font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

திரைக்கதை உள்ளே^வெளியே-3

ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை உத்திகளைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதோ அவரது திரைக்கதை முறை.
The Blake Snyder Beat Sheet
PROJECT TITLE:
GENRE:
DATE:
1. Opening Image (1);
2. Theme Started (5);
3. Set-up (1-10);
4. Catalyst (12);
5. Debate (12-25);
6. Break into Two (25);
7. B Story (30);
8. Fun and Games (30-55);
9. Midpoint (55);
10. Bad Guys Close In (55-75);
11. All is Lost (75);
12. Dark Night of the Soul (75-85);
13. Break into Three (85);
14. Finale (85-110);
15. Final Image (110);


Arima-Nambi-movie-stills-(5)8091

9. Midpoint (55)

தலைப்பிலிருந்தே, ஹாலிவுட் திரைக்கதைகளில் ‘மிட்பாயிண்ட்’ என்று அழைக்கக்கூடிய பகுதி வரவேண்டியது ஐம்பத்தைந்தாவது பக்கம் என்பது புரிந்திருக்கும். ‘மிட் பாயிண்ட்’ என்பது அங்கே ஒரு திரைக்கதையை சரிபாதியாகப் பிரிக்கும் பகுதி. பொதுவாக ஹாலிவுட் திரைக்கதைகளில் இந்த இடத்தில்தான் பிரதான பாத்திரம் ஏதேனும் ஒரு மிகப்பெரிய பிரச்னையை சந்திக்கும். ‘பெரிய பிரச்னை’ என்றால், அது இதுவரை வந்த ஐம்பத்தைந்து நிமிடங்களில் அது சந்தித்த எல்லாச் சிக்கல்களையும் விடப் பெரிய சிக்கல். இத்தகைய இடத்தில், என்ன செய்வது என்பதே தெரியாமல் அந்தப் பாத்திரம் உடைந்துபோய்விடும். இல்லாவிட்டால் ஏதேனும் வெற்றி அந்தப் பாத்திரத்துக்குக் கிடைக்கும். இந்த வெற்றி என்பதும் சரி, சிக்கல் என்பதும் சரி – தற்காலிகமானவையே. அந்த வெற்றிக்குப் பின்னர் வரும் காட்சியில் அந்தப் பாத்திரத்துக்கு விரிக்கப்பட்ட வலை அது என்பது புரியலாம். அந்தத் தோல்விக்குப் பின் வரும் காட்சிகளில் மெல்ல மெல்ல அதிலிருந்து அந்தப் பாத்திரம் மீளலாம்.
இது ஹாலிவுட்டில். இதை அப்படியே தமிழ் மற்றும் இந்தியத் திரைக்கதைகளில் பொருத்தினால் என்ன ஆகும்? அப்போது இந்த ’மிட் பாயிண்ட்’ என்பது இண்டர்வெல் என்று ஆகிறது. தமிழ்ப்படங்களில் இண்டர்வெல் என்பது இன்றியமையாத ஒரு அம்சமாகப் பலகாலமாக செயல்பட்டு வருகிறது. காரணம், நமது படங்களின் நீளம். குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணிநேரம் வரை அவை இருப்பதால் இண்டர்வெல் வைத்தே ஆகவேண்டிய சூழல். குத்துமதிப்பாக தமிழ்ப்படங்களில் 70-80 நிமிடங்களில் இண்டர்வெல் வருகிறது. இந்த இண்டர்வெல்லில் எதாவது ஒரு ட்விஸ்ட்/திடுக் சம்பவம்/சண்டை போன்ற ஒன்று இருப்பதை நாம் கவனித்து வருகிறோம். அப்போதுதான் வெளியே போன ஆடியன்ஸ் உள்ளே வர வாய்ப்புகள் அதிகம் என்பதால்.
‘ரோஜா’ படத்தில் அர்விந்த்ஸ்வாமி கடத்தப்படுவது இந்த இண்டர்வெல்லில்தான். அப்போதுதான் கதை அந்தப்படத்தில் விறுவிறுப்பு அடைகிறது. ‘அரிமா நம்பி’ படத்தில், மத்திய அமைச்சர் தனது அடியாளிடம் ‘அந்தப் பொண்ணு, அந்தப் பையன் ரெண்டுபேரையும் நான் சென்னை வர்ரதுக்குள்ள கொன்னுடு’ என்று சொல்லும் இடத்தில் வருகிறது. அதற்கு முன்னர்தான் அந்தப் பெண்ணை ஹீரோ காப்பாற்றியிருக்கிறான். மெமரி கார்ட் அவனிடம்தான் உள்ளது. எனவே, அடுத்து என்ன ஆகப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுகிறது (படத்துக்கு விமர்சனம் விரைவில்). ’அரிமா நம்பியை’ எடுத்துக்கொண்டால், ஹீரோ அடையும் தற்காலிக வெற்றிதான் இடைவேளை. அதன்பின் இன்னும் பல துன்பங்களை அனுபவிக்கப் போகிறான்.
இந்த ‘மிட் பாயிண்ட்’ என்ற அமைப்பைப் பற்றி இது போதும்.

10. Bad Guys Close in (55-75)

’அரிமா நம்பி’யையே எடுத்துக்கொள்வோம். இண்டர்வெல் முடிந்ததுமே என்ன ஆகிறது? ஹீரோயின் ஹீரோவிடம் அவளது கதையைச் சுருக்கமாகச் சொல்கிறாள். மெமரி கார்டின் பாஸ்வேர்ட் தெரியவேண்டும் என்றால் அவளது தந்தையின் ஆஃபீஸுக்குச் சென்று அவரது டைரியை எடுக்கவேண்டும். எனவே அங்கே செல்கிறான் ஹீரோ. டைரி கிடைக்கிறது. அப்போதுதான் அந்த மெமரி கார்டில் என்ன இருக்கிறது என்பது இவர்களுக்குப் புரிகிறது. அது ஒரு பயங்கரமான விஷயம். உடனடியாக அங்கிருந்து ஒரு ஹோட்டல் ரூமை புக் செய்யும் இருவரும், யூட்யூபில் அதனை அப்லோட் செய்ய முய்ற்சிக்கின்றனர். அப்போதுதான் ஆபத்து வெடிக்கிறது. இருவரும் துரத்தப்படுகின்றனர். இதுதான் Bad Guys Close in. ஹாலிவுட்டில் மிட் பாயிண்ட் முடிந்ததுமே கெட்டவர்கள் நல்லவர்களைத் துரத்துவது தொடங்கிவிடும். நம்மூரில் படங்களின் நீளம் அதிகம் என்பதால் அது கொஞ்சம் தள்ளி நடக்கும். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு இது இருக்கும்.
சுப்ரமண்யபுரத்திலும் இதேதானே? படத்தின் இடைவேளையில்தான் கதை துவங்குகிறது. கொலை. இதன்பின்னர்தான் நம்பிக்கைத் துரோகம் என்றால் என்ன என்று நண்பர்களுக்குப் புரிகிறது. தலைமறைவு. துரத்தல்.
எந்தப் படமாக இருந்தாலும் பிரதான பாத்திரத்துக்கு நிகழும் சோதனைகள் என்பது இந்தப் பகுதியில்தான் உச்சக்கட்டம் அடையும். அவனது லட்சியத்துக்கு எக்கச்சக்க இடர்கள் வரும்.

11. All is Lost (75)

கதாநாயகன் தனது வாழ்க்கையின் உச்சபட்ச சோதனைகளைச் சந்திக்கும்போது என்ன நடக்கும்? ’சூது கவ்வும்’ – பென்ட்ரைவ் ஆட்டோவில் மாட்டி சிதறுகிறது. ‘அரிமா நம்பி’யில் மெமரிகார்ட் உடைகிறது. ’சுப்ரமண்யபுரம்’ அழகர் கொல்லப்படுகிறான். தனது மகள் விபசார விடுதியில் இருக்கிறாள் என்பது ’மகாநதி’ கமலுக்குத் தெரிகிறது. ’ஆடுகளம்’ படத்தில் நாயகன் கருப்பின் பணம் தன்னிடம் இல்லை என்று மறுத்துவிடுகிறார் பேட்டைக்காரர்.
இப்படி, பிரதான பாத்திரத்திற்கு எல்லாமே இழந்த நிலை வருகிறது அல்லவா? அதுதான் All is Lost. கைவசம் இருந்த எல்லாமே போய்விட்டபின் அந்தப் பிரதான பாத்திரம் என்ன செய்யப்போகிறது? எப்படி தனது லட்சியத்தை அடையப்போகிறது?
பொதுவாக ஹாலிவுட் படங்களில் இந்தத் தருணத்தில்தான் கதாநாயகனுக்கு உறுதுணையாக இருக்கும் எதாவது ஒரு பாத்திரம் இறக்கும். ’ஸ்பைடர்மேன்’ படத்தில் பீட்டர் பார்க்கரை வளர்த்த பாட்டி ஹாஸ்பிடலைஸ் செய்யப்படுவது இந்தத் தருணம்தான். ‘The Dark Knight’ படத்தில் கதாநாயகி ரேச்சல் ஹார்வி டெண்ட்டுடன் ஜோக்கரால் கட்டிப்போடப்பட்டு இறப்பது இந்தத் தருணம்தான். இதே நேரத்தில்தான் உறூதியான, தூய்மையான ஹார்வி டெண்ட், வில்லன் டூ ஃபேஸாகவும் மாறுகிறார். Lord of the Rings: Return of the King படத்தில் மன்னர் தியோடன் இறப்பது இன்னொரு உதாரணம். தமிழில் ‘ஹேராம்’ படத்தில் ஷா ருக் கான் இறப்பது இன்னொரு உதாரணம். இப்படி கதாநாயகனின் பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும் பாத்திரம் இறப்பதால் கதாநாயகன் ஆத்திரம் அடைகிறான் (அல்லது மனம் திருந்துகிறான்). அவனது மனதில் இருக்கும் லட்சியம் இப்போது உச்சத்துக்கு சென்று கொழுந்து விட்டு எரிகிறது. இறந்த அந்த நல்லவரின் மரணம் பயனில்லாமல் போய்விடக்கூடாது என்பதுதான் அவன் மனம் முழுதும் பரவி நிற்கிறது.

12. Dark Night of the Soul (75-85)

அழகரின் மரணம் பரமனை எப்படியெல்லாம் பாதிக்கிறது? ரேச்சல் இறந்ததும் ப்ரூஸ் வேய்ன் என்ன ஆகிறார்? ஷா ருக் கான் இறந்ததும் நாயகன் சாகேத்ராமுக்கு என்ன நடக்கிறது?
தனது பயணத்தின் பாதாளத்துக்குக் கதாநாயகன் விழுந்துவிடும் தருணம் இது. இனிமேல் விடிவே இல்லை என்று அவன் தனக்குள் ஆழ்ந்து துயரத்தில் மிதக்கும் தருணம். கதாநாயகனிடம் இருந்து எல்லாமே பிடுங்கப்பட்டுவிட்ட தருணம். அடுத்து வருவது க்ளைமேக்ஸ். ஆனால் அந்தக் க்ளைமேக்ஸில் என்ன செய்து எதிரியை வெல்வது என்பது நாயகனுக்கு இன்னும் தெரிந்திருக்காது. அந்தக் கடைசி யோசனை, இந்தத் தருணத்தில்தான் நாயகனின் மனதில் மின்னலடிக்கப்போகிறது. அப்படிப்பட்ட தருணமே Dark Night of the Soul. எல்லாமே முடிந்துவிட்டது என்று கதாநாயகனுக்கு ஒரு நெகட்டிவ் எண்ணம் தோன்றும் தருணம். ஆனால் இந்த நெகட்டிவ் எண்ணத்தாலேயேதான் ஒரு பாஸிடிவ் எண்ணமும் இதன்பின் அவனுக்குத் தோன்றப்போகிறது. அந்தக் கடைசி எண்ணம்தான் அவனது வெற்றிக்கோ (அல்லது வீரமரணத்துக்கோ) காரணமாகவும் இருக்கப்போகிறது.

13. Break in to Three (85)

இதுதான் அந்த பாஸிடிவ் எண்ணம் உதிக்கும் தருணம். கடைசி பிரம்மாஸ்திரம் ஹீரோவின் மனதில் தோன்றும் நேரம். ‘அரிமா நம்பி’யில் வில்லன் மத்திய அமைச்சரை வெல்லும் யோசனை ஹீரோவின் மனதில் தோன்றிய தருணம். அழகரின் மரணத்துக்குப் பழிவாங்க என்ன செய்யவேண்டும் என்று பரமன் முடிவெடுக்கும் தருணம். சில படங்களில் இது ஹீரோவின் மனதில் தோன்றாமல் ஒரு விபத்து போல சந்தர்ப்ப சூழல்களாலும் நடப்பது உண்டு. உதாரணம்: சூது கவ்வும்.

14. Finale (85-110)

அப்படி வில்லனை வெல்லும் எண்ணம் தோன்றியதும் என்ன நடக்கிறது? க்ளைமேக்ஸ். அதுதான் இந்தப் பகுதி. க்ளைமாக்ஸின் ஆரம்பத்தில் இருந்து வில்லன் சாவதோடு முடிகிறது. இதை விரிவாக விளக்கத் தேவையில்லைதானே? ஆனால் இதில் நாம் எல்லோரும் கவனித்த விஷயம் – முதலில் அடியாளில் இருந்து தொடங்கி கடைசியில் வில்லன் சாவதாகப் படிப்படியாக இது இருக்கும்.

15. Final Image (110)

நாம் முதல் பகுதியாகப் பார்த்த ஓப்பனிங் இமேஜில் கதை நிகழ்வதற்கு முன்னர் கதாநாயகன் எப்படிப்பட்ட உலகில் இருந்தான் என்று கவனித்தோம். கதை நடந்து முடிந்ததும் கதாநாயகன் முற்றிலும் மாறிவிட்ட சூழலுக்கு வந்துவிடுகிறான். உள்ளும் புறமும் அவன் பழைய நபர் இல்லை. மாறியிருக்கிறான். அப்படிப்பட்ட புதிய மாற்றத்தை உணர்த்தும் ஒரு காட்சியோடு திரைக்கதையை முடிப்பதுதான் ஃபைனல் இமேஜ்.
பயிற்சி #11
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை பகுதிகளையும் உங்களுக்குப் பிடித்த படத்தில் இனம் காணமுடிகிறதா? அப்படிக் காணமுடிந்தால், அப்படிப்பட்ட தருணங்கள் உங்கள் திரைக்கதையில் வைக்க வசதியாக இருக்கும். ‘யாராவது சாவது’ என்று சொன்னால் அப்படியே அதைப் பின்பற்றவேண்டும் என்பது இல்லை. அந்தப் பகுதியின் நோக்கம் நிறைவேறவேண்டும். அவ்வளவே.
இது வரை ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை இனி பார்ப்போம். இவைகள், மேலோட்டமாக திரைக்கதை அமைப்பு பற்றி இல்லாமல் காட்சிகளை எப்படி உருவாக்குவது என்பது பற்றியவை.

1. Save the Cat

இதுதான் இந்தப் புத்தகத்தின் பெயர். இதன் பெயர்க்காரணத்தை முன்னர் ஒருமுறை பார்த்திருக்கிறோம். எளிமையாகச் சொன்னால், எல்லாப் படங்களிலும் ஹீரோவுக்கான ஒரு அறிமுகக்காட்சி இருக்கும். அது மக்களின் மனதைக் கவர்கிறதா, மக்களின் மனதில் ஹீரோ/ஹீரோயின் அறிமுகம் நன்றாகப் பதிகிறதா, அவர்களின் குணாதிசயங்கள் மக்களுக்கு விளங்குகிறதா போன்ற பல கேள்விகளுக்கு விடையாக விளங்குவது இந்தக் காட்சிதான். Save the Cat என்பது என்ன என்றால், Alien படத்தில் ஹீரோயின் ஸிகோர்னி வீவர் ஒரு பூனையை ஆரம்பத்தில் காப்பாற்றுவார். அதனால் அவரது கதாபாத்திரத்தின் தன்மை எளிதாக விளங்கிவிடும். அந்தக் காட்சியில் இருந்துதான் இந்தப் புத்தகத்தின் தலைப்பு ப்ளேக் ஸ்னைடருக்குப் புரிபட்டது.
எந்த எம்.ஜி.ஆர் படமாகவோ ரஜினி படமாகவோ அல்லது எந்த மாஸ் ஹீரோவின் படமாகவோ இருக்கட்டும். முதலில் அந்த ஹீரோ அறிமுகமாகும் காட்சி எப்படி இருக்கிறது? ஹீரோ எதாவது நல்ல விஷயத்தைச் செய்வார். சக ஆட்டோ ஓட்டுனரின் மகள்/தங்கை திருமணத்துக்குப் பணம் கொடுத்து அனுப்புவார். கல்யாண மண்டபத்தில் பைக்கில் புகுந்து அதிரடியாக மணப்பெண்ணைத் தூக்குவார் (அதற்கு ஒரு நல்ல காரணம் பின்னால் சொல்லப்படும்). ஊரே அவரைத் தேடிக்கொண்டிருக்கும். ஆனால் கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருப்பார். இதுபோன்ற எதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்துகொண்டுதான் மாஸ் ஹீரோக்கள் அறிமுகமாவார்கள். உடனே உலகத்துக்கே புத்தி சொல்லும் தத்துவப் பாடல். இதுதான் தமிழ் சினிமா டெம்ப்ளேட். ஆனால் ஹாலிவுட்டில் இந்த அறிமுகம் கதையோடு சேர்ந்து ஆடியன்ஸுக்கு ஒரே நிமிடத்தில் அந்தக் கதாபாத்திரத்தைப் புரியவைத்துவிடும். அதுதான் Save the Cat scene.
டெர்மினேட்டர் 2: ஜட்ஜ்மெண்ட் டே படத்தில் அர்நால்டின் அறிமுகம் எப்படி? திடீரென்று பூமியில் ஆடைகள் இல்லாமல் தோன்றும் அர்நால்ட், அப்படியே நடந்து ஒரு பப்புக்குள் போகிறார். அங்கே பிரச்னை வெடிக்கிறது. அதில் ஒருவனின் உடையைப் பிடுங்கிப் போட்டுக்கொள்கிறார். வெளியேறுகிறார். அந்தக் காட்சியிலேயே ‘இந்தாள் கிட்ட வெச்சிக்கக்கூடாது’ என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. அதன்பின் தோன்றும் ராபர்ட் பேட்ரிக்கின் அறிமுகம் இன்னும் கொடூரம். அப்போதுதான் யார் ஹீரோ, யார் வில்லன் என்பது நன்றாக விளங்குகிறது.
குருதிப்புனல் படத்தில் கமல் அறிமுகமாகும் காட்சியில்தான் குண்டு வெடித்து பஸ்ஸில் செல்லும் குழந்தைகள் பலியாகின்றனர். அவரது குணம் அந்தக் காட்சியில் புரிகிறது. இதுபோல் இன்னும் பல படங்களில் கதையோடு சேர்ந்த பல அறிமுகங்களைச் சொல்லலாம். அப்படிக் கதையோடு சேர்ந்த அறிமுகங்கள் இருந்தாலும், அங்கே ஹீரோவின் குணாதிசயம் புரியும் வகையில் ஒரு சிறிய சீன் இருந்தால் இன்னும் ஆடியன்ஸ் எளிதாக அந்த ஹீரோவுடன் ஒன்றிவிடுவார்கள் என்பதுதான் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் ரூல்.
மேலே பார்த்த டெர்மினேட்டர் 2 உதாரணத்தில் இன்னொரு விஷயமும் விளங்கும். முதலில் அர்நால்டின் அறிமுகத்தின்போது அவர்தான் வில்லன் போல இருப்பார். ஆனால் அவருக்குப்பின்னர் அவரைவிட மோசமான ஒரு ஆளை அறிமுகம் செய்வதனால் முதலில் அறிமுகமான ஆள் நமக்குப் பிடித்துப் போய்விடுகிறான். அதுதான் உளவியல் உண்மை. ஒரு கோட்டின் அருகே இன்னொரு பெரிய கோட்டை வரைந்து இந்தக் கோட்டை சிறியதாக்குதல். நமது கதாபாத்திரம் ஒரு ஆண்ட்டி ஹீரோவாக இருந்தால் அவனை விடக் கொடூரமான ஆளை அறிமுகப்படுத்தி இந்த ஆண்ட்டி ஹீரோவை ஆடியன்ஸ் விரும்பவைக்கமுடியும். ஆரண்ய காண்டத்தில் ஹீரோ சம்பத், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோரைக் காட்டியபின் டீக்கடையில் விரல் துண்டான கதையைச் சொல்லி அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஆடியன்ஸுக்கு வெறுப்பு வரச் செய்வது இதுதான். அதேபோல் படத்தின் இடையே வரும் வில்லன்கள். முதலில் ஜாக்கி ஷ்ராஃபை அறிமுகப்படுத்தி, அவருடனேயே மோதும் கதாபாத்திரம் ஒன்றைக் காட்டினால் ஆடியன்ஸ் அவன் பின்னால் வந்துவிடுகிறார்கள்.
ஆனால் எல்லாப் படங்களிலும் இப்படி ஒரு ஹீரோவின் குணாதிசயத்தைக் காட்டும் காட்சியை வைத்தே ஆகவேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு செயல்படவும் கூடாது. இந்தக் காட்சிக்கு ‘ஹீரோவின் அறிமுகம் – ஹீரோவின் நல்ல குணத்தைக் காட்டியே ஆகவேண்டும்’ என்று அர்த்தம் இல்லை. மாறாக, ஹீரோவுடன் ஆடியன்ஸை சேர்த்து வைக்கும் காட்சி என்றே இதனைப் பொருள் கொள்ளவேண்டும். ஹீரோவும் ஆடியன்ஸும் ஒருவரோடொருவர் இணையவேண்டும். அதுதான் இந்தக் காட்சியின் பொருள். அந்தக் கதாபாத்திரம் வரும் காட்சியில் அதனுடன் நாம் மனதில் ஒத்துப்போய்விடவேண்டும். அதுதான் உண்மையில் Save the Cat. இந்தக் காட்சியின் முக்கியத்துவம் மிகப்பெரியது என்பது ப்ளேக் ஸ்னைடரின் கருத்து. பலரும் இந்த முக்கியத்துவம் தெரியாமல் இப்படிப்பட்ட காட்சியை வைக்காமல், படம் ஆரம்பித்துப் பல நிமிடங்கள் கழித்துதான் ஆடியன்ஸால் ஹீரோவுடன் ஒன்ற முடிகிறது. இதனால் ஆடியன்ஸுக்குப் படம் அலுக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாமல், ஹீரோ அறிமுகமாகும் காட்சியிலேயே ஆடியன்ஸும் ஹீரோவும் ஒன்றிவிடவேண்டும்.

2. Pope in the Pool

போப்பாண்டவர் நீச்சல்குளத்தில் இருந்தால் நமக்கு என்ன? என்று இந்தத் தலைப்பைப் படித்ததும் தோன்றலாம். ஆனால் இதுவும் ஒரு ரசமான காட்சிதான். இப்படி யோசித்துப் பாருங்கள். உங்கள் படத்தில், அதுவரை நடந்ததையெல்லாம் விவரிக்கவேண்டிய காட்சி வருகிறது. பல படங்களில், என்ன நடக்கிறது என்பதே இப்படிப்பட்ட பழங்கதையை விளக்கியபின்னர்தான் ஆடியன்ஸுக்கு விளங்கும். உதாரணமாக ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் மிஷ்கின் ஒரே ஷாட்டில் விவரிக்கும் அந்த ஃப்ளாஷ்பேக். இப்படிப் பல படங்களில் கதாபாத்திரங்கள் வந்து படத்தில் இதுவரை நடந்த கதையை விவரிக்கும். அப்போதுதான் இனிமேல் என்ன நடக்கிறது என்பதே நமக்குப் புரியும். ஆனால் இந்தப் பழங்கதையை யார் கேட்பது? போர்தான் அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிஷ்கினே, ஜாலியாக சமாதியில் காலை நீட்டி அமர்ந்துகொண்டு கேஷுவலாக அந்தக் கதையை சொல்லி முடித்திருந்தால் படு அறுவையாகத்தான் இருந்திருக்கும் அல்லவா? மாறாக, தனது முகபாவத்தில் மாறுதல்களைச் செய்து அந்தக் காட்சியை ஒப்பேற்றிவிட்டார். எதையுமே ரொமாண்டிஸைஸ் செய்தே பழக்கப்பட்ட நமக்கும் அந்தக் காட்சியைப் பார்த்ததும் உள்ளே எதுவோ உருகி, பிடித்துவிட்டது.
இதுதான் Pope in the Pool.
போப்பாண்டவரைக் கொலைசெய்ய ஒரு திட்டம் போடுகிறார்கள் சில சமூகவிரோதிகள். அந்தத் தகவலை போப்பிடம் சொல்லியாக வேண்டும். போலீஸ் அதிகாரிகள் வாடிகனுக்கு செல்கிறார்கள். அப்போது போப் ஜாலியாக தனது நீச்சல்குளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறார். அங்கு செல்லும் அதிகாரிகள் அவரிடம் எல்லாக் கதையையும் சொல்கின்றனர். போப் தனது அலுவலகத்தில் நீண்ட அங்கியும் தொப்பியும் அணிந்துகொண்டு படு சீரியஸாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இது நடந்திருந்தால் அலுப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தனது நீச்சல்குளத்தில் போப் நீந்துகிறார் என்றால், அதைப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்? வாடிகனில் நீச்சல்குளம் உள்ளது என்பதே பலருக்கும் தெரியாது. போப் நீண்ட அங்கியில் இல்லாமல் நீச்சல் உடையில் நீந்துகிறார் என்பதும் பலருக்கும் அதிசயமாகத்தான் இருக்கும். எனவே காட்சியின் அமைப்பை இப்படி மாற்றி, பழைய கதையை சொல்லிமுடிக்கும்போது ஆடியன்ஸ் அலுப்படையாமல் இருக்க அந்தத் திரைக்கதையாசிரியரால் முடிந்தது (ஆனால் அது படமாக எடுக்கப்படவில்லை என்பது சோகம்). இதிலிருந்துதான் Pope in the Pool என்பது ப்ளேக் ஸ்னைடருக்கு உதித்தது.
பொதுவாக இப்படிப் பழைய கதையை விவரிப்பதற்கு Exposition என்று பெயர். நாம் சென்ற வாரத்தில் கூட ‘அரிமா நம்பி’ விமர்சனத்தில் இது ஜாஸ்தியாக உள்ளது என்று பார்த்தோம். கண்முன்னால் ஒரு நபரை அடியாட்கள் மிரட்டுகிறார்கள். அதை ஒளிந்திருந்து பார்க்கும் ஹீரோ, ‘அங்க பாருங்க அந்த ஆளை மிரட்டுறாங்க?’ என்று பக்கத்திலேயே ஒளிந்திருக்கும் நபரிடம் சொன்னால் எப்படி இருக்கும்? இதுதான் எக்ஸ்பொஸிஷன். இப்படி போரடிக்காமல் முடிந்தவரை அந்தக் காட்சியை சுவாரஸ்யப்படுத்தவேண்டும். ஜுராஸிக் பார்க்கில் டைனாஸார்களின் கதை ஒரு அனிமேஷன் படம் மூலம் சொல்லப்படுவது ஒரு உதாரணம். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் துவக்கத்தில் மோதிரத்தின் பின்கதை சொல்லப்படும்போது விஷுவல்கள் மூலமாக அந்தக் கதையை விளக்கியிருப்பது இன்னொரு உதாரணம். இதுதான் பழைய கதையை சுவாரஸ்யமாகச் சொல்வது.
தமிழில் பல படங்களில் ‘இதோ பாரு.. இந்த வரைபடத்துல இருக்குற வீட்டைத்தான் நாம கொள்ளையடிக்கப்போறோம்… அதுல இங்கதான் செக்யூரிடி நிப்பான்’ என்று விலாவாரியாக விவரிக்கும் காட்சி வரும். இதுதான் எக்ஸ்பொஸிஷன். இனிமேல் நடக்கப்போவதை மறுபடியும் இப்படி வசனங்களால் சொல்வது அவசியமற்றது. அலுக்கவும் செய்யும். அதற்குப் பதில், விவரிப்பு ஆரம்பிக்கும்போதே அடுத்த காட்சியைக் காட்டி, பின்னணியில் விவரிப்பு வந்தால் அலுக்காது. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. ‘இப்புடித்தான் பாருங்க 1960ல நான் மிலிட்டிரில இருந்தப்ப’ என்று எதாவது படங்களில் கதாபாத்திரங்கள் வந்தால் எல்லோரும் தெறித்து ஓடி மறைகிறார்கள்தானே? ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு கதை சொல்லும்போதெல்லாம் இதுதானே நடக்கிறது? கதை சொல்லல் என்பது வந்துவிட்டாலே அந்த இடத்தில் எதாவது சுவாரஸ்யமாக நடந்தால்தான் ஆடியன்ஸால் அதை முழுதும் கேட்க முடியும் என்பது உண்மை. இதனால்தான் ‘கதை கேளு கதை கேளு’ போன்ற பாடல்கள் பின்னணியில் ஒலிக்க, காட்சிகளாக அந்தக் குறிப்பிட்ட கதை விரிகிறது. நாட்டிய நாடகங்களில் இப்படித்தான் பாடலும் நடனமுமாகக் கதை சொல்லப்படுகிறது. வெறும் நடனம் அல்லது வெறும் கதை சொல்லிப் பாடல் என்றால் அலுப்புதான்.
எனவே, உங்கள் திரைக்கதையில் போப் நீச்சலுடையில் நீந்துகிறாரா? நீந்தினால் நல்லது. நீந்தாவிட்டால் போப்பை நீந்தவையுங்கள். அதுதான் இதுபோன்ற கதை சொல்லும் காட்சிகளின் அலுப்பைப் போக்கும் என்பது ஸ்னைடரின் கருத்து.
இதைப்போன்ற இன்னும் பல விஷயங்கள் வரும் வாரத்தில்….
பயிற்சி #12
உங்களுக்குப் பிடித்த படங்களில் இந்த இரண்டு காட்சிகளும் எப்படி விளக்கப்பட்டிருக்கின்றன? உங்களால் கதாநாயகனுடன் ஒன்ற முடிந்ததா? அல்லது அதற்கு நீண்ட நேரம் ஆனதா? போப்பாண்டவர் நீச்சல்குளத்தில் நீந்தும் காட்சிகள் இருந்ததா அல்லது அலுத்துப்போன கதையை நீண்டநேரம் காட்டி அறுத்தார்களா?
ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பைப் பார்த்துவிட்டோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில டிப்ஸ்களும் ப்ளேக் ஸ்னைடரின் வசம் இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம்.

3. Double Mambo Jumbo

திரைக்கதை எழுதுவதில் உடைக்கவே கூடாது என்ற சில விதிகள் உள்ளன. திரைக்கதையில் எல்லா விதிகளுமே உடைப்பதற்காகத்தான். ஆனாலும் இவற்றின் மீது கைவைத்தால் டப்பா டான்ஸாடி விடும். படத்தில் கொலை நடந்திருக்கும். கிட்டத்தட்ட எல்லா கதாபாத்திரங்களின் மீதும் சந்தேகம் இருக்கும். கடைசி ஸீனின் கடைசி ஷாட்டில் ஜிங் என்று யாரோ இதுவரை வரவே வராத அன்நியமான நபர் வந்து கொலைகாரன் ஆகிவிடுவார். இது பழைய தமிழ்ப்படங்களின் லாஜிக். இது போல இப்போது எடுத்தால் ஆடியன்ஸ் ஸ்க்ரீனைக் கிழித்துவிடுவார்கள். காரணம் இது ஆடியன்ஸை அவமதிக்கும் பாணி.
இதேபோல்தான் இந்த டபிள் மாம்போ ஜம்போ என்பதும் ஒரு முக்கியமான விதி. இதனை உடைத்த படங்கள் திரைக்கதையில் அடிவாங்கியே இருக்கின்றன. இப்படித் திரைக்கதையில் அடிவாங்காமல் இதனை இதுவரை யாரும் உடைத்ததில்லை.
ஆடியன்ஸால் எந்த ஒரு திரைக்கதையிலும் ஒரு தற்செயல் நிகழ்வுக்குமேல் ஒப்புக்கொள்ளமுடியாது. இதுதான் டபிள் மாம்போ ஜம்போ. ‘தற்செயல் நிகழ்வு’ என்பதை ஃபாண்டஸி படங்களில் ‘மாஜிக்’ என்று வைத்துக்கொள்ளலாம். ‘மாஜிக்’ என்றுதான் ப்ளேக் ஸ்னைடர் எழுதியிருக்கிறார். ஆனால் அதன் நீட்சியாக, தற்செயல் நிகழ்வு என்பது என் அவதானிப்பு.
தமிழில் ஃபாண்டஸி படங்கள் மிகக்குறைவு. இங்லீஷில் எக்கச்சக்கம். எனவே இது அங்கே மிக முக்கியம்.
பொதுவாகத் திரைக்கதையில் சில திருப்பங்கள் வரும். அந்தத் திருப்பங்கள் தற்செயல்களாக இருப்பதைத்தான் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தத் தற்செயல்கள் ஒன்றுக்கு மேல் போய்விட்டால் ஆடியன்ஸுக்கு அலுக்க ஆரம்பித்துவிடும் என்பதே இந்த விதியின் விளக்கம்.
ஹேராம் படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் கதாநாயகன் சாகேத்ராமின் நண்பன் ஒரு படான் – முஸ்லிம். வாழ்க்கை முழுதும் கிழக்கிலும் வடக்கிலுமே கழித்தவன். ஆனால் அவன் பட ஆரம்பத்தில் சாகேத்ராமுடன் ஜாலியாக ‘ராமரானாலும் பாபரானாலும்’ என்று நாக்கை சுழற்றி சுழற்றிப் பாடிக்கொண்டிருப்பான். தமிழில். இது ஒரு கமர்ஷியல் மசாலா என்றால் பிரச்னையில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கமலின் கருத்து – இது ஒரு உலகப்படம் என்பது (வெளிப்படையாக அதை சொல்லாவிட்டாலும்). அவன் எப்படித் தமிழில் பேசினான் என்று கேட்டால் லாஜிகலாக அதற்குப் பதிலே சொல்ல முடியாது. அது ஒரு ‘தற்செயல்’. இது படத்தின் ஆரம்பத்தில் வருகிறது.
இதற்குப்பின் என்ன நடக்கிறது என்று கவனித்தால், வரிசையான பல ‘தற்செயல்கள்’ அதில் நடக்கின்றன. அப்யங்கர் தமிழில் பேசுகிறார். தில்லியில் ஹிந்துத் தீவிரவாத கும்பலின் தலைவராக தமிழ் பேசும் டெல்லி கணேஷ் இருக்கிறார். தில்லியில் இருக்கும் ஒரு புரோக்கர் கூடத் தமிழ் பேசுகிறார். மறுபடியும் அதே தமிழ் பேசும் படான் வருகிறான். சாகேத் ராமுடன் கண்டபடி தமிழிலேயே ‘சம்வாதம்’ புரிந்து இறந்து போகிறான்.
எத்தனை தற்செயல்கள்?
இப்படி வரிசையாக வரும் தற்செயல்கள் ஆடியன்ஸை இயல்பிலேயே அலுத்துப்போக வைத்துவிடும். இதுதான் டபிள் மாம்போ ஜம்போ. ஒரு தற்செயல் நிகழ்வைப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் எல்லாமே தற்செயலாக இருந்தால் எரிச்சல்தானே வரும்?
இந்த டபிள் மாம்போ ஜம்போ ரஜினி படங்களில் வேறு மாதிரி கையாளப்பட்டிருக்கும். எங்கு ஹீரோயினிடம் யார் வம்பு செய்தாலும் அங்கே கரெக்டாக ரஜினி ‘தற்செயலாக’ வந்து நிற்பார். இது அவரது எல்லாப் படங்களிலும் நடக்கும்.
இதுவே ஃபாண்டஸியாக இருந்தால், அதில் ‘மேஜிக்’ என்பதை வைத்து யோசித்தால், ஒரு படத்துக்கு ஒரு மேஜிக்தான். அதற்குமேல் வந்தால் படம் தலைவேதனையைக் கொடுக்கும் என்று புரிந்துகொள்ளலாம். மேஜிக்’ என்றால் கதையின் நாயகனோ நாயகியோ மேஜிக்கை உபயோகித்து செய்யும் சாகஸங்களைச் சொல்லவில்லை. ப்ளேக் ஸ்னைடரே கச்சிதமான ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறார். ஸ்பைடர்மேன் படத்தின் முதல்பாகத்தில் (அமேஸிங் ஸ்பைடர்மேன் அல்ல. அதற்கும் முன்னால் வந்த ஸாம் ரெய்மியின் ஸ்பைடர்மேன் முதல் பாகம்), சிலந்தி கடித்ததால் பீட்டர் பார்க்கர் என்ற கல்லூரி மாணவன் ஸ்பைடர்மேன் ஆகிவிடுவான். இது முதல் மேஜிக். அதே சமயத்தில் வில்லன் க்ரீன் காப்ளினும் அப்படித்தான். ஒரு பரிசோதனையின்போது பிரச்னை நேர்ந்து விசேட சக்திகள் உடைய வில்லன் ஆகிவிடுவான். இரண்டுமே ஒரே போன்ற ‘தற்செயல்கள்’. ‘மேஜிக்குகள்’. ஆனால் ஸ்பைடர்மேன் தப்பித்ததன் காரணம் அது ஒரு வெற்றிகரமான காமிக்ஸ். பொதுவான படமாக இருந்திருந்தால் அடி வாங்கியிருக்கும் என்பது ப்ளேக் ஸ்னைடரின் கூற்று. இதே போல் மனோஜ் நைட் ஷ்யாமளனை ஓட ஓட விரட்டி நக்கலடிக்கும் இன்னொரு உதாரணமும் புத்தகத்தில் உண்டு. Signs பற்றி.
எனவே, நீங்கள் மிகப்பெரிய இயக்குநராக இல்லையென்றால் இந்த ஒரே படத்தில் ஒன்றுக்கு மீறிய தற்செயல்கள் வேண்டாம்.

4. Laying Pipe

பொதுவாக ஒரு படம் எப்போது ஆரம்பிக்க வேண்டும்? ஸிட் ஃபீல்டில் இருந்து அனைத்து திரைக்கதையாசிரியர்களும் காட்டுக்கத்தல் கத்திச் சொல்லும் பொதுவான விஷயம் – திரைக்கதையின் 25ல் இருந்து 30 பக்கங்களுக்குள் ஆரம்பித்துவிடவேண்டும். அதுவே அதிகம். 20ம் பக்கத்தில் லேசாக கதைக்கு ஒரு முக்கியமான சம்பவம் வைத்துவிட்டு முதல் ப்லாட் பாயிண்ட் வரும் 30ம் பக்கத்தில் இருந்து கதையை டகாலென்று துவங்கிவிடவேண்டும் என்பதே உலகம் முழுதும் உள்ள திரைக்கதை எழுத்தாளர்களின் நோக்கம். அதில் கொஞ்சம் கூட மாற்றமோ வேறுபாடோ இல்லை. உலகமே (இந்தியாவைத் தவிர) இந்த விதியை ஒப்புக்கொண்டாகிவிட்டது. ஆனால் இந்தியாவில் (குறிப்பாகத் தமிழ் நாட்டில்) பெரும்பாலான இயக்குநர்கள் இப்போதுதான் ஹாலிவுட் எழுபதுகளின் துவக்கத்தில் பின்பற்றிய திரைப்பட விதிகளைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். ‘வேலையில்லா பட்டதாரி‘ ஒரு சமீபத்திய உதாரணம். கதையே இல்லாமல் ஒரு படத்தை ஒப்பேற்றுவது. அஜீத், விஜய் படங்கள் எல்லாம் இதில் டாக்டரேட் வாங்கியவை. ஹாலிவுட்டில் எழுபதுகளிலும் எண்பதுகளின் துவக்கத்திலும் இது சர்வசாதாரணம். இப்போதும் மைக்கேல் பே, ரோலாண்ட் எம்மரிச் போன்ற, முன்ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த இயக்குநர்கள் இதையேதான் ஹாலிவுட்டிலும் செய்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் இப்படிப்பட்ட படங்கள் ஓடுவதன் காரணம் மிகவும் எளிது. இங்கேதான் நட்சத்திரங்கள் கடவுள்களாகப் பார்க்கப்பட்டு வருகின்றனர் என்பது ஒன்று. இன்னொன்று – திரைப்படங்கள் வேண்டுமென்றே ஆடியன்ஸை நல்ல படங்களின் பக்கம் அழைத்துச் செல்லாமல் இதேபோன்ற மொக்கைப் படங்களையே தொடர்ந்து கொடுத்து ஆடியன்ஸை இதுதான் நல்ல படம் என்று நம்ப வைக்கின்றன. இது இரண்டு. மூன்றாவதாக, தமிழ் நாட்டில் பொதுஜனங்களாக இருக்கும் 90% மக்களுக்கு மீடியாக்களின் மூலம் திணிக்கப்படும் விஷயங்கள் என்ன என்று கவனித்தால் இதே படங்கள்தான். இவர்கள் பேட்டிகள், பாடல்கள் என்று வரிசையாகப் போட்டுப்போட்டு ‘இதுதான் காவியம்… இதுதான் உலகசினிமா’ என்ற பிம்பம் அவர்களின் மனதில் திணிக்கப்படுவதால் நல்ல சினிமா எது, நல்ல புத்தகங்கள் எவை என்பதெல்லாம் தெரியாமலேயே நான்கைந்து தலைமுறைகள் வளர்ந்துவிட்டோம். இதுதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்.
எனவே, உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான விதி – திரைக்கதையில் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கதையை ஆரம்பித்துவிடவேண்டும் என்பதே. இதுதான் Laying Pipe.
ஆனால், சிலசமயங்களில் நேரடியாகக் கதையினுள் நுழையவும் முடியாது. முன்கதையைக் காட்டியாகவேண்டும். உதாரணம்: சுப்ரமண்யபுரம். கிட்டத்தட்ட இடைவேளையின்போதுதான் அதில் கதையின் முக்கியமான கட்டம் ஆரம்பிக்கிறது. ஆனால் அதுவரை அதில் வரும் நாயகர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்; அவர்கள் எப்படி சூழ்ச்சிக்கு இரையானார்கள் என்றெல்லாம் விபரமாகக் காட்டவேண்டிய தேவை இருந்தது. அதனால்தான் படத்தின் முன்பாதி முழுதும் அதையே காட்டியிருப்பார்கள். ஆனால் சுப்ரமண்யபுரத்தில் அழுத்தமான கதை இருந்ததால் அந்தப் படம் நம் எல்லோருக்கும் பிடித்தது. படத்தின் முன்பாதியிலேயேகூட நண்பர்களைப் பற்றிய காட்சிகள் வருவது, அரசியல்வாதியைக் காட்டுவது எல்லாமே கதையின் ஒரு பகுதிதான். அதை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் கதையே இல்லாமல் கதாநாயகனை ஒரு சூப்பர்ஹீரோவாகக் காட்டும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் இதனை ஏற்றுக்கொள்வது இயலாது.
எனவே, திரைக்கதை எழுதும்போது இது ஒரு முக்கியமான அம்சமாக இருக்கவேண்டும். ‘கதை எப்போது ஆரம்பிக்கிறது? கதையைத் துவங்கும் முன்னர் கதையை நோக்கி இட்டுச்செல்லும் காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்கின்றனவா? ஆடியன்ஸுக்கு அவை அலுப்பை வரவழைக்குமா?’ என்பதெல்லாம் மிகவும் முக்கியம்.
பயிற்சி #13

நீங்கள் பார்த்த படங்களில் எத்தனை படங்கள் இவை இரண்டையும் கொண்டிருந்தன? யோசித்துப் பாருங்கள்.

5. Black Vet A.K.A Too much Marzipan

ப்ளேக் ஸ்னைடர் இந்தத் தலைப்பில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை சொல்கிறார். ஆனால் எனக்கு அதிலேயே இன்னொன்றும் தோன்றியது. இரண்டையும் பார்த்துவிடலாம். முதலில் ப்ளேக் ஸ்னைடர் சொல்வது.
பொதுவாகவே திரைப்படங்கள் பார்க்கும்போது ஒரு விஷயத்தை நாம் கவனித்திருக்கலாம். பல திரைப்படங்களில், கதை என்பது மிகவும் சிறிய வஸ்துவாக இருக்கும். அந்தக் கருவை வைத்துக்கொண்டு ஒரு ஒரு மணி நேரப் படம் சாத்தியம். அதையே ஜவ்வாக இழுத்து, இரண்டரை மணி நேரப் படமாக வழங்கும்போது அந்தப் படம் படுத்துவிடுகிறது. இதற்குத் தமிழில் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் பார்த்ததில் ‘மரியான்’ அப்படிப்பட்ட படம். ’வேலையில்லா பட்டதாரி’யும் அதே வகைதான். இரண்டரை மணி நேரப் படமாக எடுக்கும்போது வலு குறைந்துவிடும் படங்கள் இவை. இதுதான் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் Black Vet A.K.A Too much Marzipan. இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கே அந்தப் படத்தை எழுதும்போது இது நன்றாகத் தெரியும். ஆனாலும் பாடல்கள், நகைச்சுவை அல்லது கதைக்கு சம்மந்தமில்லாத சுவாரஸ்யமான காட்சிகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு அந்த ஒருமணி நேரக் கதையில் இருக்கும் பாக்கி ஒண்ணரை மணி நேரத்தை இட்டு நிரப்பலாம் என்றே மனதில் தோன்றும். இதற்கு நடிகரின் கால்ஷீட்; தயாரிப்பாளரின் பட்ஜெட்; நமக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும், ‘இந்தக் கதை இரண்டரை மணி நேரத்துக்குத் தேறாது’ என்று நமக்கே தோன்றிவிட்டால், உடனடியாக அந்தக் கதையைத் தொலைத்துத் தலைமுழுகிவிட்டுப் புதிதாக ஒரு கதையை எடுத்துப் படமாக்கலாம். அப்படிச் செய்வதே நல்லது.
முதலில், நமது கதை, எந்த இலவச இணைப்பும் இல்லாமல் ஒரு முழுநீளப் படத்துக்குச் சரிவருமா என்று யோசிப்பது நல்லது. ஒருவேளை அப்படி அது வராது என்று தெரிந்துவிட்டால், ‘கதாநாயகன் இடது கைப்பழக்கம் உள்ளவன்’ என்று யோசித்து, அதற்கு இரண்டு காட்சிகள் வைப்பது; கதாநாயகிக்கு இரண்டு காட்சிகள்; ஒரு ரொமாண்டிக் பாடல்; படத்தில் வரும் குணச்சித்திர நடிகருக்கு இரண்டு காட்சிகள் என்றெல்லாம் யோசித்து அந்தக் காட்சிகளை வைத்தே படத்தை முழுமையாக்குவது தேவையில்லை. விட்டுவிடலாம். கதைக்கு சம்மந்தமற்ற இந்தக் காட்சிகளால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை.
இப்போது இரண்டாவது விஷயம். இதை ப்ளேக் ஸ்னைடர் சொல்லவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து.
பொதுவாக ஒரு இயக்குநரின் படம் என்றால் அந்த இயக்குநருக்குப் பிடித்த சில விஷயங்கள் அந்தப் படத்தில் வந்தே தீரும். அந்தக் காட்சிகளை வைத்தே அது குறிப்பிட்ட இயக்குநரின் படம் என்று எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இது தமிழுக்கு மட்டும் அல்ல; உலகம் முழுதும் உள்ள பல இயக்குநர்களின் பாணி. உதாரணமாக, ஸ்கார்ஸேஸியின் பல படங்களை ஒரே காட்சியைப் பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். இதேதான் டாரண்டினோவுக்கும் பொருந்தும். தமிழுக்கு வந்தால், மணி ரத்னம், ஷங்கர், கௌதம் போன்ற இயக்குநர்களும் இப்படியே. ஷங்கரின் பல படங்களில் கதாநாயகன் ஒரு சூப்பர்ஹீரோவாகத்தான் இருப்பான். மணி ரத்னம் படங்களின் லைட்டிங்கே போதும் – அவரது படங்களைக் கண்டுகொள்ள. அவரது எண்பதுகளின் பல படங்களில் backlighting மிகவும் தனியாகத் தெரியும். நாயகனில் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ பாடலில் அந்த வீட்டில் எப்படி லைட்டிங் செய்யப்பட்டிருக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். இதுவேதான் அக்னி நட்சத்திரம், அஞ்சலி, மௌன ராகம், தளபதி, இதயத்தைத் திருடாதே ஆகிய படங்களிலும் இருக்கும். கௌதமின் ரொமாண்டிக் காட்சிகள் இப்படியே அவரது எல்லாப் படங்களிலும் தனியாகத் தெரியும்.
Auteur Theory
‘இயக்குநரே ஒரு படத்தின் கேப்டன்’ என்ற ஒரு கருத்து அறுபதுகளில் நிலவியது. ஃப்ரெஞ்ச் இயக்குநர் ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (François Truffaut), 1954ல் உருவாக்கிய ஒரு பதம் – Auteur theory. இதன்படி, திரைக்கதை ஒன்று படமாகும்போது அதன் இயக்குநர் அவரது பாணியில் அதனை உருவாக்குவார். திரைக்கதை படிக்கும்போது ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை வழங்கலாம். அது அந்த இயக்குநரிடம் படமாகும்போது அந்த இயக்குநரின் அனுபவங்கள் அந்தத் திரைக்கதையை அவரது குறிப்பிட்ட கலைப்படைப்பாக மாற்றிவிடும். ஸ்கார்ஸேஸியை இதற்குக் கச்சிதமான உதாரணமாகச் சொல்லலாம். அவருடைய கருத்துகள், ஸ்கார்ஸேஸியின் ஆரம்பகாலப் படங்களில் அட்டகாசமாகப் பிரதிபலிக்கும். டாக்ஸி ட்ரைவர், ரேஜிங் புல், Mean Streets, The last Temptation of Christ போன்றவை உதாரணங்கள். இவரது கதாபாத்திரங்கள் (ஏசு உட்பட) தனியானவர்கள். சமூகத்தில் இருந்து தனித்தே இருப்பவர்கள். சமூகத்தின் மீது ஒருவித கோபம் கொண்டிருப்பவர்கள் (கோபம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாவிட்டாலும், சமூகத்தின் மீது அது பரிவாக இருக்கலாம். இரக்கமாக இருக்கலாம். கோபம், எரிச்சல் என்றும் இருக்கலாம்). அந்த எண்ணம் எப்படி வெளிப்படுகிறது என்று கவனித்தால், அது ட்ராவிஸ் பிக்கிள் போல சமுதாயத்தை அழிக்கவேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம் (Taxi Driver); அல்லது கடவுளாக இல்லாமல் ஒரு மனிதனாக வாழும் ஏசுவின் மனதில் எழும் வருத்தம் கலந்த இரக்கமாகவும் இருக்கலாம் (last temptation of Christ). எப்படி இருந்தாலும், அவர் எப்படி சமுதாயத்தைப் பார்க்கிறாரோ அதே பார்வைகள்தான் அவரது கதாபாத்திரங்களுக்கும் இருக்கும்.
இப்படி, ஒரு இயக்குநராகத் தனது பாணியை அழுத்தமாக வெளிப்படுத்திய ஸ்கார்ஸேஸிதான் Auteur. அந்த வார்த்தைக்கு ‘எழுத்தாளர்’ என்று அர்த்தம். ஒரு படத்தை முற்றிலும் தனது படைப்பாக உருமாற்றி வெளியிடுபவரே ஆட்டெயர். திரைப்படங்களைப் பற்றிய ஸ்கார்ஸேஸியின் அறிவு அளப்பரியது.
ஆனால் இந்த ஆட்டெயர் தியரியில் ஒரு பிரச்னை உண்டு. எத்தகைய இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அதனை இந்த ஆட்டெயர்கள் உருமாற்றி, தங்களது பாணியில் வெளியிடுவார்கள். இது த்ரூஃபோ சொன்னது. ஆனால் பிந்நாட்களில் அது சர்ச்சைக்குள்ளானது. காரணம், திரைப்படத்தின் முதுகெலும்பு என்பது திரைக்கதை. அப்படியென்றால் அந்தத் திரைக்கதையை எழுதும் நபர்தானே ஒரு படத்துக்கு முக்கியம்? இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியது. ஆனால் என்ன யோசித்தாலும், இயக்குநர்களில் auteurகள் இருப்பதுபோல் திரைக்கதையில் இல்லை. காரணம், த்ரூஃபோ அப்போது இருந்த இயக்குநர்களை இரண்டாகப் பிரித்தார். ஒன்று – தங்களது கருத்துகளையும் பாணிகளையும் திரைப்படங்களில் இடம்பெற வைத்து ஒரு மோசமான கலைப்படைப்பையும் அட்டகாசமாகத் திரையில் காட்ட வல்ல Auteurகள். இன்னொன்று – auteur அல்லாதவர்கள். எத்தகைய திரைக்கதை எழுத்தாளரையும் மீறி இந்த auteurகளால் தனித்துத் தெரிய முடியும். அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. ஸ்கார்ஸேஸியிடம் விஷ்ணுபுரத்தைக் கொடுத்தால், அதையும் ‘ஒரு ஸ்கார்ஸேஸி படம்’ என்று நிரூபிக்கும் வகையில்தான் வெளியிடுவார். அதில் ஜெயமோகன் துளிக்கூட மிளிர முடியாது. ஒரே அடிதான் (ஆனால் ஸ்கார்ஸேஸி விஷ்ணுபுரத்தை எடுக்க விரும்பமாட்டார். நாளை மற்றுமொரு நாளேதான் அவரது விருப்பத்திற்குறிய படைப்பாக இருக்கும்).
இத்தகைய பாணி, ஸ்கார்ஸேஸிக்கு இயற்கையிலேயே இருந்தது. அவரைப் போன்றவர்கள் மிகவும் சொற்பம். பொதுவான இயக்குநர்கள், auteur அல்லாதவர்களே. எனவே, மணி ரத்னம் போல ஒரே போன்ற விஷயங்களைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருப்பது ஆடியன்ஸுக்கு அலுக்கும். இதைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு படத்தையும் புதிய பாணியில் எடுக்கவேண்டும். இதற்குத் தமிழில் மணிவண்ணன் ஒரு சிறந்த உதாரணம். மணிவண்ணன் கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்கவேண்டும் என்று புரிந்தவர். அவரது இரண்டு படங்களை எடுத்து ஒப்பிட்டால், எதுவுமே முந்தைய படம் போல இருக்காது. அதுதான் நல்ல இயக்குநருக்கு அடையாளம். (உடனே ’மணி ரத்னமும் மணிவண்ணனும் ஒண்ணாடா?’ என்று சாமியாடவேண்டாம். சொல்ல வந்தது இருவரையும் ஒப்பிடுவது அல்ல)
இதுதான் நான் சொல்ல வந்த இரண்டாவது விஷயம். நமது பாணி ஒரே போன்று இருப்பதை மாற்றவேண்டும். நம்மை நாமே நன்றாக அனலைஸ் செய்து, ஒரே போன்ற விஷயங்களை திரும்பத்திரும்ப இடம்பெற வைப்பதை நிறுத்தவேண்டும் (மிஷ்கினின் படங்களில் வரிசையாக வந்து அடிவாங்கிச் செல்லும் காட்சிகள்).

6. Watch Out for that Glacier

தமிழ்ப்படங்களில் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். என்னவென்றால், கதாநாயகனை வில்லன்கள் துரத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களால் கதாநாயகனுக்கு உயிராபத்தே நேரப்போகிறது. ஆனால் அவர்கள் எங்கே என்று பார்த்தால், கதாநாயகன் டூயட் பாடி முடித்து, அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து, அநாதைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்து எல்லாமே முடிந்தபின் ‘டாய்ய்ய்ய்ய்’ என்று வந்து சண்டையிட்டு அடிவாங்கிக்கொண்டு செல்வார்கள். வேகமோ விறுவிறுப்போ எதுவும் அதில் இருக்காது. கடனுக்காகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள் என்பது நன்றாகத் தெரியும்.
இதுதான் Watch Out for that Glacier.
தசாவதாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். படத்தில், உலகுக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு vial – ஒரு குப்பி – அமெரிக்காவிலிருந்து தப்பித்து இந்தியா வருகிறது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அது என்ன செய்கிறது என்று பார்த்தால், டொயிங் டொயிங் என்று மிக மிக மெதுவாக ஆமை வேகத்தில் ட்ராவல் செய்துகொண்டே இருக்கிறது. அந்த வயலினால் எந்தப் பரபரப்பும் கதையில் உண்டாவதில்லை. ஆனால் கதையின் முக்கியமான விஷயமே அந்த வயல்தான்!! இது எத்தனை முரண்பாடான விஷயம்!! மாறாக ஏலியன்கள் போல் கர்ணகொடூர மேக்கப்பில் வந்து எல்லாரையும் பயமுறுத்த வேறு செய்தார் கமல். எனவே தசாவதாரம் ஒரு travel movie என்றுதான் கமல் விளம்பரம் செய்திருக்கவேண்டும். அல்லது ஹாரர் படம் என்று சொல்லியிருக்கலாம். மாறாக ஆக்‌ஷன் அது இது என்று விளம்பரம் செய்ததால் தியேட்டருக்குப் போய் தலைவலி வந்ததே மிச்சம்.
இது ஒரு உதாரணம். நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் என்னவென்றால், கதையில் வரும் ஆபத்துகள் நிஜமாக இருக்கவேண்டும். அவை கதாபாத்திரங்களைப் பாதிக்கவேண்டும். அவை பரபரப்பாகவும் இருக்கவேண்டும். கதாபாத்திரங்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்றால் அந்த ஆபத்து எத்தகையது என்பது தெளிவாகக் காண்பிக்கப்படவேண்டும். வில்லன்கள் நிஜமானவர்களாக இருக்கவேண்டும். ’புதுப்பேட்டை’ போல.
யோசித்துப் பாருங்கள். உங்கள் படத்தில் வில்லன் ஒரு 90 வயதுத் தாத்தா என்றால் ஆடியன்ஸ் எரிச்சலைடைவார்களா இல்லையா? அந்தத் தாத்தா எழுந்து செங்குத்தாக நிற்பதற்கே அரைமணி நேரம் ஆகுமல்லவா?
பயிற்சி #14
உங்கள் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளோ கதாபாத்திரங்களோ இருக்கின்றனவா? கதையில் ஆபத்துகள் குறைவாக உள்ளனவா? உடனடியாக அதை மாற்றுங்கள். கூடவே, ஒரே போன்ற காட்சிகள் வைக்கும் இயக்குநர்களையும் பற்றி யோசித்துப் பாருங்கள்.

7. Covenant of the Arc

ஒரு திரைக்கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை ஒரே போன்று இருப்பதில்லை. இருக்கவும் கூடாது. துவக்கத்தில் எப்படி இருந்ததோ, இறுதியில் அதிலிருந்து சற்றேனும் மாற்றம் அடைந்திருக்கவேண்டும். அதுதான் Covenant of the Arc.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஸிட் ஃபீல்டும் இதை வலியுறுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஸிட் ஃபீல்டின் கருத்தை இங்கேபடிக்கலாம். முதலில் இதைப் படித்துவிட்டால் அவசியம் இனி வரப்போகும் விஷயங்கள் தெளிவாகிவிடும். எனவே ஸிட் ஃபீல்டின் கருத்தைப் படித்துவிட்டு வாருங்கள். கருந்தேளில் வந்த பழைய கட்டுரை அது.
இது ஏன்? எதற்காக ஒரு கதாபாத்திரம் மாற வேண்டும்?
நிஜவாழ்க்கையில் நம்மை மையமாக வைத்து யோசித்தால், நமது வாழ்க்கையில் சில வருடங்களுக்குமுன் எப்படி இருந்தோமோ அப்படியேவா இப்போது இருக்கிறோம்? அந்த இடத்தைவிடவும் வேறான ஒரு இடத்தில்தானே நமது புரிதலில் நாம் இப்போது இருக்கிறோம்? அது குணத்திலாகட்டும்; செயல்பாட்டில் ஆகட்டும்; புரிதலில் ஆகட்டும்; எதுவாக இருந்தாலும் நமது செயல்கள்/எண்ணங்கள் மாறியிருக்கின்றன. காரணம் நமக்குத் தொடர்ச்சியாக வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்கள். பிறரிடம் பழகுவதாலேயே குயுக்தியாக இனி எப்படி நடந்துகொள்வது? சாமர்த்தியமாக எப்படி வாழ்வது? போன்ற பாடங்கள் நமக்குக் கிடைக்கின்றன. எத்தனை முறை அடிபட்டாலும் அதேபோன்று இருக்க நாம் என்ன ஏமாளிகளா?
வாழ்க்கையில் எப்படி மாற்றங்கள் அவசியமோ அதேபோல்தான் திரைக்கதையிலும் அவை அவசியம். இப்படிப்பட்ட மாற்றங்கள் இருந்தால்தான் கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். பிடித்து வைத்த களிமண் போலவே ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை இருக்கும் கதாபாத்திரங்கள் நமக்குப் பிடிக்காமலேயே போய்விடும்.
இதுவரை வெளிவந்த எல்லாப் படங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அட்டகாசமான படங்கள், பிற சாதாரணமான படங்களிலிருந்து தங்களைப் பிரித்துத் தனித்துவத்துடன் காட்டிக்கொள்வதில் இந்தக் கதாபாத்திர மனநிலை மாற்றம் ஒரு முக்கியமான அம்சமாக விளங்குகிறது என்பது புரியும். ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் இருக்கும் சூழலும் சரி- அதனுடன் வாழும் பிற பாத்திரங்களும் சரி – அதைப் பார்க்கும் ஆடியன்ஸும் சரி – இந்த மாற்றத்தினால் பாதிக்கப்படப்போகிறார்கள். அந்த பாதிப்பு அவர்களின் மனங்களில் ஆழமான உணர்ச்சி ஒன்றை விட்டுச்செல்லப்போகிறது. அந்த உணர்ச்சிதான் முக்கியம். அந்த மாற்றத்தினால்தான் அந்தப் பாத்திரத்தை நாம் விரும்பவோ வெறுக்கவோ செய்யப்போகிறோம். அட்டகாசமான ஒரு கதை திரையில் நடக்கிறது என்றால், அதில் சம்மந்தப்பட்ட அனைவரும் மாறுவதுதான் இயல்பு. அந்த சம்பவத்தினாலேயே அவர்களின் மனம் ஏதாவது மாற்றத்தை அடையலாம். அதைப் பார்க்கும் ஆடியன்ஸாகிய நமது மனதையும் அந்த மாற்றம் பாதித்துக் கொஞ்சமேனும் மாற்றும். இது ஹாலிவுட்டில் மட்டும் அல்ல. எந்த நல்ல படம் என்றாலுமே அதில் கதாபாத்திரங்கள் மாற்றங்களை எதிர்கொள்ளும்.
சரி. வழக்கப்படி சில மாற்றங்களை கவனிப்போம். இனிமேல் வரப்போவதை ப்ளேக் ஸ்னைடர் சொல்லவில்லை. இது எனது தனிப்பட்ட அனாலிஸிஸ்.
அக்னி நட்சத்திரம் – எதிரிகளாக இருக்கும் கார்த்திக் & பிரபுவின் மாற்றம்.
பருத்தி வீரன் & ஆடுகளம் – விட்டேற்றியாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் கதாநாயகர்களின் மாற்றம்
புதிய பாதை – இரக்கமே இல்லாத கதாநாயகன் மெல்ல மெல்ல மாறுவது
மைனா – ஆரம்பத்தில் இருந்து இந்தப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களுமே மாறுவதை கவனித்திருக்கிறீர்களா?
ரத்தக்கண்ணீர் – எம்.ஆர் ராதாவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்ததை விட முற்றிலும் மாறுபட்ட நிலையில்தானே இறுதியில் இருக்கிறது?
இவையெல்லாம் பாஸிடிவ் மாற்றங்கள். நல்ல நிலையை நோக்கிக் கதாபாத்திரங்கள் மாறுவது. அதேசமயம் நல்ல நிலையில் இருந்து கெட்ட நிலைக்கும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
அஞ்சாதேயில் கிருபா கதாபாத்திரம் நல்லவனாக இருந்துதானே கெட்டவனாக மாறுகிறது? அதேசமயம் அந்தப் படத்தில் கெட்டனவனாக இருக்கும் சத்யா பாத்திரம் நல்லவனாகவும் மாறுகிறது. இதுபோன்ற போராட்டங்கள் திரைக்கதைக்கு சுவாரஸ்யத்தை வழங்கும். இதே ஃபார்முலாதான் ரஜினி நடித்த பழைய ‘ரங்கா’ படத்திலும் வரும்.
ஆங்கிலத்தில் சில படங்களில் இப்படிப்பட்ட மாற்றங்கள் எதுவுமே இருக்காது. காரணம் படத்தின் ஹீரோ ஒரு எதிர்நாயகனாக இருப்பான் (Anti Hero). உதாரணம் – Pulp Fiction படத்தில் ஜான் ட்ரவோல்டா பாத்திரம் மாறாது. ஆனால் அதே படத்தில் ஸாமுவேல் ஜாக்ஸன் பாத்திரம் மாறும். Guy Ritchieயின் படங்களில் முக்கால்வாசி பாத்திரங்கள் மாறவே மாறாது. இருக்கிறபடியே தான் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட படங்கள் வில்லன்களின் வாழ்க்கையையே சித்தரிக்கின்றன. கெட்டவன் தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறும்போது இன்னும் கெட்டவனாகத்தான் இருப்பான். ஆனால் பாடங்களைக் கற்றுக்கொள்வான். எனவே அவனது வாழ்க்கை முன்னேறும்போது அந்தப் பாடங்களைப் பொறுத்த மாற்றங்கள்தான் அவனிடம் இருக்கும். இதுவேதான் சில க்வெண்டின் டாரண்டினோ படங்களிலும் இருக்கும். Reservoir Dogs படத்தில் யார் மாறுகிறார்கள்? யாரும் இல்லை. ஜாக்கி ப்ரௌனிலும் அப்படியே. கில் பில்லிலும் அப்படித்தான். குற்றுயிராகக் கிடக்கும் அடியாள் ஒருத்தி அவளது வாழ்க்கையை அப்படி ஆக்கியவர்களை ஒவ்வொருவராகப் பழிவாங்குகிறாள். அப்படி ஒவ்வொருவராகக் கொல்லும்போது புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறாள். இறுதியிலும் அதே கெட்டவளாகத்தான் அவள் இருக்கிறாள். ஆனால் அவளை ஆடியன்ஸுக்குப் பிடிப்பதன் காரணம் – அவளைவிடக் கெட்டவர்களைக் காண்பித்துவிட்டதுதான்.
இதுபோல் Anti-Hero படங்களைக் காண்பிக்கும்போது கவனம் முக்கியம். இத்தகைய எதிர் நாயகர்களைக் காண்பிக்கும்போது அவர்களை விடக் கொடிய வில்லன்கள் வேண்டும். அப்போதுதான் இந்த எதிர் நாயகர்களை ஆடியன்ஸ் விரும்புவார்கள். ஆரண்ய காண்டத்தில்பசுபதி அடிப்படையில் ஒரு அடியாள். ஆனால் சிங்கப்பெருமாள் அவனைவிடக் கொடூரமானவன். அதனால்தான் பசுபதியை நமக்குப் பிடிக்கிறது. சூது கவ்வும் படத்தில் வரும் எல்லாருமே ஆள்கடத்தல் செய்பவர்கள்தான். எனவே எதிர் நாயகர்கள். அனால் அவர்களை விடக் கொடூரமானவனாக பிரம்மா வருகிறார். அவர் நல்லவர்களின் பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு போலீஸ். இருந்தாலும் படத்தில் யாரும் நல்லவர்கள் இல்லை. எல்லாருமே சந்தர்ப்பவாதிகள்தான் என்பதால் பிரம்மா இவர்களைத் துரத்தும்போது இவர்களை நமக்குப் பிடிக்கிறது.
எனவே, எல்லாப் படங்களிலும் மாற்றம் அவசியம் என்று நினைத்துக்கொண்டு மாற்றம் இல்லாமலேயே நன்றாக இருக்கும் கதாபாத்திரங்களைப் போட்டு ராவி ஆடியன்ஸை எரிச்சல்படுத்தக் கூடாது என்பதும் முக்கியம். உணர்ச்சிபூர்வமன கதைகளில் கதாபாத்திரங்கள் மாறலாம். பழிவாங்கும் கதைகள், எதிர் நாயகர்களின் கதைகள் ஆகியவற்றில் மாற்றம் தேவைப்பட்டால் மட்டுமே வைப்பது நல்லது. ரொமாண்டிக் படங்களில், கதாநாயகன் காதலால் மெல்ல மெல்ல மாறுவதைப் போல் யோசித்துப் பார்க்கலாம்.

8. Keep the Press Out

இந்த விதி ஹாலிவுட்டுக்கே பெரிதும் பொருந்தும். என்றாலும், சமீபகாலமாக தமிழ்ப்படங்களிலும் இது பொருந்தக்கூடிய சூழல் என்பதால் இதை நன்றாகக் கவனிப்போம்.
பல ஹாலிவுட் படங்களில் மீடியா பெரிதாகக் காட்டப்பட்டிருக்கும். எதாவது ஒரு பிரச்னை வரும்போது, உலகளாவிய பிரச்னை அது என்று காட்டப்படுவதற்காக டிவி, இண்டர்நெட் போன்றவற்றில் இதைப் பெரிதாகக் காட்டுவார்கள். எதாவது ஏலியன் தாக்குதல், ஸோம்பிக்கள் பரவுதல், ராட்சத ஜந்துக்கள் எல்லாரையும் தாக்குவது என்பதுபோன்ற விஷயங்கள் இதில் அடங்கும். இப்படிப்பட்ட ஒரு உலகளாவிய பிரச்னையை நாம் நமது திரைக்கதையில் கையாள்கிறோம் என்றால் மட்டுமே மீடியாவைக் காட்டுவது நல்லது. ஒருவேளை அது ஒரு தனிப்பட்ட குடும்பமோ கதாபாத்திரமோ சந்திக்கும் பிரச்னை என்றால் மீடியா அறவே வேண்டாம்.
‘இது என்னய்யா லூசுத்தனமான ரூலா இருக்கு’ என்று தோன்றுகிறதா?
இந்த ஐடியாவை ப்ளேக் ஸ்னைடருக்குக் கொடுத்தவர் ஸ்பீல்பெர்க் என்று சொன்னால் அந்த எண்ணம் மறைந்துவிடும்.
ஈ.டி படத்தில் மீடியா எங்குமே வராது. ஆனாலும் அதில் ஒரு ஏலியன் வருகிறது. இருப்பினும் அந்த ஏலியன் ஒரு சிறிய குடும்பத்தில்தானே தஞ்சம் அடைகிறது? அதை மீடியாவில் காட்டினால் அந்தக் குடும்பத்தின்மீதான கவனம் ஆடியன்ஸுக்குச் சிதறிவிடும் – மீடியாவில் வந்ததால் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஸ்பீல்பெர்க் உணர்ந்துகொண்டார். இதனால், மீடியா வருவதுபோன்ற காட்சிகளை மாற்றி எழுதினார். அது நன்றாக செயல்படவும் செய்தது. அந்தப் படம் மட்டும் இல்லாமல், இப்படிப்பட்ட தனிப்பட்ட பிரச்னைகள் வரும்போதெல்லாம் அவரது எந்தப் படத்திலும் மீடியா வராது. அவரது படங்கள் என்று மட்டும் இல்லாமல், எந்த Dreamworks தயாரிப்பிலும் அப்படித்தான் என்று வைத்தார் ஸ்பீல்பெர்க். இது ஸ்பீல்பெர்க்கின் முக்கியமான விதிகளில் ஒன்று.
உதாரணமாக, ஒரு வருடம் முன்னர் ப்ராட் பிட் நடித்த World War Z படம் வெளிவந்தது. உலகத்தில் அனைவரும் வேகமாக ஸோம்பிகளாக மாறிக்கொண்டிருக்கும் வகையைச் சேர்ந்த படம் அது. அந்தப் படத்தில், உலகநாடுகள் அனைத்துமே ஸோம்பிக்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தும். இதனால் ஒவ்வொரு நாட்டுக்கும் பிற நாடுகளில் நிகழக்கூடிய சம்பவங்கள் தெரிந்திருக்கவேண்டிய சூழல். அப்படிப்பட்ட களத்தில் அவசியம் மீடியா பெரும்பங்கு வகிக்கிறது. அதேபோல் சமீபத்தில் வெளிவந்த Godzilla படத்திலும் இதேபோன்ற ஒரு சூழல்தான். அதுவேதான் Pacific Rim படத்திலும். உலகளாவிய பிரச்னைகள். Independence Day படமும் இதேபோல்தான்.
இதுபோன்ற படங்களில் மீடியாவைக் காட்டலாம். அதனால் சுவாரஸ்யம் அதிகம்தான் ஆகும். ஆனால் அதுவே எத்தனை விசித்திரமான களமாக இருந்தாலும், தனிநபரோ அல்லது ஒரு குடும்பம் மட்டுமோ பாதிக்கப்படக்கூடிய ஒரு களத்தில் மீடியா அறவே வேண்டாம் என்பதுதான் முக்கியமான விஷயம்.
தமிழில் இதுபோன்ற படங்கள் இல்லை என்பதால் இது தமிழுக்குப் பொருந்தாது. இருந்தாலும் ‘அரிமா நம்பி’ போன்ற படங்களில் இரண்டாம் பாதியில் வரும் அந்த போலீஸ் கண்ட்ரோல் ரூம் சம்பவங்கள் கொஞ்சம் அலுக்கத்தான் செய்தன அல்லவா? அதிலும் அவை Bourne Supremacy படத்தில் இருந்து எடுத்தவை வேறு.
எனவே, உலகலாவிய ப்ரச்னைகளைக் கையாளும் படங்கள் என்றால் மீடியா வரட்டும். தனிப்பட்ட பிரச்னைகள் எத்தனைதான் weirdஆக இருந்தாலும் சரி – மீடியாவைக் கொண்டுவருவது பற்றி நன்றாக யோசித்து முடிவெடுக்கவும்.
இத்துடன் ப்ளேக் ஸ்னைடர் சொல்லும் குறிப்பான சில நுணுக்கங்கள் முடிகின்றன. அடுத்து என்ன? மிகவும் சுவாரஸ்யமான ஒரு தலைப்போடு அடுத்த வாரம் பேசுவோம்.


பயிற்சி #15
இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விஷயங்களையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, உங்கள் திரைக்கதையில் அவை இடம்பெறுகின்றனவா இல்லையா என்று யோசிப்பதே பயிற்சி. கூடவே, எத்தனை படங்கள் இந்த வகையில் உங்களால் யோசிக்க முடிகின்றன?

CONVERSATION

Back
to top