ஜேம்ஸ் கேமரோனின் திரைக்கதை முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
ஜேம்ஸ் கேமரோனின் அத்தனை படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இன்னும் பல நண்பர்களும் பார்த்திருக்கலாம். இந்த அத்தனை படங்களிலும் பொதுவான ஒரு அம்சம் உண்டு. அந்த அம்சம்தான் அவரது படங்களை அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகெங்கும் மெகா ஹிட்களாக ஆக்கியிருக்கிறது என்பது என் கருத்து. அந்த அம்சம்தான் அவரது படங்களைப் பிற இயக்குநர்களது படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, கேமரோனின் படங்களில் இடம்பெறும் அதே விதமான action காட்சிகள் – ஏன் – அவற்றுக்கும் மேலான அதிரடி action காட்சிகள், மைக்கேல் பே, ஜார்ஜ் காஸ்மடாஸ் (Tombstone ,Rambo part 2), ஜான் மெக்டியர்னன் (Die Hard), ரோலான்ட் எமரிக் (2012, Godzilla, Independence Day) போன்ற இயக்குநர்களின் படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றைவிட ஒரு Aliens, ஒரு Terminator, ஒரு True Lies எப்படி நமது நினைவுகளில் பசுமையாகத் தங்கியிருக்கிறது?
ஜேம்ஸ் கேமரோன் ஒரு self made இயக்குநர். நம்மூர் மணிரத்னம், ராம்கோபால் வர்மா போல. ஒரு ட்ரக் டிரைவராக தனது வாழ்க்கையைத் துவங்கிய கேமரோன், எப்படி நம்மால் மறக்க இயலாத ஒரு இயக்குநராக மாறினார்? அவரது அயரா உழைப்பு, முனைப்பு, அது இது என்று டெம்ப்ளேட் காரணங்கள் பலவற்றை நாம் சொல்லக்கூடும். அவையும் உண்டுதான். ஆனால் அவற்றைவிடவும் ஜேம்ஸ் கேமிரோனின் வெற்றிக்குக் காரணம் இன்னொன்று என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது படங்களில் நான் கவனித்த அந்த ஒரு விஷயமே என்னைப்பொறுத்தவரை கேமரோனை ஒரு டாப் டக்கர் இயக்குநராக உயர்த்தியிருக்கிறது.
ஒரு உதாரணம். ஜேம்ஸ் கேமரோனின் Aliens படத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் படத்தின் கதாநாயகியின் பெயர் எல்லன் ரிப்ளி (ஸிகோர்னி வீவர்). இதற்கு முந்தைய பாகமான Alien(ரிட்லி ஸ்காட்) படத்தில், இந்த ரிப்ளி, இவளது கண்முன்னர் இவளது விண்கப்பலில் இருந்த அத்தனை பேரும் ஒரு ஏலியன் ஜந்துவினால் கொல்லப்பட்டதைப் பார்த்திருக்கிறாள். அந்த ஜந்துவைக் கொன்றுவிட்டு பூமிக்கு அவள் திரும்புவதோடு அப்படம் முடிகிறது. அதிலிருந்து துவங்கும் இந்த இரண்டாம் பாகத்தின் கதையும் கிட்டத்தட்ட அதேதான். இம்முறை அந்தப் பழைய கிரகத்துக்குச் செல்லும் குழுவினரோடு பயணிக்கும் ரிப்ளி, ஏலியன்களின் தாக்குதலுக்கு மறுபடியும் ஆளாகிறாள். அவளுடன் இருக்கும் குழுவினரில் பலரும் கொல்லப்படுகின்றனர். ஆனால், வழக்கப்படி இறுதியில் ரிப்ளி வெல்கிறாள்.
இவ்வளவு டெம்ப்ளேட்டான இந்தக் கதையுடன் கூடிய இப்படம், முந்தைய பாகத்தைப் போலவே பெருவெற்றி அடைந்தது. ஆனால் என்னைப்பொறுத்தவரை, முதல் பாகத்தை விட இந்தப் பாகத்தில் விறுவிறுப்பு மிக அதிகம். கூடவே, கேமரோனின் மந்திர ஃபார்முலா. அந்தப் ஃபார்முலாதான் இந்தப் படம் வெல்வதற்கே காரணம் என்பது என் கருத்து.
இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் நினைவிருக்கிறதா? பிஷப் என்ற ரோபோவை வில்லனான ஏலியன் (உண்மையில் இது ஒரு பெண் ஏலியன்) பிய்த்து வீசிவிடுகிறது. அப்போது கொஞ்ச நேரம் ரிப்ளியைக் காணவில்லை. திடீரென்று, பிரம்மாண்டமான ஒரு மெஷினின் மீது ஏறிக்கொண்டு, ஆக்ரோஷமாக ரிப்ளி கத்திக்கொண்டே இந்த ஏலியனைத் தாக்குவாள். அதுதான் படத்தின் க்ளைமேக்ஸின் ஹைலைட். திடும் திடும்மென அந்த மிஷினை ரிப்ளி இயக்கிக்கொண்டு அந்த ஏலியனின் மீது பாய்கையில் திரையரங்கில் கட்டாயம் விசில் தூள் பறந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
ரிப்ளி என்ற அந்தப் பெண் கதாபாத்திரத்தின் மீதே இப்படம் முழுக்க நமது கவனம் குவிந்திருக்கும். முதல் பாகத்தின் நிகழ்வுகளால், இந்த ரிப்ளி ஏலியன்களைக் கண்டு பயந்தே இருப்பாள். அப்படிப்பட்ட ரிப்ளி ஆவேசமாக இந்த ஏலியனைத் தாக்கி துவம்சம் செய்ய என்ன காரணம்?
ரிப்ளி என்ற அந்தப் பெண் கதாபாத்திரத்தின் மீதே இப்படம் முழுக்க நமது கவனம் குவிந்திருக்கும். முதல் பாகத்தின் நிகழ்வுகளால், இந்த ரிப்ளி ஏலியன்களைக் கண்டு பயந்தே இருப்பாள். அப்படிப்பட்ட ரிப்ளி ஆவேசமாக இந்த ஏலியனைத் தாக்கி துவம்சம் செய்ய என்ன காரணம்?
“எனது படங்களின் ஆடியன்ஸை ஏமாற்றுவது எனக்குப் பிடிக்கும். படம் முடிந்தது என்று ஆடியன்ஸ் நினைக்கும்போது, சடாரென்று அவர்களின் கழுத்தைப் பிடித்துத் திருப்பி, அவர்கள் நினைத்தே பார்க்காத ஒரு புதிய கோணத்தை அவர்களின் கண்கள் முன்னே விரியவிடுவதே என் பாணி. என் கூடவே அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களின் பின்புறத்தில் ஓங்கி ஒரு உதை விடுவேன். இதுவரை வந்திருக்காத ஒரு புதிய இடத்துக்கு அந்த உதை அவர்களைக் கொண்டுசெல்லும். அப்போது அந்த அனுபவம் அவர்களால் மறக்கவியலாத உணர்வுபூர்வமானதொரு அனுபவமாக மாறிவிடுகிறது”
– ஜேம்ஸ் கேமரோன்.
உணர்வுபூர்வமான ஒரு அனுபவத்தை ஆடியன்ஸுக்குக் கொடுப்பதே ஜேம்ஸ் காமேரோனின் மந்திர ஃபார்முலா. அப்போது சாதாரண action என்பது உணர்வு கலந்த ஒரு நிலைக்கு ஏற்றம் பெற்றுவிடுகிறது. நமது ஸிட் ஃபீல்ட் அடிக்கடி refer செய்யும் Collateral திரைப்படம் இப்படிப்பட்டதுதான்.
ஒரு ஹீரோ – ஒரு வில்லன். இருவருக்கும் இடையே சண்டை என்பது ஒரு நிலை. அதுவே, ‘இந்த ஹீரோ நமது மனதைத் தொட்டவன் ஆயிற்றே? அவன் அடிவாங்கும்போது நமக்குக் கண்ணீர் வருகிறதே? அவன் இறந்துவிடக்கூடாதே?’ என்று ஆடியன்ஸ் பதைபதைத்துக்கொண்டே அந்தச் சண்டையைப் பார்ப்பது வேறொரு நிலை.
இந்தப் பதைபதைப்பை ஆடியன்ஸின் மனதில் எந்த இயக்குநர் உருவாக்குகிறாரோ, அவரது படங்கள் பெருவெற்றி அடைகின்றன.பதைபதைப்பு என்பது வெறுமனே அந்த நிமிடத்தில் தோன்றி அடுத்த நிமிடத்தில் மறைந்துவிடும் வகையானது அல்ல. படம் முடிந்தபிறகும் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை நம்மை நினைத்துக்கொண்டே இருக்க வைக்கிறதே – அந்த வகையைச் சேர்ந்தது. இந்த உணர்ச்சிமயமான மனநிலையை ஆடியன்ஸிடம் உருவாக்குவதில் கைதேர்ந்தவர் ஜேம்ஸ் கேமரோன். அவரது ஒவ்வொரு படத்திலும் இது பளிச்சிடும். அதற்கான உதாரணங்களை இனி பார்ப்போம்.
அதற்கு முன்பாக, நமது ஸிட் ஃபீல்ட் எழுதியிருக்கும் இன்னொரு அட்டகாசமான புத்தகத்தின் பெயர் – Four Screenplays. இதில், Silence of the Lambs, Terminator 2: Judgement Day, Thelma & Louise, Dances with Wolves ஆகிய நான்கு படங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்தின் திரைக்கதையையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார் ஸிட். அவரது Screenplay புத்தகத்தை விடவும் மிகச் சுவாரஸ்யமான புத்தகம் அது. அதில், ஜேம்ஸ் கேமரோனின் பேட்டி ஒன்று உள்ளது. பிரத்யேகமாக ஸிட் ஃபீல்டுக்கு ஒரு பெரிய பேட்டி கொடுத்திருக்கிறார் கேமரோன். அந்தப் பேட்டியை மட்டும் படித்தாலே கேமரோனின் படமாக்கும் திறனைப் புரிந்துகொள்ளலாம்.
அந்தப் பேட்டியிலிருந்தே ஒருசில விஷயங்களைப் பார்க்கலாம்.
Terminator 2: Judgement Day படத்தை எடுத்துக்கொள்ளலாம்.
முதல் பாகமான The Terminator 1984ல் வந்தபோது அப்படத்தின் வில்லன் அர்னால்ட் ஷ்வார்ட்ஸெநிக்கர் மக்களால் மறக்க முடியாத ஒரு வில்லனாக மாறியிருந்தார். அதன்பின் கேமரோனுக்கு பல வாய்ப்புகள் அதே போன்று ஒரு படத்தை அர்னால்டை வைத்து இயக்கச்சொல்லி வந்ததாக அறிகிறோம். ஆனால் அத்தனையையும் அறவே மறுத்த கேமரோன், இப்படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் எடுக்கத் தீர்மானித்தார்.
முதல் பாகத்தில் வரும் அதே வில்லன், இரண்டாம் பாகத்தில் ஹீரோ. ஆனால், இந்த ரோபோ செய்யும் காரியங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட இரண்டு பாகங்களிலும் ஒன்றுதான். அது – அழிப்பது. ஆக, எப்படி இந்த வில்லன் – ஹீரோ வேறுபாட்டைக் காட்டுவது? முதல் பாகத்தில் இஷ்டத்துக்கு எல்லாரையும் கொல்லும் இந்த ரோபோ, இரண்டாம் பாகத்தில் எப்படி நல்லவனாக ஆகிறது? அதற்குத்தான் இதயமோ மனமோ உணர்வுகளோ கிடையாதே? அப்படியிருக்க, எப்படி அந்த ரோபோவை மறக்கவியலாத ஒரு கதாபாத்திரமாக ஆக்குவது?
படத்தில் சிறுவன் ஜான் கான்னர் ரோபோவிடம் பேசும் ஒரு வசனம் உண்டு:
ஜான் கான்னர் – “நீ சும்மா இஷ்டத்துக்கு எல்லாரையும் கொன்றுகொண்டே இருக்க முடியாது”
ரோபோ – “ஏன் முடியாது?”
ஜான் கான்னர்: “அது வந்து…..முடியாது என்றால் முடியாதுதான்”
இதுதான் கேமரோனின் மனதில் உதித்த விடை. அதாவது, உணர்வுகளே இல்லாத ஒரு ரோபோ, அதன் வாழ்வில் முதன்முறையாக குழப்பத்துக்கு உள்ளாகிறது. அதன் அடிப்படை செயலான கொலை செய்தலை அதனால் செய்ய முயாமல் போகிறது. ஆனால், ஏன் என்ற காரணமோ அதற்கும் அதன் எஜமானனுக்குமே தெரிவதில்லை. இந்தக் கேள்வியின் விடை அந்த ரோபோவை படத்தின் இறுதி நிமிடத்தில் வந்தடைகிறது. இரும்பு மனிதனுக்குள் ஒரு இதயம் முளைக்கிறது.
இதுதான் கேமரோன் கூறிய உணர்ச்சிபூர்வமான கதை சொல்லல். இறுதியில் அந்த ரோபோ இரும்புக் குழம்பில் மூழ்குவது அட்லீஸ்ட் கொஞ்சமாவது நமது மனதை அப்படம் பார்க்கையில் அசைத்ததல்லவா? படத்தை எழுதும்போதே கேமரோன் தனக்குள் ஒரு கேள்வியை திரும்பத் திரும்ப அசைபோட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். ‘இந்தப் படத்தால் நாம் சொல்ல வருவது என்ன? அதிரடி action காட்சிகளால் ஆடியன்ஸை மெய்மறக்க வைக்கலாமா அல்லது அவர்களின் மனதின் அடியில் உள்ள உணர்ச்சிகளை எழுப்பலாமா?” என்பதே அது. இறுதியில், ஒரு வெறும் ரோபோவுக்காக ஆடியன்ஸை உணர்ச்சிவசப்படவைக்க கேமரோனால் முடிந்தது.
பேட்டியின் இந்த இடத்தில்தான் மேலே சொன்ன மேற்கோள் வருகிறது.
Terminator 2: Judgement Day படம் மட்டுமல்ல. அதன்பின் வந்த True Lies, அதற்குப்பின் வந்த Titanic, அதன்பின்னர் கடைசியாக கேமரோன் இயக்கிய Avatar ஆகிய அத்தனை படங்களிலும் இந்த ஆடியன்ஸின் மனத்தைக் கிளறும் ஃபார்முலா இருக்கும். குறிப்பாக டைட்டானிக்கில். அது ஒரு ரொமான்ஸ் சப்ஜெக்டாக இருந்ததால், ஆடியன்ஸை அழவைக்க அவரால் முடிந்தது. அந்த அழுகை, ஒரு மெலோட்ராமாவில் வரும் அழுகை அல்ல. அருமையான ஒரு காதல், நமது கண்முன்னர் உடைந்து சிதறுவதைப் பார்ப்பதால் வரும் உணர்ச்சிபூர்வமான கண்ணீர்.
ஆடியன்ஸின் மனதில் உள்ள உணர்வுகளை எழுப்புவது ஒரு அரதப்பழைய ஃபார்முலாதான். ஆனால் இதை மிகச்சரியாக உபயோகித்து வருவதால் இன்றும் கேமரோன் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநராக இருந்துவருகிறார்.
யோசித்துப் பார்த்தால், எந்தப் படமுமே ஆடியன்ஸின் மனதில் நிற்பதற்கு, கதையில் உள்ள அழுத்தமே காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கதையில் வரும் சம்பவங்களில் ஒன்றிப்போய் நாம் உருகுவதற்கு மிக அழுத்தமான காட்சிகள் தேவை. அதைத்தான் டெர்மினேட்டரில் ஜேம்ஸ் கேமரோன் காண்பித்தார். ஆஃப்டரால் ஒரு ரோபோ. ஆனால் அது நமது மனதில் விளைவித்த மாற்றங்கள் எத்தனை? இதேதான் ஏலியன்ஸுக்கும். இதேதான் டைட்டானிக்குக்கும். ஒரே போன்ற துரத்தல் படமாக இல்லாமல், டெர்மினேட்டரில் வரும் ஸாரா கதாபாத்திரத்தின் மனநிலையை, படத்தின் பாதிக்கு மேல் வரக்கூடிய அந்தப் பாலைவன ஓய்வெடுக்கும் காட்சியில் நாம் காண்கிறோம். அதேபோல் சிறுவன் ஜான் கானர்ஸ், அவனது வயதிலேயே கொலை செய்வது தவறு என்ற மனநிலையோடு இருக்கிறான். அவன் பிற்காலத்தில் மனித குலத்தையே தோள் கொடுத்து, இயந்திரங்களுடனான யுத்தத்தில் தாங்கப்போகும் நபர். ஒரு தலைவன். தலைவனாக இருப்பவன் இப்படிப்பட்ட பாயிண்ட் ஆஃப் வ்யூ எடுப்பது அவனது உறுதியான குணத்தைக் காட்டுகிறது.
இதற்கெல்லாம் மேலேதான் அந்த ரோபோவும் தன்னுடன் இருக்கும் மனிதர்களைப்போல மாற முயல்வது. அதனால்தான் அந்த ரோபோ
CONVERSATION