font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

இப்படித்தான் எழுதவேண்டும் திரைக்கதை-3

சென்ற கட்டுரையில், சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஆறாவது அத்தியாயமான Endings and Beginnings பற்றிப் பார்த்தோம். இப்போது, ஏழாம் அத்தியாயம் ஆரம்பிக்கிறது.
Chapter 7: Setting up the Story
ந்யூட்டனின் மூன்றாம் விதியைப் பற்றிப் பேசி, இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார் சிட் ஃபீல்ட். ‘Every action has an equal and opposite reaction’ என்ற அந்த மூன்றாம் விதி, திரைக்கதையிலும் மிக முக்கியமான ஒன்று என்கிறார் சிட் ஃபீல்ட். அதாவது, திரைக்கதையில் எழுதப்பட்டிருக்கும் அத்தனையுமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவை. ஆகையால், பத்தாம் பக்கத்தில் உள்ள ஒரு வசனத்தையோ அல்லது ஒரு காட்சியையோ மாற்றினால், எண்பதாம் பக்கத்தின் காட்சியோ வசனமோ கட்டாயம் பாதிக்கப்படும் என்பது அவரது கூற்று. அதேபோல், திரைக்கதையின் இறுதியை மாற்றினால், அதைப்பொறுத்து, திரைக்கதையின் தொடக்கத்தையும் மாற்ற வேண்டியிருக்கும் என்கிறார் அவர். திரைக்கதை என்பது, முழுமையான ஒன்று. இந்த முழுமையான விஷயம், அதன் பகுதிகளான சிறு சிறு விஷயங்களால் கோர்க்கப்பட்டு உள்ளது. ஆகவே, இந்த சிறிய விஷயங்களான காட்சிகள், வசனங்கள் ஆகியவை எங்காவது மாற்றப்பட்டால், அது, முழுமையான வடிவமாக அமைந்துள்ள திரைக்கதையையும் கட்டாயம் மாற்றும். ஒரு உதாரணம்: ஒரு கட்டிடத்தை எடுத்துக்கொள்வோம். செங்கல், சிமென்ட், கம்பிகள் ஆகியவையால் ஒன்றுசேர்க்கப்பட்ட வடிவமே ஒரு கட்டிடம் ஆகிறது. இந்தக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள செங்கல்கள், சிமென்ட் ஆகியவைகளை சற்றே மாற்றினால், அந்தக் கட்டிடத்தின் முழு வடிவம் சற்றேனும் மாறுகிறது அல்லவா? அதைப்போல்தான் திரைக்கதையும், அதன் பகுதிகளான வசனங்கள், காட்சிகள் ஆகியவைகள் எங்காவது மாற்றப்பட்டால், அதன் விளைவுகள் வேறு ஏதாவது ஒரு இடத்தை பாதிப்பதில் வந்து முடிகிறது.
ஆகவே, திரைக்கதையின் முதல் பக்கத்தில் இருந்தே நமது கதையை ஆரம்பித்துவிட வேண்டும்.
திரைக்கதையைப் படிக்கும் எவருக்கும், கதையில் என்ன நடக்கிறது என்பது முதல் பக்கத்தில் இருந்தே தெரிவாகப் புரிய வேண்டும். கதையை வசனங்களின் மூலமாக நகர்த்துவது, சுவாரஸ்யத்தைக் கட்டாயம் குறைக்கும். திரைக்கதை என்பது, காட்சிகளால் சொல்லப்படும் கதை என்பதை மறந்துவிட வேண்டாம். ஆகவே, காட்சிகளாலேயே கதை சொல்லப்படல் வேண்டும். கதையின் பிரதான கதாபாத்திரங்கள் யார், கதையின் கரு எது, எதனை நோக்கிக் கதை நகர்கிறது ஆகிய விஷயங்கள், திரைக்கதையின் முதல் பத்து பக்கங்களில் – அதாவது, திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களில் – தெளிவாக சொல்லப்பட்டுவிடுதல் வேண்டும். கதையை ஒரு action சீக்வென்ஸிலோ (விக்ரம், காக்க காக்க, பருத்தி வீரன், LOTR, Terminator 2) அல்லது ஒரு உணர்ச்சிபூர்வமான சீக்வென்ஸிலோ (முதல் மரியாதை, Shawshank Redemption, ஆரண்ய காண்டம்) ஆரம்பிக்கலாம். அல்லது அது ஒரு நகைச்சுவைக் கட்சியில் கூடத் தொடங்கக்கூடும். அது, உங்களது கற்பனையைப் பொறுத்தது. ஆனால், அப்படித் துவக்கப்படும் காட்சி, கதைக்கு முக்கியமானதாக இருக்கவேண்டும். கதைக்கே சம்மந்தம் இல்லாத காமெடி அல்லது ஜஸ்ட் லைக் தட் ஒரு எக்ஸ்ட்ரா காட்சியாக இருக்கக்கூடாது.
சரி. இப்போது, திரைக்கதை எழுதுவதில் தீவிரமாக இறங்கும் காலகட்டம் வந்துவிட்டது. இதுவரை நாம் படித்த அத்தனை விஷயங்களையும் நடைமுறையில் வெளிப்படுத்தும் நேரம் வந்தே விட்டது.
திரைக்கதை எழுதத் துவங்குமுன், உதாரணமாக நாம் புரிந்துகொள்ள ஒரு ‘மாடல்’ திரைக்கதை வேண்டுமல்லவா? இப்படி ஒரு உதாரணத் திரைக்கதையைப் படித்தால், அது நமக்குத் திரைக்கதை வடிவத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதைப் படித்துப் பார்த்தபின், சுயமாகத் திரைக்கதையை எழுதத் துவங்கலாம்.
அப்படி ஒரு மாடல் திரைக்கதை, தமிழில் வெளிவந்திருக்கிறதா?
இங்குதான் நமக்கு ஏமாற்றம் பரிசாகக் கிடைக்கிறது. தமிழில் இதுவரை புத்தகமாக வெளிவந்திருக்கும் திரைக்கதைகள் மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி வெளிவந்திருக்கும் திரைக்கதைகளோ, திரைக்கதை வடிவம் எப்படி இருக்கக்கூடாதோ அதற்கே உதாரணமாக இருக்கின்றன. ஆகவே, இந்தத் திரைக்கதைகளை உதாரணமாக எடுத்துக்கொள்வது, தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம். இதை நான் சொல்லும் காரணம் மிக எளிது. திரைக்கதை வடிவத்தை இம்மி பிசகாமல் பின்பற்றி எழுதப்பட்டாலும், கதையில் வலு இருக்கவேண்டும். ஆரம்பம், ப்ளாட் பாயின்ட் 1, ப்ளாட் பாயின்ட் 2, முடிவு என்ற வகையில் மிகச்சரியாக 120 பக்கங்கள் எழுதப்பட்டால் கூட, கதை இஷ்டத்துக்கு நம்மை வதைத்தால், அது உதாரணத் திரைக்கதை ஆகிவிடாது. ஆனால், இதைத்தான் பெரும்பாலும் தமிழ்ப்படங்கள் பின்பற்றுவதால், இதைப்போன்ற திரைக்கதைகளை உதாரணமாக எடுத்துக்கொண்டால், தலையைப் பிய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும்.
ஆகவே, உதாரணத் திரைக்கதை வேண்டுவோர், பருத்தி வீரன் படத்தைப் படித்துக் கொள்ளுங்கள். இதுவரை வெளியான தமிழ் திரைக்கதை வடிவங்களில், பருத்திவீரன், இருப்பதிலேயே நல்லதாக எனக்குத் தோன்றுகிறது.
தமிழ் வேண்டாம்; ஆங்கிலத்திலேயே உதாரணம் கொடுத்தால் கூட அதனைப் படித்துக்கொள்ள முடியும் என்று சொல்லும் நண்பர்கள், இதோ இந்தத் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்களை இங்கேயே படித்துக்கொள்ளலாம். இதுதான் ஒரு நல்ல திரைக்கதைக்கு சிட் ஃபீல்ட் கொடுக்கும் உதாரணம். தூக்கத்தில் இருந்து எழுப்பி அவரைக் கேட்டால் கூட, இந்தத் திரைக்கதையைத்தான் அவர் உதாரணமாக சொல்லுவார்.
அப்படிப்பட்ட உதாரணத் திரைக்கதை எந்தப் படத்தினுடையது?
ChinaTown
ஏன் சைனாடௌன்?
காரணமாக சிட் பீல்ட் சொல்வது, வேறு எந்தப் படத்தையும் விட, சைனாடௌன் படத்தில், அத்தனை விஷயங்களும் மிகச்சரியாக வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையே. கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் ஆகிய அத்தனையும், ஒன்றையொன்று சரியான விகிதத்தில் ஆதரிக்கின்றன. விளைவாக நமக்குக் கிடைப்பதோ, அட்டகாசமானதொரு திரைக்கதை வடிவம்.
இதோ இங்கே சைனாடௌன் திரைக்கதையைத் தரவிறக்கிக்கொள்ள முடியும். அதன் முதல் பத்து பக்கங்களை மட்டும் படித்துப்பாருங்கள். அதில் உள்ள வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். அதிலுள்ள தொழில்நுட்ப விஷயங்களை விரிவாகவே பின்னால் வரும் கட்டுரைகளில் பார்க்கப்போகிறோம் என்பதால், திரைக்கதையின் முதல் பத்து பக்கங்களை மட்டும் படியுங்கள். மிக எளிதான ஆங்கிலமாகவே இது இருப்பதால், படிக்கும் நண்பர்களுக்குப் பிரச்னை வராது என்று நம்புகிறேன். ஒருவேளை ஒன்றுமே புரியாவிட்டாலும் பரவாயில்லை; ஒரே ஒரு முறை படித்துப்பாருங்கள்.
இந்த முழுத் திரைக்கதையில், முதல் பத்து பக்கங்கள் என்பது, இடது பக்கத்தில் 1, 2 என்று எண்ணிக்கைகள் இடப்பட்டிருப்பதில் 20 என்ற இடம் வரை. அதுவரை படித்தால் போதுமானது.
பி.கு– நண்பர்களே.ஒரே ஒரு விஷயத்தை மறக்காமல் நினைவுவைத்துக்கொள்ளுங்கள். சிறிய அளவு உழைப்பு கூட இல்லாமல், எந்த விஷயத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றுதல் இயலாத காரியம். ஆகவே, திரைக்கதை எழுத உங்களால் ஆன உழைப்பு, ஒரு ‘மாடல்’ திரைக்கதையின் முதல் பத்தே பத்து பக்கங்களைப் படிப்பது. ஆகவே, அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். எதுவுமே செய்யாமல் ஒரு கலைவடிவம் நமக்குக் கைகூடிவிடாது என்பதை மறந்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Chinatown‘ திரைப்படத்தின் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்கள் படித்தோம் அல்லவா? இப்போது, நாம் படித்தவற்றைப் பற்றி அலசிப் பார்க்கலாம். சிட் ஃபீல்ட் எப்படி அலசியிருக்கிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.
முதல் பக்கத்தின் இரண்டாம் பத்தியிலேயே, பிரதான கதாபாத்திரமான Jack Gittes அறிமுகப்படுத்தப்படுகிறது. அப்படியே, அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய பல விஷயங்களையும் நாம் அறிந்துகொள்கிறோம்.
எப்படி?
‘வெளியே நிலவும் சூட்டில்கூட, லினன் ஸூட் அணிந்திருக்கும் அந்தப் பாத்திரம், கேஷுவலாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது’. இது முதல் செய்தி. அதேபோல், ‘தனது கைக்குட்டையால், மேஜையில் படிந்திருக்கும் அழுக்கினைத் துடைக்கிறது’. இந்தச் செய்தியானது, அந்தக் கதாபாத்திரம் மிகவும் கூர்த்த கவனிப்பு உடையது என்பதை நமக்குத் தெரியப்படுத்துகிறது. இந்தத் தகவல் முக்கியமான ஒன்று. ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் செய்யும் தொழிலில் கூர்மையான கவனிப்பு மிக அவசியம்.
சிறிதுநேரம் கழித்து வெளியே செல்லும் அந்தப் பாத்திரம், மிக நேர்த்தியாக உடையணிந்திருக்கிறது. இதுபோன்ற விஷுவல் தகவல்களால், அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இதில் எங்குமே அக்கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்பது சொல்லப்படவில்லை என்பது சிட் ஃபீல்ட் சொல்லும் இன்னொரு விஷயம். அதாவது, அக்கதாபாத்திரம் உயரமாக இருக்கிறதா, குள்ளமா, குண்டாக உள்ளதா ஆகிய எந்த விஷயங்களும் இல்லை. அதற்குப் பதில், அது எப்படி நடந்துகொள்கிறது என்பதைச் சொல்லியே அக்கதாபாத்திரத்தைப் பற்றிய புரிதலை நமக்குள் கொண்டுவந்துவிடும் வகையில் இந்தத் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சிட் ஃபீல்ட். அதேபோல், Jack Gittes பாத்திரம், தன்னைப் பார்க்க வந்திருக்கும் மனிதனுக்கு, தன்னிடம் இருப்பதில் மலிவான விஸ்கி ஒன்றை ஊற்றிக் கொடுக்கிறது. இதனால் நாம் புரிந்துகொள்ளும் செய்தி? என்னதான் சிறிதளவு சூது இருப்பினும், பிறரைக் கவரும் வகையிலும், ஓரளவு பிறர் மேல் அன்புடனும் இருக்கிறது அந்தக் கதாபாத்திரம்.
திரைக்கதையின் நான்காவது பக்கத்தில், Jack Gittes யார் என்ற செய்தி, விஷுவலாகக் காட்டப்படுகிறது – ‘கண்ணாடியின் மேல், J.J. GITTES and Associates—DISCREET INVESTIGATION என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது’ – என்ற வாக்கியத்தின் மூலம்.
திரைக்கதையின் முக்கியமான சம்பவம், பக்கம் ஐந்தில் சொல்லப்படுகிறது. அங்கேதான் மிஸஸ் மல்ரே என்ற பெண்மணி, ஜாக்கிடம் வந்து, தனது கணவருக்கு ஒரு கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்படுவதாகவும், அதனை ஜாக் துப்பறியவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறாள். அதிலிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. அந்த நிகழ்ச்சியால்தான் திரைக்கதையின் முதல் plot pointநிகழ்கிறது (திரைக்கதையின் முப்பது நிமிடங்களில் நிகழும் இந்த முதலாவது ப்ளாட் பாயின்ட் என்னவெனில், நிஜமான மிஸஸ் மல்ரேவை ஜாக் சந்திப்பதே. அப்போதுதான், ஒரு மிகப்பெரிய சதிச்சுழலில் சிக்கிக்கொண்டிருப்பதை ஜாக் உணர்கிறான். அதிலிருந்து மீள்வதற்காக ஜாக் செய்யும் விஷயங்களே மீதிக்கதை).
“என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்படுகிறேன்” என்ற வார்த்தைகளே சைனாடௌன் திரைக்கதை செல்லும் போக்கினைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் அப்பெண்ணின் கணவரை ஜாக் பின்தொடர்கிறான். அப்படித் தொடர்வதால்தான் அந்த நகரில் நடைபெறும் மாபெரும் தண்ணீர் சம்மந்தப்பட்ட ஊழலைக் கண்டுபிடிக்கிறான். அதனால்தான் அப்பெண்ணின் கணவர் கொலை செய்யப்படுவதையும் கண்டுபிடிக்கிறான். இத்தனைக்குப் பிறகு, நிஜமான பெண்மணியை ஜாக் சந்திக்க நேர்கிறது. அப்போது, தன் கணவரைத் தொடர்ந்த குற்றத்துக்காக ஜாக்கின்மேல் போலீஸில் புகார் கொடுக்கப்போவதாகக் கூற, சிக்கலில் மாட்டிக்கொண்ட ஜாக், யாரோ ஒரு பெண்ணினால் அவன் ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொள்கிறான். இயல்பிலேயே கர்வியான அவனால் அதனைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதனால்தான் உண்மையைக் கண்டுபிடிப்பதில் மிகத் தீவிரமாக இறங்குகிறான்.
இப்படி ஒரு சரடில் கோர்க்கப்பட்ட சம்பவங்களாக இவை ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்வதும், ஒவ்வொரு சம்பவத்துக்குமே முன்னர் நடந்த இன்னொரு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதுமே இத்திரைக்கதையை மிகச் சுவாரஸ்யமுடையதாகக் காட்டுகின்றன என்கிறார் சிட் ஃபீல்ட்.
இந்தத் திரைப்படத்தின் மைய இழையாக வரும் ஊழல், உண்மையில் 1900ல் லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த உண்மைச் சம்பவம். அந்தச் சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, 1937ல் கலிஃபோர்னியாவில் நிகழ்வதாக எழுதப்பட்டிருக்கிறது இத்திரைக்கதை.
ஆக, இந்தத் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்களுக்குள்ளேயே பிரதான கதாபாத்திர அறிமுகம், திரைக்கதை செல்லப்போகும் பாதை, திரைக்கதையின் கரு ஆகிய அத்தனையுமே தெளிவாக எழுதப்பட்டிருப்பதைப்போல்தான் நாமும் நமது திரைக்கதைகளை எழுத முயல வேண்டும் என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட்.
இத்துடன் சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமான ‘Setting up the story’ முடிவடைகிறது.
அடுத்த அத்தியாயத்தில், திரைக்கதைக்கு அவசியமான இரண்டு சம்பவங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அவை…..?
ஒரு திரைக்கதையை எப்படி அமைப்பது – கதையை எப்படி ஆரம்பிப்பது ஆகிய விஷயங்களைப் பற்றி சிட் ஃபீல்ட் என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனித்தோம். இப்போது, திரைக்கதையை அமைக்கத் தேவையான இரண்டு பிரதான சம்பவங்களைப் பற்றி இனி அலசலாம்.
Chapter 8 – The Two Incidents
Incident (சம்பவம்): ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சி அல்லது நிகழ்வு.
ஜோ எஸ்டெர்ஹாஸ் (Joe Eszterhas) என்று ஒரு புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் ஹாலிவுட்டில் உண்டு. இவரது சிறந்த திரைக்கதைகள்:Basic Instinct, Sliver, Showgirls, Flashdance, Jade முதலியன. இவரைப் பற்றிய ஒரு சம்பவத்தோடு இந்த அத்தியாயத்தைத் துவக்குகிறார் சிட் பீஃல்ட்.
ஜோ எஸ்டெர்ஹாஸின் திரைக்கதைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில், ஜோவின் திரைக்கதைகளின் பாணியைக் கண்டறியும் பொறுப்பு, சிட் ஃபீல்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டது. அதாவது, ஜோவின் திரைக்கதைகளில் உள்ள அந்த பிரத்யேகத்தன்மை என்ன? எதனால் அவை தனிப்பட்டுத் தெரிகின்றன? எப்படி அவற்றைப் பிற திரைக்கதைகளில் இருந்து தனியே அடையாளம் காணமுடியும்?
ஜோவின் திரைக்கதைகளை ஒவ்வொன்றாக இவ்விதம் படிக்க ஆரம்பித்தார் சிட் ஃபீல்ட். அப்படிப் படிக்கப்படிக்க, ஜோவின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அதாவது, ஜோவின் திரைக்கதைகள், நிஜவாழ்வில் நிஜமான மனிதர்கள் அனுபவிக்கும் பிரச்னைகளைப் பற்றியே அமைந்திருந்தன. சாதாரண மனிதர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளிலிருந்து எப்படி விடுபடுகிறார்கள் என்பதை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தார் ஜோ என்பது சிட் ஃபீல்டின் கணிப்பு.
ஜோவின் பெரும்பான்மையான திரைக்கதைகளின் பாணி என்னவெனில், தொடங்கும்போதே ஒரு action சீக்வென்ஸ்; அந்த சம்பவத்தில், படம் பார்க்கும் ஆடியன்ஸை நேரடியாக ஈடுபடுத்துவது; அதனால் திரைக்கதையின் சுவாரஸ்யம் அதிகரிப்பது என்றவாறே அவை இருந்தன. அதாவது, இதுதான் ஜோவின் டெம்ப்ளேட்.
உதாரணமாக, Basic Instinct திரைப்படத்தின் திரைக்கதை எப்படி ஆரம்பிக்கிறது என்று எழுதியுள்ளார் சிட் ஃபீல்ட். அதனை இப்போது பார்க்கலாம்.
‘இருட்டு… எதனையும் தெளிவாகப் பார்க்க முடியாத சூழல்’ என்று தொடங்குகிறது அந்தத் திரைக்கதை. ‘ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையின் மேல் உறவு கொள்கிறார்கள். சுவர்களிலும் படுக்கைக்கு மேலே உள்ள கூரையிலும், கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் மேஜையின் மீது ஒரு கண்ணாடி. அதில் கொக்கேய்னின் சிதறல்கள். ரொமாண்டிக்கான பாடல் ஒன்று டேப்பில் இழைந்துகொண்டிருக்கிறது’.
இப்படித் தொடங்குகிறது திரைக்கதை.
இறுக்கமான, வேகமான, காமம் ததும்பும் காட்சி அது. காட்சி விளக்கப்படப்பட, வார்த்தைகள் குறைகின்றன. ‘அவன் அவளுக்குள் இருக்கிறான். கைகள் மேலே கட்டப்பட்டிருக்கின்றன. மல்லாந்து, கண்களை மூடிக்கொண்டு படுத்திருக்கிறான்…அவன்மேல் அவள்…தீவிரமாக அசைந்துகொண்டிருக்கிறாள்..அவளுக்காக அவன் தாபத்தில் துடிக்கிறான்…அவளை நோக்கி எழ முயல்கிறான்…அவனது தலை பின்னே சாய்கிறது…தலையைப் பின்னால் இழுப்பதால் அவனது தொண்டை வெளுக்கிறது…அவளும் துடிப்பில் பின்னால் வளைகிறாள்…அவளது இடுப்பு அவன்மேல் தீவிரமாக இயங்குகிறது…அவளது மார்புகள் விம்முகின்றன…’
காமத்தின் உச்சத்தில் இதன் பின் நடப்பது என்ன?
‘அவளது முதுகு, பின்னால் வளைந்துகொண்…..டே இருக்கிறது… கைகளை விரிக்கிறாள்… அவளது வலதுகை, திடீரென்று அவன்மேல் இறங்குகிறது….கத்தியின் மின்னும் வெளிச்சம்…அவனது தொண்டை வெளுத்திருக்கிறது…அவன் துடிக்கிறான்… அவளைநோக்கி வேகமாக எழ முயல்கிறான்…துடிக்கிறான்….எழ முயல்கிறான்…அவளது கையில் இருக்கும் கத்தி மேலும் கீழும் இயங்குகிறது…மேலும்… கீழும்…மேலும்… கீழும்…
இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். இரு உடல்கள்… காமம்… ரத்தம்.. இசை…
இந்தக் காட்சியைப் படித்தவுடன், மேலும் மேலும் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் வெறி சிட் ஃபீல்டுக்கு ஏற்பட்டதாக அவர் சொல்கிறார். படிக்கப்படிக்க, திரைக்கதையின்பால் மேலும் மேலும் தூண்டப்பட்டிருக்கிறார். திரைக்கதையின் இந்த முதல் பக்கம் நமக்குத் தெரிவிக்கும் விஷுவல் action அவரை அந்தத் திரைக்கதையின் ரசிகராக மாற்றிவிட்டது.
சிட் ஃபீல்டைப் பொறுத்தவரையில், படிக்கும் நபரின் கழுத்தை இறுக்கிப் பிடித்து, திரைக்கதையின் மேல் ஈடுபாடு கொள்ளச் செய்வது இப்படிப்பட்ட திரைக்கதைகள்தான் என்று சொல்கிறார். பொங்கும் உணர்ச்சி, தீவிரமான காமம், கோரமான ஒரு கொலை.. மொத்தத்தில், பேரழிவு ஒன்று. இத்தகைய தொடக்கம் இருந்தால், எந்தத் திரைக்கதையும், ஆடியன்ஸை வெகுவாகத் தன்பால் ஈர்த்துவிடும் அல்லவா?
இங்கே ஒரு வார்த்தை. இது, சிட் ஃபீல்ட் கொடுக்கும் ஏராளமான உதாரணங்களில் ஒன்று மட்டுமே. இதுதவிர, லார்ட் ஆஃப் த ரிங்ஸ், மேட்ரிக்ஸ், டெர்மினேட்டர் ஆகிய பல படங்களின் திரைக்கதைகளையும் அவர் சிலாகித்து எழுதியிருக்கிறார். ஆகவே, சிட் ஃபீல்ட் பாராட்டிய ஒரே காரணத்துக்காக, பேஸிக் இன்ஸ்டிங்ட் போன்ற திரைக்கதைகளை மட்டுமே எழுதவேண்டும் என்று நாம் முடிவுகட்டிவிடக்கூடாது. பேஸிக் இன்ஸ்டிங்ட்டில் இருப்பது போன்ற வேகம், நமது திரைக்கதைகளில் இருக்கவேண்டும் என்பதே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்.
பேஸிக் இன்ஸ்டிங்ட்டில், மேலே சொன்ன சம்பவம் நிகழ்ந்தபின்னர் என்ன ஆகிறது?
போலீஸ் துறையில் இருக்கும் கதாநாயகன் மைக்கேல் டக்ளஸ் இந்தக் கொலையைத் துப்பறிய வருகிறார் . அதன்பின் டக்ளஸுக்கும் கதாநாயகி ஷரோன் ஸ்டோனுக்கும் உறவு ஏற்படுகிறது. கதாநாயகியின் மேல் பைத்தியமாகவே ஆகிப்போகிறான் கதாநாயகன். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படம்.
ஆகவே, இந்தத் திரைக்கதையின் பிரதான சம்பவமாக, தொடக்கத்தில் வரும் கொலை இருக்கிறது என்பதை சிட் ஃபீல்ட் புரிந்துகொண்டார். இந்தத் துவக்கக் காட்சியும் படத்தின் கதையும் இப்படியாக, நேரடியான தொடர்பில் இருக்கின்றன. ஒப்பனிங் காட்சி இல்லையெனில் படமே இல்லை.
படத்தின் துவக்கக் காட்சியான இந்தக் கொலையும், கதாநாயகன் தனது இச்சைகளுக்குப் பணிந்து நடப்பதுமான படத்தின் மீதிக் கதையும், கதாபாத்திரத்தின் குணாதிசயம் மற்றும் சம்பவம் ஆகிய இரண்டு விஷயங்களை நன்றாகவே புரிய வைக்கின்றன என்கிறார் சிட் ஃபீல்ட். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நாம் பார்த்த ஒரு மேற்கோள் நினைவு இருக்கிறதா?
What is character but the determination of incident? And what is incident but the illumination of character?
கதாபாத்திரத்தின் குணாதிசயம் என்பது, ஒரு சம்பவத்தினால் உறுதிப்படுத்தப்படுவது அல்லவா? அதேபோல், சம்பவம் என்பது, கதாபாத்திரத்தின் குணாதிசயத்தால் விளக்கப்படுவது அல்லவா?
ஒரு சம்பவத்துக்கு ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் எப்படி எதிர்வினை புரிகிறது என்பதை விளக்காமல், அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிப் படம் பார்க்கும் மக்களுக்குப் புரியவைக்க முடியாது.
உதாரணத்துக்கு, தெருவில் ஒரு முதியவரை ஒரு ஆள், மாட்டை அடிப்பது போல் அடித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அவனைத் தாண்டிச் செல்லும் ஒரு கதாபாத்திரம்,
  1. அவனுடன் சேர்ந்துகொண்டு அந்த முதியவரை அடிக்கிறது
  2. தலையைக் குனிந்துகொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றுவிடுகிறது
  3. ‘அவரை விட்றா’ என்று ஆவேசமாக அலறிக்கொண்டே அவனை அடி புரட்டி எடுக்கிறது
இந்த மூன்று கதாபாத்திர விளக்கங்களில், கதாநாயகன், வில்லனின் அடியாள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் யார் யார் என்பது தெளிவாகப் புரிந்துவிடுகிறதல்லவா?
இதுதான் – ‘கதாபாத்திரத்தின் குணாதிசயம் என்பது, ஒரு சம்பவத்தினால் உறுதிப்படுத்தப்படுவது அல்லவா?’ என்பதன் விளக்கம்.
அதேபோல், இன்னொரு சம்பவம்.
இங்கே, படத்தின் கதாநாயகன், ஒரு குறிப்பிட்ட இடத்தில், அவனுடைய நன்னடத்தைக்கு சோதனை வரும் நேரத்தில், பாசிடிவாகவேதான் நடந்துகொள்வான். அதுவே வில்லனாக இருந்தால், கட்டாயம் தீய செயல்களை மட்டுமே புரிவான். இதுதான் ‘சம்பவம் என்பது, கதாபாத்திரத்தின் குணாதிசயத்தால் விளக்கப்படுவது அல்லவா?’ என்பதற்கு உதாரணம். அதாவது, கதாபாத்திரத்தின் குணம் என்னவோ, அதைப்பொறுத்து, அக்கதாபாத்திரத்தின் எதிர்வினைகள் அமைகின்றன.
இதையே பேஸிக் இன்ஸ்டிங்ட்டுக்குப் பொருத்திப் பார்த்தால், படத்தின் துவக்கத்தில் நடக்கும் கொலையால், கதாநாயகியை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரிக்கு, அவள்மேல் பைத்தியம் ஏற்படுகிறது (கதாநாயகனின் குணம்). அதனாலேயே படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சம்பவங்கள் அமைகின்றன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார் சிட் ஃபீல்ட்.
படத்தின் துவக்கத்தில் நிகழும் கொலை – அந்தச் சம்பவம் – Inciting incident என்று அழைக்கப்படுகிறது. Incite என்ற ஆங்கில வார்த்தைக்கு, ‘தூண்டுதல்’ என்பது பொருள். அதாவது, படத்தின் கதையைத் தூண்டும் ஒரு சம்பவமே inciting incident என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், கொலைக்குப்பின்னர் என்ன ஆகிறது? படத்தின் கதை துவங்குகிறது. அதாவது, கதையின் முக்கியமான பகுதி. ஆகவே, இந்த முக்கியமான பகுதி, Key incident என்று அழைக்கப்படுகிறது.
எனவே, திரைக்கதைக்கு பலமான ஒரு ஓப்பனிங் கொடுப்பதே inciting incident என்பது சிட் ஃபீல்டின் விளக்கம். இந்த inciting incidentமூலம், படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு, படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு – ஈர்ப்பு – ஏற்படுகிறது. ஒரு திரைப்படத்தின் ஒப்பனிங் காட்சி இப்படி அமைந்துவிட்டால், அதுவே அப்படம் சுவாரஸ்யமாகச் செல்வதற்கு ஒரு காரணம்.
Inciting incident மற்றும் Key incident ஆகிய இரண்டு சம்பவங்களே, ஒரு திரைக்கதையின் பிரதான சம்பவங்கள்.
இந்த அடிப்படையில், ஒருசில தமிழ்ப்படங்களைப் பார்ப்போமா?
காக்க காக்க – இந்தப் படத்தின் inciting incident, சூர்யா தூக்கி எறியப்படும் முதல் காட்சி. சூர்யா ஏன் தூக்கி எறியப்பட்டார்? என்ற கேள்வியின் பின்னர்தான் படத்தின் கதையே இருக்கிறது. Key incident என்பது, படத்தில் அதன்பின் என்ன நடக்கிறது என்பதே.
விக்ரம் – Inciting incident எது? அக்னிபுத்திரன் என்ற ராக்கெட் கடத்தப்படுவதே. அதன்பின் என்ன ஆகிறது என்பது Key incident.
ஒரு சிறந்த action படத்துக்கோ அல்லது த்ரில்லர் படத்துக்கோ அல்லது ஒரு மர்மப் படத்துக்கோ, இந்த inciting incident என்பது அவசியம் தேவை என்கிறார் சிட் ஃபீல்ட்.
இந்த இரு சம்பவங்களைப் பற்றி மேலும் பல சுவையான தகவல்கள்
 Inciting Incident மற்றும் Key Incident ஆகிய இரண்டு திரைக்கதையின் பிரிவுகளைப் பற்றிப் பார்த்தோம். அதில், இந்த இரண்டு விஷயங்களைப் பற்றிச் சரியாக விளக்கவில்லை என்பது தெரிந்தது. அதாவது, இந்த இரண்டு ‘சம்பவங்களைப்’ பற்றி சில கேள்விகள் எழுகின்றன.
1. Inciting Incident என்பது ஒரு குறிப்பிட்ட காட்சி. திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யமான ஓபனிங் கொடுப்பது. இந்தக் காட்சிக்குப் பின், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆடியன்ஸுக்கு எழவேண்டும். அத்தகைய ஒரு thumping ஸீனே Inciting Incident என்று அழைக்கப்படுகிறது. அதுவரை ஒகே. ஆனால், அது படத்தின் ஆரம்பத்தில் மட்டும்தான் வரவேண்டுமா? நான் லீனியர் முறையில் – அதாவது, திரைக்கதையின் ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவு ஆகியன வரிசையாக எழுதப்படாமல் மாற்றி மாற்றி எழுதப்பட்டிருந்தால், அப்போது எந்த இடத்தில் Inciting Incident வரவேண்டும்?
2. Key Incident என்பது, இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட்டுக்குப் பின்னால் வருவது. அதாவது, கதையில் இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட் (சுவாரஸ்யமான ஓபனிங்) என்ற ஒரு ஸீன் நிகழ்ந்தபின், அதற்குப் பிறகு என்ன ஆகிறது என்பதே Key Incident. அப்படியென்றால், இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட்டுக்குப் பிறகு வரும் திரைக்கதையின் முழுப்பகுதியுமே Key Incident ஆகிவிடுமா? அல்லது Key Incidentஎன்பது இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட் போல ஒரு குறிப்பிட்ட ஸீன் மட்டுமா?
3. திரைக்கதை எதனைப்பற்றி என்பதைப் புரியவைப்பது என்றால், அப்போது திரைக்கதையின் முதல் Plot Point அல்லவா நினைவு வருகிறது? Key Incident மற்றும் இந்த Plot Point 1 என்பது இரண்டுமே ஒன்றுதானா?
இவற்றைப் பற்றியும் சிட் ஃபீல்ட் பிரித்து மேய்ந்திருக்கிறார். வாருங்கள். இந்தக் கேள்விகளுக்கு விடையைத் தேடுவோம்.
Chapter 8 – The Two Incidents(தொடர்ச்சி)
இந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி மேலும் சில உதாரணங்கள் கொடுக்கிறார் சிட் ஃபீல்ட். அவைகளைப் பார்ப்போம்.
Bridges of Madison County – க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் இந்த அழகான படத்தில், தொடக்கத்தில், கதாநாயகி ஃப்ரான்செஸ்கா இறப்பது காட்டப்படுகிறது. அவளது மகனும் மகளும், தாயாரின் பொருட்களை அடுக்கிக்கொண்டிருக்கையில், அவளது நாட்குறிப்புகளைப் பார்க்கிறார்கள். அவற்றைப் படிக்கவும் துவங்குகிறார்கள். நாட்குறிப்புகளைக் கண்டுபிடிக்கும் இந்தக் காட்சிதான் இப்படத்தின் Inciting Incident. காரணம், அதிலிருந்துதான் கதை துவங்குகிறது.
Pulp Fiction – ஹனி பன்னியும் அவளது காதலன் பம்ப்கின்னும் ரெஸ்டாரெண்ட்டில் விவாதிக்கும் ஆரம்பக் காட்சி நினைவிருக்கிறதா? இந்தக் காட்சியின் முடிவில், தங்களது துப்பாக்கிகளை உருவி எடுக்கும் இருவரும், அந்த ரெஸ்டாரெண்ட்டைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். துப்பாக்கிகளை உருவதோடு காட்சி ஃப்ரீஸ் ஆகி, ஜான் ட்ரவோல்டாவும் ஸாமுவேல் ஜாக்ஸனும் பேசிக்கொண்டிருக்கும் காட்சி தொடங்குகிறது. இந்த சீக்வென்ஸில், இருவரும் துப்பாக்கியை உருவும் காட்சிதான் படத்தின் Inciting Incident.
Lord of the Rings – இப்படத்தின் படத்தின் Inciting Incident என்ன? மோதிரத்தின் கதை விவரிக்கப்படும் ஆரம்பக் காட்சியில், பில்போவிடம் மோதிரம் சிக்கும் காட்சி நினைவிருக்கிறதா? அதுதான். இக்காட்சிக்குப் பின்னர், பில்போவிடம் மோதிரம் வந்தபின்தானே படத்தின் கதை துவங்குகிறது? ஆகவே, இந்த மோதிரத்தின் கதையே படத்தின் Inciting Incident.
இந்த இடத்தில், ஒரு விஷயம். இன்ஸைட்டிங் இன்ஸிடென்ட் என்பது ஒரு ஸீன். அதாவது, சில ஷாட்களின் கலவை. ஒரு சம்பவம். ஆனால், அட்டகாசமான ஜீனியஸ்களின் திரைப்படங்களில், அது ஒரு ஷாட்டாகக் கூட இருக்கலாம். திரைக்கதையில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ‘திரைக்கதையில் விதிகளே இல்லை’ என்னும் பிரதான விதியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். மனம்போன போக்கில் அமைந்துவிடக்கூடாது.
Inciting Incident என்பது வேகமான action காட்சிகளைக் கொண்டோ, அல்லது தீவிரமான உணர்ச்சிகளோடு கூடிய காட்சிகளுடனோ இருக்கலாம். உதாரணத்துக்கு, சைனாடவுன் படத்தைப் பற்றி விளக்குகிறார் சிட் ஃபீல்ட். படம் தொடங்கும்போது, துப்பறிவாளர் ஜாக் நிகல்ஸனை, தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அதனைத் துப்பறியவேண்டும் என்றும் சொல்லி, ஒப்பந்தம் செய்கிறார் ஒரு பெண்மணி. இதுதான் Inciting Incident. அதன்பின், படத்தின் பாதியில், அப்பெண் போலி என்று கதாநாயகன் அறிந்துகொள்கிறான். ஏனெனில், அவன்முன்னர் ஒரிஜினல் பெண்மணி நின்றுகொண்டிருக்கிறாள். இந்தக் காட்சியே Key Incident. அதாவது, படத்தின் திரைக்கதைக்கு சுவாரஸ்யமான துவக்கம் கொடுத்த காட்சி Inciting Incident. அந்தக் காட்சிக்குப் பின்னர் என்ன நடக்கிறது? கதை எப்படி நகர்கிறது? என்பதற்கு ஒரு துவக்கமாக இருக்கும் காட்சி, Key Incident.
Inciting Incident மற்றும் Key Incident ஆகிய இரண்டு காட்சிகளும், ஒன்றோடொன்று தொடர்பு உடையவையாக இருக்கவேண்டும். மேலே சொன்ன உதாரணத்தில், தன்னை ஒரு பெண் ஒப்பந்தம் செய்வதால்தான் அப்பெண்ணின் கணவனைத் துப்பறிய ஆரம்பிக்கிறான் கதாநாயகன். அதனால்தான் அப்பெண் போலி என்றும் அவனுக்குத் தெரிய வருகிறது. ஆகவே, Inciting Incident, திரைக்கதையின் Key Incidentடுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
Inciting Incident —> Key Incident என்பதே தாரக மந்திரம்.
Key Incidentட்டாக இருக்கும் காட்சியைப் படித்தால், கதை எதைப்பற்றி இருக்கிறது என்பது நமக்குத் தெரியவேண்டும். தன்னை அமர்த்திய பெண் ஒரு போலி என்பதைத் தெரிந்துகொண்ட கதாநாயகன், என்ன செய்யப்போகிறான்? அதனைப் பொறுத்தே திரைக்கதை முடிவு அடைகிறது. ஆகவே, Key Incident என்பது, திரைக்கதை என்ன சொல்லப்போகிறது என்பதன் துவக்கமாக இருக்கவேண்டும்.
எந்தத் திரைப்படமாக இருந்தாலும், இந்த இரண்டு காட்சிகளைத் தெரிந்துகொள்வது ஓரளவு சுலபம் என்கிறார் சிட் ஃபீல்ட். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தையே மறுபடி எடுத்துக்கொள்வோம். படத்தின் Inciting Incident என்பது, மோதிரத்தின் கதை விவரிக்கப்படும் ஆரம்பக் காட்சி. அப்படியென்றால், படத்தின் Key Incident என்பது எது? Key Incidentடின் வேலை என்ன என்பதை மறுபடி நினைவு கொள்வோம். படத்தின் கதை என்னவாக இருக்கப்போகிறது என்பதற்கு ஒரு துவக்கமாக அமையும் காட்சியே Key Incident அல்லவா? அப்படி, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் கதை இப்படித்தான் இனி இருக்கப்போகிறது என்பதை நமக்கு உணர்த்தும் காட்சி எது? எந்தக் காட்சியைப் பார்த்தபின், ‘ஓஹோ… ரைட். எனக்குப் புரிந்துவிட்டது. இனிமேல் இப்படத்தின் கதை இதுதான்’ என்பது நமக்குப் புரிகிறது?
பில்போவின் மோதிரத்தை ஃப்ரோடோ எடுத்துக்கொள்ளும் காட்சி.
மோதிரம் ஃப்ரோடோவின் பொறுப்பில் வந்தபின்னர்தான் படத்தின் போக்கு புரிகிறது அல்லவா? மோதிரம் அழிக்கப்படவேண்டும்; அதனை ஃப்ரோடோதான் செய்ய வேண்டும்; அதற்கு ஃபெலோஷிப் துணை நிற்கும் என்ற அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் ஆரம்பமாக இருப்பது, ஃப்ரோடோவின் வசம் மோதிரம் வந்தபின்னர்தான் இல்லையா? ஆகவே, அந்தக் காட்சி தான் படத்தின் Key Incident.
இத்திரைக்கதையிலும், இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. மோதிரத்தைப் பற்றி முதலில் நாம்Inciting Incident மூலம் அறிந்துகொள்கிறோம். அதன்பின் அம்மோதிரத்தை ஃப்ரோடோ தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு (Key Incident) அதனை அழிப்பதையே ஒரு பயணமாக மேற்கொள்வதையும் அறிந்துகொள்கிறோம். ஆக, இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றோடொன்று சம்மந்தப்பட்டவை.
Key Incident மற்றும் Plot Point 1 ஆகியவை பெரும்பாலும் ஒன்றாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட். முதல் ப்ளாட் பாயின்ட் என்பது என்ன? திரைக்கதையின் முதல் பகுதி(முதல் முப்பது பக்கங்கள்)யின் முடிவில், கதையை நோக்கித் திரைக்கதையின் போக்கைத் திருப்பும் ஒரு சம்பவமே முதல் ப்ளாட் பாயின்ட் என்பது நினைவிருக்கிறதல்லவா? அதைத்தானே Key Incidentட்டும் செய்கிறது? ஆனால், இந்த இரண்டும் வேறுவேறாகவும் இருக்கலாம். அது, திரைக்கதையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் விஷயம்.
இப்போது, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடை காண முயலலாம். கேள்விகளை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.
பதில்கள்:
  1. நான் லீனியராகத் திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும், எப்படியும் அத்திரைக்கதையின் ஆரம்பத்தில் – அதாவது, படத்தின் துவக்கத்தில் Inciting Incident வந்தால்தான் ஆடியன்ஸுக்கு அப்படத்தில் ஒரு சுவாரஸ்யம் ஏற்படும். Inciting Incident திரைக்கதையின் பாதியிலோ அல்லது கடைசியிலோ வருவதால் திரைக்கதைக்கு எந்தப் பயனும் இல்லையல்லவா? Pulp Fiction படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். நான் லீனியர் திரைக்கதைக்கு ஒரு அருமையான உதாரணம் அது. அதில்கூட, ரெஸ்டாரெண்ட்டைக் கொள்ளையடிக்கும் காட்சி, முதலில்தானே வருகிறது?
  2. திரைக்கதையின் போக்கைப் புரியவைக்கும் Key Incidentட்டும், படத்தின் ஆரம்பத்தில் வரும் Inciting Incidentட்டுக்குப் பின்னர் அமைந்துள்ள திரைக்கதையின் மீதியும் ஒன்றுதானா? இல்லை. இரண்டும் வேறானவை. Key Incident என்பது ஒரு குறிப்பிட்ட ஸீன் என்பது நண்பர்களுக்குப் புரிந்திருக்கும். திரைக்கதை எதை நோக்கிச் செல்கிறது என்று நமக்குப் புரியும் அந்த ஒரு காட்சி – அதுதான் Key Incident. ஆகவே, திரைக்கதையில் உள்ள ஒரு காட்சியே Key Incident. அதுவே முழுத் திரைக்கதையுமாக ஆகிவிடாது.
  3. இதற்கான விடையைக் கொஞ்சம் முன்னர்தான் பார்த்தோம். Key Incident மற்றும் Plot Point 1 ஆகியவை பெரும்பாலும் ஒன்றாகவே இருக்க வாய்ப்புகள் உண்டு என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட். ஆனால், இந்த இரண்டும் வேறுவேறாகவும் இருக்கலாம். அது, திரைக்கதையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் விஷயம்.
Inciting Incident, Key Incident ஆகிய இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம். இந்தக் கட்டுரையைப் பொறுமையாக இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அதன்பின், அடுத்த கட்டுரையில், ஒரு டக்கரான படத்தை உதாரணமாக வைத்து, இந்த இரண்டு விஷயங்களைப் பற்றியும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
திரைக்கதை என்பதன் அடிப்படை வடிவத்தையே காலி செய்து, படம் பார்ப்பவர்கள் அனைவரையும் மூக்கின்மேல் விரல் மட்டுமல்லாமல் மொத்த கையையும் வைத்து குத்திக்கொள்ள வைத்த அந்தப் படம்…….?
இதோ அந்தப் படத்தைப்  பற்றி இப்போது பார்க்கப்போகிறோம். அதுமட்டுமல்லாமல், இனிமேல் பெரிய gap விடாமல், வெகு விரைவில் வரிசையாக எழுதி, இதனையும் LOTR தொடரையும் முடிக்கப்போகிறேன். இடையில் ஏலியன் தொடரின் பாகங்களையும் ஒவ்வொன்றாக நோக்குவோம்.
Right. Let’s begin.
Inciting  Incident  மற்றும் Key Incident ஆகியவற்றை சிட் ஃபீல்ட் Pulp Fiction படத்தில் தேடியபோது, முதலில் பயங்கரமாகக் குழம்பியே போயிருந்திருக்கிறார். ஏனெனில், படம் முழுக்கப் பல சம்பவங்கள் நடக்கின்றன. மட்டுமல்லாமல், படமே நான் – லீனியர் ஸ்டைலில் இருக்கிறது. முன்பின்னாகப் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவை மட்டுமல்லாமல், Pulp Fiction படத்தின் திரைக்கதை ஆரம்பிக்கும்போதே, Pulp Fiction என்பதன் இரண்டு அகராதி விளக்கங்கள் திரைக்கதையின் முதல் பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, ‘மூன்று கதைகளைப் பற்றிய ஒரு கதை’ என்ற விளக்கமும் அதில் இருக்கிறது. இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கு, அடுத்த பக்கத்தில் இருந்த விஷயம் தான் டாப். அப்பக்கத்தில், அத்தியாயங்களின் தலைப்புகளோடு திரைக்கதையின் பொருளடக்கம் இடம் பெற்றிருந்தது! அதாவது, திரைக்கதையின் எந்தப் பக்கத்தில் எது இருக்கிறது என்ற பொதுவான பொருளடக்கம் இல்லை. திரைக்கதையே, பொருளடக்க வடிவில் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பொருளடக்கமும் திரைக்கதையில் ஒரு பிரதான பங்கு வகிக்கிறது.
திரைக்கதையில் பொருளடக்கத்தை இதுவரை சிட் ஃபீல்ட் பார்த்திருக்கவில்லை என்பதால், முதலில் குழம்பவே செய்தார். அதன்பின், ஒவ்வொரு பகுதியாக இந்தத் திரைக்கதையைப் பிரிக்க முடிவுசெய்து, பகுதி பகுதியாகப் படித்தார். அப்போது அவருக்கு மெல்ல மெல்ல இந்தத் திரைக்கதையில் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. திரைக்கதையின் பிரிவுகளின்படி, ஐந்து பிரிவுகளாக இந்தத் திரைக்கதை பிரிக்கப்பட்டிருக்கிறது.
முதல் பாகம்: Prologue  – முன்னுரை
இரண்டாம் பாகம்: Vincent Vega & Marcellus Wallace’s Wife
மூன்றாம் பாகம்: The Gold Watch
நான்காம் பாகம்: The Bonnie Situation
ஐந்தாம் பாகம்: Epilogue – முடிவுரை
இந்த ஐந்து பாகங்களையும் படித்த சிட் ஃபீல்ட், இந்த ஐந்து பாகங்களுமே, ஒரே ஒரு சம்பவத்தினாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அறிந்துகொண்டார். அந்த சம்பவம் என்ன?
(இதிலிருந்து, புத்தகத்தில் இல்லாத, என்னுடைய தனிப்பட்ட அனாலிசிஸ் ஆரம்பம்)
ஜூல்ஸும் (ஸாமுவேல் ஜாக்ஸன்) வின்சென்ட்டும் (ட்ரவோல்டா), மார்செலஸ் வாலஸின் பெட்டியை நான்கு இளைஞர்களிடமிருந்து மீட்கும் காட்சி நினைவிருக்கிறதா? இதோ அதை இங்கே காணலாம்.
Burger Scene என்ற பெயரில் படத்தின் புகழ்பெற்ற ஸீன்களில் இது ஒன்று.
இந்த நிகழ்ச்சிதான் அந்த முக்கியமான நிகழ்ச்சி.அது ஏன் என்று கொஞ்சம் பார்க்க முயற்சி செய்யலாமா?
Pulp Fiction படத்தின் கதையை ஒரே நேர்க்கோட்டில் சொல்ல முடிந்தால் அது இப்படி இருக்கும் (இது என்னுடைய ஒரிஜினல் முயற்சியாக்கும்).
மார்செலஸ் வாலஸ் –> அடியாட்கள் வின்சென்ட் & ஜூல்ஸ் –> பெட்டியை திரும்பப்பெறும் முயற்சி –> பெட்டியைத் திருடியவர்கள் சுடப்படுதல் –>எதிர்பாராமல் சுடப்பட்டும் காயமே இல்லாமல் உயிர்பிழைக்கும் வின்சென்ட் & ஜூல்ஸ் –> ஜூல்ஸின் ஞானோதயம்–> இருவரும் சாப்பிடப் போதல் –> ரெஸ்டாரென்ட் ஹைஜாக் by honey bunny & pumpkin –> ஜூல்ஸ் சூட்கேஸ் பறிப்பு –> ஜூல்ஸின் துப்பாக்கி முனையில் honey bunny & pumpkin –> இருவரையும் ஜூல்ஸ் விட்டுவிடுதல் (ஞானோதய effect) –> தொழிலை விட்டுவிடும் ஜூல்ஸ் –> இப்போது, வின்சென்ட் மட்டும் மார்செலஸின் அடியாள் –> வின்சென்ட் மற்றும் மார்செலஸின் மனைவி –>புட்ச்சிடம்  மார்செலஸ், boxing போட்டியில் தோற்கச் சொல்லுதல் –> போட்டியில் திருப்பம் –> புட்ச்சின் escape –> வின்சென்ட் புட்ச்சைக் கொல்ல அவன் வீட்டுக்கு அனுப்பப்படுதல் –> வின்சென்ட்டை accidentalலாகக் கொல்கிறான் புட்ச் –> மார்செலஸ் & புட்ச், gayகளால் அடைக்கப்படுதல் –> புட்ச் ஒருவனைக் கொல்லுதல் –> மார்செலஸ் இன்னொருவனின் விரைகளில் சுடுதல்  –> இருவரும் தப்பித்தல் –> மார்செலஸ், புட்ச்சை ஊரைவிட்டே ஓடிவிடச் சொல்லுதல் –> சுபம்.
இந்த வரிகளை மாற்றிப் போட்டுத்தான் இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது (திரைக்கதையை இப்படி சிம்பிளாக எழுதிக்கொள்வதன் நன்மையைப் பார்த்தீர்கள் அல்லவா?)
இதில், block செய்யப்பட்டிருக்கும் வரிகளை மட்டும் உற்றுக் கவனியுங்கள். இதுதான் மேலே உள்ள வீடியோவில் இடம்பெற்றிருக்கும் ஸீன். படத்தின் உயிர்நாடியான ஸீன். இந்தக் காட்சியால்தான், ஜூல்ஸ் மனம் திருந்துகிறான். அதனால்தான் மார்செலஸிடம்  இருந்து பிரிகிறான். அதனால்தான் வின்சென்ட் தனியாக புட்ச்சைத் தேடி அவன் வீட்டுக்குச் செல்கிறான். அதனால்தான் புட்ச், பாத்ரூமில் இருந்து வெளிவரும் வின்சென்ட்டை சுட்டுக் கொல்கிறான். அதனால்தான் புட்ச்சால் தப்பிக்க முடிகிறது. அதனால்தான் புட்ச்சும் மார்செலஸும் gay வில்லன்களிடம் பிடிபடுகிறார்கள். ஆகையால்தான் அந்த இரண்டு வில்லன்களும் கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் – அவர்களில் ஒருவனைக் கொன்று தன்னைக் காப்பாற்றிய புட்ச்சை – மார்செலஸ் மன்னித்து, ஊரை விட்டே ஓடிவிடச் சொல்கிறான்.
இதனால்தான்,  இந்த ஒரு காட்சிதான் படத்தின் பிரதானமான காட்சி என்று புரிந்துகொண்டார் சிட் ஃபீல்ட்.
இது புரிந்தவுடன், திரைக்கதையின் போக்கும் தெளிவாகிவிட்டது. இந்த மூன்று கதைகளை எடுத்துக்கொண்டால் (ஹனி பன்னி & பம்ப்கின் கதை, வின்சென்ட் & ஜூல்ஸ் கதை மற்றும் புட்ச்சின் கதை), இதிலுள்ள ஒவ்வொரு கதை படத்தில் இடம்பெறும்போதும், அந்த ஒவ்வொரு கதைக்குமே தெளிவான ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் முடிவு ஆகியவை இதே வரிசையில் இருப்பதையும் சிட் ஃபீல்ட் புரிந்துகொண்டார்.
அதேபோல், நாம் ஏற்கெனவே பார்த்த முரண்கள் (contradictions – கதையில் முரண்கள் இருந்தால்தான் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பார்த்தோமே) இப்படத்தில் விரவி இருக்கின்றன. உதாரணத்துக்கு, படத்தின் ஆரம்பக் காட்சியான ரெஸ்டாரென்ட் கொள்ளையடிக்கப்படும் காட்சியில், ஹனி பன்னி & பம்ப்கின் ஆகிய இருவரும் துப்பாக்கிகளோடு எழும் காட்சியோடு திரை ஃப்ரீஸ் ஆகி, வின்சென்ட் மற்றும் ஜூல்ஸ் ஆகிய இருவரையும் பார்க்கிறோம்.  (வீடியோவின் ஆரம்பம்). அதில், இருவரும் படு சுவாரஸ்யமாக Mcdonalds பற்றி விவாதித்துக்கொண்டே, எங்கோ நடந்து செல்கிறார்கள் என்று அறிகிறோம். அவர்கள் ஒரு கதவைத் தட்டி, அது திறக்கப்பட்டு, உள்ளே சென்று, ஜூல்ஸ் பேச ஆரம்பிக்கும்போதுதான் அவர்கள் இருவரும் அடியாட்கள் என்பதே நமக்குத் தெரிகிறது. இதுதான் முரண். இருவரும் வாழ்க்கையின் அபத்தங்களைப் பற்றிப் பேசுவதையும், திடுதிப்பென்று துப்பாக்கிகளை உருவுவதையும் ஒப்பிட்டால் இந்த முரண் புரியும். இப்படிப்பட்ட முரண்கள் திரைக்கதையில் இருப்பது, படம் பார்க்கும் ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்தும் என்று சொல்கிறார் சிட் ஃபீல்ட்.
ஆக, படத்தின் key incident என்பது, ஜூல்ஸும் வின்சென்ட்டும் மார்செலஸ் வாலஸின் பெட்டியை நான்கு இளைஞர்களிடமிருந்து மீட்கும் காட்சி என்பது நமக்குப் புரிகிறது.
அப்படியென்றால், படத்தின் inciting incident என்ன?
இதற்கு சிட் ஃபீல்ட் விடையளிக்கவில்லை. இருந்தாலும், படத்தைப் பார்ப்பவர்களுக்கே அது எளிதில் புரிந்துவிடும். ஆகவே, என் விளக்கத்தைக் கொடுக்க முயல்கிறேன். அதற்கு முன்னர், inciting incident என்றால் என்ன என்பதையும் ஒருமுறை பார்த்துவிடுவோம்.
Inciting  Incident என்பது ஒரு குறிப்பிட்ட காட்சி. திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யமான ஓபனிங் கொடுப்பது. இந்தக் காட்சிக்குப் பின், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஆடியன்ஸுக்கு எழவேண்டும். அத்தகைய ஒரு thumping  ஸீனே Inciting  Incident  என்று அழைக்கப்படுகிறது.
Pulp Fiction படத்துக்கு அப்படிப்பட்ட ஓபனிங் கொடுத்த காட்சி எது? ரெஸ்டாரண்டைக்  கொள்ளையடிக்க ஹனி பன்னி மற்றும் பம்ப்கின் முடிவுசெய்து, துப்பாக்கிகளோடு எழும் காட்சி. அங்குதான் காட்சி ஃப்ரீஸ் செய்யப்பட்டு, டைட்டில்கள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு ஓபனிங் காட்சியைப் பார்க்கும் ஆடியன்ஸ், தியேட்டரை விட்டு எழுந்துபோய்விடுவார்களா என்ன? (இந்தக் காட்சியிலுமே, இரண்டு காதலர்கள் பேசிக்கொள்வதைப் போல ஆரம்பித்து, திடீரென்று இருவரும் ரெஸ்டாரண்டைக் கொள்ளையடிப்பதில் உள்ள முரணையும் கவனியுங்கள்).
திரைக்கதை எந்த விதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், key incident மற்றும் inciting incident ஆகியவை இல்லாமல் போகாது என்கிறார் சிட் ஃபீல்ட். திரைக்கதை புரியவில்லை என்றால், திரைக்கதையை சிறு சிறு துணுக்குகளாகப் பிரித்துக்கொண்டால், முடிவில் இந்த இரண்டு சம்பவங்களும் புரிந்துவிடும் என்பது அவரது கருத்து.
இதேபோல், க்வெண்டினின் மற்றொரு மாஸ்டர்பீஸான Kill Bill படத்தின் பிரதான சம்பவம் எது? எந்த சம்பவம் நடந்ததால், படத்தின் மற்ற காட்சிகள் நடக்கின்றன?
Bride, திருமணத்தின்போது சுடப்படும் காட்சி.
ஆக, அதுதான் அப்படத்தின் key incident.
அப்படியென்றால், படத்தின் inciting incident?
படத்தின் ஆரம்பக் காட்சி. மரணத் தருவாயில், மூச்சிரைத்துக்கொண்டு தரையில் விழுந்திருக்கும் கதாநாயகியின் தலையில் வில்லன் பில் சுடும் காட்சி (என்பது என் விளக்கம்).
இப்படியாக,திரைக்கதையின் முதல் வரி எழுதப்படும் முன்னரே inciting incident மற்றும் key incident ஆகியவை தயாராக இருக்கவேண்டும் என்கிறார் சிட் ஃபீல்ட். படத்தின் ஓபனிங் ஸீனும், படத்தின் அதிமுக்கியமான ஸீனும் நம்மிடம் இருந்தால், அவற்றை வைத்து திரைக்கதையில் விளையாட முடியும். க்வெண்டின் அமைத்ததுபோல், நான் லீனியர் திரைக்கதை ஒன்றை அமைத்து, ஆடியன்ஸை சுவாரஸ்யப்படுத்தலாம்.
இத்துடன், சிட் ஃபீல்டின் புத்தகத்தில் எட்டாவது அத்தியாயமான Two Incidentsஎன்பது முடிவடைகிறது.
‘ஓபனிங் ஸீன் என்னிடம் இருக்கிறது. படத்தின் பிரதான ஸீனும் தெரியும். அடுத்து நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்கும் நண்பர்களுக்கு….இதோ அடுத்த அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார் சிட் ஃபீல்ட் …

CONVERSATION

Back
to top