font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

80'S தமிழ்ப்படங்கள் -2

vikram . . .
எண்பதுகளில் என் மனதைக் கவர்ந்த படம்.
விக்ரம் விசிறிகளிக்காகவே இந்தப் பதிவு.
வெல். ஆண்டு 1986. கோவை. அப்ஸரா தியேட்டர். கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற கமலின் பிரம்மாண்டமான ஒரு கட் அவுட். மத்தியப் பேருந்து நிலையத்தின் ஹைலைட்டான அப்ஸரா தியேட்டரின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பக்கம் போகும் எவராலும் அந்தக் கட் அவுட்டைப் பார்க்காமல் இருக்கவே முடியாது. அட்டகாசமான ஒரு கட் அவுட் அது.
அத்தகைய கட் அவுட்டின் கீழ், வி க் ர ம் என்று கம்ப்யூட்டர் எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒரு பிரம்மாண்டமான விஷயம், ஒரு சிறுவனின் மனதில் எத்தகைய ஒரு பாதிப்பினை உருவாக்கியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
எனது தந்தை, எனது நண்பராகவே இன்னமும் இருக்கிறார். அவர் எனது மிகச்சிறு வயதில் அழைத்துப்போன முதல் படம், Jaws. அதுதான் தியேட்டரில் நான் பார்த்த முதல் படம். அதன்பின், ராம்போ 2. அதன்பின் பல ஆங்கிலப்படங்கள். நாங்கள் இருவரும் பார்த்த தமிழ்ப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கோவையில் செண்ட்ரல் தியேட்டரில், அவரின் கரம் கோர்த்து நின்று, பெரிய கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் ஆங்கிலப்படத்தின் கதைச்சுருக்கத்தைப் பல முறை படித்திருக்கிறேன். அவர் தான் எனக்கு லயன் மற்றும் திகில் காமிக்ஸையும் அறிமுகப்படுத்தியவர்.
அவரிடம் கேட்டு, எனது தாய்மாமாவுடன் (போன பதிவில் பார்த்தோமே – இசைத்தட்டு நூலகம் வைத்திருப்பவர்) போன படமே விக்ரம்.
கடந்த ஐந்து வருடங்களில், விக்ரம் டிவிடியைத் தேடியதுபோல், வேறு எந்த உலகப்படங்களின் டிவிடியையும் நான் தேடியதில்லை. சென்னை (பர்மா பஜார்), பாண்டிச்சேரி, மதுரை என்று நான் தேடாத இடமில்லை. ஐந்து வருடங்கள் தேடி, கோவையில் ஒரு இடத்தில் கண்டுபிடித்தேன். அதன்பின், அவர் எனது நண்பராகவே ஆகிப்போனார். அவரிடம் இல்லாத உலகப்படமே இல்லை என்று கூறலாம். அந்தக் கடை, என்னைப்போல் உலகப்படங்களின் ரசிகர்களுக்கு ஒரு சொர்க்கமாகவே விளங்கியது. அவரிடம் நான் வாங்கிய படங்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 200 இருக்கும்.
ஆனால், சில நாட்களுக்கு முன்னர், ஒரு பிரச்னையில் சிக்கி, அந்தக் கடை மூடப்பட்டது. இத்தனைக்கும் அவர், ஒரு உலகத் திரைப்பட க்ளப்பையும் கோவையில் நடத்தி வந்தார். அது ஒரு கொடுமை. கோவையின் உலகத் திரைப்பட ரசிகர்கள், அவரை மறக்கவே இயலாது. அவரது கடையில், ஜோல்னாப்பை சகிதம் வரும் பல உலகப்பட ரசிகர்களிடம் அளவளாவியது என்றென்றும் என்னால் மறக்க முடியாத விஷயம்.
சரி. விக்ரம் படத்தைப் பற்றிப் பார்ப்போம்.
இப்படத்தில், சுகிர்தராஜாவை மறக்க முடியுமா?
சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதையான விக்ரமை முழுதாகப் படித்திருக்கிறேன். அந்தத் தொடர்கதைக்கும் திரைப்படத்துக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும், அந்தக் கதையும் என்னால் மறக்க இயலாது.
இப்படம் ஆரம்பிக்கும் தொனியே, ஜேம்ஸ்பாண்ட் படங்களை நினைவுபடுத்தும் (குறிப்பாக மூன்ரேக்கர்).
நீதிபதி, ‘அஷ்ரப் ஹுஸேன், ஃப்ரான்ஸிஸ் அடைக்கலராஜ், டி சி வோரா’ ஆகிய மூன்று குற்றவாளிகளுக்கும் 25 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. இந்த மூவரும், வீசியடிக்கும் மழைக்காற்றில், போலீஸ் வேனில் ஏற்றப்படுகிறார்கள். காட்சி ஃப்ரீஸ் செய்யப்படுகிறது. கமலின் வால்த்தர் பிபிகே ஃபோட்டோ, டிம்பிள் கபாடியாவின் ஃபோட்டோ, அம்ஜத்கானின் ஃபோட்டோ, லிஸியின் ஃபோட்டோக்கள் காட்டப்படுகின்றன. அதன்பின், அந்த டிஜிட்டல் எழுத்துக்கள் மிளிர்கின்றன.
வி க் ர ம்.
டைட்டில் சாங் ஆரம்பம்.
பாட்டு முடிந்தவுடன், காட்சி ஒரு புறாவைக் காண்பிக்கிறது. அத்துடன் காட்சி ஃப்ரீஸ் செய்யப்படுகிறது. அப்போது, வயலின்களின் கூட்டணி பின்னியெடுக்கிறது. எழுத்துக்கள், அந்தப் புறாவின் பின்னணியில் மிளிர்கின்றன.
கதை – வசனம் – சுஜாதா.
திரைக்கதை – கமல்ஹாஸன் – சுஜாதா.
கலை – B. சலம் (இவர், அக்காலத்தின் பல படங்களில் பணிபுரிந்தவர்).
எடிட்டிங் – R. விட்டல் & C. லான்ஸி (இவர்களும் தான்).
ஒளிப்பதிவு டைரக்டர் – V. ரங்கா
இயக்கம் – ராஜசேகர் (இவரைப் பற்றியே ஒரு தனிப்பதிவு எழுத உத்தேசம்).
படம் தொடங்குகிறது. ராணுவ அணிவகுப்பு. இந்திய ராணுவ முகாம் அது. அக்னிபுத்திரன் ஒரு பெரிய ட்ரக்கில் கொண்டுவரப்படுகிறான் (என்னது? அக்னிபுத்திரன் யாரா? அடப்பாவிகளா). ஸ்ரீஹரிகோட்டாவை இன்னமும் ஒருமணிநேரத்தில் சென்று சேர வேண்டும் என்று அதிகாரி ஆணையிடுகிறார்.
அணிவகுப்பு புறப்படுகிறது. அதனை, பைனாக்குலரில் ஒருவன் பார்க்கிறான் (விக்ரம் தர்மா – முதல் படம்). தனது பாஸுக்குத் தகவல் கொடுக்கிறான் –
‘சார் . .வண்டி வந்துக்கிட்டிருக்கு சார் – ஓவர்’.
ஒரு பெரிய ப்ளைமோத் காரைப் பார்க்கிறோம். அதன் பின் சீட்டிலிருந்து, ஒரு கை எழுகிறது – வயர்லெஸ்ஸுடன்
– ‘நெசம்மாவா? நீ வாத்தியங்களையெல்லம் எடுத்துக்கிட்டு அங்க போயிரு. நான் முகூர்த்தத்துக்கு அங்க வந்துர்ரேன் – ஓவர்’.
அக்கினிபுத்திரன் கடத்தப்படுகிறது. ஒரு ஹெலிகாப்டர் அங்கு வந்து, அந்த ஏவுகணையை எடுத்துச் செல்கிறது. அப்போது, காயம்பட்டுக் கிடக்கும் ஒரு அதிகாரி துப்பாக்கியுடன் எழ, எரியும் பிணத்தைத் தாண்டி வரும் ஒரு உருவம், இரு கைகளையும் உயர்த்தி, கையினடியில் இருக்கும் துப்பாக்கியால் அந்த அதிகாரியைச் சுட்டுக் கொல்கிறது (’போகும்போது நினைவுபடுத்துங்க. . அஞ்சலி செலுத்தணும். கடுமையான தேசபக்தனா இருப்பான் போல இருக்கு’).
அது – சுகிர்தராஜா (என்ன ஒரு பெயர் !!!) – சத்யராஜ்.
அதன்பின், ராணுவ அதிகாரிகளின் கூட்டம் – அமைச்சர் விகே ராமசாமி வருகை -விக்ரம் தேர்ந்தெடுக்கப்படுவது – அம்பிகா கொல்லப்படுவது – துரோகி ராகவேந்தர் – சாருஹாஸன் (மிஸ்டர் ராவ் – எம்மின் தமிழ் வடிவம்) – விக்ரம் மறுபடி வேலையில் சேர்வது – லிஸியைப் பார்ப்பது – தியேட்டரில் பைக் சைட்கார் சாகஸம் – சலாமியா செல்வது – ஜனகராஜ் (துபாஷ்) அறிமுகம் – டிம்பிள் கபாடியா அறிமுகம் (இளவரசி இனிமாஸி), அம்ஜத்கான் – மனோரமா அறிமுகம் – தலைமைப் பூசாரி – எஞ்சோடி மஞ்சக்குருவி பாடல் – எலிக்கோவில் – அங்கு விக்ரம் பிடிபடுவது – பாலைவனம் – அங்கு விக்ரமைப் பாம்பு கடிப்பது – மீண்டும் மீண்டும் வா பாடல் – அதன்பின் க்ளைமாக்ஸ் சாகஸம் – இவ்வாறாகப் படம் செல்கிறது.
இப்படத்தில் என்னால் மறக்க முடியாத அம்சம், சத்யராஜ் – சத்யராஜ் – சத்யராஜ்!!!
அவர் இல்லாவிடில், இப்படமே இல்லை. அத்தகைய ஒரு வேடம் அவருக்கு. ஒரு உதாரணமாக, ஸலாமியாவின் தலைமைப்பூசாரி மொட்டையிடம் அவர் பேசும் ஒரு காட்சி. அரசரின் மனைவி மனோரமா சத்யராஜைக் கண்டு எகிற, அதற்கு சத்யராஜ் பேசும் வசனம் நக்கலின் உச்சம் – ‘டேய் மொட்ட . . இந்தக் கோட்டைப் புடி . . இவள ரேப் பண்ணிர்றேன்’ .
அதற்கு மொட்டை, ‘அண்ணே . . அதுக்கெல்லாம் இப்ப டைம் இல்லண்ணே . வாங்க நீங்க’.
இதுதான் சுஜாதா. இதுதான் சத்யராஜ்.
அதேபோல், ஜப்பானில் கல்யாணராமன் படத்திலும், கமல் என்று நினைத்து, கவுண்டமணியை கிட்நாப் செய்துவிடுவார்கள் வில்லன் சத்யராஜின் ஆட்கள். அப்போது, கட்டுண்டு கிடக்கும் கவுண்டமணியையும் அவரது மனைவி கோவை சரளாவையும் சத்யராஜ் பார்க்க வருவார். அப்போது அலறும் கவுண்டமணியைப் பார்த்து, எந்த ஊர் என்று சத்யராஜ் கேட்க, கோவை என்று கவுண்டமணி சொல்வார்.
அதற்கு சத்யராஜ், ‘அட.. நமக்கும் அதே ஊர்தானுங்ண்ணா’ என்று கூற, சந்தோஷமாகும் கவுண்டர்., கோவையில் எந்த இடம் என்று கேட்க, ‘பாப்பநாய்க்கன் பாளையம்’ என்று கோவை பாஷையில் சத்யராஜ் சொல்வார். இக்காட்சியைக் கவனித்துப் பார்த்தீர்களென்றால், இந்த இருவரின் கெமிஸ்ட்ரியையும் அறியலாம். அந்தப் படத்தில் இருந்து தான் இந்த இருவரின் அட்டகாசமான கூட்டணி உருவானது என்று நினைக்கிறேன்.
இப்படியாக சத்யராஜ் சுகிர்தராஜாவாக நடித்த விக்ரம் படம், எனது மிக ஃபேவரைட்டான படமாக மாறிப்போனது.
விரம் விசிறிகள் யாராவது இருக்கிறீர்களா?
இதோ . .உங்களுக்காக . . ஆர்க்குட்டில் நான்கு வருடங்கள் முன்னர் நான் ஆரம்பித்த ‘விக்ரம்’ கம்யூனிடி.. உங்களுக்குப் படம் பிடிக்குமென்றால், அந்தக் கம்யூனிடியில் வந்து மெம்பராகிக் கொள்ளலாம். அதே போல், IMDBயில் விக்ரம் படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் இங்கே பார்க்கலாம். IMDBயில் தேடினீர்களென்றால், பழைய மசாலாப் படங்களுக்கு நான் எழுதிய விமர்சனங்களும் உங்களுக்குக் கிடைக்கும்  (எழுதிய ஆண்டு – 2006).
பி.கு – கோவை மணீஸ் தியேட்டரில் இப்படம் சில வருடங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனபோது, ‘ஜாலியாக’ நானும் எனது நண்பன் பாலுவும் இரவுக்காட்சி இப்படத்துக்கு ரமனோவ் வோட்கா அடித்துவிட்டுப் போய்ப் பார்த்து உற்சாகமடைந்தது நினைவு வருகிறது.
ம்ம்ம்ம்… எண்பதுகளில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் – ஏன் – இப்போதுகூட – கொடிகட்டிப் பறக்கக்கூடிய ஒரு கூட்டணி…. வெல்.. சத்யராஜ் & கமல். இவர்கள் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனை படங்களிலும், நமக்கு வேண்டிய பொழுதுபோக்கு கிடைக்கும். சத்யராஜிடம் அத்தனை காட்சிகளிலும் ஆப்பு வாங்கும் கமல், கடைசி காட்சியில் மட்டும் (போனால் போகிறதென்று) சண்டையில் வென்று, கதாநாயகனாகத் தன்னை நிலைநாட்டிக் கொள்வார். அதெல்லாம் பரவாயில்லை. படம் முடிந்தாலும், நமது மனதில் நிற்கும் கதாபாத்திரமாக, சத்யராஜின் கதாபாத்திரம் மட்டுமே இருக்கும்.
அப்படி, ஆயிரத்தித் தொளாயிரத்து எண்பத்தி ஆறில் வெளிவந்த ஒரு படமே ‘காக்கி சட்டை’.
அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ரஜினி கமல் படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கும். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், இயக்கம் என்று பார்த்தால், முக்காலே மூன்றரை வீசம், ஒரே ஒரு பெயர் மட்டுமே இருக்கும்.
ராஜசேகர்.
சென்ற பதிவில் நாம் பார்த்த ‘விக்ரம்’ படத்திற்கு முன்பாக, கமல் நடித்த ஒரு படமே காக்கிசட்டை.
தயாரிப்பு – சத்யா மூவீஸ். எம்ஜியாரின் மோஸ்ட் ஃபேவரைட் நிறுவனம். ஆரெம்வீ தான் இதன் மூளை. எம்ஜிஆரின் கைகள், ஒரு வேலைப்பாடு மிகுந்த பெட்டியைத் திறக்க, அதில் ‘சத்யா மூவீஸ்’ என்று எழுதியிருக்க, அவரது கைகள், அந்தப் பெயரின் மேல் பூமாரி பொழியும் லோகோவை, எண்பதுகளில் படங்கள் பார்க்க ஆரம்பித்த யாராயினும் புரிந்து கொள்வார்கள்.
அதே போல், சத்யா மூவீஸ் படங்களில், கதை என்று டைட்டிலில் வரும் இடத்தில், ‘சத்யா மூவீஸ் கதை இலாகா’ என்று போட்டிருக்கும். இன்றைய ‘விகடன் விமரிசனக்குழு’ போல. இந்தக் கதை இலாகாவில் யார் யார் இருந்தார்கள் என்று யாராவது தெளிவு படுத்தினால் தேவலை.
சரி. இந்த சத்யா மூவீஸ், ராஜசேகர், இளையராஜா, கமல் கூட்டணியில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ படம், பொழுதுபோக்குப் படங்களுக்கு ஒரு உதாரணம். இப்படத்துக்கு முன்னால், ‘சகலகலாவல்லவன்’ படத்தை, பொழுதுபோக்குப் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
ரைட். படத்தின் கதை என்ன?
மிகவும் சிம்பிள். போலீஸ் வேலைக்கு ஆசைப்பட்டு, உடற்பயிற்சியெல்லாம் செய்து, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரு ஆள், நம்ம கமல். வீட்டு மொட்டை மாடியில் தான் எல்லா உடற்பயிற்சியும் செய்வார்.
பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு, கட்டுமஸ்தான கமலை லுக்கு விடும் கதாபாத்திரம், அம்பிகாவுக்கு. கமல் உடற்பயிற்சி செய்யும்போதெல்லாம், ரகசியமாக, காமெராவை வைத்துக்கொண்டு (ட்ரைபாட் எல்லாம் இந்தக் காமெராவுக்கு உண்டு) படம் எடுப்பார் அம்பிகா. அதைத் தெரிந்துகொள்ளும் கமல், உடல் முழுக்க சாக்கு போர்த்திக்கொண்டு வந்து, அம்பிகாவை டீஸ் செய்யும் காட்சிகளும் படத்தில் உண்டு.
தந்தை கல்லாப்பெட்டி சிங்காரம், தவக்களையின் உதவியோடு, கமலை ஏணியெல்லாம் போட்டு, வீட்டை சரசரவென்று ஏறச்செய்து, அவரது ஃபிட்நெஸ்ஸை அளவெடுக்கிறார். அப்படி ஒருமுறை பச்சை முட்டைகளை உடைத்துக் குடித்துவிட்டு, ஏணியேறும் கமல், பக்கத்து வீட்டின் குளியலறை ஜன்னல் மூலம், குளித்துக் கொண்டிருக்கும் அம்பிகாவைப் பார்த்து விடுகிறார். அவரது மனதில், ‘காதல்’ (???!!!) துளிர்விடுகிறது (உண்மையில், இது ஒரு நல்ல டபுள் எக்ஸ் படத்துக்கு உரிய தீமாகும்).
அதன்பின், அம்பிகா, கமலை, சென்னையிலேயே பெரிய துணி வடிவமைப்பாளரிடம் கூட்டிச் சென்று, போலீஸ் உடை தைத்துத் தருகிறார். மனம் நெகிழும் கமல், அம்பிகாவைக் காதலிக்கத் துவங்குகிறார்.
அந்தப் போலீஸ் உடையிலேயே, ஒரு லாரியில் கடத்தப்படும் போதை வஸ்துக்களை விரட்டிப் பிடிக்கும் கமல், அதனைப் போலீஸின் கஸ்டடியில் ஒப்புவிக்கிறார்.
அந்த வருடம் நடைபெறும் போலீஸ் நேர்முகத் தேர்வில், (செண்டிமெண்ட் புகழ்) கோபாலகிருஷ்ணனிடம் – கமிஷனர் என்று நினைக்கிறேன் – நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் கமல், தோற்றுப் போகிறார். அவர் போதை வஸ்துக்கள் அடங்கிய லாரியை மடக்கிப் பிடித்தவர் என்று தெரிந்தும், கோபாலகிருஷ்ணன் கமலை ஃபெயிலாக்கி விடுகிறார்.
இன்னொரு பக்கம், கடத்தல்காரர்கள் ராஜீவும் சத்யராஜும், போலீஸிடம் பிடிபட்ட லாரியை எரித்து விடுகிறார்கள்.
நேர்முகத் தேர்விலிருந்து சோர்வாக வெளிவரும் கமல், நாட்டுச்சரக்கை முதன்முதலாக (????!!) அடித்துவிட்டு, பாடும் பாடலே, உலகப்புகழ் பெற்ற ‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’.
பாடல் முடிந்ததும், போலீஸ் மேல் மண்ணைத் தூவிவிட்டு ஓடும் கமலுக்கு, சத்யராஜ் அடைக்கலம் தர, கடத்தல் கும்பலில் ஒரு இடம் கிடைத்து, தனது திறமையால் வேகமாக வளர்ந்து, முக்கிய இடம் பிடிக்கிறார் கமல் (கோவையில் முக்கிய நபர் கைது – ஏன்? சேலத்துல முக்கினா கைது பண்ண மாட்டாங்களா?? கவுண்டமணி ஜோக் – சூரியன் படம் – நினைவு வருகிறது).
அதே நேரத்தில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த மாதவி, படத்தில் அறிமுகம் (நீச்சல் குளத்தில் நீந்தும் மாதவியை யாரால் மறக்க முடியும்?).
கமல், மாதவி ஜோடி, பல கடத்தல்களில் சத்யராஜுக்கு உதவி செய்கிறது. ஏர்போர்ட்டில் ஒரு பிணத்தைக் கடத்தி, முக்கியத் தகடு ஒன்றைக் கடத்திவரும் கமலை, சத்யராஜ் பாராட்டவும் செய்கிறார்.
(இந்த இடத்தில், கமல் அளித்த ஒரு இண்டர்வியூ நினைவுக்கு வருகிறது. பிணம் எரியும் தருணத்தில், அப்பிணத்தில் இருக்கும் ஒரு தகடு மேப்பை சத்யராஜ் தேடுவார். அந்த நேரத்தில், தனது அடியாள் ஒருவனை, ‘தகடு எங்கண்ணே? என்று சத்யராஜ் கேட்பதாக, சிச்சுவேஷன். ஆனால், சத்யராஜ், இந்த வசனத்தை உச்சரித்துவிட்டு, மலங்க மலங்க முழிக்கும் அடியாளிடம், ஸ்பாண்டேனியஸாக, ‘தகடு தகடு’ என்று கேட்கும் வசனம், சூப்பர்ஹிட்டாக மாறியது. இதனைக் கேட்டவுடன், பயங்கரமாக சிரித்ததாக கமல் கூறி, சத்யராஜை, மேலும் இப்படிப் பேசுமாறு என்கரேஜ் செய்ததாகக் கூறினார். ஆனால், கமலைப் பற்றி நன்றாகத் தெரிந்த பின், அவர் என்கரேஜ் செய்ததற்குப் பதில், வயிறு எரிந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ரஜினி பற்றிப் பல்வேறு தருணங்களில் கமல் அளித்த பேட்டிகளை நினைவு கூர்க. ரஜினியின் 25வது வருட விழாவிற்கு அளித்த பேட்டியிலும், யாருமே கேட்காமலே, ‘ரஜினிக்கு வாழ்த்துகள். ஆனா, நான் சினிமாக்கு வந்து, ஏறத்தாழ 50 வருஷம் ஆகப்போகுது’ என்று முந்திரிக்கொட்டைத்தனமாக பதில் அளித்த விஷயம், ஒரு உதாரணம். அதேபோல், மலேசியவிலோ சிங்கப்பூரிலோ ஒருமுறை, ஆடுபுலி ஆட்டம் முடிந்து, இருவரும் தனித்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த சமயம், ரஜினி வந்து தன்னிடம் ஆலோசனை கேட்டதாகவும், அப்போது, இனி இருவரும் சேர்ந்து நடிக்கச் சம்மதிக்க வேண்டாம் எனவும், இனிமேல் தனியாகத்தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் ரஜினிக்கு ஆலோசனை அளித்ததாக வேறு கமல் சொன்னார். இது, பக்கா வயிற்றெரிச்சல் என்பது, அவர் சொன்னவுடன் தெரிந்தது. ரஜினி கமல் இருவரும் சேர்ந்து நடிக்கும் காலத்திலேயே, டக்கென்று ரசிகர்களைக் கவர்ந்தவர்… வெல்.. ரஜினிதான். கமல், வழக்கப்படி, சிவாஜியிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட மிகை நடிப்பையே வழங்கி வந்தார். ரஜினி கமலுக்கு ஏற்பட்ட போட்டியைப் பற்றிய பல ரசமான தகவல்களை, சீக்கிரம் ஒரு பதிவாக எழுதுகிறேன்).
எனிவே, இப்படி சத்யராஜின் நம்பிக்கைக்குகந்த ஆளாக மாறி, ஒருநாள் திடீரென, கமல் போலீஸைச் சேர்ந்தவர் என்ற உண்மை வெளியே வருகிறது. வானிலே தேனிலா பாடல். அதன்பின், அங்கே வரும் கோபாலகிருஷ்ணன் – போலீஸ் படை – க்ளைமாக்ஸ் சண்டை – பின் சுபம்.
கடைசியில் தான் தெரிகிறது, கமல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்று. படம் முடிகிறது.
இந்த ஃபார்முலா, அதன்பின் எண்ணற்ற தமிழ்ப்படங்களில் உபயோகப்படுத்தப்பட்டது, எல்லாருக்கும் தெரிந்ததே. தில், ஒரு உதாரணம்.
ஆக, எண்பதுகளின் சூப்பர்ஹிட்டுகளில் ஒன்றான காக்கி சட்டை, இவ்வாறாக மக்கள் மனதைக் கவர்ந்தது.
இப்படம், எனக்கும் பிடிக்கும். குறிப்பாக, காக்கி சட்டையின் பாடல்கள். ‘கண்மணியே பேசு… மௌனமென்ன கூறு’, ‘வானிலே தேனிலா ஆடுதே பாடுதே’, ‘நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’, பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்’, ‘பூப்போட்ட தாவணி.. போதையில் ஆடுதே’ ஆகிய பாடல்கள், ரசிகர்கள் மனதைக் கவர்ந்தது, அந்தக் காலத்திய ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது.
ஸோ, காக்கி சட்டை – அட்டகாசம்!
சத்யராஜ் என்னும் நடிகரை நான் முதல்முதலில் பார்த்த படம், நான் சிகப்பு மனிதன். அதிலும், சிறுவனாக நான் இருந்தபோது, ரஜினியின் தங்கையைக் காட்டுத்தனமாக ரேப் செய்துவிட்டு சத்யராஜ் நிமிரும்போது, அவரது வாயெல்லாம் மல்லிகைப்பூ ஒட்டியிருக்கும் காட்சியைப்பார்த்துவிட்டு, நிஜமாகவே பயந்திருக்கிறேன். இதற்குப்பின் ஜப்பானில் கல்யாணராமன் பார்த்தேன். அதிலும் சத்யராஜை அடையாளம் காண முடிந்தது. இந்தக் காலகட்டம்தான், தமிழ்ப்படங்களை நான் பார்க்க ஆரம்பித்த காலம். இதற்குப் பின், தினசரி குறைந்தபட்சம் ஒருதமிழ்ப்படம் என்பது எங்கள் இலக்காக இருந்தது. காரணம்? எங்கள் வீட்டில் புதிதாக வாங்கிய வீசீஆர். அக்காலத்தில், எங்களுக்குத் தெரிந்த கடை (உமா டூல்ஸ்) இருந்ததால், எந்தப் படம் வந்தாலும், உடனே எங்கள் வீட்டுக்கும் வந்துவிடும். கேமரா பிரிண்ட் என்ற அக்காலத்திய திருட்டு விசிடிக்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அதேபோல், எங்கள் மாமாவின் இசைத்தட்டு நூலகமும் இருந்த காரணத்தினால், எந்தப் புதிய படமானாலும் சரி, அதன் பாடல்கள் மனப்பாடமாகிவிடும் (இதனால்,இப்போதும் பழைய பாடல்கள் அப்படியே நினைவில் இருக்கின்றன). எனவே, எண்பதுகளில் வந்த படங்களில், நான் பார்க்காத படம் என்று மிகச்சில படங்களையே சொல்லமுடியும். அதேபோல், அக்காலத்தில் நான் பார்த்த வில்லன்களில், சத்யராஜையே நன்றாக நினைவு இருக்கிறது. பிடித்தும் இருந்தது. அவரது கேலி, கிண்டல் எல்லாம், தொண்ணூறுகளில் இந்தப் படங்களைத் திரும்பப்பார்க்கும்போதுதான் எனக்கு நன்றாக விளங்கியது. இருந்தாலும், அவரது ஆகிருதி மற்றும் ஓரிரு வசன உச்சரிப்புகள் ஆகியவற்றினாலோ என்னவோ, எனது நினைவுகளில் தங்கிய படங்களாகஅவரது படங்கள் ஆகிப்போனது.
எனக்கு இன்றுவரை மிகப்பிடித்த சத்யராஜின் சில படங்களை நினைவுகூர்வதே நோக்கம்.
ஒகே. முதலில், ஜீவா.
யார்யாருக்கெல்லாம் ‘ஜீவா’ நினைவு இருக்கிறது? அக்காலத்தில், எனது இன்னொரு மாமா, கல்கியில் வந்த பொன்னியின் செல்வனைத் தொகுத்து வைத்திருந்தார். அப்புத்தகத்தைப் புரட்டும்போது, ஒரு பக்கத்தில், இந்த ஜீவாவின் விமர்சனம் கண்ணில் படும். இந்தப் படத்தையும் கேமரா பிரிண்டில் தான் பார்த்தோம். இன்று வரை, இப்படத்தை இரண்டே இரண்டு முறை மட்டுமே பார்த்திருந்தாலும், மிக நன்றாக இப்படம் நினைவிருக்கிறது. பிரதாப் போத்தன் இயக்கிய இப்படம், ஒரு டோட்டல் மசாலா. எல்லா வகையான சமாச்சாரங்களும் சம அளவில் கலக்கப்பட்டு, படுஜாலியான வகையில் பரிமாறப்பட்டிருக்கும். மிக சிம்பிள் கதை. தனது குடும்பத்தைக் கொன்ற வில்லனைப் பழிவாங்குகிறான் கதாநாயகன். ஆனால், அதை, சத்யராஜுக்கே உரிய வகையில் அமைத்திருப்பதுதான் புத்திசாலித்தனம். குடும்பமே பிக்னிக் செல்லும் ஆரம்பக்காட்சியில், ஜீவாவின்அம்மா, ‘ஜீவா’ என்று கத்த, ‘சங்கீதம் கேளு . . நீ கைத்தாளம் போடு‘ பாடலின் ஆரம்ப இசை ஒலிக்க, பெட்ரோல் கேன்களுடன் சத்யராஜ் அறிமுகமாகும் காட்சியில் இருந்து, படம் சர்ர்ரென்று டேக் ஆஃப் ஆகிவிடும். இந்தப் பாடல், படுஜாலியான பாடல். சத்யராஜின் தங்கையாக, ராசி. எத்தனை படங்களில் அப்பாவித் தங்கையாக நடித்திருக்கிறார் இவர்! (கமலின் ‘சத்யா’ உட்பட) . . அவருக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையாக, நிழல்கள் ரவி. சத்யராஜின் வேலை, புகைப்படங்கள் எடுப்பது. ஒருநாள், மாடல் சில்க்கைப் புகைப்படம் எடுக்கப்போய், அதில் எழும் ஒரு சிக்கலினால், வில்லன் கும்பலின் பார்வை சத்யராஜின் மீது படிய, அவரது தாயும் தங்கையும் கொலை செய்யப்படுகின்றனர். மிகுந்த கோபத்துடன், வில்லன்களை எப்படிக் கொல்கிறார் சத்யராஜ் என்பதே கதை. இப்படத்தில், மறக்க முடியாத விஷயங்கள் சில உண்டு. குடிகாரராக வரும் ஜனகராஜ் (’தகுடு தகுடு தகரத்தகுடு தங்கமாச்சிடா’ என்ற பாடல், ஜாலியான ஒன்று) அதேபோல், கண்டபடி கெட்டவார்த்தை பேசும் சத்யராஜின் கேரக்டர். மாஜிக் நிபுணராக வந்து, ஒரு பாடலைப் பாடிச் செல்லும் பிரதாப் போத்தன் (’ஷாலகாலபூபா’ பாடல்). இதன் இசை, கங்கை அமரன். படத்தின் கதாநாயகி, அமலா.
அடுத்ததாக எனக்குப் பிடித்த படம், ஜல்லிக்கட்டு.
இந்தக் கதையுமே, படு மசாலாதான். கொடும் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படும் சத்யராஜ், தப்புவிக்கப்படுகிறார். அதற்குக் காரணம், இவருக்குத் தீர்ப்பை அளித்த ஜட்ஜான சிவாஜி. ஜட்ஜே ஏன் ஒரு கைதியைத் தப்புவிக்க வேண்டும்? அவரது மகள், வில்லன்களால் கொல்லப்படுகிறாள். அவர்களைக் கொல்லத் தேவை ஒரு முரட்டு வீரன். இதுதான் காரணம். ஆரம்பத்தில், சிவாஜியை சத்யராஜுக்குப் பிடிப்பதில்லை. ஆனால், படிப்படியாக சிவாஜியின் மீது அன்பு கொண்டு, அவரைக் குருவாக ஏற்றுக்கொள்கிறார். ஒவ்வொரு வில்லனையும், திட்டம் போட்டுக் கொல்கிறார். இதுவே கதை. இப்படத்தின் மறக்கமுடியாத அம்சங்கள் என்னவெனில், ஒவ்வொரு வில்லனையும், ஒவ்வொரு கெட்டப்பில் கொல்லும் விதம். அதிலும், அந்தக் கெட்டப்கள் அத்தனையும், பழைய சத்யராஜ் பட கதாபாத்திரங்களாகவே இருப்பது, ஜாலி. ‘முதல் வசந்தம்’, ‘கடலோரக்கவிதைகள்’ ஆகிய இரண்டு கெட்டப்கள் நன்றாக நினைவிருக்கிறது. இன்னொன்று, ‘விடிஞ்சா கல்யாணம்’ என்று நினைக்கிறேன். நண்பர்கள் யாருக்காவது நினைவிருந்தால், பின்னூட்டமிடவும். அதேபோல், இதன் பாடல்கள். குறிப்பாக, ‘ஹேய் ராஜா.. ஒன்றானோம் இன்று’ என்ற பாடல் – மனோவும் எஸ்பிபியும் பாடியது. இன்றும் எனக்குப் பிடிக்கும் பாடல் இது. அதேபோல், ‘ஏரியில் ஒரு ஓடம்’ பாடல். ப்ளஸ், ‘காதல் கிளியே’ பாடல். இப்படத்தை இயக்கியவர், மணிவண்ணன். இசை, இளையராஜா.
இந்த வரிசையில் இன்னொரு படம் – கனம் கோர்ட்டார் அவர்களே.
இந்தப் படத்தில், சத்யராஜ், கேஸ் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சோடாபுட்டி வக்கீல். எஸ்.எஸ். சந்திரனின் ஜூனியர். இதில், எஸ்.எஸ்.சந்திரன், ஒரு சபலிஸ்ட். மனைவி, ஸ்ரீவித்யா. தன்னுடைய சபலத்தால், தன்னிடம் கேஸுக்காக வரும் கேபரே டான்ஸர் சில்க்கை நாடிச் செல்லும் அவர், சில்க் கொலை செய்யப்பட்டதால், மாட்டிக்கொண்டுவிட, உண்மைகளை சத்யராஜ் வெளிக்கொணர்வதே கதை . இதில் சில்க்கின் பார்வையில்லாத அண்ணனாக, தியாகி சந்திரசேகர். பட இறுதியில் வரும் ஹெலிகாப்டர் ஃபைட் நன்றாக நினைவிருக்கிறது. அதேபோல், இதில் சத்யராஜ் போடும் பல கெட்டப்களும் – குறிப்பாக ராணுவ அதிகாரி வேடம் – நன்றாக நினைவிருக்கிறது. இயக்கம் – வழக்கப்படி மணிவண்ணன்.
அதேபோல், மக்கள் என் பக்கம். இது, அமிதாப் & ஸ்ரீதேவி நடித்த ஹிந்திப்படமான ’இன்குலாப்’ (Inquilaab) படத்தின் ரீமேக். இரண்டையும் பார்த்திருக்கிறேன். மக்கள் என் பக்கம் படத்தின், ‘ஆண்டவனப் பார்க்கணும்.. அவனுக்கு ஊத்தணும்’ பாடல் மிகவும் பிடிக்கும். அட இது என்ன பிரமாதம்? சத்யராஜ் மற்றும் அம்பிகா நடித்த ‘ஆளப்பிறந்தவன்’ படத்தையே பார்த்திருக்கிறேன். பெரிய கொலைவாள் ஒன்றை வைத்துக்கொண்டு, நாடகங்களில் ராஜாவாக நடிகும் சத்யராஜ், இரவில், ராபின்ஹூட்டாக மாறி, தீயவர்களைக் கொன்று, கத்தி படம் போட்ட கொடியை நட்டுவிட்டுச் சென்றுவிடுவதே கதை (நான் சிகப்பு மனிதன் போலவே இருக்கிறதல்லவா? இரண்டுக்கும் மூலம், சார்லஸ் ப்ரான்ஸன் நடித்த ’Death Wish’ படம் தான்). இதில் வேடிக்கை என்னவெனில், இப்படம் வந்தவுடன், சில மாதங்களில், ராஜா கதாநாயகனாக நடிக்க, ‘அடக்கப்பிறந்தவன்’ என்ற படமும் வெளிவந்து இதைப்போலவே படுதோல்வி அடைந்தது. அடக்கப்பிறந்தவன் படத்தை நல்லவேளையாகப் பார்க்கவில்லை. இருந்தாலும், இந்த விஷயம் நினைவில் இருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில், அனைவரும் அறிந்த ‘வேதம் புதிது’, ‘பூவிழி வாசலிலே’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ (இப்படத்தின் ‘டர் டர் டாக்டர்’ பாடலும், ‘பத்தரை மாத்துச் சித்திரப்பெண்ணே’ பாடலில் ரகுவரனும் சத்யராஜும் காமெடி செய்து ஆடுவதும் பிடிக்கும்), ‘ரசிகன் ஒரு ரசிகை’ (பாடல்கள் டாப். குறிப்பாக, யேசுதாஸின் ‘ஏழிசை கீதமே’ & ‘பாடி அழைத்தேன்’), ‘சின்னதம்பி பெரியத்தம்பி’, ‘அண்ணாநகர் முதல் தெரு’, ‘சின்னப்பதாஸ்’, ‘பிக்பாக்கெட்’ ஆகிய படங்களும் பார்த்திருக்கிறேன். கூடவே, ‘திராவிடன்’, சிவாஜியும் சத்யராஜும் நடித்த ‘புதியவானம்’, டி.எம்.எஸ் சத்யராஜுக்காகப் பாடிய ‘தாய்நாடு’ (அத்தனை பாடல்களும் அவரே பாடியிருப்பார். ‘தாளம் தட்டிப் பாட வந்தேன், தேவன் உன்னைத்தேடி வந்தேன்’ & ‘தாய்மாமன் கையைத்தொட்டு’ பாடல்கள் நன்றாக நினைவுள்ளன). ஏவிஎம்மின் தயாரிப்பில், சத்யராஜ் இருவேடங்களில் நடித்த ‘உலகம் பிறந்தது எனக்காக’ படமும் அந்தச் சமயங்களில் பிடித்தது. இதன் டிரெய்லரை, கோவை ரயில்வே ஸ்டேஷனில்தான் முதன்முதலாகப் பார்த்தேன். தொண்ணூறுகளில், அக்காலத்திய ‘கமல்தான்யா டாப்பு’ மனப்பான்மை எனக்கும் இருந்த காரணத்தால், சத்யராஜை விட்டுவிட்டேன். ஆனால், கமலின் கண்களில் சத்யராஜ் கையையே விட்டு ஆட்டிய எண்பதுகளின் அதிரடிப் படங்களான ‘விக்ரம்’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘காக்கிசட்டை’, ‘மங்கம்மா சபதம்’ ’எனக்குள் ஒருவன்’ ஆகிய படங்களில் சத்யராஜை மிகவும் பிடிக்கும் (விக்ரம் & காக்கிசட்டையைப் பற்றி, இந்த 80’களின் திரைப்படங்கள் வரிசையில், இரண்டு பதிவுகளே எழுதியிருக்கிறேன். க்ளிக்கிப் படிக்கவும்). அதேபோல், ரஜினியுடன் சத்யராஜ் வில்லனாக நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பாயும்புலி’, மிஸ்டர் பாரத்’ , ‘நான் மகான் அல்ல’ படங்களும் பிடிக்கும். கூடவே, ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’ படங்களும் பார்த்து பயந்திருக்கிறேன்.
என்னைப்பொறுத்தவரை, எம்ஜியாருக்குப் பின்னர், எத்தகைய வேடம் போட்டாலும் அது ஒட்டிக்கொள்ளும் நடிகர் என்று சத்யராஜை சொல்லிவிடலாம். எம்ஜியார், என்னதான் மசாலா நடிகர் என்றாலும்கூட, அப்படங்களில் அவர் போடும் வேடங்கள் (தாத்தா ,இயேசு இத்யாதி), அவருக்கு மிகச் சரியாக அமைந்துவிடும். அதேபோல், சத்யராஜின் முக அமைப்பும், போடும் வேடங்களுக்குத் தோதாக அமையும்படி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ‘நடிகன்’ படத்தின் வேடம் ஒரு சான்று. பெரியாரை மறந்துவிட இயலுமா? இங்கே இன்னொரு விஷயம். நடிகன், அமைதிப்படை, வில்லாதிவில்லன் போன்ற தொண்ணூறுகளின் படங்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறாது. இது, எண்பதுகளின் முடிவு வரை சத்யராஜ் நடித்த படங்களைப் பற்றிய ஒரு கட்டுரை மட்டுமே.
சத்யராஜ் என்றதும், சிவாஜி கணேசனுடன் அவர் சேர்ந்து நடித்த சில படங்கள் நினைவு வருகிறது. ஜல்லிக்கட்டு, முதல் மரியாதை ஆகிய படங்கள் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். ‘முத்துக்கள் மூன்று’ என்று ஒரு படம் உண்டு. பாண்டியராஜன், சிவாஜி ஆகியவர்களுடன், சத்யராஜ் நடித்த படம். இந்தப் படமும், எனது எண்பதுகளின் ஹிட்லிஸ்டில் உண்டு. சிவாஜியும் சத்யராஜும் நடிக்கும்போது, இருவருக்கும் இடையே நிலவும் ஒரு அலைவரிசையை நம்மால் கண்டுகொள்ள முடியும். இதற்கு ‘ஜல்லிக்கட்டு’ ஒரு நல்ல உதாரணம்.
ரஜினியுடன் சத்யராஜ் நடித்த படங்களைப் பட்டியல் இடும்போது, ஒரு படத்தை மேலே சொல்லவில்லை. அது, ‘ஸ்ரீ ராகவேந்திரர்’. இப்படம் வெளிவந்த வருடம், 1985. ரஜினியின் நூறாவது படம். இதில், கௌரவவேடத்தில் சத்யராஜ் நடித்திருப்பார். ஒரு முஸ்லிம் பிராந்திய அதிகாரி, ராகவேந்திரரைப் பரிசோதித்து, அதன்பின் அவரது பக்தராக மாறுவதுபோன்ற ஒரு plot அது. ராகவேந்திரர் படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் (விஷ்ணுவர்த்தன், மோகன் உட்பட), சத்யராஜின் கதாபாத்திரம், எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. சத்யராஜிடம் உள்ள ப்ளஸ் பாயின்ட் என்னவெனில், ரஜினியிடம் இருந்த அதே ப்ளஸ் பாயின்ட் என்பது என் எண்ணம். அதாவது, ரஜினி வந்த சமயத்தில், கிட்டத்தட்ட அத்தனை தமிழ்ப்பட கதாநாயகர்களும், கர்லிங் கிராப் வைத்துக்கொண்டு, ஒரே போன்ற ஸ்டீரியோடைப் நடிப்பையே வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர் (இந்த கர்லிங் கிராப் லிஸ்டில், அப்போதைய கமலும் அடக்கம்). ரஜினியின் ஸ்டைலான நடிப்பு, பரட்டைத்தலை, வேகமான வசன உச்சரிப்பு ஆகியன, அவரைப் புகழேணியின் உச்சத்தில் கொண்டுசென்று வைத்தன. அதேபோல், சத்யராஜ் வந்த காலகட்டத்தில், அனைத்து வில்லன்களும் , ‘ஏய் மாடசாமி.. லக்ஷ்மிய நம்ம காட்டு பங்களாவுக்குக் கடத்திட்டு வந்திரு’ என்னும் வசனத்தை ஒரே போன்று உச்சரிக்கும் நபர்களாகவே இருந்தனர் (நம்பியார் உட்பட). இப்படிப்பட்ட ஒரு சூழலில், ‘பிறந்ததே வில்லத்தனம் செய்யத்தான்; மனதில் அதைப்பற்றி எந்த வருத்தமும் இல்லை; அப்படித்தான் கெட்டவனாக இருப்பேன். அடப்போங்கய்யா’ என்ற விதத்தில், ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு வில்லனாக சத்யராஜ் இருந்ததே அவரது வெற்றிக்குக் காரணம். அவர் கதாநாயகனாக ஆனபின்னும், இந்தக் கேஷுவலான பாணி அவரிடம் இன்னமும் இருக்கிறது. ஒன்றைக் கவனியுங்கள்: சத்யராஜும் கமலும் நடித்த எந்தப் படமாக இருந்தாலும், அத்தனை காட்சிகளிலும், மிகுந்த பிரயாசைப்பட்டு நடித்திருக்கும் கமலைவிடவும், சத்யராஜ் அப்ளாஸ் வாங்குவது மிக எளிதாகத் தெரிந்துவிடும் விஷயம். உதா: விக்ரம் படத்தின் சுகிர்தராஜா. எனது ஆல்டைம் ஃபேவரைட் வில்லன். காரணம்? கமல் இருப்பது, சிவாஜி பள்ளி. அதில், கேஷுவல் என்ற வார்த்தை, கெட்டவார்த்தை. மிகைநடிப்பு என்பதுதான் அங்கே மரியாதைக்குரிய சொல். இயல்பாக நடிப்பது என்பது, தடைசெய்யப்பட்டுவிட்ட ஒரு விஷயம். இத்தகையதொரு சூழ்நிலையில், தனக்கேயுரிய ஒரு கேஷுவலான வில்லத்தனத்தை சத்யராஜ் வெளிப்படுத்தியது, அவரது வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம்.
எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் என்னும் இந்த கட்டுரைத்தொடரை, சத்யராஜ் இல்லாமல் எழுதவே முடியாது என்பதுதான் அவரது வெற்றி. 
ஆண்டு. 1985. இந்த எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் வரிசையில், எனது தாய்மாமாவுக்கு ஒரு இசைத்தட்டு நூலகம் இருந்ததையும், அதனால் எண்பதுகளின் அத்தனை தமிழ்ப்படங்களின் பாடல்களையும் தவறாமல் கேட்டு வந்ததையும் முன்பே எழுதியிருக்கிறேன். LP என்கிற 33 1/2 RPM (Rotation per minute) இசைத்தட்டுகள் மிகப்பிரபலமாக இருந்த காலம் அது. இவை, க்ராமஃபோன்கள் அல்ல. அவற்றைவிடவும் வேகமாகச் சுழலக்கூடிய இசைத்தட்டுகள். வினைல் என்கிற பொருளால் செய்யப்பட்டவை. எண்பதுகளின் துவக்கத்தில் எனது மாமா ஆரம்பித்த இசைத்தட்டு நூலகம், கோவையில் மிகப்பிரபலமாக விளங்கியது. அதன் பெயர் – ‘ஸ்ரீராகம் இசைத்தட்டு நூலகம்’. அப்போதைய கோவையின் தெலுங்கு வீதியில், தங்கப்பட்டறைகள் ஏராளம். அந்தப்பட்டறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், 60 அல்லது 90 நிமிட T Series அல்லது Sony கேஸட்டுகளில் தங்களுக்குப் பிடித்த தமிழ்ப்பாடல்களைப் பதிவு செய்வது வழக்கம். ஆகையால், எனது மாமாவின் தொழில் களைகட்டியது. எந்தத் தமிழ்ப்படமாக இருந்தாலும், அதன் இசைத்தட்டு எங்களுக்கு ஒரு வாரத்தினுள் வந்துவிடும். அந்த சமயத்தில், ஆடியோ கேஸட்டுகள் மிக மிக அரிது. ஆகவே, இந்த இசைத்தட்டுகளில் இருந்து புதிய கேஸட்டுகளில் நேயர்கள் விரும்பிய தமிழ்ப்பாடல்கள் பதிவுசெய்வது, அவரது வழக்கம். Sonodyne என்ற பிரபல நிறுவனத்தின் Amplifier மற்றும் sound system வைத்திருந்தார் அவர். எண்பதுகளின் துவக்கத்தில் Sonodyne வைத்திருந்த நபர்கள், தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்றுமே அது ஒரு விலையுயர்ந்த பொருள் – இந்த இடத்தில் ஒரு துணுக்குச் செய்தி – அன்றைய காலத்தில், தமிழகத்தில், சிறந்த ஆடியோ சிஸ்டம் வைத்திருந்த பிரபலம் – MGR. உலகின் மிகச்சிறந்த ஆடியோ சிஸ்டங்கள் அவரிடம் இருந்தன (MGR விசிறிகள் பலருக்கு இது நினைவிருக்கலாம்).
இப்படியிருக்க, ‘நான் சிவப்பு மனிதன்’ என்ற படத்தின் இசைத்தட்டு, அந்தப் பெயரில் அமைந்திருந்த தமிழ்ப்படம் வெளிவருவதற்குச் சில வாரங்கள் முன்பு அவரிடம் வந்தது. அதன் அட்டையில், கறுப்பு ஜெர்கின் அணிந்து, கையில் ஒரு ரிவால்வர் வைத்திருந்த ரஜினிகாந்த் என்ற நடிகரின் உருவத்தை நான் பார்க்க நேர்ந்தது. அந்த ரிவால்வரின் அடிப்பகுதியில், ஒரு இரும்பு வளையமும் இருக்கும். அதுகூட நினைவிருக்கிறது.
அந்தப் புகைப்படம், கெத்தாக இருந்தது. ஆகையால், அப்படத்தின் வீடியோ கேஸட்டை, படம் வெளியான அடுத்த வருடம், என்னால் வரவழைக்க முடிந்தது. காரணம்? என் வீட்டில் நான் வைத்ததே சட்டம். ஆகையால், VCR என்று அழைக்கப்பட்ட சாதனத்தின் மூலம், அப்படத்தின் ஒரிஜினல் காஸெட்டை நாங்கள் பார்த்தோம். அப்போது, எனது ஏழு அல்லது எட்டாவது வயதில், நான் சிவப்பு மனிதன் என்ற படம், Death Wish என்ற Charles Bronson படத்தின் காப்பி என்பது எனக்குத் தெரியவில்லையாதலால், அப்படத்தை ரசித்துப் பார்த்தேன். படத்தின் தயாரிப்பாளர், A. poornachandrarao என்ற மனிதர். இயக்குநர், திருவாளர் எஸ்.ஏ. சந்திரசேகர். மருத்துவர் விசய்யின் தந்தை.
இந்தப் படத்தின் ‘எல்லோருமே திருடங்கதான்’ என்ற டைட்டில் பாடலில் நடித்திருப்பவர், விஜய்யின் மாமாவான சுரேந்தர். மோகனுக்குக் குரல் கொடுத்த அதே சுரேந்தர்தான். அந்தப் பாடலை, இங்கே காணலாம். இந்தப் படத்தில்தான் அவர் அறிமுகம் ஆனார். இந்தப் பாடலிலேயே, விஜய் நடித்திருப்பதைக் காணமுடியும். ஒரு பாரதி பாடல் எழுதிய தட்டியை வைத்துக்கொண்டு அவர் இரண்டுமுறை இடையில் வருவதைக் காணலாம்.
படத்தின் வில்லன்களில் ஒருவர், சத்யராஜ் (click to read).
படத்தின் கதையின்படி, கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருப்பவர், ரஜினிகாந்த். அவரது தங்கையை, திருட்டு கும்பல் ஒன்று கற்பழிக்கிறது. காரணம்? இந்த விரிவுரையாளர், அந்தத் திருட்டு கும்பலின் சட்டவிரோதமான காரியங்களைப் போலீஸில் போட்டுக்கொடுத்ததே. இந்த விரிவுரையாளருக்கு உதவிகரமாக இருப்பவர், அவரது தங்கையை மணமுடிக்கப் போகும் நிழல்கள் ரவி (சத்யராஜ் நடித்த ‘ஜீவா’ படத்திலும், நிழல்கள் ரவிக்கு இதே கதாபாத்திரம்).
விரிவுரையாளராக நடித்திருக்கும் ரஜினியின் கதாபாத்திரப் பெயர் நினைவிருக்கிறதா? அது, விஜய்! இயக்குநரின் புதல்வராக இருந்த ஒரே காரணத்தினால், அவரது பெயர், படத்தின் கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டது.
படத்தைப் பார்த்த மறுகணம், எனக்குப் பிடித்துப் போனது (இதைப்போல் பார்த்தவுடன் பிடித்த சில படங்கள்: ‘விக்ரம்’, ‘ஜீவா’, ‘ஜல்லிக்கட்டு’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’ ஆகியன).
அந்தப்படத்தில்தான் ரஜினி என்கிற நடிகர் எனக்கு அறிமுகமானார்.
நான் சிவப்பு மனிதனின் டைட்டில் பாடலுக்குப் பின்னர், எனக்கு இன்றுவரை மிகப்பிடித்த ஒரு பாடம், ‘வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று கண்ணீர் தூவும்’ என்ற பாடல். இப்போதும்கூட அப்பாடலைக்கேட்டால், செண்டிமெண்டுக்கு என்றுமே அடிபணியாத எனது மனம், உருகும். எனக்கு ஒரு தங்கை இல்லாதது கூடக் காரணமாக இருக்கலாம். ரஜினி பட்டையைக் கிளப்பி நடித்திருக்கும் அப்பாடல் இங்கே காணலாம்.
இதைப்போலவே, எனது ‘கருந்தேள் கண்ணாயிரம்’ என்ற இந்தத் தளத்தில், கருந்தேளின் கோபம் என்ற பிரிவில் நான் போட்டிருக்கும் சில வரிகள், ‘காந்திதேசமே காவலில்லையா’ என்ற நான் சிகப்பு மனிதனின் பாடலிலிருக்கும் இரண்டாவது சரணத்தின் வரிகள்தான்.இந்தியாவின் தற்போதைய நிலையைத் தோலுரித்துக் காட்டும் பாடல். அதை இங்கே காணலாம்.
இதோ அந்தப் பாடல் வரிகள்.
இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள் எல்லையில் நிறைந்திருப்பார்..
நாட்டினைக் காசுக்குக் காட்டியே கொடுப்பவர் ஊருக்குள் ஒளிந்திருப்பார்..
அஹிம்சையைப் போதித்த தேசத்தில் ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா ..
ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல் வான்வரை ஏறுதடா..
விடுதலை வாங்க அன்று நாம் தந்த விலைகள் தான் கொஞ்சமா ..
வேலியே இன்று பயிரை மேய்கின்ற நிலைமைதான் மாறுமா !
மாவீரன் என்ற படம், கமலின் ‘விக்ரம்’ (click to read) படத்துடன் 1986ன் தீபாவளிக்கு வந்திருந்தபோது,கோவை லக்‌ஷ்மி தியேட்டரில் அதைப்பார்ப்பதற்காகப் பெற்றோருடன் சண்டையிட்டது நினைவிருக்கிறது (மாவீரனுமே, அமிதாப் பச்சன் நடித்த ‘மர்த்’ – Mard என்ற படத்தின் ரீமேக் என்பது கல்லூரியில் படிக்கையில்தான் எனக்குப் புரிந்தது).
ரஜினியை ஏழு வயதிலேயே எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது எதனால்?
எனக்குத் தோன்றும் காரணம், அக்காலத்திய தமிழ்ப்பட ஹீரோக்கள் போல, ரஜினி கர்லிங் கிராப் வைக்காதது. கமல் உட்பட, எண்பதுகளின் அத்தனை ஹீரோக்களும், கர்லிங் க்ராப் வைத்திருந்தது நன்றாக நினைவிருக்கிறது (ஆனந்த்பாபு, மோகன், கமல்ஹாஸன், ராஜீவ், வாகை சந்திரசேகர் (இவர், கர்லிங் கிராப்பின் முன்னோடி), சுரேஷ் ஆகிய அத்தனை ஹீரோக்களும்). இது தவிர, இருபத்தோராம் நூற்றாண்டில் கூட, கர்லிங் கிராப் வைத்து, அதை வீடியோவில் demonstrate செய்து காண்பித்த நபர், சந்தனக்கடத்தல் வீரப்பன்.
இதுதவிர, ரஜினியின் கேஷுவலான நடிப்பு, வேகமான மூவ்மெண்ட்டுகள் இத்யாதி. ஆகவே, அவரைப் பிடிக்க ஆரம்பித்தது, மிகவும் இயற்கையானதே என்று தோன்றுகிறது.
‘மாப்பிள்ளை’ படத்தை, எங்கள் தெலுங்கு வீதியிலேயே, Solidaire கலர் டிவி வைத்திருந்த ஒரே காரணத்தால், அக்கம்பக்கத்தார் எங்கள் வீட்டில் ஞாயிறு மாலை தூர்தர்ஷன் படம் பார்க்க வந்திருந்தபோது திரையிட்டது நன்றாக நினைவிருக்கிறது.
’கொடி பறக்குது’ படத்தையும் மறக்க முடியாது. அப்படம் வரையிலும் ஒரு பக்கமாக வகிடு எடுத்து சீவியிருந்த ரஜினி, அப்படத்திலிருந்து நடு வகிடு எடுத்த hairstyle வைத்தார். பாரதிராஜாவின் அப்படத்தில் வில்லனாக நடித்தவர், மணிவண்ணன். அவருக்குப் பின்னணிக் குரல் அளித்தவர், சாட்சாத் பாரதிராஜா. அடுத்து வந்தது, தர்மத்தின் தலைவன் (இதுவும், அமிதாப்பின் kasme vaade படத்தின் ரீமேக்).
அதன்பின் ‘குரு சிஷ்யன்’ வெளிவந்தது. அதில், சற்றே கட்டை மீசை வைத்திருந்த ரஜினியைப் பார்க்க முடிந்தது.
அதிலிருந்து, ரஜினி திரும்பிப் பார்க்கவே இல்லை. படுவேகமான வளர்ச்சி அவருடையது. இத்தொடர் எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் என்பதால், தொண்ணூறுகளில், ரசிகனைச் சொறிந்துகொடுத்து முன்னேறிய ரஜினியைப் பற்றிச் சொல்லமுடியவில்லை (’அரசியலுக்கு வருகிறேன்’ லொட்டு லொசுக்கு).
கடைசியாக நான் VCRல் பார்த்த ரஜினி படம், நாட்டுக்கொரு நல்லவன்’. சத்தியமாக, அதைப்பார்த்ததும் நொந்துபோனேன். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு, மூன்றிலும் படுதோல்வி அடைந்த ரஜினி படம். எனக்குத் தெரிந்து, தமிழில் இதற்குமுன்னர் கொடும்தோல்வியடைந்த ரஜினி படம், ‘கர்ஜனை’ என்ற படம். தமிழகத்தின் திரையரங்குகளில், ஒரே வாரம் மட்டும் ஓடிய பெருமையுடையது. நாட்டுக்கொரு நல்லவனில், குஷ்புவுக்கு சண்டையிடக் கற்றுத்தரும் ரஜினியை நன்றாக நினைவிருக்கிறது (ஆங்கிலப் பாடல் ஒன்றுவேறு அவர் பாடுவார். ‘fight like a bull’ என்று வரும்).
நான் சிவப்பு மனிதன் – இன்றுவரை எனக்கு மிகப்பிடித்த ஒரே ரஜினி படம். கூடவே, தளபதி மற்றும் நினைத்தாலே இனிக்கும் படங்களில் ஒரு சில காட்சிகள்.
எண்பதுகளில், கமல்ஹாஸனுக்குப் போட்டியாக, ரஜினியின் படங்கள் வெளிவரும். 1986ல், மாவீரன் மற்றும் விக்ரம் – ஒரு உதாரணம். இரண்டுமே சரியாகப் போகவில்லை. அதேபோல், தொண்ணூறுகளில், 1992ல் பாண்டியன் மற்றும் தேவர்மகன். இதில், தேவர்மகன் சக்கைப்போடு போட்டது. பாண்டியன், ஃப்ளாப் ஆனது. தளபதிக்கு அடுத்த படம் பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் சிவப்பு மனிதன் படத்தின் இசைத்தட்டு போஸ்டரில், இடுப்பு பெல்ட்டில் சிறிய பூட்டைப் பிணைத்துக்கொண்டிருக்கும் ரஜினி மற்றும் பாக்யராஜைப் பார்க்கலாம்

CONVERSATION

Back
to top