங்களுக்கு முன்னோடி. சூப்பர் ஹிட் பாடல்கள். படமும் பயங்கர ஹிட். நான் சிகப்பு மனிதனோ, Death Wish படத்தின் காப்பி. எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கம். ராபின்ஹூட், பழிவாங்குதல், கோர்ட் காட்சிகள், கூடவே பாக்யராஜின் காமெடி நடிப்பு ஆகிய பல விஷயங்களோடு சேர்த்து, அக்கால கட்டத்தின் தவிர்க்கமுடியாத வில்லனாக மாறியிருந்த சத்யராஜின் டக்கர் வில்லத்தனம் ஆகியவை, படத்தை வெற்றிப்படமாக்கின. ஆனால், இந்தப் போரில் வென்றது காக்கி சட்டை என்பதில் சந்தேகமே இல்லை.
(ரயிலில் ராபின்ஹூட்டாகப் பயணிக்கும்போது, பேப்பர் படிப்பார் ரஜினி. அப்போது, ஒரே ஷாட்டில், மிக அனாயாசமாக, ஒரு பக்கத்தை விரிக்கும்போதே, வாயில் உள்ள சிகரெட்டை உள்ளங்கையில் ஒரே கையில் இருக்கும் தீக்குச்சியை உரசுவதன் மூலம் பற்ற வைப்பார். இது ‘ஸ்டைல்’ என்று அவர் வெளிப்படையாக செய்யும் வகையில் சேராது. அது மிக சீரியஸான ஒரு ஸீன். அந்த ஷாட், மூன்று நொடிகளே வரும். மிக மிக சாதாரணமான ஒரு ஷாட். அது இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் – ‘ராபின்ஹூட், பேப்பர் படிக்கிறான். ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்தை விரிக்கிறான்’. அந்தக் காட்சியில் கூட இப்படி ஒரு பட்டையைக் கிளப்பும் விஷயம் – . இதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று அன்று புரிந்து கொண்டேன் – ஆனால் இதே போல் ஒரு ஷாட், Good bad and the uglyயில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் செய்ததைக் கவனித்திருக்கிறேன்., அந்த ஷாட்டின் அட்டக்காப்பிதான் நான் சிகப்பு மனிதனில் வரும் ஷாட்).
1985 தீபாவளி. இம்முறை, ஜப்பானில் கல்யாணராமன் Vs படிக்காதவன்.
படிக்காதவன் வெற்றியடைந்தது (even though it was a copied film). நல்ல பாடல்கள், ஜப்பானில் ஷூட்டிங் ஆகிய விஷயங்கள் இருந்தபோதிலும், வலுவான திரைக்கதை இல்லாததால், ஜப்பானில் கல்யாணராமன் தோல்வியடைந்தது. இப்படத்திலும் சத்யராஜே வில்லன்.
இதற்கு அடுத்த வருடமான 1986 தான் என்னால் மறக்கவே முடியாத வருடம். கோவை அப்ஸரா தியேட்டரில், கோட் சூட் அணிந்து, ஒரு கையில் பிஸ்டலை வைத்துக்கொண்டு, திரும்பிப் பார்க்கும் கமலின் பிரம்மாண்டமான கட் அவுட்டைப் பார்த்தேன் (7 வயது). கட் அவுட்டின் அடியில், டிஜிடல் எழுத்துக்களில், ‘வி க் ர ம்’ என்று படு ஸ்டைலாக எழுதப்பட்டிருக்கும். விபரம் தெரிந்த பின், தமிழில் கமல் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை எனக்குத் தெரியவைத்த படம். இதன்பின்னர்தான் ரஜினியைப் பற்றித் தெரிந்துகொண்டேன். இப்படத்துக்குப் பின் வெளியாகி, பெருவெற்றி அடைந்த படம் – சத்யராஜின் ‘முதல் வசந்தம்’. அந்த வருடத்தின் தீபாவளியில், புன்னகை மன்னன் வெளியாகி, வெற்றியடைந்தது. அப்படத்தின் கூடவே வெளியான ரஜினியின் சொந்தப்படமான மாவீரன், தோல்வியடைந்தது. விக்ரம், மாவீரன் இரண்டையும் இயக்கியவர், ராஜசேகர்.
அடுத்து, 1987 தீபாவளி. இந்த முறை போட்டியிட்ட படங்கள், நாயகன் மற்றும் மனிதன்.
நாயகனைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல், நண்பர் அராத்து தெரிவித்தார். அக்காலத்தில், திரைப்பட போஸ்டர்கள் அந்த அளவு பிரமாதமாக இல்லாத காலம். ஆனால், இப்படத்துக்கு, உடல் கிழிந்து, போலீஸ் ஸ்டேஷனில் கமல் தொங்கிக்கொண்டிருக்கும் படத்தை போஸ்டரில் அடித்து வெளியிட்டிருந்தார்களாம். அக்காலத்தில் இது எப்பேற்பட்ட சென்சேஷனை ஏற்படுத்தியிருக்கும் என்பது சொல்லவே தேவையில்லை அல்லவா? கமல் மீசையை வேறு எடுத்துவிட்டு நடித்திருந்த படம். மணிரத்னத்தின் வருகையைத் தமிழகம் மௌன ராகத்தினால் உணரத் தொடங்கியிருந்த காலம். அக்காலகட்டத்தில் மட்டுமல்ல, இப்போது பார்த்தாலும், பார்ப்பவர்களின் மனதில் தீராத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக நாயகன் அமைந்தது. அற்புதமான பாடல்கள். சிறந்த நடிப்பு (அல் பசீனோவையும் ராபர்ட் டி நீரோவையும் கமல் உற்றுக் கவனித்து அதே போல் நடித்திருந்தாலும்). இத்தோடு ஒப்பிட்டால், மனிதன் என்பது படு சாதாரணமான ஒரு மசாலா. ஆனால், இரண்டுமே வெற்றிபெற்றன.
அடுத்த போட்டி – 1989 தீபாவளி. மாப்பிள்ளை Vs வெற்றிவிழா.
இரண்டுமே ஹிட். இப்படங்களில், வெற்றிவிழா ஷாட் பை ஷாட்டாக எனக்கு நினைவிருக்கிறது. ஜிந்தாவை மறக்கமுடியாது. கூடவே, இதோ இப்பாடலையும்.
இன்னொரு விஷயம் – எண்பதுகளில், ஒரு சிறிய விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். தர்மத்தின் தலைவன் வந்த புதிது. அதில், ‘ஒத்தடி ஒத்தடி’ பாடலில், இந்த வரி இருக்கும்.
‘வில்லாதி வில்லனடி… எனக்கு இணையாகத்தான் கில்லாடி இல்லையடி…’
அதன்பின் வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில், அண்ணாத்த ஆடுறார் பாடலில், இவ்விதமாக அந்த வரிகளுக்குப் பதிலடியும் இருக்கும்.
‘வில்லாதி வில்லனும் அஞ்சணும் கெஞ்சணும்…வந்திங்கு வந்தனம் சொல்லணும்’
‘வில்லாதி வில்லனும் அஞ்சணும் கெஞ்சணும்…வந்திங்கு வந்தனம் சொல்லணும்’
கூடவே, இந்த வரியும்.
‘கில்லாடி ஊரிலே யாரடா கூறடா மல்லாடிப் பார்ப்பமா வாங்கடா’
முதல் பாடலில் இருக்கும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி, இப்படியும் பதிலடி கொடுக்க முடியும் என்பதை இப்பாடல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
CONVERSATION