Good Story well told
நம்மிடம் இருக்கும் கதை ஒன்றை மிக நல்ல கதை என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதை நண்பர்களிடம் சொல்கிறோம். அவர்களுமே இந்தக் கதையைக் கேட்டு நம்மை என்கரேஜ் செய்கின்றனர். அப்போது இது ஒரு நல்ல கதை என்ற எண்ணம் இன்னும் ஆழமாக நமது மனதில் பதிகிறது. கதையை நன்றாக, ஆழமாக விவரித்துத் திரைக்கதையாக எழுத ஆரம்பிக்கிறோம். எழுதி முடிக்கிறோம். படப்பிடிப்பையும் ஆரம்பிக்கிறோம். ஆனால் படம் வெளிவந்து படுதோல்வி அடைகிறது. என்ன காரணம் என்று கவனித்தால், கதை நன்றாக இருந்திருந்தாலும், திரைக்கதை மிகவும் மெதுவாக, அலுப்பாக உள்ளது என்பது புரிகிறது. கதை மீது இருக்கும் நம்பிக்கையாலேயே திரைக்கதையை நாம் சரியாகக் கவனிக்காமல் போய்விட்டோம்.
எனவே, நல்ல கதை இருந்தால் மட்டுமே போதாது. அந்தக் கதை, சிறப்பான முறையில் சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். ‘சிறப்பான முறை’ என்றால் என்ன? திரைக்கதை சுவாரஸ்யமாகவோ உணர்வுபூர்வமாகவோ நகைச்சுவையாகவோ சோகமாகவோ அந்தக் கதைக்கு ஏற்ற விதத்தில் இருக்கவேண்டும். அது எப்படி? படம் பார்க்கும் ஆடியன்ஸை முழுமையாக அப்படத்துக்குள் இழுத்துக்கொண்டு அவர்களுக்கு மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை வழங்குவதன்மூலமே அது நடக்கும். படம் பார்ப்பவர்களின் மனதில் ஒரு சிறிய நரம்பை அசைக்கவேண்டும். அந்த அனுபவம் அவர்களுக்கு எப்போதும் நினைவிருக்கவேண்டும். அப்படிப்பட்ட படங்களான உதிரிப்பூக்கள், நாயகன், மகாநதி, அலைபாயுதே, காதல் கொண்டேன், கல்யாணப்பரிசு, காதலிக்க நேரமில்லை, மைக்கேல் மதன காம ராஜன், தளபதி போன்ற படங்களைக் கவனித்தால் இது புரியும்.
வெறுமே எழுதிக்கொண்டு மட்டுமே இருக்காமல், எழுதி முடித்த பக்கங்களை வைத்துக்கொண்டு அவற்றை நோக்கிக் கேள்விகள் எழுப்பித்தான் இப்படிப்பட்ட திரைக்கதைகளை எழுத முடியும். முதலில் நமது மனதில் இருக்கும் அந்த உலகத்துக்குள் நுழையவேண்டும். பின்னர் அதில் கதாபாத்திரங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும்போது அதனை நாம் எழுதவேண்டும் (இதுதான் க்வெண்டின் டாரண்டினோவின் வழிமுறை என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ‘நான் செய்வதெல்லாம் என் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்டு எழுதுவது மட்டுமே’ என்று பலமுறை சொல்லியிருக்கிறார்). இதன்பின் என்ன செய்யவேண்டும்? நமது மனதில் இருக்கும் அந்த உலகத்தில் இருந்து வெளியே குதிக்கவேண்டும். இதுவரை எழுதியதை ஒருமுறை படிக்கவேண்டும். ‘இது நன்றாக உள்ளதா?’, ‘எடுபடுமா?’, ‘மாற்றங்கள் செய்யவேண்டுமா?’ என்றெல்லாம் பலமுறை கேள்விகளைக் கேட்டுக்கொண்டால்மட்டுமே நம்மால் ஒரு நல்ல திரைக்கதையைப் படிப்படியாக செதுக்கமுடியும் (இந்த இடத்தில், ஸிட் ஃபீல்ட் சொல்லியிருப்பது நினைவிருக்கலாம். திரைக்கதையை முழுதாக முதலில் எழுதிவிட்டு, அதன்பின்னர்தான் ஒவ்வொரு ட்ராஃப்ட்டாக அதனை ஆராய்ந்து சரிப்படுத்தவேண்டும் என்பது அவர் கருத்து. இந்த இரண்டில் எதைப் பின்பற்றுவது? இரண்டையும் தெரிந்துகொண்டுவிட்டு, நமக்கு எது சரியாக வருகிறதோ அதைப் பின்பற்றலாம்).
Story and Life
கடந்த பல வருடங்களில், ராபர்ட் மெக்கீ பார்க்கும் திரைக்கதைகள் இரண்டு வகைப்பட்டவை என்கிறார் அவர். இந்த இரண்டு வகைகள்தான் முக்கால்வாசித் திரைக்கதைகள் எழுதப்படும் டெம்ப்ளேட். இந்த இரண்டு வகைகளுமே தோல்வியுற்ற வடிவங்களே. இவைகளைப்போல் திரைக்கதை வடிவம் இருந்தால் அப்படம் ஆடியன்ஸின் நினைவில் நிற்காது போவதற்கே வாய்ப்புகள் அதிகம். முதல் மோசமான திரைக்கதை வடிவம், ‘Personal Story’ வகையைச் சேர்ந்தது.
ஒரு அலுவலகத்தில் ஹீரோயினைச் சந்திக்கிறோம். அவளுக்கு ஒரு பெரிய பிரச்னை. பதவி உயர்வு கிடைக்கும் சூழலில், அவளுக்கு மட்டும் அது கிடைப்பதில்லை. கோபத்துடன் கிளம்பும் ஹீரோயின் அவளது பெற்றோரின் வீட்டுக்குச் செல்கிறாள். அங்கே முதுமை காரணமாக அவளது தந்தை தளர்ந்து கிடக்கிறார். தாயினால் எந்த வேலையும் செய்யமுடியவில்லை. அங்கிருந்து மறுபடி அவள் தங்கியிருக்கும் இடத்துக்கு வருகிறாள். அவளுடன் இருக்கும் சோம்பேறி ரூம்மேட்டுடன் பிரச்னை. பின்னர் அவளது காதலன் அவளை அட்டகாசமான ஒரு ரெஸ்டாரண்ட்டுக்குக் கூட்டிச் செல்கிறான் – இவள் டயட்டில் இருக்கிறாள் என்பதை மறந்து. அலுவலகம் செல்கிறாள். ஆச்சரியகரமாக அவளுக்குப் பதவி உயர்வு கிடைக்கிறது. ஆனால் அத்துடன் வேறு பல பிரச்னைகளும் சேர்ந்து வருகின்றன. பெற்றோரின் வீடு செல்கிறாள். தந்தைக்கு இருக்கக்கூடிய சில பிரச்னைகளைத் தீர்க்கிறாள். அப்போதுதான் அவளது அம்மாவுக்கு இருக்கும் சில பிரச்னைகள் பெரிதாக வெடிக்கின்றன. வீடு வந்தால், அவளுடன் சண்டையிட்ட ரூம்மேட் இவளது டிவியைத் தூக்கிக்கொண்டு அறையையே காலிசெய்துவிட்டு ஓடிவிட்டாள். வாடகையையும் அவள் தந்திருக்கவில்லை. ஹீரோயினின் காதலனுடன் சண்டையிடுகிறாள். காதல் உடைகிறது. கோபத்தில் கண்டபடி வீட்டிலேயே இருந்துகொண்டு தின்பதால் பத்து கிலோ கூடுகிறது. இருந்தாலும் தைரியமாக அமர்ந்து வேலையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கிறாள். பின்னர் பெற்றோர் வீடு சென்று, தாய்+தந்தையுடன் வெளிப்படையாகப் பேசித் தாயின் பிரச்னைகளைத் தீர்க்கிறாள். பின்னர் பார்த்தால் ஓடிப்போன ரூம்மேட் பல வாரங்களுக்கு முன்னரே எல்லா வாடகையையும் அடைத்துவிட்டே சென்றிருக்கிறாள் என்பது புரிகிறது. எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனித்து எக்கச்சக்கமாகப் பொறுப்பெடுத்துக்கொள்ளும் டைப் அந்த ரூம்மேட் (anal-retentive). இதனால்தான் அப்படி நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் அந்த ரூம்மேட் திரும்பிவந்து, ஹீரோயினுக்குப் புதிய பையன் ஒருவனை அறிமுகம் செய்கிறாள். இப்போது திரைக்கதையில் 95வது பக்கம். இதன்பின் உறுதியுடன் அமர்ந்து டயட்டை மறுபடியும் துவங்கி, உடல் இளைக்கிறாள். கூடவே, புதிய பையனுடன் உறவைத் தொடரலாமா வேண்டாமா என்று உணர்வுபூர்வமாகக் குழம்பி, கடைசி 25 பக்கங்களில் அந்த உரவு வேண்டாம்; வேலையில் கவனம் செலுத்துவோம் என்று முடிவெடுக்கிறாள். கண்ணீர் நிறைந்த பக்கங்களோடு திரைக்கதை முடிகிறது.
இது மெக்கீ கவனிக்கும் முதல் டெம்ப்ளேட். இரண்டாவதாக, அதிரடி ஆக் ஷன் டெம்ப்ளேட் ஒன்று. ‘இதுபோல் படமெடுத்தால் அவசியம் வெற்றி’ என்று தமிழில் வருகின்றனவே சில படங்கள். அப்படி:
ஏர்போர்ட்டில் லக்கேஜ் மாறிவிடுவதால், ஒரு மென்பொருள் விற்பனையாளனின் கையில் உலகையே-அடுத்த-நொடியில்-அழிக்கும்-விஷயம் ஒன்று கிடைத்துவிடுகிறது. இந்த உலகையே-அடுத்த-நொடியில்-அழிக்கும்-விஷயம் மிகச்சிறியதாகவேறு இருக்கிறது (தசாவதார ‘vial’ நினைவுவருகிறதா?).. கிட்டத்தட்ட இவன் பாக்கெட்டில் இருக்கும் பால்பாயிண்ட் பேனாவின் நுனியளவு. இதனால் அவனுக்கு எக்கச்சக்கப் பிரச்னைகள் வருகின்றன. கிட்டத்தட்ட மூன்று டஜன் கதாபாத்திரங்கள் இவனைத் துரத்துகின்றனர். இதில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று ஐடெண்டிடிகள் உள்ளன. இந்த எல்லாருமே அமெரிக்கா & ரஷ்யாவில் உளவு பார்த்தவர்கள். இவர்கள் எல்லாருக்குமே அடுத்தவர்களை நன்றாகத் தெரியும். எல்லாருமே தேர்ந்த கொலைகாரர்கள். எல்லாருமே ஹீரோவைக் கொல்வதே லட்சியம் என்று சுற்றுபவர்கள். திரைக்கதையின் பக்கங்கள் கார் துரத்தல்கள், மயிர்க்கூச்செரியும் சண்டைகள், துப்பாக்கிச் சூடுகள், அவசரமாகத் தப்பிக்கும் தருணங்கள், வெடிகுண்டுகள் போன்றவற்றால் நிரப்பப்பட்டிருக்கின்றன. இவை எதுவும் இல்லாத பட்சத்தில் கதாநாயகன் பிற பாத்திரங்களோடு ‘நான் ஏன் இப்படி வந்து மாட்டிக்கொண்டேன்?’ என்று புலம்புகிறான். யாரை நம்பலாம் என்று தேடுகிறான். இறுதியில், மேலே பார்த்த அத்தனையும் ஒரே சமயத்தில் நிகழும் க்ளைமாக் ஸில் உலகையே-அடுத்த-நொடியில்-அழிக்கும்-விஷயத்தை ஹீரோ அழிக்கிறான். உலக அமைதி திரும்புகிறது.
முதல் வகையில் எந்தவிதமான கட்டமைப்பும் இல்லாமல் வெறும் சில சம்பவங்களை வைத்துக்கொண்டே கதை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் வகையில் ஏராளமான சம்பவங்கள், எக்கச்சக்கக் கதாபாத்திரங்கள். வெறும் அடிதடி இருந்தால் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு எழுதப்படும் திரைக்கதை இது. எப்போதும் நினைவுவைத்துக்கொள்ளக்கூடிய விஷயம் என்னவென்றால், கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸால் மட்டுமே ஆடியன்ஸைக் கட்டிப்போட முடியாது. நல்ல கதைக்கு இடையே அது வந்தால்தான் ஆடியன்ஸ் அதைப் பார்ப்பார்கள் என்பதே.
’கதை’ என்ற பதத்துக்கு மெக்கீ சொல்லும் விளக்கம் என்னவென்றால், ‘கதை என்பது வாழ்க்கையின் உருவகம்’ என்பதே. கதை சொல்பவன் (அல்லது) எழுதுபவன் ஒரு மந்திரவாதி – ஒரு கலைஞன். தினந்தோறும் நாம் சந்திக்கும் வாழ்க்கையை அற்புதமான கலையாக மாற்றுபவன். எனவே கதை என்பது வாழ்க்கையின் தருணங்களில் இருந்தே தனது மையப்பொருளை எடுத்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கையைப் போன்றே இருப்பதுதான் கதை. ஆனால் வாழ்வின் அத்தனை தருணங்களையும் அப்படியப்படியே எடுத்துக்கொள்ளாமல், அனுதினமும் நாம் பார்க்கும் வெளிப்படையான அம்சங்களைத் தாண்டி உட்பொருளாக வாழ்வின் பல சுவைகளையும் தரவேண்டும்.
ஒருபுறம் நிஜவாழ்க்கை; மறுபுறம் கற்பனை. இந்த இரண்டையும் கச்சிதமாகக் கலந்தால்தான் அப்படிப்பட்ட கதை கிடைக்கும். இதில் எந்தப் பக்கம் நமது கதை முழுதாகச் சாய்ந்தாலும், உடனடியாக விழித்துக்கொண்டு நமது கதைசொல்லும் திறமைகளைப் பயன்படுத்தி மறுபடியும் இந்த இரண்டுக்கும் நடுவே நமது கதையைக் கொண்டுவந்துவிடவேண்டும். இதற்குத் தேவை இரண்டு அம்சங்கள்.
1. இலக்கியத் திறன் – கதையில் உள்ள சாதாரண வார்த்தைகளை மேம்படுத்தி, உயிர்ப்பான ஒரு மொழிநடைக்குக் கொண்டுவரவேண்டும். சுற்றியுள்ள உலகத்தைக் கச்சிதமாகத் தெரிவிக்கக்கூடிய வார்த்தைகள்.
2. கதைத்திறன் – தட்டையான வாழ்க்கையைத் துடிப்பான, அர்த்தமுள்ள,தெளிவான அனுபவமாக மாற்றத் தேவையான திறன்.
யோசித்துப் பாருங்கள். உங்கள் முன்னர் இரண்டு விஷயங்கள் – தட்டையான விஷயத்தைத் துடிப்பாகச் சொல்லப்பட்ட கதை & ஆழமான விஷயத்தை மோசமான மொழிநடையில் சொல்லப்பட்ட கதை – இருந்தால் நீங்கள் எதை விரும்புவீர்கள்? தட்டையாகவே இருந்தாலும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டால் போதும் என்பதுதானே நம் எல்லாரின் விருப்பமாகவும் இருக்கும்?
இத்துடன் ராபர்ட் மெக்கீயின் முதல் அத்தியாயம் முடிகிறது. வரும் வாரத்தில் இருந்து அவர் திரைக்கதை பற்றிக் குறிப்பாகச் சொல்லக்கூடிய பல விஷயங்களைப் பார்க்கப்போகிறோம்.
இந்த வாரம் நாம் பார்த்த விஷயம், – எழுத்தாளர்களுக்குக் கதை என்பது எப்படிக் கிடைக்கும் என்பதை இதோ மெக்கீ சொல்கிறார்.
CONVERSATION